08192022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

ஜெகோவாவின் பித்தலாட்டம்!

மேற்கு நாடுகளில் ஜெகோவா என்ற சமய பித்தலாட்டவாதிகள் மக்களை திசை திருப்ப முயன்று வருகின்றனர். சர்வதேசரீதியில் சுரண்டும் வர்க்கம் மக்கள் மீது நடத்தும் காட்டுமிராண்டித் தனமான அடக்குமுறைக்கு உள்ளாகிய பலர் அந்நியநாடுகளில் அரசியல் புகலிடத்தை தேடுகின்றனர்.

 

அவர்கள் மத்தியில் மிகத் திட்டமிட்ட வகையில் ஜெகோவா பித்தலாட்டவாதிகள் செயலாற்றுகின்றனர். இன்று உலகில் காணப்படும் சுரண்டல் அமைப்பை எதிர்கொண்டு போராடிய மக்களை திசைதிருப்ப முயலும் இவர்கள் ஏகாதிபத்தியத்தை காப்பாற்ற முனைகின்றனர். இவர்கள் இன்று உலகில் காணப்படும் பிரச்சனைகளைக் காட்டி ஜெகோவாவை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவைகளைத் தீர்த்துவிட முடியும் எனக் கூறி பித்தலாட்டம் ஆடுகின்றனர்.

 

யூக்கோஸ்லாவியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஜெகோவாவை ஏற்றுக் கொள்ளாமையே காரணம் எனக் கூறிப் பிதற்றுகின்றனர். யூகேஸ்லாவியா பிரச்சனை சுரண்டும் வர்க்கம் சுரண்டக் கையாண்ட யுத்தமே. இலங்கையில் எமது இனப்பிரச்சனை சுரண்டும் வர்க்கம் தமது நலன்களை பேண எப்படி இனவாதத்தை முதன்மைப்படுத்தி ஆட்சியில் இருக்க முடிகிறதோ அதுபோல் தான் உலகில் உள்ள பிரச்சனைகள்.

 

இது போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்ளப் போராடுவதே ஒரே வழி. அதை விடுத்து ஜெகோவாவை வழிபடுவதால் இப்பிரச்சனைகள் தீர்க்கப்பட மாட்டாது. இலங்கையில் இனப்படுகொலையை நிறுத்த போராடுவதே ஒரே வழி. அதைவிடுத்து ஜெகோவாவை வழிபடின் இனப்பிரச்சனை தீர்வு பெறமாட்டாது. இன்று பிரான்சில் 8 மணிநேர வேலைநேரத்தை தொழிலாளர்கள் போராடித்தான் பெற்றனர். மாறாக ஜெகோவாவை கும்பிட்டபடி இருப்பின் அது 12-16 மணி நேரமாகவே இருந்திருக்கும். நீங்கள் ஒரு நாட்டில் பெறும் அனைத்து உரிமைகளும் போராடியதால் கிடைத்தவை தான்.

 

மாறாக ஜெகோவாவை கும்பிட்டு கிடைத்தவையல்ல. உங்கள் எந்தப் பிரச்சனைக்கும் எந்தச் சமயமும் மதமும் தீர்வு தர மாட்டாது. மாறாக போராடுவதன் ஊடாகவே தீர்வைப் பெறமுடியும்.


பி.இரயாகரன் - சமர்