Language Selection

புதிய ஜனநாயகம் 2009

பிப்ரவரி 19 உயர்நீதி மன்றத் தாக்குலுக்கு எதிராக தமிழக வழக்குரைஞர்கள் ஒரு மாத காலமாக நடத்தி வந்த நீதிமன்றப் புறக்கணிப்பு இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

 

உயர்நீதிமன்றத் தாக்குதலுக்குப் பொறுப்பான இரு போலீசு அதிகாரிகளை (ராமசுப்பிரமணியம், விசுவநாதன்) தற்காலிகப் பணிநீக்கம் செய்வதாக, 18.3.09 அன்று முகோபாத்யாயா தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றப் புறக்கணிப்பைக் கைவிடுவதாக வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு 20.3.09 அன்று மாலை அறிவித்திருக்கிறது. புறக்கணிப்பு கைவிடப்பட்ட போதிலும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரையில் பிற வடிவங்களிலான போராட்டங்கள் தொடரும் என்றும் போராட்டக்குழு கூறியிருக்கிறதே தவிர, என்ன விதமான போராட்டங்கள் நடத்தப்படும் என்பது குறித்து விளக்கவில்லை.

 

போராட்டங்களில் வெற்றிதோல்வி சகஜம்தான்; பிழைப்புவாத சங்கத் தலைமைகள் போராட்டத்துக்குத் துரோகமிழைப்பதும் சகஜம்தான். எனினும், இந்தத் தலைமையால் ஒரு தோல்வியை வெற்றியாகச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. ஆகப்பெரும்பான்மையான வழக்குரைஞர்கள் இதனை ஒரு வெற்றி என்று நம்பவில்லை; எனினும், இந்த முடிவை எதிர்க்கவும் இல்லை. திசை தெரியாமல் தொடர்ந்து கொண்டிருந்த இந்தப் போராட்டம், வழக்குரைஞர்கள் மத்தியில் தோற்றுவித்திருந்த ஆயாசம் காரணமாக, வழக்குரைஞர் சங்கத்தின் பிழைப்புவாதத் தலைமை எளிதாகத் தப்ப முடிந்திருக்கிறது.

 

இந்தத் தாக்குதல் நடைபெற்ற நாளிலிருந்து எழுப்பப்பட்டுவரும் அடிப்படையான கேள்விகள் இரண்டு. "யாருடைய அனுமதியின் பேரில் உயர்நீதிமன்றத்திற்குள் போலீசு படை நுழைந்தது? யாருடைய உத்தரவின் பேரில் தடியடி நடத்தப்பட்டது?'' என்ற இந்த இரு கேள்விகளுக்கும் கருணாநிதி அரசோ போலீசு அதிகாரிகளோ இதுவரை பதில் அளிக்கவில்லை.

 

மேற்கூறிய இரு கேள்விகளுக்கும் அரசு பதிலளிக்க வேண்டுமென்றும், இந்தப் பதிலின் அடிப்படையில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கான விசாரணையைத் தொடங்குவோமென்றும் முகோபாத்யாயா தலைமையிலான பெஞ்சு 19.2.09 அன்று உத்தரவில் கூறியிருந்தது. ஆனால், 18.3.09 அன்று நடைபெற்ற விசாரணையிலும் அரசு இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. நீதிபதிகளும் மையமான இந்தக் கேள்விக்கான பதிலென்ன என்று கேட்காமல் தந்திரமாகத் தவிர்த்து விட்டு, தற்காலிகப் பணிநீக்க உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றனர்.

 

மிகவும் மேம்போக்காக வழங்கப்பட்டுள்ள இந்த தற்காலிகப் பணிநீக்க உத்தரவை இடைநிறுத்தம் செய்யக் கோரி இரு போலீசு அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். "போராட்டத்தை மீண்டும் கிளப்பிவிட வேண்டாம்' என்ற காரணத்துக்காக வேண்டுமானால், உச்சநீதிமன்றம் இதற்குத் தடையாணை வழங்காமல் இருக்கலாம். மற்றபடி, இது ரத்து செய்வதற்கென்றே தயாரிக்கப்பட்ட கண்துடைப்பு உத்தரவு. இவ்வழக்கு விசாரிக்கப்பட்ட முறையே அதனை நிரூபிக்கிறது.

 

18.3.09 அன்று இவ்வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் நடைபெற்ற உரையாடல்கள் வாசகர்களுக்கு அதிர்ச்சியூட்டக்கூடியவை. மூத்த வழக்குரைஞர்களின் வாதங்களையெல்லாம் கேட்டபிறகு, ""இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்கிறேன். ஆனால் முழு சம்பளத்துடன்தான் சஸ்பெண்ட் செய்வேன்'' என்றிருக்கிறார் முகோபாத்யாயா. இதனை வழக்குரைஞர்கள் ஏற்கவில்லை. பிறகு, ""நான் இவர்களை சஸ்பெண்ட் செய்தால், நீங்கள் முட்டை வீசிய வழக்குரைஞர்கள் மீது பார் அசோசியேசன் சார்பில் நடவடிக்கை எடுப்பீர்களா?'' என்று பேரம் பேசியிருக்கிறார். ""அதை விசாரிக்கத்தான் 5 நீதிபதிகள் பெஞ்சு போட்டிருக்கிறீர்களே. அந்த விசாரணையை எதிர்கொள்கிறோம்'' என்றிருக்கின்றனர் வழக்குரைஞர்கள். பிறகு ""நான் என்ன உத்தரவு போட்டாலும், நீங்கள் நீதிமன்றத்துக்குள் சத்தமோ முழக்கமோ போடக்கூடாது'' என்று கோரியிருக்கிறார். அதன் பின் வந்ததுதான் இந்த உத்தரவு. ஒரு கட்டைப் பஞ்சாயத்தைக் காட்டிலும் கேவலமான முறையில் நடத்தப் பட்டிருக்கும் இந்த விசாரணையும் தீர்ப்பும் போராட்டத்தை முடிப்பதற்காகத் திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கும் நாடகம் என்பதை சந்தர்ப்ப சூழ்நிலைகள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

 

ஐந்து நாட்களுக்கு முன்னர், இதே உயர்நீதிமன்றத்தின் அணுகுமுறை வேறுவிதமாக இருந்தது. புதிதாகப் பொறுப்பேற்ற தலைமை நீதிபதி கோகலேயிடம் 13.3.09 அன்று இவ்வழக்கை விசாரிக்குமாறு வழக்குரைஞர்கள் கோரியபோது, "இதற்கென்ன அவசரம்?'' என்று கேட்டார் கோகலே. பிறகு, ""இதனை நான் விசாரிக்க முடியாது, விடுப்பில் சென்றிருக்கும் முகோபாத்யாயா வந்த பிறகு, அவர்தான் விசாரிக்க வேண்டும்'' என்றார். நீதிமன்ற மரபுகளுக்கு மாறாக, கோகலேயின் திமிர்த்தனத்துக்கு நீதிமன்ற அறைக்குள்ளேயே வழக்குரைஞர்கள் எதிர்ப்புக் காட்டி எள்ளி நகையாடினர்.

 

"16ஆம் தேதி முதல் நீதிமன்றங்கள் இயங்கும். வக்கீல் வராவிட்டாலும் கட்சிக்காரர்களின் முறையீட்டைக் கேட்டு நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள்'' என்று அறிவித்தார் கோகலே. வழக்காடிகள் ஆஜராகாவிட்டால் நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்வார்கள் என்று அறிவிக்கை வெளியிட்டார் உயர்நீதிமன்றப் பதிவாளர். வக்காலத்துகளைத் திரும்பப் பெற்று வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாகவும், பதிவாளரின் அறிக்கை சட்டவிரோதமானது என்றும் அறிவித்தனர் வழக்குரைஞர்கள். ""இனி உயர்நீதிமன்ற நீதிபதிகளை மை லார்ட், யுவர் ஆனர் என்று அழைக்க மாட்டோம் என்றும் "மிஸ்டர் ஜட்ஜ்' என்றே அழைப்போம்'' என்றும் அறிவித்தனர். மதுரை உயர்நீதி மன்றத்துக்குச் சென்ற தலைமை நீதிபதியை வக்கீல்கள் சீந்தக் கூட இல்லை. கோகலேயின் உரையைக் கேட்பதற்குக் கூட வக்கீல்கள் யாரும் இல்லாததால், நீதிமன்ற ஊழியர்களுக்கு கருப்பு கோட்டுமாட்டி உட்கார வைத்து பத்திரிகைகளுக்குப் படங்கள் வழங்கப்பட்டன.

 

16.3.09 திங்களன்று ஒன்றிரண்டு வழக்குகளில் வழக்காடிகள் நேரில் ஆஜராகிப் பேசியதையும், அவற்றில் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளையும் காட்டி, வக்கீல்கள் இல்லாமலேயே நீதிமன்றங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்ற தோற்றம் பத்திரிகைகள் மூலம் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது.

 

மொத்தத்தில் நீதித்துறைக்கும் வழக்குரைஞர்களூக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்திருந்தது. போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோதும், நீதிமன்றத்தின் மூலமே நிவாரணம் பெற்று விடலாம் என்று கருதிய மூத்த வழக்குரைஞர்களின் மயக்கத்தையும் தனது நடவடிக்கைகள் மூலம் தெளிவித்து விட்டார் கோகலே. ""இனி நீதிமன்றத்தை நம்பிப் பயனில்லை; இங்கே நீதி கிடைக்காது'' என்று முன்னாள் அட்வகேட் ஜெனரல்களே பகிரங்கமாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. ஜெயா தொலைக்காட்சியில் தோன்றிய மூத்த வழக்குரைஞர்கள் இந்த அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலமாக்கத் தொடங்கியிருந்தனர். புறக்கணிப்பு போராட்டத்தை உடைத்து கோர்ட்டுக்குள் சென்ற தி.மு.க., காங்கிரசு வழக்குரைஞர்கள் ஆங்காங்கே சங்கத்திலிருந்து நீக்கப்பட்டனர். இந்த முயற்சியும் தோல்வியைத் தழுவியது. புதுக்கோட்டையில் கருணாநிதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. எதுவும் செய்ய இயலாத மாவட்ட தி.மு.க.வின் அடியாட்படை தி.மு.க. வழக்குரைஞர்களையே தாக்கியது.

 

சேலத்தில் நடைபெற்ற கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுவில் கலகம் எழுந்தது. சும்மா நீதிமன்றத்தைப் புறக்கணித்து விட்டு வாசலில் உண்ணாவிரதம் உட்கார்ந்து என்ன பயன்? பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் புதிய போராட்ட முறைகளில் இறங்க வேண்டும் என்ற கருத்து இளம் வழக்குரைஞர்களிடையே வலுப்பெறத் தொடங்கியது. சென்னைப் பேரணி என்ற முடிவு தலைமையின் மீது திணிக்கப்பட்டது. உயர்நீதி மன்ற சங்கத்தலைமையும் வேறு வழியின்றிப் பின் தொடர வேண்டியதாயிற்று.

 

மிகவிரைவாக ஏற்பட்டு வந்த இந்த மாற்றங்கள் நீதித்துறை மாயையிலிருந்து வழக்குரைஞர்கள் மென்மேலும் விடுபடும் போக்கை துரிதப்படுத்தின. நீதித்துறையின் உண்மையான யோக்கியதையை அம்பலப்படுத்தி, வழக்குரைஞர்களே ஊருக்கு ஊர் அதன் மீது "முட்டை எறியும்' அபாயம் அதிகரித்திருந்தது. மார்ச் 19 பேரணிக்கு, போலீசு மூலம் அரசு உருவாக்கிய பல தடைகளையும் மீறி பல்லாயிரக்கணக்கான வழக்குரைஞர்கள் மறுநாள் சென்னை நோக்கி வருகிறார்கள் என்பதும் தெளிவாகி விட்டது.

 

இந்தப் பேரணிக்குப் பின் வழக்குரைஞர்கள் நடத்தவிருக்கும் போராட்டங்கள் நீதிமன்றத்தைச் சுற்றி வராது என்பதும், வீதிக்குச் செல்லும் என்பதும் ஏறத்தாழ தெளிவாகிவிட்டது. உயர்நீதி மன்றத்தின் வாயிலில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் வழக்குரைஞர்கள் ஆற்றும் உரைகள் போலீசுக்கு எதிரான கண்டனம் என்பதிலிருந்து மெல்ல மெல்ல மாறி, நீதிபதிகளுக்கும் நீதித்துறைக்கும் எதிரான கண்டனமாக மாறத் தொடங்கியிருந்தன. அடுத்த கட்டமாக, ""சட்டத்தின் ஆட்சி, நீதிமன்றத்தின் புனிதம், நீதிபதிகளின் நேர்மை என்ற மாய்மாலங்களை நம்பாதீர்'' என்று வழக்குரைஞர்களே மக்கள் மன்றத்தில் மேடை போட்டுப் பேசத்தொடங்கினால்? ""கடவுள் இல்லை'' என்று பூசாரிகளே பிரச்சாரம் செய்வதற்கு ஒப்பானது அது.

 

நாறிப்போன நாடாளுமன்ற அமைப்பு முறைக்கும், ஊழலில் புழுத்த நிர்வாக எந்திரத்துக்கும் மாற்றாகவும் ஜனநாயகத்தின் இறுதி நம்பிக்கையாகவும் தூக்கித் துதிபாடப்படும் நீதித்துறையை வழக்குரைஞர்கள் ரோட்டில் போட்டுப் புரட்டி எடுத்தால், அதன் காரணமாக "ஜனநாயகத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்து' அரசுக்கோ ஆளும் வர்க்கத்துக்கோ புரியாததல்ல.

 

பிழைப்புவாத சங்கத்தலைமையோ வேறுவிதமான ஆபத்தை எதிர்கொண்டிருந்தது. "நீதிமன்றத்தைப் பூட்டுவோம்' என்று பால் கனகராஜும், "இடித்துத் தள்ளுவோம்' என்று பிரபாகரனும் போட்டி போட்டுக் கொண்டு உண்ணாவிரதப் பந்தலில் சவடால் அடித்தனரெனினும், தமது காலடியில் நிலம் நழுவிக்கொண்டிருந்ததை அவர்கள் அறியாமல் இல்லை. இனி இந்தப் போராட்டத்துக்கு அவர்களால் தலைமை தாங்க இயலாது. அவர்களுடைய தலைமையைத் தூக்கியெறியும் வலி மையுள்ள ஒரு மாற்றுத் தலைமை வழக்குரைஞர்கள் மத்தியில் உருவாகிவிடவில்லை என்றாலும், அவர்கள் மதிப்பிழந்து தூக்கியெறியப்படும் ஆபத்து சமீபித்துக் கொண்டிருந்தது.

 

நீதிமன்றப் படிக்கட்டுகளிலும், சட்டத்தின் பொந்துகளிலும் தமது சொந்த வீட்டைப் போன்ற பரிச்சயத்துடன் உலவி வந்த ""பார் அசோசியேஷனின்'' மூத்த வழக்குரைஞர்களுக்கோ இது பலத்த அடி. நீதிமன்றம் அவர்களைக் கைவிட்டு விட்டது. மக்கள் மன்றத்துக்குச் செல்வதோ அவர்களுக்குப் பரிச்சயமற்றது, கொஞ்சம் கவுரவக் குறைவானதும் கூட. நீதிமன்ற வளாகத்தில் புகுந்து போலீசு அடித்த அடியில், இளம் வழக்குரைஞர்கள் மத்தியில் அவர்கள் செலுத்தி வந்த அறிவார்ந்த தலைமையும், கவுரவமும் உதிர்ந்து விட்டது. ஏதேனும் ஒரு அற்புதம் நிகழ்வதற்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய இயலாத நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

 

போராடும் இளம் வழக்குரைஞர்களிடம் கோபம் எவ்வளவு இருந்ததோ, அதற்கு சரிவிகிதத்தில் சங்கத் தலைமையின் மீதான அவநம்பிக்கையும், நீண்ட போராட்டம் தோற்றுவித்த களைப்பும் மிகுந்திருந்தது. அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வகையிலான மாற்றுத் தலைமையெதுவும் உருவாகவுமில்லை.

 

அறிவுத்துறையினருக்கே உரிய கட்டுப்பாடின்மை, அத்தகைய தலைமையொன்று உருவாவதற்குத் தடையாகவும் இருந்தது.

 

இந்தச் சூழலில் சர்வரோக நிவாரணியாக வந்ததுதான் இரு போலீசு அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம் என்ற உத்தரவு.

 

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மறுகணமே பால்கனகராஜ், பிரபாகரன் ஆகியோரின் ஆதரவாளர்கள் தயாராக வைத்திருந்த வெடியைக் கொளுத்தி நீதிமன்ற வாயிலில் வெற்றியைக் கொண்டாடிவிட்டனர். கூட்டுப் போராட்டக் குழுவைக் கலந்து பேசாமலேயே, போராட்டம் வெற்றி என்று இருவருமே தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியும் கொடுத்து விட்டனர்.

 

மறுநாள் நடைபெற்ற கண்டனப் பேரணியின் தலைப்பகுதியில் வெற்றிப் பேரணி என்று எழுதிய பானைரைப் பிடித்து, போராட்டத்தின் தலையைச் சீவினர். என்ன வெற்றியை இந்தப் பேரணி சாதித்தது என்பதை விளக்காமல், பேரணி நடத்தியதே வெற்றி என்று ஆர்ப்பரித்தனர். அவசரம் அவசரமாக மாலையில் கூடிய கூட்டுப் போராட்டக் குழு, நீதிமன்றப் புறக்கணிப்பைக் கைவிடுவதாக அறிவித்தது. மிகுந்த ஆக்ரோசத்துடன் தொடங்கிய போராட்டம், அசட்டுத்தனமாக முடிந்தது.

 

வரலாறு காணாத தாக்குதல் என்றும் மிகவும் தவறான முன்னுதாரணம் என்றும் சித்தரிக்கப்பட்ட பிப்ரவரி 19 நீதிமன்றத் தாக்குதலுக்கு எதிராக வழக்குரைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு தலைமை இழைத்திருக்கும் துரோகம், மிகவும் தவறான இன்னொரு முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கிறது. அனுமதியின்றி நீதிமன்ற வளாகத்தில் ஆயுதப்படையை இறக்கி, வக்கீல்கள், நீதிபதிகள் அனைவரையும தாக்கி ரவுடித்தனம் செய்ததற்கு போலீசுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை என்ன? இரண்டு அதிகாரிகளுக்கு தற்காலிகப் பணிநீக்கம். இதுதான் இதற்கு விலை என்றால் மிகவும் மலிவான விலையில் நீதிமன்றத்தை அவர்கள் வீழ்த்தி விட்டார்கள் என்றே பொருள்.

 

போலீசார் பார்க்காத பணிநீக்கமா? பத்து நாள் பணிநீக்கம். பிறகு அவர்களுடய தியாகத்துக்குப் பரிசாகப் பதவி உயர்வு வழங்கப்படும். என்கவுன்டர் கொலைகளை நிகழ்த்துவதற்காக போலீசார் சிலர் தம்மைத் தாமே காயப்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதைப் போல, இனி இரண்டு அதிகாரிகளை தற்காலிகப் பணிநீக்கத்துக்குத் தயார் செய்து வைத்துக் கொண்டு போலீசார் எந்த நீதிமன்றத்திலும் புகுந்து அடிக்கலாம். அடிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

 

இந்தத் தற்காலிகப் பணிநீக்க உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தவுடனே, போலீசுக்காகப் பரிந்து களம் இறங்கியிருக்கிறார் கருணாநிதி. சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகளுக்கு இதுதான் நிலை என்றால், இனி யாரும் சட்டத்தை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அங்கலாய்த்திருக்கிறார் முன்னாள் டி.ஜி.பி தேவாரம். ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கமும் இவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருக்கிறது. இவையெல்லாம் போலீசார் மீது ஏதோ அதி பயங்கரமான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தடுப்பதற்காகவும் திட்டமிட்டே அரங்கேற்றப்படும் காட்சிகள்.

 

உண்மையில் போலீசின் எந்தக் குற்றமும் அத்துமீறலும் விசாரணைக்கு உட்படுத்தப்படவே இல்லை. அத்துமீறி நுழைந்ததற்கு விளக்கமில்லை, நடவடிக்கையும் இல்லை. நீதிமன்றத்தில் புகுந்து வக்கீல்களை ஏன் கைது செய்யவேண்டும் என்ற கேள்விக்கு விளக்கமில்லை. தடியடி நடத்துமுன் அறிவிப்பு செய்யப்படவில்லை. 4 மணிநேரம் இடைவிடாமல் தாக்குதல் நடத்தியும் இந்தத் தடியடிக்கு சட்டப்படி பெற்றிருக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலைப் பெறவில்லை. ரவுடித்தனம் செய்த போலீசார் அங்க அடையாளங்களுடன் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட போதும் அவர்கள் மீதுகூட நடவடிக்கை இல்லை. மண்டை உடைந்த வழக்குரைஞர்கள் கொடுத்த புகார்களுக்கு எஃப்.ஐ.ஆர் கூடப் போடப்படவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யுமாறு உயர்நீதி மன்றம் போட்ட உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படவே இல்லை. மொத்தத்தில் போலீசில் அடி வாங்கிய ஒரு சாதாரண மனிதன் கோர்ட்டுக்குப் போய் பெற்றிருக்கக் கூடிய நீதி கூட வக்கீல்களுக்குக் கிடைக்கவில்லை.இந்த "இல்லை'களின் பட்டியல் வெகு நீளமானது. மொத்தத்தில் இது முழுமையான போலீசு ஆட்சி என்பதற்கு மேல் இதில் சொல்வதற்கு எதுவும் இல்லை.

 

ஈழத்தில் போர்நிறுத்தம் கோரி வழக்குரைஞர்கள் நடத்திய போராட்டம்தான் இப்பிரச்சினையின் துவக்கப்புள்ளி என்றபோதிலும், இந்தத் தாக்குதலின் மூர்க்கத்தனத்தையும், அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் வழக்குரைஞர் போராட்டத்தின் உறுதியையும் ஈழப்பிரச்சினை தீர்மானிக்கவில்லை. நீதித்துறையின் சுதந்திரம், புனிதம் என்ற கற்பிதங்களோ, அல்லது தாக்குதலின் விளைவாகத் தோன்றிய கோபம் மட்டுமோ இப்போராட்டத்தை உந்தித் தள்ளவில்லை. தங்களுடைய தொழிலில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போலீசை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் வழக்குரைஞர்களுக்கு போலீசு இராச்சியம் என்பது அன்றாடம் சந்திக்க வேண்டிய சொந்தப் பிரச்சினையாக இருக்கிறது என்பதையே இப்போராட்டத்தில் அவர்கள் காட்டிய உறுதி விளக்குகிறது.

 

மெல்ல மெல்ல சட்டபூர்வமாகவே பாசிச மயமாகிவரும் அரசு எந்திரத்தின் மிக முக்கியமான அங்கமாக இருக்கும் போலீசு படை, எந்த அளவுக்கு கேள்விக்கு இடமற்றதாக ஆகிவிட்டது என்பதையும், எந்த அளவுக்கு சமூகத்துக்கு மேலானதாகத் தன்னை நிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் இத்தாக்குதல் விளக்குகிறது. போலீசார் நடத்திய ரவுடித்தனங்களுக்காகவோ, நீதிபதிகளே தாக்குதலுக்கு ஆளாக நேர்ந்ததற்காகவோ, மாநகர ஆணையரோ, டி.ஜி.பி.யோ சம்பிரதாயமாகக் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. மாறாக, வக்கீல்களுக்குப் போட்டியாக போலீசார் நடத்திக் காட்டிய எதிர் போராட்டமும் ஐ.பி.எஸ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கங்கள் விட்ட அறிக்கைகளும் போலீசு இராச்சியம் சமீபித்து விட்டதை உறுதி செய்தன.

 

நீதித்துறையின் நடத்தையும் இதனை வழிமொழிந்தது. அரசு எந்திரம் குறித்த புரிதல் இல்லாமல், நீதித்துறையின் அதிகாரம் குறித்த பிரமைகளுக்குப் பலியாகியிருந்த வழக்குரைஞர்களுக்கு நீதிபதிகளின் மவுனம் அறிவொளியூட்டியது. தாக்குதல் நடைபெற்றவுடனே உச்சநீதிமன்றத்துக்குப் பறந்தார் வழக்குரைஞர் வைகை. "எண்ணெய் சட்டியிலிருந்து தப்பிக்க அடுப்பில் குதித்திருக்கிறோம்' என்பது அங்கே போனபிறகுதான் அவருக்குப் புரிந்தது போலும்! பிறகு மீண்டும் எண்ணெய் சட்டிக்கே திரும்பி வந்ததை வெடி வெடித்து கொண்டாடினார்கள் சங்கத்தலைவர் பால் கனகராஜின் ஆதரவாளர்கள்.

 

உச்சநீதி மன்றத்தைக் காட்டிலும் சென்னை உயர்நீதிமன்றம் அரசியல் சட்டத்தின் உணர்வில் அச்சுப்பிசகமால் நடந்துகொள்ளும் என்று தமிழக வழக்குரைஞர்கள் கருதவில்லை. ஆயினும், வாங்கிய அடியின் வலியுணர்ச்சியோ, தன்மான உணர்ச்சியோ அல்லது குறைந்த பட்சம் தங்களை அடியிலிருந்து பாதுகாத்த வழக்குரைஞர்கள் மீதான நன்றியுணர்ச்சியோ நீதிபதிகளின் மூளையில் வேலை செய்யும் என்றும் அதன் விளைவாக தமக்கு நீதி கிடைக்கக் கூடும் என்றும் நம்பினார்கள். அதுவும் பொய்த்தது. வாயை மூடிக்கொண்டிருந்தால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள், வாயைத்திறந்தால் எற்படக்கூடிய பாதிப்புகள் இரண்டையும் நீதியின் தராசில் நிறுத்துப் பார்த்ததில் மவுனத்தின் எடை அதிகமாக இருப்பதை நீதிபதிகள் புரிந்து கொண்டனர். அது மட்டுமல்ல, தங்களது செங்கோல் வெறும் அடையாளக் கோல்தான் என்பதும் லத்திக்கோலின் வழியாகத்தான் அதன் அதிகாரம் செலுத்தப்படுகிறது என்பதும் அவர்களுக்கு ஏற்கெனவே தெரியும். அதிகார மயக்கத்தில் ஒருவேளை அவர்கள் மறந்திருக்கக் கூடும் என்பதால், அரசியல் சட்டத்தில் எழுதப்படாத அந்த உண்மையை 19ம் தேதியன்று போலீசார் நீதிபதிகளுக்கு நினைவு படுத்தியிருந்தனர். எனவேதான் ""யார் என்னை அடித்தார்கள், என்னுடைய அனுமதியில்லாமல் எப்படி என்னை அடிக்கலாம்?'' என்ற கேள்விகளுக்கு விடை தேடும் விபரீத முயிற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை.

 

தன்னுடைய செல்வாக்கு குறித்து துதிபாடிகள் உருவாக்கிய பிரமையிலிருந்து குணமாகாத கருணாநிதி, "உண்ணாவிரதம்' என்று அறிவித்துப் பார்த்தார். ஜெகத்ரட்சகனைத் தவிர வேறு யாரும் கண்ணீர் விடவில்லை. "ஆம்புலன்சில் வருகிறேன்' என்றார். தடுக்க ஆளில்லை. "இரண்டு கண்கள்' என்ற வசனமோ எடுபடவில்லை. வேலைநிறுத்தத்தை உடைக்கும் முயற்சி தோல்வியடைந்தது. சோனியாவைத் தீயிலிருந்து பாதுகாக்கும் முயற்சியோ, கருணாநிதியின் கொடும்பாவி தீக்கிரையாவதில் முடிந்தது. வாயை மூடிக்கொண்டு போலீசின் பின்னால் பதுங்கிக் கொள்வதுதான் எதிர்வரும் தேர்தலுக்கும் தனது எதிர்காலச் சந்ததிக்கும், இந்திய ஜனநாயகத்துக்கும் நல்லது என்று தெளிந்த கருணாநிதி, இப்பிரச்சினை குறித்து போலீசு அதிகாரிகளுடன் மட்டுமே பேசினார்.

 

ஈழப்பிரச்சினையில் கருணாநிதிக்கு எதிராகச் சவடால் அடித்த எதிர்க்கட்சிகளும் உயர்நீதிமன்றப் பிரச்சினையில் போலீசுக்கு எதிராக வாய்திறக்கவில்லை. மார்க்சிஸ்டுகளோ கருணாநிதிக்கு ஒரு கண்டனத்தைத் தெரிவித்து விட்டு, நீதிமன்றம் செல்லுமாறு வழக்குரைஞர்களுக்கு அறிவுறுத்தினர். போலி கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கங்கள் வழக்குரைஞர்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட விடவில்லை. ஜனநாயகத்தின் காவலர்ளாகத் தம்மைச் சித்தரித்துக் கொள்ளும் பத்திரிகைகளோ "ஒழுங்கின்' காவலர்களாக அவதாரமெடுத்திருந்தனர். காவல்துறையே திக்குமுக்காடிப் போகுமளவுக்கு ஆதரவைச் சொரிந்தனர்.

 

அரசாங்கம், நிர்வாக எந்திரம், நீதித்துறை, ஊடகங்கள் ஆகிய அனைவரும் போலீசு இராச்சியத்தின் காவலர்களாக அணிவகுத்து நிற்க, வழக்குரைஞர்கள் தன்னந்தனியாகப் போராடிக்கொண்டிருந்தனர். இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து மற்றவர்கள் புரிந்து கொள்வது இருக்கட்டும், அனைத்திந்திய வழக்குரைஞர் சங்கத்தலைமைக்கும், பிற மாநில வழக்குரைஞர்களுக்கும் கூட இது உரைக்கவில்லை. மொத்தத்தில் இது தமிழ்நாட்டின் பிரச்சினையாகவும், ஈழத்தமிழர் தொடர்பான பிரச்சினையாகவும் மட்டுமே கருதப்பட்டு ஒதுக்கப்பட்டு விட்டது.

 

போலீசுக்கு எதிரான தன்னியல்பான கோபம்தான் தமிழக வழக்குரைஞர்களை வழிநடத்தியதே தவிர, தாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் தோற்றுவித்திருக்கின்ற அரசமைப்பு நெருக்கடியை வழக்குரைஞர்கள் பலர் புரிந்து கொள்ளவில்லை. அவ்வாறு புரிந்திருப்பின், போலீசு அராஜகத்துக்கு எதிரான இந்தப் போராட்டத்தை, போலீசு ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாற்றும் திசையில் அவர்கள் நகர்ந்திருக்க முடியும். இரு அதிகாரிகளுக்கு எதிரான தற்காலிகப் பணிநீக்கம் என்ற இந்த உத்தரவை, உந்து பலகையாகப் பயன்படுத்திக் கொண்டு போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றிருக்க முடியும். நாடாளுமன்ற போலி ஜனநாயகத் தேர்தல் கூச்சலை ஊடறுத்துக் கொண்டு ஜனநாயகம் குறித்த உண்மையான கேள்விகளை எழுப்பியிருக்க முடியும்.

 

எனினும் இவையனைத்தும் சாத்தியங்கள் மட்டுமே. இதனை சாதிப்பதற்கு ஏற்ற தலைமை வழக்குரைஞர்களுக்கு இல்லை. நாள் ஆக ஆக, போராட்டம் தமது பிடிக்குள் அடங்காமல் விரிந்து சென்று விடுமோ என்ற அச்சம் காரணமாகத் தலைமை சரணடைந்து விட்டது. எனினும் இது முடிவு அல்ல. குனிந்து கும்பிடுபவர்களை மண்டியிடுமாறும், மண்டியிடுபவர்களை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குமாறும் போலீசு ஆட்சி மிரட்டும். அந்த மிரட்டல் புதிய போராட்டத்துக்கான தூண்டுதலை வழங்கும்.


· பாலன்

வழக்குரைஞர் போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு பாண்டிச்சேரி கீழமை நீதிமன்ற வழக்குரைஞர்கள் கூட்டமைப்பின் மாநிலக் கூட்டம் கடந்த 11.3.09 அன்று சேலம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. அப்பொழுது, பு.ஜ. விற்பனைக் குழுவைச் சார்ந்த இரு பெண் தோழர்கள் ""வழக்குரைஞர் மீதான தாக்குதல் அம்பலமானது போலீசின் உண்மை முகம், தி.மு.க.வின் பொய்முகம்'' என்ற தலைப்பிட்ட மார்ச் மாத பு.ஜ. ஏட்டை வழக்குரைஞர்கள் மத்தியில் விற்பனை செய்தனர்.

 

அப்போது, தண்ணியடித்து தள்ளாடியபடி வந்திருந்த தி.மு.க. பிரமுகரும், சேலம் நீதிமன்ற அரசு வழக்குரைஞரும், இக்கூட்டமைப்பின் துணைத்தலைவருமான மூர்த்தி மற்றும் தி.மு.க. சார்பு வழக்குரைஞர் மணிவண்ணன், பிரபுராம் ஆகியோர் ""நீங்க யாரு? வன்முறையைத் தூண்ட வந்தீங்களா? நீங்களெல்லாம் என்ன அட்வகேட்டா? பிரசுரமோ, புத்தகமோ இங்கே வினியோகிக்கக் கூடாது'' என அத்தோழர்களை மிரட்டி பு.ஜ. இதழ்களைப் பிடுங்கி எரித்தனர்.

 

கீழ்த்தரமான இச்செயலை கண்டு ஆத்திரமுற்ற அவ்விருபெண் தோழர்களும் அக்கும்பலை எதிர்த்து நின்றதோடு, மற்ற வழக்குரைஞர்கள் மத்தியில் அவர்களை அம்பலப்படுத்தினர்.

 

""வழக்குரைஞர் போராட்டத்தையும் இக்கூட்டத்தையும் சீர்குலைக்கத்தான் உள்ளூர் தி.மு.க. எம்.எல்.ஏ ஆ. இராஜா வீசிய எலும்புத் துண்டைக் கவ்விக் கொண்டு இவர்கள் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொண்டு வம்பு செய்கின்றனர். கூட்டம் முடியும்வரை பிரச்சினை வேண்டாம்'' என மற்ற வழக்குரைஞர்கள் அப்பெண் தோழர்களைச் சமாதானம் செய்தனர்.

 

""வழக்குரைஞர் போராட்டம் தொடரும்'' என்ற அறிவிப்போடு அந்தக் கூட்டம் முடிந்தது. அப்போது தோழர்கள் கொண்டு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பு.ஜ. ஏடுகளும் விற்றுத் தீர்ந்திருந்தன. கருங்காலி கும்பலின் சூழ்ச்சிகளும் தவிடுபொடியாயின.