அனைத்துலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாளன்று திருச்சியில் செயல்பட்டு வரும் பெண்கள் விடுதலை முன்னணி, ""ஈழத்தில் தமிழ் இன அழிப்புப் போர் மற்றும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை எதிர்ப்போம்! இந்திய அரசின் இராணுவ ஆயுத உதவிகள், வர்த்தக, தூதரக உறவுகளைத் துண்டிக்கப் போராடுவோம்'' எனும் முழக்கத்துடன் உழைக்கும் பெண்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

 

திருச்சி மாவட்ட பெண்கள் விடுதலை முன்னணி தலைவர் தோழர் நிர்மலா தலைமையில், பாலக்கரை பிரபாத் திரையரங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ம.க.இ.க. தோழர் ராஜா மற்றும் பு.ஜ.தொ.மு. மாநில பொதுச் செயலாளர் தோழர் சுப. தங்கராசு ஆகியோர் எழுச்சியுரையாற்றினர். ம.க.இ.க. மையக் கலைக்குழு மற்றும் பெ.வி.மு.வினர் நடத்திய ஈழத்தின் அவலம் குறித்த நாடகம், பொதுமக்களின் மனசாட்சியை உலுக்கும் விதமாக அமைந்தது.

 

விருத்தாசலத்தில் ""புதிய ஜனநாயகம் பெண்கள் வாசகர் குழு''வினர் அரங்குக் கூட்டமொன்றை நடத்தினர். தோழர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்லூரி மாணவி தமிழ் முல்லை, ஓய்வு பெற்ற ஆசிரியை இராஜலெட்சுமி அம்மாள் ஆகியோர் பல்வேறு அரங்குகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவற்றை எதிர்கொள்வது குறித்தும் உரையாற்றினர்.

 

"பெண்களின் உழைப்பைச் சுரண்டும் உலகமயமாக்கலுக்கு எதிராக் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்முறை தாக்குதலுக்கு எதிராகப் போராட பெண்கள் ஓர் அமைப்பாக அணிதிரள வேண்டுமென''ப் பேசிக் கூட்டத்தை நிறைவு செய்தார், தோழர் கலைமதி.

 

சென்னை மாவட்ட பெண்கள் விடுதலை முன்னணியினர் அடித்தட்டு உழைக்கும் மக்கள் நிறைந்த குரோம்பேட்டையில் திறந்தவெளி அரங்கில் மகளிர் தினக் கூட்டத்தை நடத்தினர்.

 

பெண்களே பங்கேற்று நடத்திய நாடகங்களும், பாடிய புரட்சிகரப் பாடல்களும், அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்களும் பெண்கள் விடுதலை குறித்த சித்திரத்தைக் கொடுத்தன.

 

"மகளிர் சுய உதவிக் குழு என்ற மாய வலையிலிருந்து பெண்கள் மீண்டு வரவேண்டும்'' என விளக்கி உரையாற்றினார் பெ.வி.மு. சென்னை மாவட்டத் தலைவர் தோழர் உஷா. ""இத்தகைய கூட்டங்களில் பெண்களைவிட ஆண்கள்தான் அதிகம் கலந்து கொள்ள வேண்டுமென்று'' நையாண்டியாய் பேசிய தோழர் துரை. சண்முகம் ஆணாதிக்கத்தின் ஆணி வேரை அடையாளம் காட்டினார்.

 

மதுரையில் ம.க.இ.க., பு.மா.இ.மு. அமைப்புகளைச் சார்ந்த பெண் தோழர்கள் இணைந்து வடக்கு மாசி வீதியிலுள்ள மணியம்மை மழலையர் பள்ளியில் அரங்குக் கூட்டத்தை நடத்தினர்.

 

சிவகங்கை ம.க.இ.க. தோழர் குருசாமி மயில்வாகனன், மதுரை மாவட்ட ம.உ.பா. மையச் செயலர் லயனல் அந்தோணிராஜ் மற்றும் தோழர் எழில்மாறன் ஆகியோர் உரையாற்றினர்.

 

பு.ஜ. செதியாளர்கள்