திருநெல்வெலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில், பெரும்பான்மையாக யாதவர்களும், கணிசமான அளவில் செட்டியார்களும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனர். பெரும்பான்மையாக இருப்பதாலேயே யாதவ சாதி வெறியர்கள் சாதித் தினவெடுத்து திமிருடன் நடந்து வந்துள்ளனர்.

 

கடந்த மார்ச் ஆறாம் தேதியன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பரமசிவன், ஈஸ்வரன் ஆகிய இருவரையும் யாதவ சாதி வெறியர்கள் மறைந்திருந்து தாக்கிக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். மேலும், யாதவ சாதிவெறியர்களின் கொலைவெறியாட்டத்தில் படுகாயமடைந்த சுரேஷ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த சில வருடங்களாகவே, இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்டோரின் மீது திட்டமிட்டு சாதிய மேலாதிக்கத்தை ஏவி யாதவ சாதிவெறியர்கள் ஒடுக்கி வருகின்றனர். செந்தட்டி ஊரிலிருக்கும் முப்பிடாதி அம்மன் கோவிலில் மூன்று சாதி மக்களும் சேர்ந்துதான் கோவில் விழாவை நடத்துவது வழக்கம். கடந்த 2003இல் குடமுழுக்கு நடைபெற்ற பொழுது தாழ்த்தப்பட்ட மக்கள் தீர்த்தம் எடுத்துக் கொண்டு உள்ளே வருவதை யாதவ சாதியினர் தடுத்துள்ளனர்.

 

கடந்த வருடம் தாழ்த்தப்பட்டோருக்குச் சொந்தமான சுடலை மாடசாமி கோயில் திருவிழாவின் போது பாடப்பட்ட பாடல்கள் பிடிக்கவில்லை என்று கூறி, மின் இணைப்பை துண்டித்து ஆதிக்க சாதியினர் ரவுடித்தனம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 2008இல் முப்பிடாதி அம்மன் கொடை விழாவை யாதவ சாதியினர் நடத்தும்முன், கணக்குவழக்குகளை முறைப்படி நேர் செய்ய வேண்டும் என்று தாழ்த்தப்பட்டோர் கோரிக்கை வைத்தனர். பிறகு, இரு தரப்பினரும் தனித்தனியே விழா நடத்திக் கொள்ளலாம் என அனைவரும் ஒப்புதல் அளித்து, மாவட்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பாலகிருஷ்ணன் முன்னிலையில் கைச்சாத்து(ஒப்பந்தம்) இடப்பட்டுள்ளது.

 

ஆதிக்க சாதியினர் கொடைவிழாவை நடத்தி விட்ட நிலையில், மார்ச் 10ஆம் தேதி தமது கொடைவிழாவை நடத்தத் திட்டமிட்டு தாழ்த்தப்பட்டோர் மனுக் கொடுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய அவர்கள் முற்பட்டபோது, இதனை எதிர்த்து யாதவர்கள் நடைபாதைகளில் முட்களை வெட்டிப் போட்டு யாதவ சாதிவெறியர்கள் இடையூறு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் ஒருவரின் வளர்ப்பு நாயை வெட்டிக் கொன்று குரூரத்தனத்தைக் காட்டினர். மேலும், தாழ்த்தப்பட்டோரை சமூக விலக்கம் செய்து ஊரில் உள்ள செட்டியார் கடைகளில் அவர்களுக்குப் பலசரக்கு விற்பதை நிறுத்திவிட்டனர்.

 

இந்நிலையில், யாதவ சாதிப் பெண் ஒருவர் வந்தபோது, புதர்க்காட்டில் மலம் கழித்துக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் எழுந்து நிற்கவில்லை என்ற அற்ப காரணத்தை முன்வைத்து இக்குரூரக் கொலைகளை செய்துள்ளனர். படுகொலைத் தாக்குதல் நடப்பதற்கு முன்பே தாழ்த்தப்பட்டோர் வீடுகளுக்குச் சென்று மிரட்டியுள்ளனர்.

 

சங்கரன்கோவிலில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த கருப்பசாமி என்பவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். அவர் தப்பி ஓடிவிட்டதால் அவருக்கு பின்னால் வந்த ஈஸ்வரன், பரமசிவம், சுரேஷ் ஆகியோரை தாக்கியுள்ளனர். ஈஸ்வரனின் கழுத்தை வெட்டித் துண்டாக்கி தலையை அறுத்தெடுத்து, இரண்டு துண்டுகளாகப் பிளந்துள்ளனர். பரமசிவத்தின் கை வேறு கால் வேறாக வெட்டித் துண்டாக்கி வீசியெறிந்துள்ளனர். இந்த வெறிச்செயலுக்கு பழிவாங்கும் உள்நோக்கம் மட்டும் காரணமல்ல. ""இனி தாழ்த்தப்பட்டோர் யாராவது சம உரிமை கேட்டால் ஆதிக்கசாதி குரூரமாகப் பழிதீர்க்கும்'' எனும் பீதியில் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் அஞ்சி நடுங்க வேண்டும் எனும் சாதிவெறிதான் வெட்டுப்பட்டு இறந்தவர்களையும் கண்டம் துண்டமாய்க் கூறுபோட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோரைக் கொன்றொழிப்பது மட்டுமின்றி, பீகார் சாதிவெறி நிலப்பிரபுக்களைப் போல அந்த வட்டாரமெங்கும் ஆதிக்க சாதிவெறி பயங்கரத்தை நிலைநாட்டும் நோக்கத்தோடுதான் இப்படி கண்டம்துண்டமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

 

போலீசும், ஓட்டுக் கட்சிகளும், பத்திரிகைகளும், கோவில்கொடை தகராறு மட்டுமே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கூறி இதன் பின்னணியில் உள்ள ஆதிக்க சாதிவெறியை மறைக்க முயலுகின்றன.

 

தம்மை மிகவும் பிற்படுத்தப்பட்டோராக அங்கீகரிக்கக் கோரி அரசிடம் கெஞ்சும் ஆதிக்க சாதியினர், சம உரிமை கோரும் தாழ்த்தப்பட்டோரை ஆண்ட சாதித் திமிரில் இவ்வாறு வெட்டிக் கொல்வதை "சமூக நீதி' காவலர்களோ அல்லது இந்து ஒற்றுமை பேசும் ஆர்.எஸ்.எஸ் கும்பலோ கண்டிப்பதே இல்லை.

 

சி.பி.ஜ சி.பி.எம்; கட்சிகளையும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியையும் தவிர வேறெந்த தலித் தலைவர்களும் இக்கொடுமைக்கெதிராகக் குரல் கொடுக்கவில்லை. கிருஷ்ணசாமியோ, உயிர்நீத்தவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரியுள்ளார். மேலும், இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் சாதி மோதலை உருவாக்குவதற்காகத் திட்டமிட்டுக் கூலிப்படை துணையுடன் இதனைச் செய்துள்ளதாகச் சொல்கிறார். இதன் மூலம், இந்த படுகொலைதான் அங்கு சாதி மோதலை உருவாக்கியுள்ளது போன்ற கருத்தை உருவாக்கி, ஆதிக்க சாதி வெறியை மறைக்க முயலுகிறார்.

 

செந்தட்டி மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல கிராமங்களிலும் கோவில் வழிபாட்டுரிமை கோரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியும் அரசும் கைகோர்த்து ஒடுக்குமுறையை ஏவி விடுகின்றன. இதே வட்டாரத்தில் இருக்கும் படர்ந்தபுளி கிராமத்தில், கோவில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊரைக் காலி செய்துவிட்டு மலையில் குடியேறிய சம்பவம் சில மாதங்களுக்கு முன் நடந்தது.

 

மக்களின் உரிமை போராட்டங்களின் போது சட்டம்ஒழுங்கு பேசும் போலீNசோ, இங்கு ஆதிக்க சாதியினரின் ஏவல்நாயாக வலம் வருகிறது. யாதவ சாதியைச் சேர்ந்த சிலரை பெயரளவில் கைது செய்துவிட்டு, இன்னும் மூன்று தாழ்த்தப்பட்டோரைப் படுகொலை செய்ய யாதவ சாதிவெறியர்கள் திட்டமிட்டிருப்பதாகப் பீதி கிளப்பி, ஒடுக்கப்பட்டோரின் அடுத்தக்கட்ட போராட்ட முயற்சிகளைப் போலீசு தடை செய்துள்ளது. பச்சைப் படுகொலைகள் செய்த சாதி வெறியர்கள் வெற்றிக் களிப்புடன் வலம் வரும் போது, உரிமைக்காக போராடிய ஒடுக்கப்பட்ட மக்களோ சங்கரன் கோவில் காந்திநகர் சமுதாயக் கூடத்தில் அகதிகளைப் போல தஞ்சம் புகுந்துள்ளனர்.

 

குமார்