ரஸ்சியத் தேர்தல் சமீபத்தில் (12-12-1993) நடைபெற்றது. கம்யூனிஸ்டுக்கள் அடியோடு ஒழிந்துபோவார்கள். மக்கள் ஜெல்சினைத் தான் தெரிவு செய்வார்கள். மீண்டும் ஜெல்சீன்னே பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று கனவு கண்ட மேற்குலக அரசியல்வாதிகள் மாத்திரமல்ல பாசிச ஆதரவாளர்கள் தவிர யாவரும் அதிர்ச்சிக்குள்ளாகிப் போனார்கள்.

 

பாராளுமன்றமா? ஜெல்சீனா? என்ற அதிகாரப்போட்டியின் விளைவாக 1993 ஜப்பசி போரில் பிரஸ்னேவ் கும்பல் ஆதரவான கஸ்பு லாட்டோவ் கும்பல் அடக்கப்பட்டதும், பாராளுமன்றத்துக்கு தீ வைக்கப்பட்ட போதும் உச்சி குளிர்ந்த முதலாளிய ஆதரவு சக்திகள் ஜெல்சின் மீதும் ரஸ்சிய தேர்தல் மீதும் வைத்த நம்பிக்கையை தேர்தல் எதிர்பாராத வெற்றி பெற்ற லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவரும், பாசிஸ்டுமான விலாடிமிர் ஜிரினோவ்ஸ்கி தகர்த்தெறிந்துள்ளார்;.

 

ஜெல்சின் கும்பல் மயிரிழையில் தப்பியுள்ளது. நேற்று வரை கம்யூனிசம் என்ற பூதத்தைக் காட்டி பீதியைக் கிளப்பியவர்கள் இப்போது பாசிசத்தின் வெற்றி கண்டுவாயடைத்துப் போயுள்ளனர். முதலாளிய சக்திகள் உபதேசித்த முதலாளித்துவ பாராளுமன்ற வாசல் ஊடாக பாசிச அரக்கன் தன்னை வெளிப்படுத்தியுள்ளான். இத்தேர்தலில் 12 கட்சிகள் பங்கு கொண்டன. அவைகளில் முக்கியமானவை. (1) லிபரல் கட்சி(ஜிரினோவ்ஸ்கி) 24 வீதம் (2) ரஷ்சிய விருப்புக் கட்சி 15 வீதம் (3) ரஷ்சிய ஜனநாயக்கட்சி 5.5 வீதம் (4) பிரஸ் கட்சி 5.7 வீதம் (5) அக்ரார் கட்சி(கம்யூனிச ஆதரவு கட்சி) 8.0 வீதம் (6) ஜாப்லாகோ 7.0 வீதம் (7) ரஷ்சிய பெண்கள் அமைப்பு 8.7 வீதம் (8) கம்யூனிஸ்ட் கட்சி (பிரஸ்னேவ் ஆதரவு குழு) 11.0 வீதம்.

 

தனது திடீர் வெற்றி குறித்து ஜிரினோவ்ஸ்கி பரபரப்பான பேட்டி ஒன்றில் ரஷ்சிய ஆதிக்கவெறியை மறைத்து கொள்ளவில்லை. தான் விஜயம் செய்த வெளிநாடுகளின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளார்.

 

போட்டிகளின் சாரம்சத்தை கீழ் வருமாறு தொகுக்கலாம்.

 

மேற்கு நாடுகள் ரஷ்சிய உள்விவகாரங்களில் தலையிட்டால் அணுகுண்டுகள் கட்டவிழ்த்து விடப்படும். குறிப்பாக ஜேர்மனி எச்சரிக்கப்பட்டது. 1917ம் ஆண்டுக்கு முன்னிருந்த ரஷ்சிய எல்லைகளைத் திருப்பி பெறவேண்டும். முன்னாள் சோவியத்யூனியனில் அங்கம் வகித்த குடியரசுகள் மீண்டும் இணைக்கப்படுதல் வேண்டும். மேற்கு நாடுகள் ஆயுதம் உற்பத்தி செய்து விற்பது தொடரும்வரை ரஷ்சியாவும் ஆயுதம் உற்பத்தி செய்து விற்பனை செய்யும். மீண்டும் நீர்மூழ்கிப் கப்பல்களை ரஷ்யா உற்பத்தி செய்து 200 மில்லியன் பிராங்கிற்க்கு விற்பனை செய்யும்.

 

ஜேர்மனிய பாசிச அமைப்பான ஜேர்மனிய மக்கள் யூனியன் தலைவர் வாழ்த்து செய்தியின் மூலம் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இக்கட்சி ஜேர்மனியின் பயர் மானில அதிதீவிர வகுப்புவாத கட்சியாகும். பாசு என்ற இடத்தில் சென்ற வருடம் ஜப்பசி மாதம் நடைபெற்ற இக்கட்சியின் மாகாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜிரினோஸ்கி ரஷ்சியாவும் ஜேர்மனியும் ஜரோப்பாவை பங்கு போடுவது பற்றி கருத்து தெரிவித்தான். 1917ம் ஆண்டு புரட்சிக்குப்பின் நடைபெற்ற உண்மையான சுதந்திர ஜனநாயக தேர்தல் இதுவென ஜரோப்பாவும். அமெரிக்காவும் புகழ்ந்தன.

 

ஆனால் உண்மையில் இது ஒரு தில்லுமுல்லு தேர்தல் தான் என்பதில் சந்தேகமில்லை. 52 வீத மக்கள் தான் இதில் பங்கெடுத்துள்ளனர். மேலும், நடைமுறையில் இல்லாத ஒருசட்ட அமைப்பின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற பாணியிலும், ஜார் மன்னனின் பாராளுமன்ற(டுமா) பாணியிலுமான ஓர் கலவையாக உள்ள இச்சட்டம் இன்னமும் ஒரு பரிந்துரையாகவே ஏற்றுக்கொள்ளப்படாத சட்டமாகவே உள்ளது.

 

ஜெல்சின் தனது சதி மூலம் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளை வெளியில் துரத்துவதற்காக தனது கையில் முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஜெல்சின் சர்வாதிகாரச் சட்டம் இத் தேர்தல் நடைபெறும் முன்னமே செயற்பாட்டுக்கு வந்து விட்டது. தேர்தல் வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னரேயே ஜெல்சினின் பேச்சாளர் ஜனாதிபதியின் அரசியல் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்று, 70 வீதமானோர் ஜெல்சின் திட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும் அறிவித்தார். செய்தித் தொடர்பு சாதனங்கள் ஜெல்சினின் கட்டுப்பாட்டிலிருந்தது என்பது இங்கு முக்கியமாக குறிபிடப்பட வேண்டும். ஏனெனில் எதுவும் பிழையாகப் போய்விடக் கூடாது என்பதற்காக இவை தங்கள் கட்டுபாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஜெல்சினே கூறினார்.

 

தனது திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கும், விமர்சிப்பவர்களுக்கும் தொலைக்காட்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்க முடியாது என துள்ளிக்குதித்தார் ஜெல்சின். இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட மேற்கத்திய செய்தி ஊடகங்கள் ரஷ்சியாவின் உண்மையான, சுதந்திர, ஜனநாயக தேர்தல் என புகழ்ந்து உறுதியளித்தன. தனது துயரமான குழந்தைப்பருவத்தைப் பற்றியும் தனது தற்போதைய உலக அரசியல் நோக்குகளையும் 1993 ம் ஆண்டு வெளிவந்த தெற்குக்கான இறுதிப்பாதை என்ற நூலில் ஜிரினோஸ்கி கூறியுள்ள கருத்துக்கள் கோமாளித்தனமானவை.

 

ஒரு சில கருத்துக்கள்.

 

ரஷ்சியா அங்கோலா, மொசாம்பிக், கியூபா, எதியோப்பியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு இராணுவத்தை முன்னர் அனுப்பியது. அது எமக்கு தேவையில்லை. அது மிகவும் தூரமானதும் செலவானதுமாகும். ரஷ்சிய இராணுவம் எமது எல்லைக்குள்ளேயே நிற்கவேண்டும். அதாவது மத்திய தரைக்கடல், இந்து சமுத்திரக் கடல் எல்லை வரை. இது எப்படி சாத்தியம்? ஜிரினோவ்ஸ்கி விளக்குகிறார்.

 

உலகை வடக்குத் தெற்காக நான்காகப் பிரிக்க வேண்டும். உலக மக்கள் சமாதானமாக வாழ்வார்கள. போர் நின்று விடும். சீனாவும், ஜப்பானும் அவுஸ்ரேலியாவையும், இந்தோ சீனாவையும் எடுத்துக்கொள்ளும். கனடாவும் அமெரிக்காவும் தென்னமெரிக்காவை எடுத்துக் கொள்ளும். ஜரோப்பா ஆபிரிக்காவை எடுத்துக் கொள்ளும். முன்னாள் சோவியத்யூனியனில் அங்கம் வகித்த நாடுகளையும், ஈரான், ஈராக், இஸ்ரேல், துருக்கி, அரபுநாடுகளையும், இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளை ரஷ்சியா வளைத்துக் கொள்ளும்.

 

தென்னாபிரிக்கா மாத்திரம் சிறப்புப் பிரதேசமாக விளங்கும். ரஷ்ய இராணுவத்தினர் இந்துசமுத்திர வெப்பநீரில் தங்கள் சப்பாத்துக்களைக் கழுவவும், மெல்லிய உடை அணிந்தும், மெல்லிய தொப்பி அணிந்தும், சிறிய கைத்துப்பாக்கிகளுடன் ரோந்து வருவதை நினைத்துப் பார்க்கிறேன்.

 

நான் ஒருபோதும் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகிக்கவில்லை. ஜிரினோஸ்கி கூறியவைகளின் அரைப்பங்கு உண்மை என்றால் அதுவே போதுமான அளவு பயங்கரமானதாகும். என்று சுவீடன் ஜனநாயகக் கட்சி தலைவர்  கூறியுள்ளார்.


கிட்லர் ----ஜிரினோஸ்கி: வரலாற்று ஒப்பீடு. அடிப்படையில் கிட்லரையும் ஆரம்பத்தில் ஒருவரும் பெரிது படுத்தவில்லை. கிட்லர் மெயின் காம்ப் (ஆநுஐN முயுஆP) சுத்த கற்பனையானது. 10 வருடங்களின் பின் அது நாஜிகளில் அரசியல் சூத்திரமானது. இதே கதிதான் இன்று ஜிரினோஸ்கிக்கும் ஏற்பட்டுள்ளது. ரஷ்சிய அரசியல்வாதிகள் இவரை ஓர் பழையபாணிப் பேச்சாளன் என்று கருதினர்.

 

ஆயினும் இந்த வெறும் பேச்சாளனுக்கு 24 வீத மக்கள் வாக்களித்துள்ளனர். ஏழை ரஷ்சியர்கள் தான் இதற்கு காரணம் என சர்வாதிகாரி ஜெல்சின் குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஏழ்மைக்குக் காரணம் யார்? போலிக் கம்யூனிஸ்டுகளும், ஜெல்சினும் தான். 10 மில்லியன் ரஷ்சியர்கள் வறுமையிலும் பட்டினியிலும் வாடுவதாக அரசே ஒத்துக் கொள்கிறது. ரஷ்சிய இராணுவத்தில் 70வீதமானோர் ஜிரினோஸ்கியை ஆதரித்துள்ளனர். ரஷ்சிய வரலாற்றில் எந்த ஒரு போரிலும் தோற்கவில்லை. ஆனால் பனிப்போரில் தோற்றது.

 

அது கோர்பச்சேவின் ஆட்சியுடன் நடைபெற்றது. கிழக்கு ஜரோப்பாவில் இருந்து படைவிலகல் வார்சோ ஒப்பந்தக் கலைப்பு ரஷ்சியாவுடனே காலம்காலமாக இருந்த நாடுகள் பிரிந்தமை( உதாரணம்) உக்கிரேன்) போன்றவை சாதாரண ரஷ்சியர்களிடமும், ராணுவத்தினரிடமும் ஒருவித தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தி உள்ளதாகவும் அதன் பிரதிபலன் ரஷ்சிய தேசிய உணர்வு பலம் பெறக் காரணமாகியுள்ளது என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். சுப்பர் பவர் ஆக இருந்த ரஷ்சியா ஓர் போரில் கலந்து கொள்ளாமலேயே தோற்கடிக்கப்பட்டது யாரால்? கோர்பச்சோவ் ஜெல்சின் கும்பலால் தான்.

 

முதலாம் உலகப்போரில் தோல்வியுற்று சோம்பிக்கிடந்த ஜெர்மனியரின் பழிவாங்கும் வெறியை தட்டி எழுப்பினான் கிட்லர். 1932 வசந்தகாலத்தில் நடைபெற்ற தேர்தலில் கிட்லர், (வான் கின்டான்பர்கிடம்) படுதோல்வி அடைந்தான். 1991ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜெல்சினிடம் ஜிரினோவ்ஸ்கி படுதோல்வி அடைந்தார். 1932 ஆடி மாதம் நாஜி கட்சி மிகவும் பெரிதாக வளர்ந்தது. ஆயினும் பாராளுமன்றத்தில் பெருன்பான்மை பெறவில்லை. 1993 தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சி மிகவும் பெரிய கட்சியாக வளர்ந்தபோதிலும் பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் பெறவில்லை.

 

கிட்லர் பிரதமர் பதவியை கோரினான். ஆனால் ஜனாதிபதி கின்டன்பர்க், வேறு ஒரு பதவி தருவதாக கூற கிட்லர் மறுத்து விட்டான். தேர்தலில் வெற்றி பெற்ற ஜிரோனோவ் தான் அரசமைக்கப் போவதாக கூற ஜெல்சின் கும்பல் மறுத்துள்ளது. ஆயினும் ஜெல்சினின் பேச்சாளர் ஜீரினோவ்ஸ்கி மந்திரிப் பதவி பெறுவது என்பதை மறுத்துரைக்கவில்லை. ஜெல்சின் சர்வாதிகார சட்டப்படி அவர் தெரியும் பிரதமரை பாராளுமன்றம் நிராகரிக்குமாயின் பாராளுமன்றத்தை கலைக்கவும், புதிய தேர்தல் வைக்கவும் ஜனாதிபதிக்கு உரிமையுண்டு.

 

1932ல் வன்பெப்பின் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளால் பாராளுமன்றம் இயங்கமுடியாததால் புதிய தேர்தலை வன் பெப்பின் அறிவிக்க வேண்டியதாயிற்று. தேர்தலில் நாஜிகள் செல்வாக்கு முன்பிருந்ததை விட குறைந்தது. ஆயினும் இரண்டுமாதங்களின் பின் கின்டன்பர்க் கிட்லருக்கு பிரதமர் பதவி கொடுப்பதை தவிர வேறு வழியின்றிப்போனது. அதுதான் பின்னாளில் மனிதகுலம் அவஸ்த்தைப்படுவதற்கான ஆரம்பபடியாக அமைந்தது.

 

முடிவு 6 வருடங்களின் பின் இரண்டாம் உலகப்போரை உருவாக்கியது. சோவியத்யூனியனின் முன்னாள் தலைவனான ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட கட்சியின் சரியான வழிநடத்தலினால் நாஜிகள் அம்பலப்படுத்தப்பட்டு உலக மக்களின் தார்மீக ஆதரவுடனும், செம்படையின் உறுதிவாய்ந்த உக்கிரமான தாக்குதலாலும் நாஜிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது. நாஜிசம், பாசிசத்தின் பரம எதிரி கம்யூனிஸ்ட்டுக்கள் தான். மேற்கத்தைய முதலாளித்துவ ஜனநாயக வாதிகளல்ல. இதை வரலாறு ஏற்கனவே ஓர் முறை நிரூபித்துக் காட்டியுள்ளது.

 

நாசிசம், பாசிசம் முதலாளித்துவத்திற்கு உள்ளே தான் மறைந்திருக்கிறது. ஜரோப்பா வானில் பாசிசம் எனும் இருள் படிந்து வருகிறது. இன்றைய ரஷ்சிய, ஜரோப்பிய நிலைகள் 1930 களை மீண்டும் நினைவு படுத்துவதாக உள்ளன. ரஷ்சியத்தேர்தலை கணிசமான மக்களும், கட்சிகளும் புறக்கணித்துள்ளனர். கம்யூனிச ஆதரவாளர்களும் இதில் அடங்குவர்.

 

ஆனால் துரதிஸ்டவசமாக கம்யூனிஸ்டுகள் கருத்து முரண்பாடுகளால் பிளவுண்டு போயுள்ளனர். நினைத்தது போல ஜெல்சின் கும்பலுக்கு அறுதிப் பெருன்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. பாசிச ஆதரவு கட்சியின் வெற்றி பாசிசவழியில் ரஷ்சிய நடைபோடப் போவதை பறைசாற்றுகின்றன. அதற்கான அடிப்படையாக ஜெல்சினின் பாசிச, சர்வாதிகார ஆட்சி அமைந்துள்ளது.

 

தங்கரூபன்