புரட்சிவரலாற்றில் பங்கெடுத்த தலைமைகள் செய்த சாதனைக்கு ஈடாக தவறுகளையும் செய்யத்தவறியதில்லை என்பது நாம் அறிந்த, படித்த, தரிசித்த வரலாறுகளாகும். இந்த வரிசையில் பாலஸ்தீன மக்களின் தேசமீட்புப்போரில் ஏற்பட்டுள்ள, திருப்புமுனை என வர்ணிக்கப்படும் தேக்க நிலையிலிருந்து தரிசிக்கும் இவ்வேளையில் சமர் தனது 9வது இதழை வெளியிடுகின்றது.

 

இரண்டுதலைமுறைக்கும் மேலான போராட்ட வரலாற்றைக் கொண்ட பாலஸ்தீன மக்களின் தேச மீட்புப் போராட்டத்தில் குறிக்கோளையும், சர்வதேசப் புரட்சிகர சக்திகளின் மதிப்பீட்டையும், பாலஸ்தீன மக்களின் மதிப்பிட முடியாத தியாகங்களையும் பெரிதுபடுத்தாது யசீர் அரபாத்தும் ராபின் அரசும் செய்து கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் அடிப்படையில் பாலஸ்தீனர்களின் எவ்வித தனித்துவத்தையும் கொண்டதல்ல என்பது வெளிப்படையே.

 

இஸ்ரேல் என்னும் ஒரு ஆக்கிரமிப்பு நாடு உருவாகியதிலிருந்து இன்றுவரை அரபு மக்களோடும், மற்றும் மனித நாகரீகமற்ற சர்வதேச விவகாரங்களிலும், காட்டுமிராண்டி அரசாகவும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் பாசிச பேட்டை ரவுடியாகவும் செயற்பட்டு வந்துள்ளது. பாலஸ்தீனர்கள் தங்கள் தலைவிதியை நிர்ணயிக்கும் உரிமையற்ற, இஸ்ரேலிய ஆட்சி நிர்வாகத்தைப் பரவலாக்கும் தன்மை கொண்ட( ) அதிகாரப்பரவலாக்கல்கள் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு பி-எல்-ஒ தலைமை முந்தியடித்துக் கொண்டு இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்கின்றது. இது ராஜதந்திர ரீதியிலும், மற்றும் அனைத்து புரட்சிகர, முற்போக்கு சக்திகள் மத்தியிலும் பி-எல்-ஒ வின் சரணாகதிப் போக்கையிட்டு விசனம் ஏற்பட்டுள்ளது.

 

முஸ்லிம், அரபு நாடுகள் பாசிச இஸ்ரேலோடு ராஜீக உறவுகளை மேற்கொள்ளாமலும், அந்நாட்டின் தூதுவர் ஸ்தானத்தை நிராகரிப்பதும். பாலஸ்தீன மககளுக்கு காட்டி வந்த தார்மீக ஆதரவின் மூலம், இஸ்ரேல் என்னும் நாட்டை இந் நாடுகள் நிராகரித்தே வந்துள்ளன.

 

இஸ்ரேலின் ஆளுமைக்குட்பட்ட இவ்வொப்பந்தத்தைச் செய்ததனூடாக மத்தியகிழக்கில் தொடர்ந்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும், அதன் கூட்டாளிகளினதும் இருப்பினை பேண உதவியதோடு, ஏனைய நாடுகளிலுள்ள முதலாளித்துவ தரகுமுதலாளித்துவ அரசுகள், தங்கள் நாட்டுமக்களின் எதிர்ப்பின்றி இஸ்ரேலோடு உறவுகொள்ள உதவப்பட்டுள்ளது. இச்செயலினூடாக பாலஸ்தீன மக்களின் விடுதலை தற்காலிகமாக காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாசிச அரசின் அதிகாரத்துக்குட்பட்ட நிர்வாகத்தை ஏற்கத் துணிந்து விட்ட பி-எல்-ஒ சர்வதேச அரங்கில் ஒடுககப்பட்ட மக்களின் ஆதரவை இழப்பதோடு, தேசிய சர்வதேச அரசியலில் எவ்வித முற்போக்குப் பாத்திரத்தையும் வகிக்கக் கூடிய தனித்துவத்தை இழக்கின்றது.

 

இந்நிலையைத் தவிர்த்து பலஸ்தீன மககளின் நாட்டை மீட்கவும், சமூக பொருளாதார அரசியல் விடுதலையை வெல்லவும், இன்றைய சமரசத் தலைமையை ஓரம் கட்டி உண்மையான விடுதலையை வெல்ல தீவிரப் புரட்சியாளர்கள் முன் வரவேண்டும். தற்போது இவ் ஒப்பந்தத்தின் மூலம் அதிருப்தியுற்ற புரட்சிகர சக்திகள் மத்தியில் ஈரான் சார்பு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் கை ஓங்கியிருப்பது வருந்ததக்கதே.

 

இம் மத அடிப்படைவாதிகளை களைந்தெறிய வேண்டிய அவசியம் பலஸ்தீனர்கட்கு உண்டு. மேற்கூறிய ஒப்பந்தம் போன்று பல ஒப்பந்தங்கள் பல வட்டமேசைகளும் சதுரமேசைகளும் இலங்கையில் தமிழ்தேசிய இனவிடுதலை தொடர்பாக வந்துபோயுள்ளது. இதன் மூலம் பலதரப்பட்ட அனுபவங்களை நமது மக்கள் பெற்றுள்ளனர்.

 

இவைகளை கவனத்தில் கொள்ளாமலோ என்னவோ சுவடுகள் சஞ்சிகையில் இடைக்காலத் தீர்வு ஒன்றை முன்வைக்கும் திட்டத்தினை நோர்வே அரசு- அரசியல்வாதிகளினூடாக முன்வைக்க முனையப்பட்டிருந்தது. இடைக்காலத் தீர்வென்பது ஒடுக்கப்படும் மக்களாலோ, போராடும் மக்களாலோ முன்வைக்கப்படுவதல்ல. போராட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத ஒடுக்கும் அரசுகள் வேறு பல நிர்ப்பந்தங்களாலும் சில தீர்வுத்திட்டங்களை தயாரிக்கின்றன. அல்லது இவர்கள் சார்பாக ஒரு மூன்றாவதுநபர் (நாடு) தயாரிக்கின்றனர்.

 

இத்திட்டத்தில் உள்ள சாதக பாதகங்களை கருத்தில் கொள்ளுவதின் மூலம், சம்மந்தப்பட்ட சமூகத்தின் அடிப்படைக் குறிக்கோளை நோக்கி தொடர்ந்து முன்னேற முடியும் என அச்சமூகம்(தாபனம்) கருதின் மேற்குறிப்பிட்ட திட்டத்தை புரட்சிகர தாபனம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுவது இயல்பே. இதையே இடைக்காலத்தீர்வு எனக் குறிப்பிடுகின்றனர். மேற்படி தீர்வின் மூலம் சமூக முரண்பாட்டைத் தீர்ககவோ, நமது நாட்டிலுள்ள இனமுரண்பாட்டைத் தீர்வுக்கு கொண்டுவரவோ ஒருபோதும் முடியவே முடியாது.

 

சுவடுகள் ஆசிரியர் குழுவையும், எதிர்காலத்தில் இதுபோன்ற இடைக்காலத்தீர்வை முன்வைக்கவிருக்கும் தேசபக்தர்களையும் தோழமையுடன் நாம் கோருவது யாதெனில் இடைக்காலத்தீர்வுகள் முன்வைக்கப்படுவதில், நமது நாட்டில் அதற்கு எப்போதும் பஞ்சம் இருந்தது இல்லை. 1948 இற்கு முந்திய அரசியலில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம் எனின், தமிழீழமோ, அதிகாரப்பரவலாக்கலோ, இடைக்காலத்தீர்வோ அவசியமற்றது. நாம் 1993 யைக் கடந்து கொண்டிருப்பதால் தமிழீழத்தை வெல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இதுவே நாம் கோரும் நிரந்தரத் தீர்வு. இதுவே முழு இலங்கைக்கும் நல்ல தீர்வாகும்.