விடுதலைப்புலிகட்கும் பிரேமதாசா அரசிற்கும் 89-90 களில் ஏற்பட்ட தேன் நிலவு முறிவடைந்து 90 ஆனியில் மீண்டும் ஒரு மோதல் நிலை ஏற்பட்டது. இராணுவம் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்துக்குள், பெரிய அளவில் முகாம்களை ஏற்படுத்தி புலிகளை அழிக்கவும் மொத்தத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் மேல் குரூரமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது.

 

கிழக்கில் மிக இலகுவாக புலிகளை பின்வாங்கச் செய்த இராணுவத்தினருக்கு வடக்கில் புலிகளின் கரம் பலம் பெற்றிருந்தது பெரும் சவாலாக இருந்தது. இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையில் போர் ஆரம்பிக்கப்பட்ட பின் குறிப்பிடும்படியாக கிழக்கில் புலிகளால் கைப்பற்றபட்ட பொலிஸ் பணயக்கைதிகள், புலிகளின் கோட்டை இராணுவ முகாம் தகர்ப்பு முயற்சி, கொக்காவில் மினி முகாம், மாங்குளம் இராணுவ முகாம், ஆனையிறவு மோதல், வெற்றிலைக்கேணி மோதல், பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன விஜேயரட்ன (புலிகளின் முன்னாள் தோழர்) கொலை ஜே-ஓ-சி தாக்குதல், கிளான்ஸி பெர்னாண்டோ கொலை, ஜனாதிபதி பிரேமாதாசா கொலை, கட்டைக்காடு ஆயுதக்கிடங்கு தாக்குதல் மண்கிண்டி மலை(ஜனகபுர) இராணுவ முகாம் அழிப்பு, கடற்புலிகள் தாக்குதல் என தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். அத்துடன் இராணுவத்தினரின் ஆனையிறவிலிருந்து கிளாலி வந்த யாழ்தேவி நடவடிக்கையை தோல்வியுறச் செய்தனர். மேலும் பல. ஆனால் இங்கு நோக்கப்பட வேண்டியது உண்மையான வெற்றி தோல்விகள். வெற்றி யாருக்கு? ஏன்? என்பன.

 

அரசும் புலிகளும் இனவாதத்தின் உச்ச நிலையிலிருந்தே மோதிக்கொள்கின்றன. புலிகளின் தலைமைக்குள் குத்துவெட்டும், குழிபறிப்பும், பதவிக்காக கொலையும், இது பற்றிய செய்திகள் அண்மையில் பிசுபிசுக்க ஆரம்பித்துள்ளது. புலிகளின் மௌனம் சந்தேகத்தையே அளிக்கின்றது.

 

பிரேமதாசாவின் அரசியல் கைப்பொம்மையாக செயற்பட்ட பிரதமர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் பௌத்த இனவாதிகளுடன் மெலும் ஜக்கியப்பட்டுள்ளனர். பிரேமதாசா ஒரு புறத்தே இனவாதியாகவும் மறுபுறத்தே தமிழர்களின் நண்பர் போலவும் வேடமிட்டார். குடாநாட்டின் முற்றுகையை இறுக்க 1991 ஜப்பசி மாதம் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட வலம்புரி இராணுவ நடவடிக்கை மூலம் இராணுவத்தால் பூனகரி கைப்பற்றப்பட்டு 2000 க்கு மேற்பட்ட படையினர் குவிக்கப்பட்டனர். ரேடர் நிலையத்துடன் கூடிய கடற்படை முகாமும் உருவாக்கப்ட்டது. ஆனையிறவுப் பாதை தடை செய்யப்பட்ட பின் தமிழீழத்தின் தென் பகுதியிலிருந்து யாழ் குடாநாட்டிற்கு பிரவேசிக்க புலிகட்கும், பொதுமக்களுக்கும் பூனகரிப் பாதையே பெரும் உதவியாக இருந்தது. யாழ் குடாநாட்டில் உள்ள பொது மக்களை பட்டினிசாவிற்கு உள்ளாக்கவும், புலிகளைத் தனிமைபடுத்தவுமே பூனகரி இராணுவ முகாம் பலப்படுத்தப்பட்டது. இராணுவ உயர்பீடம் குடாநாட்டின் மேல் பெரும் தாக்குதல் ஒன்றைத் திட்டமிட்டிருந்த வேளையில் தான் வடபகுதி பிரதான தளபதி டென்சில் கொப்பேகடுவ உட்பட வடபகுதியில் இராணுவக்கூலிகளுக்கு பொறுப்புவகித்த பல உயர் அதிகாரிகள் அராலித்துறை குண்டு வெடிப்பில் கொலை செய்யப்பட்டதுடன் குடாநாட்டின் மீதான எந்த இராணுவ நடவடிக்கையும் வெற்றியளிக்கவில்லை.

 

அண்மையில் இராணுவம் சந்தித்துவரும் இழப்புக்கள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. புதிய ஜனாதிபதியும், பிரதமரும் வடக்கில் உள்ள பிரச்சனை பயங்கரவாதமே என்று புதிய முறையில் வாந்தியெடுத்துள்ளனர். இனவாதிகள் திடுக்கிடும்படியாக 11-11-1993 அதிகாலை 2 மணிக்கு ஆயிரக்கணக்கான புலிகள் பூனகரி இராணுவமுகாமையும், நாகதேவன் துறை கடற்படை முகாமையும் தாக்கினர். 12ம் திகதி புலிகள் தாம் ஏற்கனவே திட்டமிட்டபடி பொதுமக்களின் பாவனைக்கு பூனகரிப் பாதை திறக்கப்படும் என்று அறிவித்தனர். 13ம் திகதி பிற்பகல் 2மணிக்கு பின்தான் வடக்கே இரண்டு மைலுக்கு அப்பால் இராணுவம் உலங்கு வானுர்தி மூலம் இறக்கப்பட்டது. இதன் பின்னர் தொலைதொடர்பு சாதனங்கள் பெறப்பட்டு 14-11-1993 இல் தான் மீண்டும் இராணுவம் மீட்பு வேலையில் ஈடுபட்டது.

 

இங்கு கொல்லப்பட்டு காணாமல் போனவர்கள் 1000 க்கு மேல். காயம்பட்டவர் 500 க்கு மேலாகும். பௌத்த பேரினவாதம் செய்வதறியாது திகைத்தது. அங்கு என்ன நடந்தது என்றே அவர்களால் அறிய முடியவில்லை. மீண்டும் ஒருமுறை மக்கள் மத்தியில் அம்பலப்பட்ட இனவாதிகள் மூடிமறைப்பதாலும், படைகளை ஏவி பத்திரிகையாளர்களை மிரட்டியும் அப்பாவித் தமிழர்களை கொலை செய்தும் தமது நிலையை சரி செய்வதாகக் காட்டிக் கொண்டனர்.

 

சண்டையில் புலிகள் பகுதியில் 450 இறந்து மாவீரர் ஆனார்கள். காயம்பட்டவர்கள் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. 35 கோடிக்கு மேல் ஆயுதம் கைப்பற்றியதாக புலிகள் பெருமிதம் கொண்டுள்ளனர். தாக்குதலைத் திட்டமிட்டவர் தேசியத் தலைவர் பிரபாகரன் என்று வழக்கமான துதிபாடல் நடந்தது. ஆனால் அங்கு கவனிக்கப்பட்ட வேண்டியது தாக்குதலுக்குள்ளான முகாம் குடாநாட்டின் பிரதான பாதைகளில் ஒன்றாக இருந்தும் ஏன் புலிகள் அங்கிருந்து பின் வாங்கினர் என்பதுவே. புலிகளின் அரசியல் இராணுவச் செயற்பாடுகள் மேல் இருந்து திணிக்கப்படுபவை. கடந்த காலத்தில் புலிகள் ஆனையிறவு முகாம் மீது மேற்கொண்ட தாக்குதலில் 1000 புலிகளைப் பலி கொண்டது. புலிகள் விடாப்பிடியாக தாக்குதல் நடத்தியும் 1500 க்கு மேற்பட்டோர் காயமடைந்து சண்டையில் படுதோல்வியே தழுவினர். குறிப்பிடவேண்டிய விபரம் என்னவென்றால் முகாமிற்குள் இருக்கும் இராணுவத்தினரை விட பல மடங்கு தொகையான புலிகள் தாக்குதலில் பங்குபற்றினர். இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் புலிகட்கு பெரும் சுமையாகவே மாறினர். அவர்கள் காயமடைவதை விட தாக்குதலில் இறந்துபோவதையே விரும்புகின்றனர்.

 

இதுபோல் தான் பூனகரியில், ஆனையிறவு நிலை ஏற்படாதிருக்க அவசரமாய் பின்வாங்கிக் கொண்டனர். ஏன் எனின் முன்கூட்டியே திட்டமிட்ட ஒழுங்கமைப்பைப் பேணவும், தலைமையின் உத்தரவை நிறைவு செய்யவுமே. பூனகரித் தாக்குதலில் இராணுவத்தை ஒழித்துக்கட்டியிருக்க முடியும். புலிகளின் தலைமையின் ஜனநாயக மறுப்பும், மக்கள் விரோதப்போக்கும் பூனகரியை கைப்பற்றுவதற்கு பதில் பின்வாங்கி தோல்வியை தழுவிக் கொண்டனர். இதில் எந்த வகையிலும் புலிகள் வெற்றியடையவில்லை. எது எப்படியிருந்தாலும் புலிகளின் தலைமை மகிழ்ந்திருக்க கோடிக்கணக்கான நவீன ஆயுதங்களை கைப்பற்றி விட்டனர். பல ஆயிரம் போராளிகள் ( மாணவர், சிறுவர், இளைஞர்களின்) இராணுவச் சீருடையுடனான நினைவுச் சின்னங்களால் யாழ் குடாவை என்ன யுத்தக் காட்சிச் சாலையாக மாற்றப் போகிறார்களோ?

 

புலிகளின் யுத்த தந்திரம் அவர்களின் அரசியலுடன் பின்னிப் பிணைந்தது. புலிகளின் தாக்குதல் எப்போதும் தலைமையிலிருந்தே உத்திரவிடப்படுகின்றது. சுயமான தாக்குதல் தன்மையை புலிகள் வழங்குவதில்லை. புலிகளின் மக்கள் விரோதப்போக்கு மக்களை, போராட்டத்தில் ஈடுபடாது பார்வையாளர்களாக மாற்றியுள்ளது.

 

புலிகள் துப்பாக்கி முனையில் மக்களை மவுனிக்கவைத்து தமது செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளனர். புலிகள் மக்களின் ஜனநாயக உரிமையை அங்கீகரிக்காமலும் சிறுவர்களை வெறியூட்டியும் மக்களை இக்கட்டான நிலைக்கு உட்படுத்தி இது போன்று ஆயிரம் முகாம்களை தாக்கி அழிக்கலாம். ஆனால் நாம் யுத்தத்தில் வெல்ல வேண்டியுள்ளது. புலிகட்கும், மக்களுக்கும் ஜனநாயகத்தை வழங்குவதன் மூலம் மட்டுமே தமிழ் ஈழத்தை வெல்ல முடியும். இதை மறுத்து தொடர்ந்து வழமை போல் என்றால் புலிகள் ஒரு வெறிபிடித்த சுறுசுறுப்பான ஒரு இராணுவமாகவே இருக்க முடியும்.