ஒரு இனம் இப்படி வதைக்கப்படுகின்றது. எம் மக்களை குண்டு வீசிக்கொன்றவர்கள். அதற்கு அஞ்சி தப்பி ஓடிவந்தவர்களை 'மீட்பின்" பெயரால் வளைத்துப் பிடித்தனர், பிடிக்கின்றனர். பின் அவர்களை நாலு சிறைக்கம்பிக்குள் கொண்டுவந்து சிறைவந்துள்ளனர்.

 

இதற்குள் நடக்கும் இனச்சுத்திகரிப்பு, களையெடுப்பு, வெளிவர முடியாத கொடுமைகள் பல. இதை இந்த பேரினவாத பாசிச அரசு, திட்டமிட்ட தமிழ்மக்களுக்கு எதிராக செய்கின்றது. இதற்கு அவர்கள் இட்ட பெயர் 'மீட்பு" 'மனிதாபிமான நடிவடிக்கை" என்று பல. இதை தொடர்ந்து செய்ய, அவர்கள் உதவி கோருகின்றனர்.

 

புலம்பெயர் மண்ணில் தன் சொந்த கைக்கூலிகளாக உள்ள அரச எடுபிடிகள் மூலமும், பேரினவாத அரசின் துணையுடன் இயங்கும் 'டான்" தொலைகாட்சி மூலம், தம் சொந்த அரசியல் பித்தலாட்டங்களை முன்வைத்து கோருகின்றது. வணங்கா முடிக் கப்பலைச் சொல்லி புலம்பெயர் நாட்டில் திரட்டியது போல், உள் நாட்டில் மக்களை காட்டி இந்த கொலைகார பாசிச அரசு திரட்டுகின்றது.

 

இப்படி செய்திகளை காட்சிகளை திரித்தும், புரட்டியும், மறைத்தும், மக்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்கின்றனர். இவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராகத்தான். இவை தமிழ் மக்களுக்கு உதவவல்ல.

 

தொடரும் ஒரு இனச் சுத்திகரிப்புக்கு ஏற்ப, பிடித்த மக்களை 'அகதியாக" காட்டி உதவக் கோருகின்றனர் கொலைகாரர்கள். சொந்த உற்றார் உறவினர்கள் கூட உதவமுடியாத வகையில், ஒரு திறந்தவெளிச் சிறையில் அந்த மக்கள். அந்த மக்களுக்கு உதவ முன்வரும் உற்றார் உறவிரை தடுக்கும் பாசிசக் கும்பல், உதவு என்று கோருகின்றது. அங்கு அந்த சொந்த உறவுகள் உதவக் கூடாது என்று ஆணையிட்டு அரச பாசிசம், புலம்பெயர் மண்ணிலும் உள்நாட்டிலும் அரசியல் செய்யவே உதவியைக் கோருகின்றனர்.

 

நாலு கம்பிக்கு பின்னால் இனச்சுத்திகரிப்புக்கும், இனக் களையெடுப்புக்கும் உள்ளாகும் மக்கள், புலிகளின் பிரதேசத்தில் சுதந்திரமாக உற்றார் உறவிருடன் சேர்ந்து வாழ்ந்தவர்கள். என்றும் கையேந்தியது கிடையாது. பிச்சையேந்தாது உழைத்து வாழும் கிராமத்து மக்கள். அங்கு அவர்களைச் சுற்றி எந்த கம்பிவேலியும் இருக்கவில்லை. அரசின் 'மனிதாபிமான" முகாமில் மக்களை அடைத்து, நாலு பக்கமும் முட்கம்பி. இதற்குள் மக்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர் என்று கூறுகின்ற கொலைகாரக் கும்பல். இங்கு உற்றார் உறவினர் சந்திக்கவும், ஏன் சேர்ந்து வாழவும் முடியாது. குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் பிரிக்கப்பட்டு, நாலு முட்கம்பிக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அதைச் சுற்றி இராணுவம். இதற்குள் இராணுவ அதிகாரம். இங்கு நடக்கும் எந்தக் கொடுமைகளையும், வெளி உலகம் அறியமுடியாத வண்ணம் பாசிச வேலி.

 

குண்டு வீசி மக்களை வளைத்துப் பிடித்து இங்கு கொண்டு வந்து அடைக்கும் வரை, அந்த மக்களுக்கு இடையில் நடக்கும் எந்தக் கொடூரமும் யாரும் தெரியாத வண்ணம், ஆளரவமற்ற  அரச பாசிசமே எங்கும் தலைவிரித்தாடுகின்றது. அனைத்தும் திட்டமிட்ட ஒரு இன அழிப்பாகவே நடக்கின்து. இதற்கு தமிழ் மக்களிடம் உதவக் கோருகின்றனர். என்ன பாசிசத் திமிர்.

 

மக்களை புலிகள் நாலு கம்பிக்குள் சிறைவைக்கவில்லை. அரச குண்டு வீச்சுக்கு உள்ளாகும் போது, அவர்கள் விரும்பியவாறு ஒடக் கூடிய வசதி இருந்தது. அப்படி ஒடிவந்தவர்களை தான், 'மீட்டனர்". சரி எதற்காக!? அவர்களை சிறைவைத்து இனச் சுத்திகரிப்பு செய்யத்;தான் என்பது, இன்று வெளிப்படையான உண்மையாகியுள்ளது.

 

மக்களை விடுவி என்று நாம் புலியிடம் கோரியது, அவர்கள் தம் சொந்த பிரதேசத்தில் சுதந்திரமாக வாழத்தான். அவர்களை பேரினவாத இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைகளில் அடைக்கவல்ல. சட்டிக்குள் இருந்து நெருப்புக்குள் வீழ்ந்து மக்கள் எரிகின்றனர். இதைத்தான் மக்களின் விருப்பு என்கின்றனர், அரச புல்லுருவிகள்.

 

நொந்து அடிபட்டு போன மக்கள், இன்று எந்த உரிமையையும் கோரவில்லை என்கின்றனர் அரச புல்லுருவிகள். அந்த மக்கள் நாலு கம்பிக்கு பின்னால் அடைபட்டு, நசிந்து வாழத்தான் விரும்புகின்றனராம். இப்படி அரச நாய்கள் நடத்தும் விவாதம். இவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட பொறுக்கிகள். புலியில் இருந்து தப்பி வாழ, நாலு கம்பிக்கு பின்னால் வாழும் இந்த ஒடுக்குமுறையைத்தான் மக்கள் விரும்புகின்றனராம். இப்படி சொல்லி படம் காட்டுவார்கள், காட்சிகளைக் காட்டுவார்கள். நாய்களைப் போல் அனைவரையும் நக்கக் கோருகின்றனர்.

 

மக்களை பிடித்து வந்து சிறை வைத்தவர்கள், அவர்களை 'அகதி" என்கின்றனர். பின் அவர்களை மக்களாக காட்டி, மக்களுக்கு உதவுங்கள் என்கின்றனர். நவீன பாசிட்டுகள் இவர்கள்.

 

அந்த மக்கள் குண்டு வீச்;சில் தப்பி தம் சொந்த வீட்டுக்கு மீள முடியாத வண்ணம், இராணுவ 'மீட்பின்"  பெயரில் வலை போட்டு பிடித்தனர். இப்படி மக்களை பிடித்து அடைக்க மக்கள் மேல் குண்டை போட்டு கொன்றவர்கள், கொல்லாத பிரதேசத்தை அறிவித்து முழு மக்களையும் வளைத்தனர். பின் அவர்கள் மேல் குண்டை போட்டு கொல்ல, தப்பி வருபவர்களை பிடித்து சிறைவைக்கின்றனர். யுத்தம் இப்படிதான் நடக்கின்றது. மனித அவலத்தை இப்படித்தான் உற்பத்தி செய்கின்றனர்.

 

இப்படி அல்லலுற்று ஒடி வரும் மக்களைக் காட்டி, அதற்கு உதவுவதாக படம் காட்டுகின்றனர். உள்ளே நாற்றமும் அவலமும் குமட்ட, மனிதத்தையே அது வதைக்கின்றது.

 

புலிகள் மக்களின் பிணத்தைக் காட்டி, அரசியல் செய்தது போல், தமது திறந்தவெளி சிறைக் கைதிகளை அகதியாகவும் மக்களாகவும் காட்டி எடுபிடிகள் அரசியல் செய்கின்றனர்.

 

இப்படி எம் மக்களின் அவலம், சிலருக்கு கொண்டாட்டம், மகிழ்ச்சி. கடந்தகாலத்தில்; புலியெதிர்ப்பு பேசிய அரச எடுபிடிகள், மக்களையிட்டு என்றும் அக்கறைப்பட்டது கிடையாது. இந்த பொறுக்கிகள் எல்லாம் இன்று, மக்கள் என்கின்றனர். மக்களைக்காட்டி, மக்களுக்கு உதவக் கோருகின்றனர். அதே புலி அரசியல்.

 

பேரினவாத அரசு இந்த மக்கள் மேல் கொட்டிய குண்டுகள், அவர்களை அழித்தது. இப்படி குண்டாக வாங்கிக் குவித்து, அதை அந்த மக்கள் மேல் போட்ட அரசு, தமிழன் என்பதால் இன்று ஒரு நேர சோறு கூட அங்கு போடமுடியவில்லை. இந்தப் பாசிச பேரினவாத அரசு கடந்த 100 நாட்களில் 6500 மக்களை கொன்று 14000 பேரை காயப்படுத்தி உள்ளதாக ஐ.நா அறிக்கை கூறுகின்றது. இந்தக் கொடூரத்தை செய்தது இந்த பேரினவாத அரசுதான். இன்று மனிதாபிமான 'வேஷம்" போடத் துடிக்கின்றது. இந்தப் படுபாதக செயலை செய்ய உதவியதுதான், புலிகளின் மீதான குற்றம்.

 

இப்படி மக்கள் மேல் குண்டுகளை வாரி போட்டு கொன்ற கொலைகாரக் கும்பல், அந்த மக்களை கொன்ற போது, அதை எதிர்த்து எந்த அரச எடுபிடிகளும் ஒரு துளி கண்ணீர் வடித்தது கிடையாது. அதை ஆதரித்து நின்றவர்கள். இன்று கொலைகார அரசுக்கு தப்பிப்பிழைத்து ஓடிவரும் மக்களை காட்டி, உதவக் கோரும் நயவஞ்சகமான அரசியலை மக்கள் மேல் திணிக்கின்றனர்.

 

அரசு தானாக அறிவித்த யுத்த சூனிய பாதுகாப்பு பிரதேசத்தில் வைத்து, கடந்த 100 நாட்களில் மக்கள் மேல் குண்டைப் போட்டு 20000 மக்களை காயப்படுத்தியும் படுகொலை செய்ததும் இந்த அரசு தான். இதன் மூலம் தான் மக்களை, தம் சிறைக் கொட்டகைக்கு விரட்டிக் கொண்டு வந்தவர்கள். அப்பாவி மக்களை இப்படி அடைப்பதை, எந்த அரச மனிதாபிமானமும் கண்டு கொள்ளவில்லை. இந்த பாசிசக் கூத்தைக் காட்டியே பேரினவாதம், மக்களை தாம் 'மீட்பதாக" கதைவிடுகின்றது. இப்படி கூறியபடி, பாசிட்டுகள் அந்த மக்களை தன் சொந்த நரகத்தில் தள்ளியுள்ளது. வன்னியில் பேரினவாத குண்டுக்குள் சிக்கி அனுபவித்ததை விட, மற்றொரு பேரினவாதக் கொடுமை இது. இந்த மக்கள் இன்று சுதந்திரமாக உணவை தேடி உண்ணக் கூட முடியாது. சோற்றுக்கு கூட இன்று சுதந்திரம் கிடையாது. உற்றார் உறவினருடன் கதைக்க கூட சுதந்திரம் கிடையாது. இதைத்தான் புலியிடமிருந்து மக்களின் 'மீட்பாக" காட்டுகின்றனர்.

 

பட்டினி போட்டு மிருகத்தை அடைத்து அடிமைகொள்ளும் அதே வக்கிரத்துடன், மக்களின் உரிமை பற்றிய உணர்வை நாலு கம்பிக்கு பின்னால் வைத்து நலமடிக்கின்றனர். இந்த மனித அவலத்தை அடிப்படையாக கொண்டு, போராட்டங்கள் அரசியல் ரீதியாக இனம்காட்டி முன்னெடுப்;பதுதான், உடனடியான மையக் கோசமாகின்றது.

 

1. திறந்தவெளி சிறைக் கூடத்தை, சர்வதேச சமூகமே பொறுப்பெடு!

 

2. அவர்களை சுதந்திரமாக, அவர்கள் விரும்பியவாறு விரும்பிய இடத்தில் வாழவிடு!

 

3. உற்றார் உறவினரை சந்திக்கவும், அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ அனுமதி!

 

4. சமூகமாக மக்கள் சொந்த வாழ்விடத்தில் சேர்ந்து வாழ அனுமதி!

 

5. மக்களை இழிவுக்குள்ளாக்கி, கையேந்த வைத்து, அவர்களின் அரசியல் உரிமையை பறிக்காதே!

 

6. சகல மக்களுக்கும் உணவும், இருப்பிடமும், உடையையும், கல்வியையும் உடன் வழங்கு!

 

7. அவர்களின் சொத்து இழப்புக்கான முழு நட்டஈட்டையும் உடன் வழங்கு!

 

8. கொல்லப்பட்ட மக்களுக்கு முழு நட்டஈட்டைக் கொடு!

 

9. அவர்கள் தம் சொந்த தொழிலைத் தொடங்க அனுமதி! அதற்காக அனைத்து வசதிகளையும் நட்டஈட்டையும் கொடு!

 

10. காயப்படுத்திவர்களுக்கு நட்டஈட்டை வழங்கு!

 

11. அங்கவீனமானவர்களுக்கு நட்ட ஈட்டையும், ஆயுள் பூராவும் பராமரிக்கும் ஏற்பாட்டையும் வழங்கு!

 

12. அனாதைகள், விதவைகள், வாழ வழியற்றவர்களுக்கான நட்டஈட்டைக் வழங்கு! 

 

13. அப்பாவி மக்களை யுத்த சூனியப் பிரதேசத்தில் வைத்து கொன்று, காயப்படுத்திய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்து!

 

14. எல்லா கூலிக் குழுக்களிடமிருந்து இந்த மக்களை விடுவி! இராணுவக் கண்காணிப்பில் இருந்து விடுவி!

 

15. பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாட, ஊடகச் சுதந்திரத்தை அனுமதி!

 

பி.இரயாகரன்
25.04.2009