ஈழத்தில் ஆயிரம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு புலி கூட தப்பி விடக்கூடாதென ராஜபக்ஷேவின் சிங்கள ராணுவம் மக்களை கொன்று குவித்து வருகிறது. அன்றாடம் வரும் உயிரிழப்புக்களின் சோகம் தமிழகத்தில் வெறும்

 புள்ளிவிவரங்களாய் நீர்த்து போகிறது. அ.தி.மு.க ஆதரவில் நெடுமாறனின் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையும், தி.மு.க ஆதரவு நல உரிமைப் பேரவையும் மாறி மாறி தேர்தல் காலத்தில் பத்தோடு ஒன்றாக ஈழம் குறித்த அழுகுணிக் குரலை ஒலிக்கின்றன.

 

குஜராத்தில் முசுலீம்களை இனப்படுகொலை செய்த பா.ஜ.கவையும், ஈழப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கும் அ.தி.மு.கவின் ச்சிகலா நடராஜனையும் அருகில் வைத்துக் கொண்டு நெடுமாறன் ஈழத்திற்காக கண்ணீர் விடுகிறார். அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க, சி.பி.ஐ முதலான கட்சிகளெல்லாம் மத்திய அரசும், கருணாநிதியும் ஒன்றும் செய்வில்லை என லாவணி பாடுகிறார்கள். இதே மத்திய அரசில் இவ்வளவு நாளும் பொறுக்கித் தின்ற ராமதாஸ் இதைச் சொல்வதற்காக கூச்சப்படுவதில்லை.

போயஸ் தோட்டத்தில் புரட்சித் தலைவியின் மூன்று நிமிட தரிசனத்திற்காக மூன்று மணிநேரம் காத்திருந்து

karunanithi-perani-cartoon

(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

 

நாலு சீட்டு கூட தரமறுக்கும் அம்மாவிடம் ராப்பிச்சைக்காரனைப் போல மன்றாடும் இந்த வீரர் ஈழத்தில் பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடுமென சவடால் அடிக்கிறார். கோமாளிகள் வீர வசனம் பேசினால் எப்படி?

செவ்வாய்க்கிழமை நெடுமாறன் பேரவை ஆர்ப்பாட்டம் செய்ததற்காக தாங்களும் கணக்குக் காட்ட வியாழக்கிழமை தி.மு.க ஈழத்தில் போரை நிறுத்துமாறு ஊர்வலம் நடத்துகிறது. போரை நடத்துபவர்களே அதை நிறுத்தச் சொன்னால் அதன் பொருளென்ன? தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈழத்தில் ஏதாவது நடந்து மக்களின் உணர்வு தனக்கு எதிராக திரும்பக்கூடாது என்பதற்காத்தான் இந்த நாடக ஊர்வலம்.

ராமேஸ்வரத்தின் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கப்பற்படையால் சுடப்படுகிறார்கள். அதைக் கூட தடுக்க வக்கற்ற கருணாநிதி ஈழத்திற்காக நாடகமாடுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்? விஷவாயுக் குண்டுவீச்சால் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கரிக்கட்டையாக எரிந்து கிடக்க இந்த குண்டை அளித்தும், படையை வழிநடத்தியும் உதவி செய்வது இந்திய அரசுதான் என்பது இப்போது உலக நாடுகள் எல்லாமும் அறிந்த விசயம். அத்தகைய அரசில் அமைச்சர்களாய் பங்கேற்று ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க யாரை எதிர்ப்பதாக ஏய்க்கிறது?

அழகரி என்ற ரவுடி தனதுமகன் என்ற ஒரே காரணத்திற்காக எம்.பியாக்கி பார்க்கத் துடிக்கும் கருணாநிதிக்கு ஈழத்தின் துயரம் என்னவென்று தெரியுமா? எம். பிக்கள் ராஜீனாமா, மத்திய அரசுக்கு தந்தி, மனித்ச் சங்கிலி, உண்ணாவிரதம், எல்லாம் முடிந்து விட்டது. மிச்சமிருப்பது கோவணம் கட்டிய ஊர்வலம்தான. அதுதான் சுயமரியாதை அற்ற இந்த ஜன்மங்களுக்கு சரியாகப் பொருந்தும்.

தமிழகத்தில் எவ்வளவு தீவிரமாக ஈழம்பற்றிய உணர்ச்சி மேலோங்கியதோ அவ்வளவு சீக்கிரம் வற்றிப் போவதற்கு இந்த துரோகிகளே முழு முதல் காரணம். இதைத் தாண்டி தமிழக மக்களிடமும், இளைஞர்களிடமும் ஈழத்தில் நல்லது ஏதும் நடக்காதா, நாம் ஏதாவது செய்யவேண்டாமா என்ற ஆதங்கம் இருக்கிறது. ஆனால் அதை ஓட்டுப் பொறுக்குவதற்கான முகாந்திரமாக எல்லாக் கட்சிகளும் மாற்றிவிட்டன.

தி.மு.க நடத்தும் ஊர்வலத்தில் ஈழத்தில் குண்டு போட்டு தமிழனைக் கொல்லும் காங்கிரசு கட்சியும் கலந்து கொள்கிறதாம். இவ்வளவு நாளும் இந்தக் காங்கிரசை எதிரி என பிலாக்கணம் வைத்த திருமாவளவனும் இந்த ஊர்வலத்தில் மானங்கெட்டு கலந்து கொள்கிறாராம். இவர்களையெல்லாம் நம்பி ஏதாவது செய்வார்கள் என எண்ணிய ஈழத்தமிழ் மக்கள் இப்போதாவது  இவர்களைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டும்.

இன்று உலகமெங்கும் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களால் செய்ய முயன்ற அனைத்தையும் செய்து போராடுகிறார்கள். அந்தப் போராட்டங்களோடு தமிழகமக்களும், மாணவர்களும் இந்த ஓட்டுக் கட்சிகளைப் புறந்தள்ளி தனியாக, எழுச்சியான போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். அந்தப் போராட்டம் இந்திய அரசின் கழுத்தைப் பிடித்து உலுக்குவதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஈழத்தின் இறுதி மூச்சை காப்பாற்ற நாதி இருக்காது.