முதல் பகுதியில் புலி தன் சொந்த வர்க்கத்திடம் இன்னமும் அம்பலமாகாது இருப்பதையும், அதனால் அது இன்னமும் தன் வர்க்கத்தின் துணையுடன் நீடிக்க முனைகின்றது என்பதைப் பார்த்தோம். புலிகள் இன்று மக்களின் எதிரியிடம் தோற்கக் காரணமாக இருப்பது, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுதான்.
ஆனால் அது வர்க்க முரண்பாடல்ல. சொந்த வர்க்கத்தின் அதிருப்திகள் தான், புலியை தோற்கடிக்கும் முரண்பாடாகியது. இதனால் தான், உள்ளிருந்து புலி தோற்கடிக்கப்படவில்லை. அரசியல் ரீதியாக புலிகளின் இருப்பு கேள்விக்குள்ளாகவில்லை. உள் (தனிமனித) முரண்பாடுகள் தான், புலிக்கு எதிரானதாக வெளிப்படுகின்றது. ஆனால் அது இன்று புலியின் அழிவாக மாறி நிற்கின்றது. தமிழ் மக்களின் எதிரி மூலம் அழிகின்றது.
இன்றைய இந்த நெருக்கடியில் பிரதான எதிரிக்கு எதிராக புலிகள் துரோகம் செய்யாது போராடினால், புலிகளின் இறுதி முடிவு என்பது அறுதியானதுதானதும், முடிவானதுமாகும்.
புலியைக் காப்பாற்றும் அரசியல்
புலியை பாதுகாக்க ஏகாதிபத்தியத்திடம் பிச்சை கேட்கும் புலி அரசியல் ஒருபுறம். இது தன் தியாகத்துக்கு பதில், துரோகத்தை செய்ய தலைகீழாக நிற்கின்றது. இதனால் இன்று தன் தலைமையில் சொந்த தியாகத்தையே மூடிமறைக்கின்றது. ஒரு துரோகத்தின் ஊடாக தன் தலைமையை காப்பாற்ற, தமிழ் மக்களின் பிணத்தையே தன் பின்னால் உற்பத்தி செய்கின்றனர். போராட விரும்பாதவர்களை தன் முன்னால் பலியிடுகின்றது. இதுதான் இன்று புலி அரசியல்.
இதையே சிலர் மக்களைக் காப்பாற்றுவது என்ற பெயரால், புலியின் துரோகத்தையே தம் அரசியலாக முன்னிறுத்துகின்றனர். மக்களை காப்பாற்றுவதன் பெயரால், போராட விரும்பாதவர்களை மீட்பதன் பெயரால், அரசுடன் கூடி புலி செய்யும் துரோகம் தான், இன்று மக்களை மீட்கும் சரியான வழி என்று கூறுகின்றனர்.
இதற்காக புலியெதிர்ப்பு அரசியல், அரசுடன் தாம் கூடிச் செய்வதுதான் சரி என்கின்றனர். மற்றவர்கள் புதியஜனநாயக புரட்சி பற்றி பேசிக்கொண்டு, அரசுடன் புலி சேர்ந்து ஒரு துரோகத்தை செய்யக் கோருகின்றனர்.
இதை மூடிமறைக்கவே புதிதாக எந்தத் துரோகமும் புலிகள் செய்ய அதனிடம் எதுவும் கிடையாது என்கின்றனர். இப்படி கூறிக்கொண்டு, புலிகள் அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை புதிய வடிவில் ஓடுக்குவதையே, மக்களை காப்பாற்றுவது என்ற பெயரில் மறைமுகமாக முன் வைக்கின்றனர். புலிகளின் அரசியல் இருப்பு, இவர்களின் அரசியல் ஊடாகக் கோரப்படுகின்றது.
புலிகளின் துரோக இருப்புக்கு பதில், போராடி மடி என்று நாம் கோருவதை மறுக்க வைக்கும் வாதம் மோசடியானது. இதற்காக எம்மை திரித்து புரட்டிக் காட்டுகின்றனர். புலியின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் காப்பாற்றுவது பற்றி பேசுகின்றனர். போராடி மடி என்ற எமது கோசம், இவர்களின் திரிபுக்கு புறம்பாக இரண்டு விடையத்தைக் கோரியது.
1.மக்களை விடுவி
2. போராட விரும்பாதவர்களை விடுவி.
இந்த அடிப்படையில் தான், நாம் புலிகளின் அரசியல் இருப்பை இல்லாததாக்க, இந்த நெருக்கடிக்கு ஊடாக போராடி மடி என்ற கோசத்தை முன்வைத்தோம்.
இதை திரித்து புரட்டும் போது,
1. மக்களை விடுவி
2. போராட விரும்பாதவர்களை விடுவி
என்பதை, நாம் வைக்க தவறுவதாக காட்டியபடி, புலிகள் சரணடையக் கோரும் துரோகத்தை இதன் பெயரில் வைக்கின்றனர்.
இது வெறும் வலதுசாரி அரசியல் சார்ந்து, அது உருவாக்கிய இழப்பு மேல் கோரும் துரோக அரசியலல்ல. நாளை பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் கூட இழப்புகளைக் காட்டி, இந்த அரசியல் தான் துரோகத்தை வழிகாட்டும்.
இவர்கள் மக்களின் இழப்பு மீதும், போராட விரும்பாதவர்களின் மரணங்கள் மீதும், எமக்கு அக்கறை கிடையாது என்று முதலில் திரித்துப் புரட்டுகின்றனர். இப்படி காட்டியபடி தான், தம் கருத்துகள் அனைத்தையும் அள்ளித்தெளிக்க முடிகின்றது. அத்துடன் புதிய ஜனநாயக புரட்சிக்கு பதில், புலி அரசியல் பின்னால் நாம் நிற்பதாக திரித்துபுரட்டி கதை சொல்லமுடிகின்றது. விவாதத்தின் புள்ளியில், அதன் அரசியல் அடிப்படை மீது விவாதிக்காமல் நழுவுகின்றனர். இதை மூடிமறைக்க மக்களை காப்பாற்றுவது, புலிகளின் கீழ்மட்ட போராளிகளை மீட்பது என்று, புலியை துரோகம் செய்யக் கோரும் தத்துவத்துக்கு ஒப்பாரிப் பல்லவி பாடுகின்றனர்.
இலங்கை அரசின் இனவழிப்பை பாதுகாக்க முனையும் துரோக அரசியல்
இன்று மக்களை கொல்வது இனவழிப்பு அரசியல். அதை இந்த அரசியல் கோமாளிகள் திரிக்கின்றனர். இன்று மக்களின் மரணங்கள், அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்தில்தான் நடந்தது. புலிகள் புதுகுடியிருப்புக்கு வர முன், அங்கிருந்து சண்டை செய்யவில்லை. சண்டை நடைபெறாத இடத்தில் வைத்துத்தான், பெருமளவிலான மக்களை இந்தப் பேரினவாதம் கொன்றது.
இப்படி தமிழ்மக்களை கொன்றும், மிரட்டியும் தனக்கு அடிபணியக் கோருகின்றது. யுத்தமுனைக்கு வெளியில் மக்கள் கொல்லப்பட்டனர். புலிச் சந்தேக நபர்கள் இலங்கை முழுக்க இனம் தெரியாத கடத்தல், படுகொலைகள் மூலம் ஆயிரக்கணக்கில் இல்லாதாக்கப்பட்டனர்.
இந்த இடத்தில் யுத்தத்தை நிறுத்து, தமிழ்மக்களின் உரிமையை வழங்கு என்ற கோசம் தான் முதன்மையானது. இதில் இருந்து தான், இந்த நெருக்கடி மீதான அனைத்து அரசியலும். தமிழ் மக்களின் பிரதான எதிரியை புறந்தள்ளி, புலியை முன்னிறுத்தி அரசியல் குறுகியது. யுத்தத்தை நிறுத்து என்று கோருவதும் தமிழ் மக்களின் உரிமையை வழங்கு என்று கோருவதும், இதற்கு உட்பட்டது தான். மனித அவலங்கள், இளம் போராளிகளின் நலன்கள் என அனைத்தும். இங்குதான் புலிகள் மக்களை, கொலைகாரன் முன் நிறுத்தி வைத்திருப்பதும், பலியிடுவதும் என்ற அரசியல் நடக்கின்றது. இப்படியிருக்க எதிரியிடமே சரணடை என்று கோருவது, ஒரு துரோக அரசியல்.
பி.இரயாகரன்
14.04.2009