Language Selection

புதிய ஜனநாயகம் 2009

"யாருடைய உத்தரவின் பேரில் போலீசு படைகள் உயர்நீதி மன்றத்திற்குள் நுழைந்தன? எந்த அதிகாரியினுடைய உத்தரவின் பேரில் அன்று தடியடி நடத்தப்பட்டது?'' என்ற அடிப்படையான இரு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டு, போலீசு நடவடிக்கையை நியாயப்படுத்தும் ஒரு "திரைக்கதை'யை இடைக்கால அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா.

 

""பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற தடியடியைப் புரிந்து கொள்ள ஜனவரி 29 இலிருந்து தொடங்க வேண்டும்'' என்று கூறி ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி நாம் நடத்திய போராட்டங்கள், அந்தப் போராட்டத்தின் போது குறிப்பிட்ட சில வழக்குரைஞர்கள் நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக போலீசினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை விவரிக்கிறார். பிப். 19 அன்று முட்டை வீச்சு சம்பவம் தொடர்பாக சில வழக்குரைஞர்களை போலீசு கைது செய்ததாகவும், அந்தக் கைது நடவடிக்கையைப் பிற வழக்குரைஞர்கள் எதிர்த்ததாகவும், பொறுமையைக் கடைப்பிடித்த போலீசைச் சீண்டி, அவமானப்படுத்தி ஆத்திரமூட்டியதாகவும், கல்லெறிந்ததாகவும்... இத்தகைய சூழ்நிலையில் வழக்குரைஞர் கும்பலைக் கலைக்க தடியடி அவசியமாகத்தான் இருந்திருக்கிறது என்றும் கூறுகிறார் கிருஷ்ணா.

 

"அந்தத் தடியடியில் போலீசார் வரம்பு மீறிவிட்டார்கள்'' என்று குறிப்பிடும் ஸ்ரீகிருஷ்ணா, ""படையினர் அவ்வாறு வரம்பு மீறுவதைத் தடுக்க ஆணையரும் போலீசு அதிகாரிகளும் முயன்ற போதிலும் அவர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை'' என்றும் கூறுகிறார்.

 

மாறாக ""தடியடி நடத்த உத்தரவிட்டது யார் என்பதை வீடியோவிலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லை'' என்று கூறி அந்தப் பிரச்சினையை அத்தோடு முடித்துக் கொள்கிறார்.

 

அன்றைய சம்பவம் குறித்து கிருஷ்ணாவின் அறிக்கையில் கண்டுள்ள பல விவரங்கள் பல பிழையாகவும் முரண்பாடாகவும் இருக்கின்றன. அவற்றை நாம் ஆதாரபூர்வமாக நிரூபிக்க இயலும். இருப்பினும், அந்த விவரங்களுக்குள் செல்வதைக் காட்டிலும், இத்தகைய ஒரு தலைப்பட்சமான அறிக்கையை எழுதும்படி நீதிபதியைத் தூண்டிய சிந்தனைப் போக்கு எது என்பது குறித்துத்தான் நாம் அதிகமாக கவனம் செலுத்தவேண்டும் என்று கருதுகிறோம்.

 

"வழக்குரைஞர்கள் எல்லோரும் சட்டப்படிதான் நடக்கிறார்களா, அவர்கள் தவறே செய்யாதவர்களா, போலீசு மட்டும்தான் தவறு செய்ததா, போலீசை மட்டும்தான் தண்டிக்க வேண்டுமா, போலீசு வக்கீல் இருதரப்பினரில் அதிகம் தவறு செய்தது யார்?'' என்ற கேள்விகளை விசாரிப்பதற்காக இந்தக் கமிஷன் நியமிக்கப்படவில்லை. 19ஆம் தேதி நடைபெற்ற கொலைவெறித் தாக்குதலை உலகமே பார்த்திருக்கிறது. ""அத்தகைய ஒரு சட்டவிரோத நடவடிக்கைக்கு சட்டப்படி யார் பொறுப்பு?'' என்ற கேள்விக்கு விடை தேடத்தான் இந்தக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் கமிஷனோ, ""காவல்துறை இந்த அளவு ஆத்திரம் கொள்வதற்கு வழக்குரைஞர்கள் எப்படி காரணமாக இருந்திருக்கிறார்கள்?'' என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு ஆராய்ந்திருக்கிறது. இதைத்தான் இந்து, எக்ஸ்பிரஸ் முதலான பத்திரிகைகள் இத்தனை நாட்களாக இங்கே எழுதிக் கொண்டிருக்கின்றன.

 

ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையைப் பாராட்டி இன்று இந்து நாளேடு எழுதியுள்ள தலையங்கம் இப்படித் தொடங்குகிறது ""சில சமயங்களில் சூழல் தான் எல்லாமுமாக இருக்கிறது. அந்த வகையில் 19ஆம் தேதி நடைபெற்ற சம்பவங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதற்கான பார்வையை உச்சநீதிமன்றத்துக்கு ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் வழங்கியிருக்கிறது.''

 

ஊடகங்களின் பார்வையை தீர்மானிக்கும் அரசியல் கருத்துகள் அவர்களை அவ்வாறு எழுதத் தூண்டலாம். ஆனால் ஒரு நீதிபதியின் பார்வையும் அப்படித்தான் இருக்கும் என்றால், அந்த இடத்தில் "சட்டத்தின் ஆட்சி' முடிவுக்கு வந்துவிடுகிறது. இந்த அணுகுமுறைதான் நீதிவழங்கும் முறை என்று ஆகிவிட்டால், இந்திராவின் கொலையால் ஆத்திரம் கொண்ட இந்துக்கள், சீக்கியர்கள் மீது நடத்திய தாக்குதல் முதல் எல்லாத் தாக்குதல்களுக்கும் சூழலின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளலாம்.

 

ஸ்ரீகிருஷ்ணா குறிப்பிடுவதைப் போல ஜனவரி 29 முதல் சிலவழக்குரைஞர்கள் வரம்புமீறி நடந்து கொண்டதும், அதை தலைமை நீதிபதி கட்டுப்படுத்த தவறியதும்தான் போலீசின் வெறித்தனத்துக்குக் காரணமாக இருந்தது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக்கொள்வோம். இந்த "ஆய்வு முறை'ப்படி, ""சிங்கள இராணுவம் நடத்தும் இனப்படுகொலையும், அதற்கு இந்திய அரசு துணை நிற்பதும்தான் இலங்கை வங்கி மீது கல்லெறியும் அளவு கோபத்தை தமிழகத்தின் வழக்குரைஞர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது'' என்ற நியாயத்தை நீதிபதி ஒப்புக் கொள்வாரா?

 

அப்படி நடக்கவில்லை. அந்த வழக்குரைஞர்கள் மீது எல்லா அத்துமீறல்களுக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்றால், அதுதான் சட்டபூர்வமான அணுகுமுறை.

 

"வக்கீல்கள் போலீசை ஆத்திரமூட்டினார்கள், கல்லெறிந்தார்கள் அதன் விளைவுதான் தடியடி'' என்ற போலீசு சார்பில் விளக்கம் சொல்கிறார் கிருஷ்ணா. இதே விளக்கத்தை ஆணையர் சொல்லட்டுமே. ""வக்கீல்கள் இப்படி நடந்து கொண்டதால் நான்தான் தடியடிக்கு உத்தரவிட்டேன்'' என்று ஒப்புக் கொள்ளட்டுமே. அல்லது ""என்னுடைய ஆட்கள் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. வக்கீல்களின் நடவடிக்கைகளால் ஆத்திரம் கொண்டு பாய்ந்து விட்டார்கள்'' என்று சொல்லட்டுமே. வெறியாட்டம் ஆடிய போலீசார் மீதும் வழக்கு போடட்டும், கல்லெறிந்த வக்கீல்கள் மீதும் வழக்கு போடட் டும். தாக்கியது யார், தற்காத்துக் கொண்டது யார் என்பதை நீதிமன்றத்தில் பேசிக்கொள்வோம். போலீசு ஏன் பம்முகிறது?

 

போலீசின் நியாயத்தை கிருஷ்ணா பேசுகிறார். அரசு பேசுகிறது. ஊடகங்கள் பேசுகின்றன. ஆனால் போலீசு அதிகாரிகள் மட்டும் பேச மறுக்கிறார்கள். ""போலீசை நாங்கள் அனுமதிக்கவில்லை'' தலைமை நீதிபதி கூறிவிட்டார். ""வேறு யாரிடம் அனுமதி பெற்றீர்கள்?'' என்ற கேள்வியை தன் முன் ஆஜரான ஆணையரிடம் கேட்க வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணாவுக்குத் தெரியவில்லயாம்! நாடகம் என்றாலும் மிகவும் தரம் தாழ்ந்த நாடகம் இது.

 

(மனித உரிமை பாதுகாப்பு மையம் 07.03.09 அன்று வெளியிட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிசன் குறித்த அறிக்கை சுருக்கித் தரப்பட்டுள்ளது.)