Language Selection

புதிய ஜனநாயகம் 2009

இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் அடக்குமுறைக்கும், கொலைவெறித் தாக்குதலுக்கும் பத்திரிகையாளர்கள் கூடத் தப்பவில்லை. அரசின் இனவெறியையும், பாசிச நடவடிக்கைகளையும் எதிர்த்து எழுதும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், கடத்திக் கொல்லப்படுவதும் அங்கு தொடர்கதையாகியுள்ளது.

 

கிளிநொச்சியைப் பிடிப்பதற்கான போர் தொடங்கியதிலிருந்து இதுவரை முக்கியமான பத்திரிகையாளர்கள் பதினாறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. பலர் எவ்விதக் குற்றச்சாட்டுகளுமின்றி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

 

கடந்த ஜனவரி மாதம் ""சண்டே லீடர்'' என்ற பத்திரிகையின் ஆசிரியர் லசாந்தா விக்கிரமதுங்கா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது எழுத்துக்கள், உலக அரங்கில் இலங்கை அரசைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தன. லசாந்தா கொல்லப்படுவதற்கு முன்பு எழுதி வைத்திருந்த ஒரு கட்டுரையில், தான் இலங்கை அரசால் கொல்லப்படப் போவது நிச்சயம் என்றும், ஏற்கெனவே தான் இருமுறை தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அவரது மரணத்திற்குப் பிறகு ""சண்டே டைம்ஸ்'' என்ற பத்திரிக்கையில் தலையங்கமாக வந்த அந்தக் கட்டுரையில், தனது சொந்த மக்கள் மீதே குண்டு வீசிக் கொல்லும் அரசு - உலகிலேயே இலங்கை அரசு ஒன்றுதான் என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

 

லசாந்தாவின் படுகொலையைப் பற்றி இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் கொத்தபய ராஜபக்சேவிடம் பி.பி.சி. செய்தியாளர் கேட்ட போது. ""யார் அந்த லசாந்தா? போரில் பலர் கொல்லப்படுகின்றனர்; இந்த ஒரு உயிர்தானா உங்களுக்கு முக்கியம்?'' எனத் திமிராக பதிலளித்தார்.

 

""அவுட்ரீச்'' என்ற இதழின் ஆசிரியர் திஸ்ஸ நாயகம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டாக சிறையிலிருக்கிறார். இவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில், சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும், பத்திரிக்கையாளர் சங்கங்களும் இவரை விடுவிக்கக் கோரிவருகின்றன. ஆனால் இலங்கை அரசு, இவர் மீதுள்ள பொய்க் குற்றச்சாட்டுகளைக் காட்டி, இவரை விடுவிக்க மறுத்து வருகிறது.

 

""உதயன்'' பத்திரிகையில் வேலை செய்த செல்வராஜா ரவிவர்மன் என்ற இளம் பத்திரிக்கையாளர் கடந்த 2007ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். ""ஈழ நாடு'' என்ற தமிழ்ச் செய்தித்தாளின் ஆசிரியர் சின்னத்தம்பி சிவ மகராசன் கடந்த 2006ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ""யாழ் தினக் குரல்'' பத்திரிகையின் நிருபர் சுப்ரமணியம் ராமச்சந்திரன் காணாமல் போய் மூன்று ஆண்டுகளாகியும் அவரைப் பற்றிய தகவல் இல்லை. பி.பி.சி. வானொலியின் தமிழ்சேவைப் பிரிவில் வேலை பார்க்கும் தர்மரத்தினம் சிவராமன் என்ற பத்திரிகையாளர் 2005ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்டார். இப்படி, தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

 

அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள், எழுதுபவர்களைத் தாக்குவதற்கும் கடத்திச் சென்று கொல்வதற்கும், அரசு தனிச்சிறப்பான ஒரு இரகசிய கொலைப்படையை வைத்துள்ளது. "வெள்ளை வேன்' குழு என அழைக்கப்படும் இந்தக் கூலிப் படை, வெள்ளை நிற வேன்களில் வந்து, இதுவரைப் பலரைக் கொலை செய்துள்ளது.

 

கடந்த மாத இறுதியில், ""சுடர் ஒளி'' என்ற தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியர் வித்யாதரன் இதே வெள்ளை வேன் குழுவினரால் கடத்தப்பட்டார். கொழும்புவில் அவரது உறவினரின் இறுதிச் சடங்கில் வைத்துப் பட்டப்பகலில் அவர் கடத்தப்பட்டார். அந்த இறுதிச் சடங்கில், கூட்டம் அதிகமாக இருந்ததால், கடத்தலுக்குப் போலீ"க்காரர்களே பகிரங்கமாக உதவினர். வித்யாதரனது உறவினர்கள் உடனே இவ்விசயத்தைச் சர்வதேசப் பத்திரிகையாளர்கள் மூலம் அம்பலப்படுத்தினார்கள். இதனால் நெருக்கடிக்குள்ளான அரசு, வித்யாதரனைக் கைது செய்துள்ளதாக அறிவித்தது.

 

இந்தக் கடத்தல் பற்றி வித்யாதரனது உறவினர் ஒருவர் கூறும் போது, கடத்தலில் போலீசார் உதவியது பற்றி சர்வதேச ஊடகங்களில் தாங்கள் மட்டும் அம்பலப்படுத்தாமல் இருந்திருந்தால் வித்யாதரனும், மற்ற பத்திரிகையாளர்களைப் போல கொல்லப்பட்டிருப்பார் என்றார். வித்யாதரனைக் கடத்திய உடனே அவரது கண்களைக் கட்டிக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகக் கூறி அவரைச் சிறையிலடைத்துள்ளனர். இதே ""சுடர் ஒளி'' பத்திரிகையின் ஊழியர்கள் ஆறு பேர் இதற்கு முன்பு கடத்திக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்படும் இத்தகைய தாக்குதல்கள் குறித்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் இலங்கை அரசுக்குக் கண்டனங்கள் வந்துள்ள போதும், இது குறித்து வழக்குப் பதிவோ விசாரணையோ நடத்தப் படவில்லை. பத்திரிகையாளர்களைக் கொன்றதாக ஒரு குற்றவாளி கூட இதுவரைக் கைது செய்யப்படவில்லை.

 

பத்திரிகைகள் மட்டுமல்ல, மக்கள் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி போன்ற தமிழ்த் தொலைக்காட்சிகள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளன. நக்கீரன் உள்ளிட்ட வார இதழ்கள் தடை செய்யப்பட்டுள்ளன, ஆனந்த விகடன் பத்திரிக்கையின் விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் யாழ்ப்பாணத்திலிருந்த பி.பி.சி. நிறுவனத்தின் செய்தியாளர்களை உடனே வெளியேறும்படி அரசு உத்தரவிட்டுள்ளது, சி.என்.என். போன்ற வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தெரிந்தோ தெரியாமலேயோ இன அழிப்புப் போரை இந்தப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தி விடுவதுதான் இவ்வளவு தடைகளுக்கும் கைதுகளுக்கும் காரணம்.

 

இவ்வாறு பல பத்திரிகைகளும், அதன் ஆசிரியர்களும் இலங்கை அரசைக் கண்டித்து அடக்குமுறையைச் சந்தித்து வரும் வேளையில், சிங்கள வெறி பிடித்த அரசை ஆதரித்து, இலங்கைக்கு வெளியிலிருந்து எழுதுகிற பத்திரிக்கை ஒன்று உண்டென்றால், அது ""இந்து'' பத்திரிக்கை மட்டும்தான்!

 

இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சில் தினந்தோறும் நூற்றுக்கணக்காண தமிழர்கள் கொல்லப்படும்போது ""இலங்கையில் நடப்பது இன அழிப்புப் போரல்ல; அது இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நடக்கும் சண்டை'' என்று அது பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தச் சண்டையில் தமிழர்கள் நடுவில் சிக்கிக் கொள்கின்றனர் என்றும், இதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என்றும் கூறிவருகிறது. இந்த ஈனப் பிழைப்புக்குத்தான் அதன் ஆசிரியர் ராமுக்கு இலங்கை அரசு ""லங்கா ரத்னா'' விருது வழங்கிக் கவுரவித்துள்ளது.

 

ராமின் இந்த ஈனத்தனத்தைக் கண்டித்துதான் கடந்த ஆண்டு பெரியார் தி.க.வினரும் தமிழினவாதிகளும் ""இந்து'' பத்திரிக்கையைக் கொளுத்தினர். தனது பத்திரிக்கை கொளுத்தப்பட்டபோதும் அண்மையில் சு.சாமி மீது முட்டையடிபட்ட போதும் கருத்துச் சுதந்திரம் பறிபோய்விட்டதாக ஒப்பாரி வைத்த இதே ""இந்து'' பத்திரிக்கை, இலங்கையில் சக பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படும்போது மட்டும் வாய் மூடி மவுனமாகிவிட்டது. இந்திய அரசும், இந்து ராம் போன்ற ஊடகத் தரகர்களும் கொடுக்கும் தைரியத்தில்தான், இலங்கைத் தூதுவர் அம்சா, நக்கீரன் பத்திரிகையை மிரட்டத் துணிகிறார்.

 

இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்ட லசாந்தாவும் ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர்தான். இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருங்கிய நண்பர். அவர் நினைத்திருந்தால், ராஜபக்சேவுக்குத் துணை போயிருக்கலாம்; ""லங்கா ரத்னா'' விருதென்ன, அதைவிடப் பெரிய விருதுகளெல்லாம் வாங்கியிருக்கலாம்; கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. விருதுகளை நக்கிப் பிழைப்பதைவிட, உண்மையை எழுதி உயிர் விடுவது மேல் என்று அவர் எண்ணியதால்தான், கொல்லப்படுவோம் எனத் தெரிந்தும், துணிந்து அரசுக்கெதிராக எழுதினார்.

 

தனது பாசிசத்தை எதிர்த்த லசாந்தாவுக்குத் துப்பாக்கித் தோட்டாக்களைப் பரிசளித்த அதே இலங்கை அரசு, தனக்கு வாலைக் குழைக்கும் இந்து ராமுக்கு பட்டங்களை வாரிக் கொடுக்கிறது.

 

இட்லருக்கு ஒரு காயபல்ஸ்! ராஜபக்சேவுக்கு ஒரு ""இந்து'' ராம்!

 

தனபால்