புலிகள் துரோகிகள், இனியும் செய்ய துரோகம் என்று ஒன்று அதனிடமில்லை என்று கூறிக்கொண்டு சரணடையக் கோருகின்றனர். யாரிடம்! தமிழ் மக்களின் எதிரியிடம். தமிழ் மக்களின் முதல் எதிரியுடன் புலிகள் சேர்வதையிட்டு, எமக்கு (பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் கூறுகின்றனர்) அக்கறையில்லை என்கின்றனர்.

 

இப்படி துரோக அரசியல் மோசடி ஒருபுறம். மறுதளத்தில் புலிகள் பற்றி விவாதிக்க தேவையில்லை என்;று கூறிக்கொண்டு, அவர்களை சரணடையக் கோருகின்றனர். துரோகத்தை செய்யும்படி கோருவோம், ஆனால் துரோகத்தை செய்யாதே என்று கூறுவது பற்றி விவாதிப்பது எமது வர்க்கத்தின் அரசியலில்லை என்கின்றனர்.

 

சொந்த துரோக அரசியல் விவாதத்தில் இருந்து தப்பவும், விவாதம் செய்ய முடியாத நிலையிலும், சந்தர்ப்பவாதமாக தொடர்ந்து இருக்கவும், சமகாலத்திய விடையத்தில் மௌனத்தை அரசியல் ஆக்குவது தான் பலரின் அரசியல் மோசடித்தனமாகும். இதற்காக அவர்கள் இது எம் வர்க்கத்தின் பிரச்சனையில்லை என்று கூறிக்கொண்டு மெதுவாக நழுவுகின்றனர். இந்த சமூக அமைப்பில் அனைத்து இயக்கமும், வர்க்க எல்லைக்குள் இருக்கின்ற போது, அது எமது வர்க்க பிரச்சனையில்லை என்று கூறி நழுவுவது சந்தர்ப்பவாத அரசியல்.

 

தேசிய இனப்பிரச்சனை எம் மண்ணில் இரண்டு இனங்களுக்கு  இடையில் முரண்பாடாக இருந்தபோது, கம்யூனிஸ்கட்சி அது சுரண்டும் வர்க்கத்தின் பிரச்சனை என்று சொல்லி நழுவிய அதே வரட்டுவாதம்;, இங்கு சந்தர்ப்பவாதத்துடன் சமகால நிலைமைகள் மீது எழுகின்றது.

 

'எதுவுமில்லாத" துரோகம் பற்றி கூறிக்கொண்டே, துரோகத்தை முன்வைப்பது 

 

துரோகங்களை மூடிமறைப்பது, அதற்கு எதிராக போராட மறுப்பது, அனைத்தையும் ஒன்றாக காட்டுவது, அதை விவாதிக்கவும் கருத்து கூற மறுத்து சொதப்புவது, இன்று பொதுவான அரசியலாக மாறி வருகின்றது. இது தங்கள் துரோகத்தை பற்றிய அரசியல் விவாதமாக மாறிவிடும் அபாயத்தை தவிர்ப்பதற்கான, சந்தர்ப்பவாத அரசியலாக மாறிவிடுகின்றது. இப்படி இந்த துரோகத்தின் பின்னுள்ள மூடுமந்திர அரசியல் கூறுகளை ஆராய்வோம்.

 

1. நாம் அரசுடன் நிற்கும் குழுக்களை துரோகி என்கின்றோம். ஏன்? தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையான தேசியத்தை மறுத்து, அதை ஒடுக்கும் அரசுடன் சேர்ந்து நின்றதால், நிற்பதால், அவர்களை துரோகி என்று வரையறுக்கின்றோம். இதே அளவுகோலைக் கொண்டு புலியை நாம் துரோகி என்று சொல்வதில்லை, சொல்லவும் முடியாது. வரட்டுவாதிகள் போல், துரோகி என்ற அளவுகோலை, நாம் பொத்தாம் பொதுவில் கையாள முடியாது. புலிகள் அரசுடன் சேர்ந்து நிற்காத வரை, அரசுடன் நிற்கின்ற துரோகிகளுடன் புலிகளை ஒன்றாக வகைப்படுத்த முடியாது. இல்லை ஒன்றுதான் என்று கூறுவது, அதை பிரித்து அணுக மறுப்பது,  தம் துரோக அரசியலை மூடிமறைக்கும் அரசியல் வரட்டுவாதம்.

 

புலிகளை அரசுடன் சேர்ந்து நிற்கும் துரோகியாக நாம் வகைப்படுத்த, புலிகள் துரோகம் செய்ய வேண்டும். இங்கு இந்த துரோகத்தை செய்யக் கோரும் அரசியலும், துரோகம் தான்.

 

அரசுடன் நிற்பவர்கள் மட்டும் துரோகியல்ல, அதை செய்யக் கோரும் அரசியலும் துரோகம் தான். இதைத்தான் புலியெதிர்ப்பும் கோருகின்றது, இதைத்தான் 'புதியஜனநாயக புரட்சியின்" பெயரிலும் சந்தர்ப்பவாத அரசியலூடாக கோருகின்றனர்.   

 

2. புலிகளின் துரோகம் தமிழ் மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளை மறுத்து நிற்பதுதான். இது அரசுடன் சேர்ந்து நிற்கின்ற துரோகத்தில் இருந்து வேறுபட்டது. தமிழ் மக்களின் முதலாவது எதிரியான அரசுடன் சேர்ந்து செய்யும் துரோகமும், தமிழ் மக்களின் இரண்டாம் எதிரி மக்களின் உரிமைகளை மறுத்து செய்யும் துரோகமும் ஒன்றல்ல. அத்துடன் முதலாம் எதிரியுடன் சேர்ந்து நிற்கின்ற துரோகம், இரண்டாவது துரோகத்தை உள்ளடக்கியது.

 

இப்படி துரோகத்தின் அளவும், பண்பும், நோக்கமும் அனைத்தும் வேறுபட்டது. இதன் அரசியல் விளைவு வேறுபட்டது. மக்கள் இதை அணுகும் அளவும் வேறுபட்டது. முரண்பட்ட வர்க்கங்கள் இதை, தன் சொந்த வர்க்க அளவுகோலின் ஊடாகவே அணுகும். புதியஜனநாயகப் புரட்சியின் நட்பு வர்க்கங்களை வென்று எடுக்கும் வண்ணம், இதை நாம் வேறுபடுத்தி பார்க்காமல், மக்களை புரட்சிக்கு அணிதிரட்ட முடியாது.

 

3.வன்னியில் சிக்கியுள்ள மக்கள் மேல் புலிகள் இழைக்கும் பலி அரசியல் ஊடான இன்றைய துரோகமும், முழு மக்களுக்கும் எதிராக சரணடைவு ஊடாக செய்யும் அரசியல் துரோகமும், அளவிலும்; பண்பிலும் நோக்கத்திலும் வேறுபட்டது. இதை புரட்சிகர சக்திகள் வேறுபடுத்தி, இதை இனம் கண்டு, சரியான கோசங்களுக்கு ஊடாக போராடாத வரை, மக்களை சரியாக வழிநடத்தவோ வென்றெடுக்கவோ முடியாது. மாறாக வரட்டுவாதத்துடன், சந்தர்ப்பவாத நிலையெடுத்து, ஊத்திக் குழைத்து திணிக்கும் அரசியல் புரட்சிகர அரசியலல்ல.

 

4. நோக்கத்தில் வேறுபட்ட அரசியல் துரோகத்தை, அரசியல் ரீதியில் வகைப்படுத்தத் தவறுவது, துரோகத்தை பின்பக்கமாக மூடிமறைத்து வைக்க முனையும் அரசியலாகும். இதன் மூலம் பரந்துபட்ட மக்கள், துரோகத்தை அரசியல் ரீதியாக பிரித்து பார்க்கும் பகுத்தறிவை இல்லாதாக்குவதாகும். இதன் மூலம் வேறுபட்ட வர்க்கத்தின் அரசியல் அணி சேர்க்கைகளை திரித்து, புரட்சிக்கு எதிராக மாற்றுவதாகும்.

 

5.புலியின் வலது பாசிசத்தின் பின் அணிதிரட்டப்பட்டுள்ள வர்க்கம், குட்டிபூர்சுவா வர்க்கமாகும். இது தன் சொந்த தப்பபிராயங்களுடன் தான், புலியுடன் நிற்கின்றது. இது தன் ஜனநாயகக் கோரிக்கைகளை இதனூடாக பார்க்கின்றது. இதை வரட்டுவாதமாக அணுகி நிராகரிப்பது, மார்க்சியமல்ல. ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில், பூர்சுவா ஜனநாயக் கூறுகளை இனம் காண்பது, அதை பிரித்தெடுத்து அதை முன்வைக்காத அரசியல் புரட்சிக்கு எதிரானது.

 

படுபிற்போக்கான கூறுகளை தனிமைப்படுத்தி, சரியான ஜனநாயகக் கூறுகளை இனம் கண்டு அணுக வேண்டும். இதற்கு மாறாக இயங்கியல் அணுகுமுறையற்ற பொத்தாம் பொதுவான முத்திரை குத்தல், புலிப்பாணியிலான துரோகம்-தியாகம் அரசியலாகும். இது தானல்லாத வர்க்கங்களை, தனக்கு எதிராக நிறுத்துகின்றது. புதிய ஜனநாயகப் புரட்சி என்பதே, பல்வேறு வர்க்கங்களின் நலனை உள்ளடக்கியது. வர்க்கங்களின் நலன்கள், புரட்சிக்கு எதிராகவும் சார்பாகவும் இருப்பதை கணக்கில் எடுத்து, அணுகாத வரட்டுவாத சந்தர்ப்பவாத அரசியல் ஊடாக அணுகித்தான், துரோகத்தை அரசியலாக முன்மொழிகின்றது.

 

இப்படி இந்த துரோக அரசியல் பின் பல அரசியல் கூறுகள் உண்டு.  

 

பி.இரயாகரன்

16.04.2009