10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

சட்டிக்குள்ளிருந்து நெருப்புக்குள்

இலங்கை அரசு புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களைக் கைப்பற்றி, போரில் வெற்றி பெற்று வருகிறது.புலிகள் இலங்கை அரசிடம் தமது பிரதேசங்களை இழந்து சிறிய நிலப்பரப்பில முடக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள்  இந்த இரு யுத்த முனைகளுக்கும் இடையில் அகப்பட்டுள்ளனர்.

1. இனவாத சிறீலங்கா அரசின் அடக்குமுறை இன்று மிகவும் மூர்க்கமடைந்துள்ளது.   மகிந்த சிந்தனை இன்று சிங்கள மக்கள் உட்பட இலங்கையின் அனைத்து மக்கள் மீதும் பாய்ந்துள்ளது.  செய்தி ஊடகங்களை அடக்குதல்/அழித்தல், அரசியல் எதிரிகளை கொலைசெய்தல், ஏனைய அமைப்புகளை தடை செய்தல், இனவாத அழிப்புக்குத் ஆதரவாக இல்லாதவர்களை துரோகிகளாக்குதல், யுத்த கருவிகளில் ஒன்றாக பிரச்சார ஊடகங்களை முக்கியமாக்குதல்…. என்று பிரபாகர சிந்தனை மகிந்த சிந்தனையாகி வெற்றி பெற்று வருகிறது. இனவாத அரசின் இன்றைய யுத்த வெற்றி அமெரிக்க இரட்டைக்கோபுரங்கள் மீதான தாக்குதல்களின் பின்னான பயங்கரவாத  வகைப்படுத்தல், இந்திய அரசின் இராணுவ/அரசியல் ஒத்துழைப்பு/வழிகாட்டல் என்ற புறச்சூழல் காரணிகளைக் கொண்டிருந்தாலும் புலிகளின் பலவீனத்திலேயே தனது பலத்தைக் கொண்டுள்ளது.

புலிகளைத் தோற்கடிப்பதில் அடைந்துள்ள வெற்றி மகிந்த அரசு தனக்கு எதிரான சிங்கள அரசியல் சக்திகளை அழிப்பதிலும் வெறிபிடித்துள்ளது. புலிகள் என்ற பெயரில் தமிழ்மக்களை அடக்குவதற்கும்/அழிப்பதற்கும் துணை நிற்கும் சிங்கள அரசியல் சக்திகள்மீது மகிந்த அரசு பாயப் போவதை இன்னும் இவர்கள் அறியாமலிருக்கலாம். ஆனால் பிரபாகர சிந்தனை தமிழீழவிடுதலை என்ற பெயரில் தமிழ்மக்களை எப்படி நடத்தியதோ அதேபோல பயங்கரவாத அழிப்பு என்ற பெயரில் மகிந்த சிந்தனை சிங்கள மக்களை எப்படி நடத்தும் என்பது வரலாறு/இயங்கியல்.

தமிழீழ விடுதலையின் பேரில் இன்று தமிழ்மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டு  பிரபாகர சிந்தனைக்கு விலை கொடுத்து வருகின்றனர். புலி அழிப்பு பெயரில் தமது தேசத்தை அந்நியநாடுக்களுக்கு விற்கின்ற/தமது பொருளாதாரத்தை அழிக்கின்ற/தமது அடிப்படை மனித உரிமைகளை இழக்கின்ற விலையை சிங்கள மக்கள் மகிந்த சிந்தனைக்கு விலையாகக் கொடுக்கின்றனர்.

2. பிரபாகர சிந்தனை ஆயுதங்களின் மேல் நம்பிக்கை கொண்டது. புலிகளின் இருப்புக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் தன்னைத் தவிர்ந்த மற்ற அனைத்தையும் சந்தேகிப்பது. தனது இருப்பு குறித்த பயத்தின் அடிப்படையிலேயே தனது எதிரி/நண்பரை வரையறுக்கிறது. இந்த வரையறையே புலிகளின் பலவீனமாகி இலங்கை அரசைப் பலப்படுத்தியுள்ளது. விமானம்/நீர்மூழ்கி/ஏவுகணை/பீரங்கி/ஆட்டிலறி என்று ஆயுத வளங்களை வகைதொகையின்றி வாங்கி/தயாரித்துக் குவித்து வைத்திருந்தும் இவை தமிழ்மக்களை மட்டுமல்ல, புலிகளையும் இலங்கை அரசிடமிருந்து பாதுகாக்கவில்லை.  மாறாக அவர்களுடன் விரும்பியும்/நிர்ப்பந்தத்திலும் கூட இருக்கின்ற மக்களே இன்னமும் புலிகளின் அழிவைப் பின் தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.  தியாகமும்/வீரமும் கொண்ட பல போராளிகளைக் கொண்டிருந்தும் புலிகள் தோற்கடிக்கப்படுள்ளனர். இங்கே யுத்த தளவாடங்கள்/போராளிகளின் தியாகங்களைத் தாண்டி பிரபாகர சிந்தனை நம்பாத முக்கியமான காரணி ஒன்றுள்ளது - அதுதான் மக்கள்.  இந்தக் காரணிதான் புலிகளின் ஆயுத/நிதி/சர்வதேச வலைப்பின்னல்கள்/வளங்களையும் தாண்டி புலிகளைத் தோற்கடித்துள்ளது.

3. சிங்கள அரசாலும், புலிகளாலும் பணயமாக்கப்படுள்ளவர்கள் சாதாரண பொதுமக்கள்.  இவர்களின் குரல்கள் என்றோ அடக்கப்பட்டுவிட்டன. இந்த மக்களின் வாழ்வு கொதிக்கும் சட்டியையும் தகிக்கும் நெருப்பையும் மட்டுமே தேர்வாகக் கொண்டுள்ளது. புலிகளின் தமிழீழ விடுதலையின் பேராலும், அரசு/அரசு சார் குழுக்களின் சனனாயக மீட்டெடுப்பாலும் இந்த மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது. ஏகபிரதிநிதிகளும், சனாயக மீட்பர்களும், புலம்பெயர் போராளிகளும்/மாற்றுக் கருத்தாளர்களுமே இந்த மக்களின் குரலாக தாம் மட்டுமே இருப்பதாக மார்தட்டுகிறார்கள்.

புலிகளின் போராளிகளாக/துரோகிகளாக/அப்பாவி பொதுமக்களாக - எந்தப் பெயரில் கொல்லப்பட்டாலும் அழிக்கப்பட்டது இதே மக்கள்தான். இந்த மக்கள் யுத்த பிரதேசத்தை விட்டு வேறு பிரதேசங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டவர்கள். இந்த மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடி அங்கிருந்து வீ வோன்ற் தமிழீழம் என்று வீரம் காட்ட வசதியற்ற ஏழை/கூலி மக்கள். இந்த மக்கள் புலி அழிப்பு என்ற பெயரில் இலங்கை அரசால் வதைக்கப்படும் மக்கள். இந்த மக்கள் புலி எதிர்ப்பு என்ற பெயரில் துரோகக்குழுக்களால் வதைக்கப்படும் மக்கள். இந்த மக்கள் தமிழீழ விடுதலை என்ற பெயரில் புலிகளிடம் பிள்ளைகளை இழக்கும் மக்கள்.

4. இவ்வளவுகால இழப்புகளையும், இத்தனை இழப்புகளையும் முகம்கொடுத்து மிஞ்சியிருக்கும்  மக்களையும் அழிக்கவும்/சிதைக்கவும்  இலங்கையிலும், வெளிநாடுகளிலும் சதிகள் தொடர்கின்றன.

வறுத்தெடுக்கும் சட்டிதான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு என்கின்றனர் புலிகளும், புலி ஆதரவாளர்களும்.

சட்டிக்குள்ளிருந்து நெருப்புக்குள் குதித்துவிடுவதுதான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு என்கின்றனர் இலங்கை அரசும், புலி எதிர்ப்பாளர்களும்.

சர்வதேச அரசுகளோ சட்டியை குறை சொல்லிக்கொண்டு நெருப்புக்கு எண்ணை வார்த்துக்கொண்டிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டம்/சர்வதேசம்/புலிகளின் தவறுகள்/மாற்றுவழி ….. என்றெல்லாம் தொடர்ந்து உரையாடலாம்.  உண்மையான விடுதலைக்கு இவை உதவலாம்.

ஆனால் இந்த விடுதலைக்குரிய மக்களின் உயிரைக் காப்பாற்றுவதுதான் இன்றைய முதன்மைப் பிரச்சினை.  இந்த அடிப்படையில்தான் மக்களை நேசிக்கும் உரையாடல்கள் அமைய முடியும்.

இதற்கான நிபந்தனை போர் நிறுத்தம்.

போர் நிறுத்தம் புலிகளைக் காப்பாற்றும் என்ற புலி எதிர்ப்புக்குழுக்களின் வாதம் மக்களுக்கு எதிரானது.

வீ வோன்ற் தமிழீழம்/ அவர் லீடர் பிரபாகரன் என்று இன்று சர்வதேசங்களில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மக்களுக்கு எதிரானது.

புலிகளின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று சர்வதேசங்கள் சுலபமாக தப்பிக்கொள்கின்றன. புலிகள் அல்லாது மக்கள் சார்ந்து/மக்களை - மக்களை மட்டுமே - முதன்மைப்படுத்தி முன்வைக்கப்படும் போர்நிறுத்தக் கோரிக்கை மட்டுமே ஆகக் குறைந்தபட்சம் பொதுமக்க்கள் அழிவு குறித்து சர்வதேசத்திற்கு குற்ற உணர்வைத் தோற்றுவிக்கும். சர்வதேச பொதுமக்களின் உணர்வைத் தூண்டும். இந்த உணர்வுமட்டுமே சர்வதேச அரசுகளுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும்.

இன்றைய உடனடித் தேவை - போர்நிறுத்தம்.

மக்களுக்காக!


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்