கடந்த பதின்மூன்றாம் திகதி வெள்ளை மாளிகை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. "ஒபாமா நிர்வாகம்" கூபா மீதான பொருளாதாரத்தடைகளில் சிலவற்றை "கியூப மக்களின் நலன்" கருதி தளர்த்துவதாகவும், இத்தளர்வு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் அவ்வறிக்கை கூறிச்செல்கிறது.

எனது GNU/Linux குறிப்பேட்டில் சில நாட்களுக்கு முன்னர் நான் எழுதிய பதிவில், அகலப்பாட்டை இணைப்பினை கியூபாவுக்கு அமெரிக்கா தடுத்து வருவது தொடர்பில் கவலை கொண்டிருந்தேன். தற்போது அகலப்பாட்டை இணைப்பு கியூபாவுக்கு அமெரிக்காவால் திறக்கப்படுகிறது.
இவ்வறிக்கையினை, இன்றைய உலக ஒழுங்கின், புதிதாய் உருவாகிவரும் பன்னாட்டுத் தொடர்பின், சோசலிசத்தின் புதிய அர்த்தங்களின் பின்னணியில் எப்படி நாம் வாசித்து விளங்கிக்கொள்வது?
தனிநாட்டுள் சோசலிசத்தினைக் கட்டியெழுப்புவதின் ஆக நெருக்கடியான சவால்களுக்கெல்லாம் முகம்கொடுத்து, சோசலிசத்தினை இரண்டாயிரத்துப் பத்துகளுக்கு எடுத்துவந்து சேர்த்த பெருமை கியூபாவையே சாரும்.
எழுபது எண்பதுகளில் நம்ம முற்போக்குக் கம்யூனிஸ்டுக்களெல்லாம் கையில் கிடைத்த பொல்லுக்கட்டைகளாலெல்லாம் கியூபாவைத் தாக்கிய காலத்தையும், எல்லாத்தையும் கடந்து நேபாளத்திடமும் சாவேசிடமும் புதிய சோசலிசச் சிந்தனைகள் வந்துவளரும்வரை மழைபுயலெல்லாம் தாண்டிக் கொண்டுவந்து சேர்த்த ஒற்றை வால்வெள்ளி கியூபாதான்.
கியூபா பற்றிப்பேசும்போதெலாம், கற்காலப்பொருளாதாரச் சிந்தனைகளைத் தூக்கிப்பிடிப்பதாகவும், கியூப மக்களைக் கற்காலத்தினுள் வைத்திருந்து அழகுபார்ப்பதாகவும் தம்முள் இயல்பான இணக்கப்பாடுகளைக்கொண்ட வலதுசாரிகளும் பின்நவீனர்களும் புறுபுறுக்கத்தொடங்குவர்.
இணையப்பாவனை, கணினிப்பாவனைக்கான கியூபத் தடைகள் குறித்தெல்லாம் முன்பு எடுத்துக்காட்டுக்களோடு விளக்குவர். இத்தனைக்கும், உலகப்பெரு வல்லரசான அமெரிக்கப் பொலிஸ்காரன் கியூபாமீது விதித்துள்ள பொருளாதாரத்தடையின் முழுவிபரத்தை இவர்கள் என்றைக்காவது பேசத்துணிந்தார்களா என்பது சந்தேகமே.
இரண்டாயிரங்களில் வந்து நிற்கும் நாம் கற்காலங்களை விடக்கேவலமான பொருளாதாரத்தடைகளை அமெரிக்கா விதித்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடையாமல் இருக்க முடியுமா? கற்காலத்தில் யார் நிற்பது என்று அவர்கள் அறிந்தும் சொல்ல மாட்டார்கள். கர்த்தரே அவர்கள் அறிந்தேதான் ஆர்ப்பரிக்கிறார்கள். அவர்களை மன்னியாதேயும்.
இப்பேர்ப்பட்ட அமெரிக்காதான் இன்று கியூபாமீது கருணை கொள்கிறது.
சாத்தானின் கருணையினை நான் சந்தேகிக்க வெளிக்கிட்டால்...
இந்தப் "பழைய ஆட்கள்" எப்பவும் அமெரிக்கச்சதி, ஏகாதிபத்தியங்களின் சதி என்று எல்லாவற்றையும் பார்த்துக்குரைப்பது எரிச்சலைத்தான் ஊட்டுகிறது என்று உளறுபவர்கள் அறிவார்களா, பாலஸ்தீனமும் ஈழமும் இன்றுவரை செத்துச்சின்னாபின்னமாகித் தீரா அவலத்தின் நீடிப்பற்கு யாரெல்லாம் காரணமென்று? சிங்களவன்தான் என்று சொன்னாலும் சொல்வார்கள் ;-p (சாதிப்பிரச்சினை தான் என்று இன்னொரு கூட்டம் சொல்லும்)
தடை நீக்கப்படும் விஷயங்கள் மேலோட்டமாகப் பின்வருமாறு அமைகின்றன:
1. கியூப குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவிலிருந்தால் அவர்கள் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்குமாகப் பயணிப்பதற்கான தடைகள்
2. தொலைத்தொடர்பு நிறுவனங்கள், செய்மதித்தொடர்பாடல், அகலப்பாட்டை வழங்குநர்கள் கியூபாவினுள் வியாபாரம் செய்வதற்கான தடைகள்
3. செய்மதித் தொலைக்காட்சி, செய்மதி வானொலிச்சேவைகளை கியுபாவினுள் நுழைவதற்கான தடைகள்
4. செல்பேசிகள், தொலைக்காட்சிகள் போன்ற தொலைத்தொடர்புச்சாதனங்களை கியூப மக்களுக்கு நன்கொடை அளிப்பதற்கான தடைகள்.
5. Roaming தொலைபேசிச்சேவைகளை நடத்துவதற்கான தடை
6. மனிதாபிமானப்பொருட்களான சுகாதாரப்பொருட்கள், மருந்துகள் பரிசுகள் போன்றவற்றை"நன்கொடையாக" அனுப்புவதற்கான தடை (அளவுக் கடுப்பாடுகள் உண்டு. அத்தோடு நன்கொடை பெறுவதிலிருந்து தடை செய்யப்பட்ட கியூப அரச அங்கத்தவர்கள், கியூப கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு இது செல்லுபடியாகாது)
இந்தப்பட்டியலைப் படிக்கும்போதே படம் எம்மனதினுள் அழகாக வரையப்பட்டு விடுகிறதல்லவா.?
படத்தை இன்னும் கொஞ்சம் தெளிவாக வரையலாம்.
பொருளாதாரத் தடைகளைத்தளர்த்துவது குறித்த வெள்ளை மாளிகை அறிக்கையின் சில வாசகங்களைப் பார்ப்போம்,

 

//Cuban American connections to family in Cuba are not only a basic right in humanitarian terms, but also our best tool for helping to foster the beginnings of grassroots democracy on the island. There are no better ambassadors for freedom than Cuban Americans.//
(கியூபாவிலிருக்கும் குடும்பத்துடனான கியூப அமெரிக்கர்களின் தொடர்பு என்பது மனிதாபிமான அடிப்படையிலான அடிப்படை உரிமை மட்டுமல்ல, கூடவே, அத்தீவில் அடிப்படையான "ஜனநாயகத்தின்" ஆரம்பங்களை தொடக்கி வைப்பதற்கான "எமது" அதிசிறந்த கருவியுமாகும். கியூப அமெரிக்கர்களைக் காட்டிலும் சுதந்திரத்துக்கான சிறந்த தூதுவர்கள் வேறு யாருமில்லை)
கியூபாவில் இவர்கள் கொண்டுவா விரும்பு ஜனநாயம் என்ன?
//The President is also calling on the Cuban government to reduce the charges it levies on cash remittances sent to the island so family members can be assured they are receiving the support sent to them//
(அத்தீவுக்கு அனுப்பப்படும் பணம் மீதான வரிகளையும் தீர்வைகளையும் தளர்த்தி அம்மக்களுக்கு அனுப்பப்படும் உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறும் சனாதிபதி கியூப அரசைக் கேட்டுக்கொள்கிறர்)
//Supporting the Cuban people’s desire to freely determine their future and that of their country is in the national interest of the United States.//
(தமது எதிர்காலத்தை சுதந்திரமாக நிர்ணயித்துக்கொள்வதற்கு கியூப மக்களுக்கு உதவுதல் என்ற வகையிலானது அமெரிக்காவின் அவர்களது நாடு மீதான தேசிய அக்கறை)
மக்கள் இப்போதிருக்கும் அவர்களது அரச அமைப்பை மாற்றுதல்? அதுக்கு உதவுதல்?
இதற்கு மேலாக ஒபாமாவின் வலைப்பதிவில் பிரசுரிக்கப்பட்டுள்ள Press Secretary Robert Gibbs வழங்கியதொலைக்காட்சி உரையாடலில் கவனிக்கத்தகுந்த வாசகங்கள்:
அனுப்பப்படும் பணம், சர்வாதிகாரிகளின் கைகளுக்கு போய்விடுமே என்று கேட்கப்பட்டதற்கு, அதிலுள்ள நல்ல பக்கமும் உண்டு என்றவாறு சொன்ன பதில்:
//One is that we think the positive benefits here will way outweigh any negative effects that there may have; that creating independence, creating space for the Cuban people to operate freely from the regime is the kind of space they need to start the process towards a more democratic Cuba.
//
(சுதந்திரத்தை உருவாக்குதல், ஆட்சியாளர்களில் தங்கியிராது சுயாதீனமாக கியூப மக்கள் இயங்குவதற்கான வெளியை உருவாக்கிக்கொடுத்தலே மேலும் ஜனநாயக மயமான கியூபாவை அவர்கள் உருவாக்குவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு அவர்களுக்குத் தேவையாக உள்ளது)
ஓ.. இதுக்குத்தான் "வெளிநாட்டுக் காசா"?
//Q So just cell phones is what this is talking about?
MR. RESTREPO: This is cell phones, satellite television, satellite radio. This is forms of -- modern forms of telecommunication to increase the flow of information to the Cuban people so that if anyone is standing in the way of the Cuban people getting information it is the Cuban government, and it is not some outside technical problem that can be pointed to.///
(கேள்வி: வெறும் செல்பேசிகள்? இதைப்பற்றியா இங்கே பேசப்படுகிறது?
பதில்: இது செல்பேசிகள், செய்மதித் தொலைக்காட்சி, செய்மதி வானொலி. இவையே நவீன வழிமுறைகள், கியூப மக்களுக்கான தகவல் பாய்ச்சலை அதிகரிப்பதற்கான வழிமுறைகள். கியூப மக்களுக்கு தகவல்கள் கிடைக்காமல் நடுவில் மறித்துக்கொண்டு நிற்பது கியூப அரசுதான். )
அதாவது நீங்கள் சொல்லும் தகவல்கள், உங்களுக்குச் சார்பான தகவல்கள் அங்கே போய்ச்சேராமல் மறிப்பது கியூப அரசும் ஏற்கனவே இருந்த தொலைத்தொடர்புத் தடையும். ம்ம்?
ஆக இந்தத் தடைத்தளர்வு மூன்று புள்ளிகளில் மையங்கொள்கிறது.
1. கியூபாவினுள் தொலைத்தொடர்பு யுகத்தின் "தாராளமயத்தை" புகுத்துதல்
2. கியூப மக்களுக்கு "வெளிநாட்டுக் காசு" கிடைக்க வழி செய்தல்.
3. அமெரிக்கக் கியூபர்களை "கியூப விடுதலைக்குப்" பயன்படுத்துதல்.
தாரளமயம், உலகமயம் பற்றிக் கற்பவர்களுக்கு அமெரிக்கா அருமையான வகுப்பொன்றை எடுத்திருக்கிறது.
இவ்வறிக்கையின் பின்னணியிலுள்ள அரசியலை முழுமையாக உய்த்தறியவும் விளக்கவும் எனக்கு அறிவு போதாது. ஆனால் உறுத்தும் புள்ளிகளைத் தொட்டுச்செல்லலாம்.
பழங்கால ஏகாதிபத்திய முதலாளிய நலன்கள் கியூபாமீது பல்வேறு விதமான நெருக்கடிகளைப் பிரயோகித்திருந்தது. அதில் பொருளாதாரத்தடைகளும் ஒரு பகுதி. "கம்யூனிச அபாயம்" உள்ளிட்ட பல்வேறு "அபாயங்களை" முதலாளிய ஏகாதிபத்தியம் எதிர்கொள்ளப் பயன்படுத்திய பழங்கால உத்திகள் அவ்வாறானவை.
இன்றைய புதிய சூழலில் ஏகாதிபத்திய உத்திகள் வெகுவாக தீவிர மாற்றங்களுக்குள்ளாகிவருகிறது. கியூப விஷயத்தில் சிறியதொரு இடத்தில் பழங்கால உத்திகள் "பின்-நவீன" ஏகாதிபத்திய உத்திகளோடு முரண்படுகின்றன.
நல்ல முறையில் இல்லை என்றாலும் கியூபாமீதான அமெரிக்கத்தடைகள் கியூப மக்கள் உலகமய ஒழுங்குக்குள் கரைவதை தடுத்தே வந்துள்ளன. உலகமயச்சூறாவளியிலிருந்து அம்மக்களைத் தடுத்தாட்கொள்வதாக அவர்களின் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல பொருளாதாரத்தடையும் ஆகிப்போனது.
இதனை ஒபாமாவின் முகத்தைக்கொண்ட தற்போதைய அமெரிக்கா உணரத்தொடங்கியிருப்பதாகப் படுகிறது. (புஷ் முகத்தைக்கொண்டிருந்த போதே இதுபற்றிப் பேசத்தொடங்கியாயிற்று)
கியூபாவின் வணிகத்தை வேரறுக்கும், அடிப்படைத்தேவைகளை அடித்துநொறுக்கும் தடைகளெல்லாம் அப்படியே இருக்க,
இப்போது திறக்கும் கதவு எந்தக்கொல்லைப்புறத்துக் கதவு?
இது உலகமயமாதலை நோக்கி மெல்லத்திறக்கும் கதவு.
இன்றைய நவீன தொலைத்தொடர்பு ஊடகங்கள், இணையம், தொலைக்காட்சி உள்ளடங்கலாக மாபெரும் உலகமயமாக்கற் சாதனங்கள். இவை எப்போதுமே அதிகாரங்களுக்குச் சேவகம் செய்வனவாக, அதிகாரங்களின் நலன் காப்பனவாகவே இயங்கும். (அதிகாரத்துக்கெதிரான கூறுகள் இவ்வூடகங்களில் சிறிய வெளிகளை எடுத்துக்கொள்ளும் என்பது தனியான ஆய்வுக்குரிய வேறு விடயம்)
இவற்றைக் கதவாகக்கொண்டே ஏனைய எல்லா ஏகாதிபத்திய ஒட்டகக்கால்களும் நாடுகளுக்குள்ளும் மனிதர்களுக்குள்ளும் புகத்தொடங்கும். அந்தக்கதவே இப்போது திறக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்த நுகர்வுக் கலாசாரத்தின் கூறுகளுக்காக, பணப்பரிமாற்றம் ஊக்குவிக்கப்படுகிறது. நுகர்வதற்கும் ஆடம்பரச்செலவுக்கும் "வெளிநாட்டுப்பணம்"! ஆகா! ஈழத்தமிழர்களே உங்களால் இதனை நன்கு புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?
புலம்பெயர் கியூபர்களின் பணம் சிறுகச்சிறுக கொட்டப்படவேண்டியதாயுள்ளது. கியூபாவின் சம்பள அமைப்பு முறை ஆடம்பரச்செலவுகளுக்கு சாதகமானதல்ல.
பின்னர் ஏற்கனவே உலகமய வைரஸ் ஏற்றப்பட்ட அமெரிக்கக் கியூபர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அறிக்கை அழகாகவே சொல்கிறது "சுதந்திரத்தின்" நேரடி தூதுவர்களாக அமெரிக்கக்கியூபர்களே இயங்குவார்களென.. எவ்வளவு வெளிப்படையான வார்த்தைகள்...
இலங்கையில் மட்டுமல்ல, இந்தியா, மெக்சிகோ, பிலிபீன்ஸ், இந்தோனீசியா என்று நீளும் பட்டியலில் மிக வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட உலகமயமாக்கற் கருவிகள்தான் இவை.
இந்த அறிக்கை, உலகமயச்சுரண்டலின் வாசல்கள் எவை என்று எமக்கும் அழகாக எடுத்துக்காட்டுகிறது. அத்தோடு தொழிநுட்பத்தோடு கூடவரும் அரசியற்கூறுகளை அறிந்துகொள்ளவும் உதவுகிறது.
அமெரிக்காவின் "சுதந்திரக் காற்று" இரண்டாம் உலகப்போர்க்காலம் தொடக்கம் உலகம் முழுக்க எங்கெல்லாம் எப்படி எல்லாம் சுழன்று சுழன்று வீசிற்று என்று நாம் நன்றாகவே அறிவோமல்லவா?
அப்படியானால்...
இணையத்திலிருந்தும், தொலைத்தொடர்பிலிருந்தும், நவீன கருவிகளிலிருந்தும் கியூப மக்கள் தடை செய்யப்பட வேண்டியவர்களா?
இப்படிச்சொன்னால் தொலைக்காட்சி பார்க்க வேண்டாம் என்று சொன்ன தலிபானுக்கும் ஒரு விஞ்ஞான சோசலிஸ்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?
தொடர்பாடற்தொழிநுட்பம் கியுபாவுக்குள் வந்தாகவேண்டும் என்பது காலநடப்பின் விதி. அம்மக்கள் நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். சாதனைகள் புரிய வேண்டும். தடைகளுள் சீவிக்கும் அவலம் அம்மக்களுக்கு மட்டுமல்ல எம்மக்களுக்கும் வேண்டாம்.
நவீன தொழிநுட்பங்களைத் தடையற்று கியூப மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதில், சமப்பாலுறவுக்கான அங்கீகாரம், கட்டற்ற மென்பொருட்களுக்கான ஆதரவு போன்றன தொட்டு உலகின் ஆரோக்கியமான புதிய போக்குகளோடு ஒட்டி ஓடவேண்டும் என்பதில் கியூபத் தலைவர்கள் மிகத்தெளிவாகவே இருந்தும் செயற்பட்டும் வருகிறர்கள்.
இது ஒரு புதிய களநிலைமை. புதிய போக்குகளை ஆரோக்கியமாக உள்ளேவரச்செய்வதும், கூடவே உள்நுழையப்போகும் அமெரிக்க ஆப்புக்களை (ஆப்பு! கண்ணுக்கு தெரியாது டோய்..! - இளைய தளபதி விஜய்) இனங்கண்டு களைவதற்கான பொறிமுறைகளை வகுத்துக்கொள்வதும் கியூப மக்களுக்கு முன்னால் எழுந்துள்ள சவால்.
கியூபாவுக்கு மட்டுமல்ல, நேபாளத்துக்கும்தான், ஏனைய சோசலிச நம்பிக்கைக்கீற்றுக்களோடு மக்கள் நிலை நிற்கும் நாடுகளுக்கும்தான் இது பொருந்தும்.