வாசகர் கடிதங்கள்

மனிதம் இதழில் வெளிவந்த எனது கட்டுரை தொடர்பாக சில கேள்விகள் எழுப்பியிருந்தீர்கள். நான் உங்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில் இது பற்றி சிறு விளக்கம் அளித்திருந்தேன். அது போதுமானதாக அமையவில்லையென இம்மடல் மூலம் உணர்கின்றேன்.

 

(1) மனிதம் இதழ் மீது திரிபுவாதிகள் என முத்திரை குத்தியது பற்றி விளக்கமளித்திருக்கிறேன்.

 

(2) சமர் சஞ்சிகைக்குழு மனிதம் குழுவினரை திரிபுவாதிகள் என முத்திரை குத்தியமை என்ற வகையில் எனது கட்டுரையில் கருத்துக்கள் வெளிப்பட்டு இருந்தன. புலம் பெயர்ந்த நாடுகளில் வருகின்ற சஞ்சிகைகளில் அனேகமானவை ஒரு கட்சியினது வெளியீடு போல தெளிவான ஒரு தத்துவார்த்த அடிப்படையை மையம் கொண்டு வெளிவருவதில்லை. வேறுபட்ட கண்ணோட்டம் கொண்ட கடடுரைகள் ஒரே சஞ்சிகையில் வெளிவருகின்றன. விவாதத்தை தூண்டுவதற்காக சில சஞ்சிகைகள் கட்டுரைகளை பிரசுரிக்கின்றன. உதாரணமாக பனிமலர், 82 இல் படிகள் சஞ்சிகை வெளியிட்ட 6 கட்டுரைகளை பிரசுரித்து வருகிறது. தேடல் இதழில் பாதுகாப்புப் பேரவையின் ஜக்கிய இலங்கையை வலியுறுத்துகின்ற கட்டுரையொன்று விவாதத்துக்காக வெளியாகியது.

 

பனிமலர் ஆசிரியர் குழு எவ்வாறு எதிரும் புதிருமான ஒன்றுக்கொன்று பதிலளிக்கின்ற அக்கட்டுரைக்கு பொறுப்பாக கருத இயலாதோ,(அதேபோல தேடலில் அடுத்த தமிழீழத்தை வலியுறுத்துகின்ற பதில் வந்தது) தேடல் ஆசிரியர் குழுவினையும் இக்கட்டுரைக்கு பொறுப்பாகவோ அக்கருத்தை இவ் ஆசிரியர் குழுக்கள் பிரதிபலிப்பவையாக கூறமுடியாதோ(ஏனெனில் எதிரும் புதிருமான கருத்துக்களை பிரசுரித்து வருகின்றார்கள்) அவ்வகையிலேயே விவாதத்துக்காக என வெளியிடப்படும் கட்டுரைகளுக்கு அக் கட்டுரையாளர்களே பொறுப்பாளர்கள் என்பதே எனது கணிப்பாகும்.

 

அக் கணிப்பீட்டின் அடிப்படையிலேயே மனிதம் 21 எனது பார்வைக்கு கிடைப்பதற்கு முன்பாக (மாசி வரையில்) நான் அக்கட்டுரையை எழுதியிருந்தேன். எனது கட்டுரையானது மனிதம் மீதான சமர் விமர்சனத்தை மையம் கொண்டதல்ல. நான் கொண்டிருந்த கணிப்பீட்டின் அடிப்படையில் அம்பு இடம் மாறியிருப்பதாக அதாவது கட்டுரையாளர்கள் கரிகாலனோ, மூ.சிவகுமாரனோ தான் திரிபுவாதிகளாக விமர்சிக்கப்பட வேண்டுமெனவே நான் கருதியிருந்தேன். ஏன் எனில் மனிதம் 21 இல் வெளியாகிய சம(ர்)ருக்கு மறுப்பு என்னும் கட்டுரையில் மனிதம் ஆசிரியர் குழு வெளிப்படுத்திய கருத்துக்கள் கரிகாலன், மூ.சிவகுமாரன் போன்றோரது மார்க்சிச விரோதக் கருத்துக்களுடன் திரிபுவாதக் கண்ணோட்டத்துடன் அவர்களுக்கு இருக்கின்ற உடன்பாட்டைக் காட்டுகின்றது. முதலில் மனிதம் இதழ் கரிகாலனினது கட்டுரையில் விவாதப்பகுதி எனப் போடாததே தமது தவறு என்பதை ஏற்றே எனது கணிப்பீடு இருந்தது.

 

மனிதம் 21 இல் அக்கட்டுரைக்கு அதன் உள்ளக்கங்களுக்கு பொறுப்பேற்று விமர்சனம் அளித்த பின் மனிதம் குழுவினரை சமர் திரிபுவாதிகள் என முத்திரை குத்தியது என நான் முன்னர் குறிப்பிட்டது தவறனதாகிவிட்டது என ஏற்றுக் கொண்டு சுயவிமர்சனம் ஏற்கின்றேன். எனினும் மனிதம் 21 இல், திரிபுவாதம் முதலாளித்துவ மீட்சி மாவோவினது வரையறுப்புகள் பற்றிய அவர்களது தரப்பு கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்ட பின்பே அவர்களது அடிப்படையை கணிப்பிடுவது சாத்தியமாகின்றது என்பதும், ஒரு சஞ்சிகை விவாதப்பகுதிக்கு என்று வெளியிடுவதை வைத்து தீர்மானிக்க இயலாதென்பதுவுமே எனது அபிப்பிராயமாகும்.

 

நான் உங்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில் எனது கட்டுரை வெளியாகும் பட்சத்தில் மனிதத்துக்கு சமரினது அணுகுமுறை பற்றி நான் குறிப்பிட்டதில் இருந்த தவறு பற்றி எழுதுவதாக குறிப்பிட்டிருந்தேன் அவ்வகையில் மனிதம் இதழுக்கு தங்களது விமர்சனம் பற்றி நான் கட்டுரையில் குறிப்பிட்டவற்றிக்கான எனது நிலைப்பாட்டை விரைவில அனுப்பி வைப்பேன். எனவே மனிதம் இதழைப் பொறுத்தவரை திரிபுவாதிகள் என சொன்னதில் முத்திரை குத்தியது என நான் கணிப்பிட்டது தவறானதாகும் என சுய விமர்சனம் ஏற்கின்றேன். நான் உங்களுக்கு எழுதியதில் நான் திரிபுவாதத்துக்கு எதிரான உங்கள் உறுதியான போக்குடன் உடன்பட்டிருந்தேன். அதற்கும், முன்பு மனிதம் கட்டுரையில் குறிப்பிட்டதிற்கும் மாறுபாடு எதுவும் இல்லை. மனிதம் மீதான இடம் மாறிய தவறான தாக்குதல் என்பதே எனது அப்போதைய கருத்தாக இருந்தது. அதனாலே மனிதம் குழுவை திரிபுவாதிகள் என முத்திரை குத்தியதில் இருந்த தவறு என குறிப்பிட்டேன். திரிபுவாதப்போக்குகளுக்கு எதிரான உங்கள் விமர்சன அணுகுமுறையில் நான் முழு உடன்பாடு கொண்டுள்ளேன். மாற்றுக் கருத்துகளுக்கு கருத்துகளால் முகம் கொடுக்கும் பண்பை வலியுறுத்துகின்ற சந்தடி சாக்கில் என்ற வரியை நான் பாவித்ததில் நான் சமரினது விமர்சனம் பற்றி அதில் நான் கணக்கில் கொள்ளவில்லை.

 

மூ.சிவகுமாரன் அக்கருத்தை கூறிக்கொண்டு திரிபுவாதத்தை புனிதமாக்குவதையே குறிப்பிட்டு நின்றேனே ஒழிய சமரினது விமர்சனம் பற்றி அதில் நான் குறிப்பிடவில்லை. அக்கட்டுரையானது எழுதியதின் பின்னாகவே சமர் இதழ்கள் எனக்கு கிடைக்கப் பெற்றது. எனினும் அக்கட்டுரையில் அவ்வரிகள் சமரினது விமர்சனம் மீதானதாக தோற்றம் கொள்வதாக இருப்பின் அதற்காக சுயவிமர்சனத்தைக் கோருகிறேன். எனது அப்போதைய அபிப்பிராயப்படியும், மனிதம் குழுவை திரிவுவாதிகள் எனக் குறிப்பிட்டதில் இருந்த தவறேயென்று எழுதியிருக்கவேண்டும். முத்திரை குத்தியது என்ற பதம் முழுமையாக தவறானதாகும். மூ.சிவகுமாரனின் அது கட்டுரைக்கு மறுப்பெழுதுவதை முதன்மைப்படுத்தி மனிதம் மீதான சமரினது விமர்சனத்தை ஆழ்ந்த கவனத்தில் கொள்ளாது வரிகளை கையாண்டமைக்கு சமர் குழுவிடம் சுயவிமர்சனத்தை கோருகின்றேன்.

 

விமர்சனங்கள் தேவையையொட்டி கடுமையானதாக அமையலாம் என்பதையும் தேவைக்கேற்ப அம்பலப்படுத்தல் செய்வதற்கு எவ்வரையறைகள் மூலமும் இனம்காட்டுவது தவறல்ல என்பதே எனது கருத்து. அவ்வகையில் முத்திரை குத்தல் என்ற பதம் என்னால் ஆழ்ந்த கவனமின்றி பயன்படுத்தப்பட்டதையிட்டு சுயவிமர்சனம் செய்கிறேன்.

 

மாறன்


மாசேதுங் தொடர்பாக ஜெயபாலன் கூற்றுக்குப் பதிலளிக்கும் போது மாவோ மீது பெண்கள் தொடர்பாக நடந்ததாக அறிவதாகவும் கூறியிருந்தீர்கள். எங்கே? எப்போது? என கேள்வியெழுப்புவதை இங்கு நான் முறையாக கருதவில்லை. மாசேதுங் ஆசிரியர் பயிற்சி காலகட்டத்தில் ஒரு பெண்ணை காதலித்தாரெனவும், பின்பு அவர்கள் இருவருக்கும் கருத்து முரண்பாடுகளால் சேர்ந்து வாழமுடியாமல் போனது எனவும் பின்னர் சாங்கே சேக்கின் படையினால் அவரது மனைவியும் தங்கையும் கொல்லப்பட்டதாகவும் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் படித்திருந்தேன். இறுதிகாலத்தில் நால்வர் குழுவில் ஒருவரான சீயாங்சிங் என்பவர் மாவோவின் மனைவியாக இருந்தார் எனவும் அறிகின்றோம். இதிலிருந்து ஒருவர் உயிருடன் இருக்கும் போது இன்னும் ஒரு பெண்ணிடம் உறவுவைத்திருந்ததாக பொருள்படாது என்று கருதுகின்றேன். எனவே அவரது வாழ்க்;கையில் சீரழிந்த கலாச்சார பாதிப்புக்களை பின்பற்றியிருப்பின் சீனச் சமூக குறைபாடுகளை தனது அனுபவமாக தொகுத்திருக்கமுடியாது. அவர் கட்சியில் ஆரம்பத்திலிருந்து நீண்டபடை நடப்பை முன்னெடுக்கும் வரையும் கட்சிக்குள் சிறுபான்மையாக இருந்தார்.

 

இத்தகைய குறைபாடுகள் இருப்பின் அவரைத் தலைமைக்கு கொண்டுவந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவற்றை டெங்கும்பல் நால்வர் குழுவில் ஒருவரான சீயாங் சிங் என்பவரின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் மாசேதுங்குடன் சம்மந்தப்படுவதால் அவர் மீது விமர்சனம் நடந்ததாக பொருளாகாது. இத்தகைய இன்னும் ஒரு உதாரணத்தை லெனினின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தபோது அவருக்கு ஒரு காதலி இருந்தார், என்ற மாதிரி சித்தரிக்கப்பட்டிருந்ததும் கவனிக்கதக்கது.

 

மாவோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை. டெங்கும்பல் மாவோ மரணத்தின் பின்பு சீயாங்சிங் எனபவரின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை மாசேதுங் உயிருடன் இருந்தபோது முன்வைக்காதது டெங்கும்பலின் அரசியல் நேர்மையின்மையை காட்டுகின்றது. இங்கு ஜரோப்பிய பிரமுகர்களை அம்பலப்படுத்துவதும், பாதிவழி கூட்டாளிகள் என்பதை இனம் காட்டுவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். இவர்கள் புதிய சக்திகளை பிழையான வழிக்கு தள்ளிவிடுவர் என்பதிலும் எனக்கு சந்தேகம் இல்லை.

 

சாந்தன் டென்மார்க்.

 

14.03.1993