புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் சோசலிச தமிழீழத்தையே உருவாக்க வேண்டும் என்பது எனது கருத்து. நாம் சிங்கள மக்களுடன் இணைந்து வாழமுடியாது என்று தான் தமிழீழம் என்று முடிவெடுத்தோம். ஆனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்வதில் தவறில்லை.

 

ஆனால் இனவெறியானது சிங்களமக்கள் மத்தியில் ஜ-தே-க, ஸ்ரீ-ல-சு-க ஜாதிக சிந்தன உறுமாய மற்றும் பிக்குகளால் சிங்களமக்கள் மத்தியில் பச்சைப்படியே இனவாதம் தூவப்பட்டு இனவாதம் கூர்மை அடைந்து முழுத் தமிழர்களையும் புலியாகவும் அவர்களுடைய பயங்கர எதிரியாகவும் நினைக்கிறார்கள்.

 

அத்துடன் அங்கு முற்போக்கு அணி உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் மறைந்து வருவதை அண்மைக்கால வரலாறுகள் எடுத்துக்காட்டியுள்ளன. அப்படி உருவானாலும் இன வாதவலைக்குள் அவை விழுந்து விடுகின்றன. உதாரணம் 33 ஆவது சரிநிகர் பத்திரிகையில் ராவய பத்திரிகையின் மாறுபட்ட நிலையை வெளிப்படுத்தினார்கள. ஜே-வீ-பி ஆரம்பம் கம்யூனிச அமைப்பு என்று கூறி பின்பு இனவாதத்தை காட்டிக் கொண்டதும் யாவரும் அறிவார்கள.

 

 காலப்போக்கில் முற்போக்கு என்று கூறும் சக்திகள் காலப்போக்கில் பேரினவாத நீரோட்டத்தில் கலந்து விடுவார்கள் உண்மை. இதன் பின்பு ஜக்கியம் என்று பேசுவதில் ஒன்றும் வந்து விடப் போவதில்லை. வெறும் கற்பனைக் கதையாகவே போய்விடும். அத்துடன் நாமும் இவர்களுடன் இணைந்து அழியும் அபாயம் உள்ளது. மேலும் சமர் பற்றிய கருத்தைக் கேட்டிருந்தீர்கள். வைத்த கருத்தின் மேல் உறுதியும் தளர்வின்றியும் சரியான முனையில் விமர்சனப் பாணியும் எம்மத்தியில் உள்ள தவறான விடையங்கள் களையப்பட வேண்டிய ஒன்று என்று போராடுவதில் தான் சமரை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

 

வரதன்

(சுவிஸ்)

 

தோழமையுடன் சமருக்கு

 

உங்களுக்கு மனிதம் பற்றிய விமர்சனம் உள்ளது போல் எனக்கு சரிநிகர் பற்றிய நிறைய விமர்சனம் உள்ளது(தூண்டில்) மனிதம் போல் சரிநிகர் திரிபுவாதிகள் இல்லை. ஒரு ஸ்திரமான நிலைப்பாடு இல்லை. வெறும் கதம்பமாலையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவர்களை இன்று நிராகரிக்க முடியாது.

 

நாங்களும் அப்பத்திரிகைகளைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. சோவியத்தின் வீழ்ச்சி என்பது (சமூக ஏகாதிபத்தியம் என்பது பரந்து பட்ட மக்களுக்குரியது) மக்கள் மத்தியில் சோசிலிச சமூக அமைப்பு மேல் அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

 

இன்று லெனினையே புதைகுழிக்குள் அனுப்ப ஏகாதிபத்தியம் முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளது. வர்க்கபேத சமூகத்தின் கடந்து வந்த வரலாற்றில் ஆளும் வர்க்கம் புரட்சியாளர்களின் மாபெரும் தலைவர்களை கொலை செய்த பின் அவர்களை புனிதர்களாக்கி தமக்கு சாதகமாக்கி வந்துள்ளனர். (புதிய பாதை) ஆனால் லெனினை சமூக ஏகாதிபத்தியம் ஒரு திரையாக பயன்படுத்தினும் இன்று அவரது பூதவூடலைக் கண்டே பயந்து சாகின்றனர்.

 

அந்த அளவில் லெனின் மாபெரும் புரட்சியாளன் மாத்திரமல்ல, விரைவில் அவரது சிந்தனைகள் சுடர் விட்டெரியும் என்ற திடமான நம்பிக்கையுண்டு. ஆனாலும் இதற்கு சிலகாலம் எடுக்கும். எனவே தான் ஜக்கிய முன்னணியை மையமாக வைத்து நாங்கள் செயற்பட வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய உப கண்டத்தில் வடக்கே காஸ்மீரிலும் தெற்கே இலங்கையிலும் காலூன்றலாம் என்பது எனது அபிப்பிராயம். இந்த நிலையில் எங்கிருந்து தொடங்குவது? எவ்வாறு செயல்படுவது? என்பது கேள்விக்குறியாகவேயுள்ளது.


மாஸ்டர்

(இத்தாலி)