கொலைகார காங்கிரசடி - குதம்பாய் கொலைகார காங்கிரசடி…

ஒய்யாரமாகவே ஊரைக் கூட்டியே
சிறப்பாதான் வந்தாரடி குதம்பாய் - ஆனா
சிதம்பரம் செருப்பா சிரிச்சாரடி!

பொய்முகம் கண்டதும் பொறுக்க மாட்டாமலே
புறப்பட்டு வந்தடி குதம்பாய்….
அந்தச் செருப்புக்கு நன்றியடி!

சிங்காரம் கெட்டு, செருப்படிப்பட்ட
சிதம்பரம் மூஞ்சிக்கு
சிவகங்கை ஏதுக்கடி குதம்பாய் - காங்கிரசுக்கு
தேர்தல் ஒரு கேடாடி!

chidambaram shoe congress

படம் நன்றி : நான் 1084

 

செருப்படிபட்டதை வெளியில் சொன்னாக்கா
தண்டிக்க வேணுமாண்டி குதம்பாய் - தமிழின துரோகி
தங்கபாலுதான் மிரட்டுறாண்டி!
இந்த மூஞ்சிக்கு ஏத்த அளவு என்னான்னு
பாத்து வீசுங்கடி குதம்பாய்…. ஈழத்து
செருப்பையும் சேத்துக்கடி!

ஜெர்னைல் சிங் போட்ட செருப்புக்கும் கோவம்
வந்த்து ஏதுக்கடி குதம்பாய் - அந்த
வரலாறை கூறுங்கடி!

பிந்தரன்வாலாவை வளர்த்து விட்டதே
இந்திராகாந்திதாண்டி குதம்பாய்….
இந்திராகாந்திதாண்டி - பின்னே பிந்த்தரன்வாலாவை
பயங்கரவாதின்னு பேயாட்டம் போட்டாளடி
குதம்பாய்…
பொற்கோயிலையே குருதியில் நனச்சாளடி!

சொந்த இனத்தும் பிணங்களைப் பார்த்து
இரத்தம் கொதிச்சானடி குதம்பாய் - அந்தச் சீக்கியன்
இந்திரா கதையை முடிச்சானடி!

இந்திரா கொலைக்கு பழிக்கு பழிவாங்க
பகையை வளர்த்தானடி குதம்பாய் - காங்கிரசு
பச்சைப் படுகொலை செய்தானடி!

ஆயிரக்கணக்குல சீக்கிய மக்களை
வெட்டிப் போட்டானடி குதம்பாய்… கொளுத்தி
வெறியாட்டம் போட்டானடி…
ஒத்தப் பொணத்துக்கு மொத்த இனமுன்னு
கத்தித் தீர்த்தானடி குதம்பாய்…. காங்கிரசு
கொலைகார கும்பலடி!

சீக்கியப் பெண்கள் ஆயிரக்கணக்கில்
விதவையர் ஆனாரடி குதம்பாய்….அவர்
வேதனை கொஞ்சமோடி!
பிஞ்சுக் குழந்தையும் தப்பவில்லை சொல்லவே
நெஞ்சு வேகுதடி குதம்பாய் - பலரை
டயரோடு சேர்த்து எரித்தானடி!

பெத்தவயிறு பத்தி எரியுதுன்னு பெண்கள் ராஜீவிடம்
நியாயம் கேட்டாரடி குதம்பாய் நியாயம் கேட்டாரடி!
”ஆலமரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யுமென்னு”
ஆணவம் பேசினாண்டி குதம்பாய் - அந்தக் குரூரத்தை
யாரும் மறப்பாரோடி !

சஜ்ஜான் குமாரும் ஜகதீஷ் டைட்லரும் - இதை
முன்னின்று நடத்திய பாவியடி! குதம்பாய் - பயங்கரவாதிகளை பாதுகாப்பது காங்கிரசடி!
ப.சிதம்பரம் வாங்கிய செருப்படி - குதம்பாய்
உண்மையை ஊருக்கு சொல்லுதடி!

சொந்த நாட்டு மக்களையே கண்டம் துண்டமாக
வெட்டுனானே! குதம்பாய் - காங்கிரசு கையாலே
காசுமீரு, வடகிழக்கு மாநிலத்தில்
தினம் காணாப் பிணங்கள் எத்தனையோடி!

ஈழம் எரியுது, தமிழ் இனம் கருகுது
காரணம் இந்திய அரசுதாண்டி - குதம்பாய் இந்தக்
காங்கிரசு அரசுதாண்டி

உன்காலுக்கு ஒரு செருப்பு இல்லேன்னாலும்
கடன் வாங்கியாவது வீசுங்கடி குதம்பாய்
தமிழின சொரணையைக் காட்டுங்கடி!

- துரை.சண்முகம்.