Language Selection

கொளுத்தியெடுக்கும் கடுமையான வெய்யிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடி நிற்கின்றனர். சாப்பாட்டுக்குக் கூடப் போதாத தங்களது சம்பளத்தை உயர்த்தக் கோரியும், தாங்கள் அடிமைகளை விடக் கேவலமாக நடத்தப்படுவதை எதிர்த்தும் அவர்களது போராட்டம் தொடங்குகிறது.

 

போராட்டத்தை ஒடுக்கக் கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. இராணுவம் வரவழைக்கப்பட்டுத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. ஹெலிகாப்டரிலிருந்து கண்ணீர்ப் புகைகுண்டுகள் வீசப்படுகின்றன. கைது செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை. முன்னணியாளர்கள் நாட்டைவிட்டே வெளியேற்றப்படுகின்றனர்.

 

பல்லாயிரம் தமிழர்களின் கனவு தேசமாக இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில்தான் இவையனைத்தும் நடைபெற்றன. அங்கே போராடி, சிறை சென்ற தொழிலாளர்களில் பலர் தமிழர்கள். துபாயில் வேலை என்பதை மக்கள் மிகவும் பெருமையாகக் கருதுகின்றனர். அதனால்தான் துபாய்க்கு அனுப்புவதாகச் சொல்பவர்களிடம், பணம் கொடுத்து ஏமாறுபவர்கள் இன்னமும் தமிழகத்தில் இருக்கின்றனர்.

 

துபாயின் ஜொலிக்கும் ஆடம்பர மாளிகைகளுக்குப் பின்னால் பல லட்சம் தொழிலாளர்களின் அயராத உழைப்பு இருக்கிறது. தங்களது இரத்தத்தை வியர்வையாய்ச் சிந்தி, அந்தப் பாலைவன தேசத்தைச் சொர்க்க பூமியாக மாற்றிவரும் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. நாள் முழுவதும் நகரத்தில் கடுமையாக வேலை செய்யும் அவர்கள், அந்நகரத்தில் தங்குவதற்கு அனுமதியில்லை. நகரத்துக்கு வெளியே பாலைவனத்துக்கு அருகேயுள்ள தொழிலாளர் குடியிருப்பில், ஒரே அறையில் பத்து, பன்னிரெண்டு பேர்வரை ஆட்டு மந்தைகளைப் போல அடைக்கப்படுகின்றனர்.

 

அதிகாலை எழுந்து சமைத்துவிட்டு வேலைக்குச் சென்றால், வேலையிலிருந்து திரும்ப நள்ளிரவாகிவிடும். வேலைப் பளுவோ மிகவும் அதிகம். வேலை செய்யும் இடத்துக்கு சென்று வர போக்குவரத்து வசதியில்லை. அதற்கென அவர்கள் இரண்டு, மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும். இவ்வளவு கஷ்டப்பட்டும் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளமோ மாதத்திற்கு இந்திய ரூபாயில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரைதான். பல லட்சங்கள் கடன் வாங்கி அங்கு செல்லும் தொழிலாளர்கள் அந்தச் சம்பளத்தைக் கொண்டு வாங்கிய கடனைக் கூட அடைக்க முடியாது.

 

குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை வேலை செய்தால்தான் ஓரளவுக்காவது சம்பாதிக்க முடியும் என்ற நிலையில், தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தை அங்கு அழைத்துச் செல்லவும் முடியாது. அப்படிச் செய்யவேண்டுமானால் அவர்கள் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கவேண்டும். இதனால், வெறும் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தொழிலாளி ஆண்டுக்கணக்கில் குடும்பத்தைப் பிரிந்து வாழவேண்டும். திருமணமான சில மாதங்களில் குடும்பத்தைப் பிரிந்து போய், குழந்தை வளர்ந்த பிறகு வருபவர்களும் உண்டு.

 

தங்களது நிலைபற்றி ஒரு இந்தியத் தொழிலாளி கூறும்போது, ""நாங்கள் துபாய்க்கு வருவதற்கு முன்னர் பல கனவுகளோடு வந்தோம். ஆனால் இங்கு எங்களுக்கு வாழ்க்கையே இல்லையென்று இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது'' எனத் தொழிலாளர்களின் குமுறலை வெளிப்படுத்தினார். இன்னொருவரோ, ""சூப்பர்வைசர் வேலை எனக் கூறினார்கள்; அதனால் ஊரில் வளர்த்து வந்த ஆடுமாடுகளை விற்று, நிலத்தை அடமானம் வைத்துவிட்டு வந்தேன்; ஆனால் இங்கு வந்தவுடன் ஒட்டகம் மேய்க்க விட்டுவிட்டார்கள்'' என்று வருந்துகிறார். துபாய்க்கு வந்தவுடன், தொழிலாளர்களின் கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்டு) நிறுவனத்தினர் பிடுங்கிவைத்துக் கொள்கின்றனர். இதன்மூலம் நிறுவனத்தினர் சொல்லுக்குத் தொழிலாளர்கள் கட்டுப்படவேண்டியிருக்கிறது. 8 மணிநேர வேலை, மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே ஓவர்டைம் என்று கூறப்பட்டாலும், உண்மையில் 18 மணி நேரம் வரை உழைக்க வேண்டியிருக்கிறது.

 

இவற்றையெல்லாம் பொறுத்துப் பார்த்தும் பலனில்லாததால், தொழிலாளர்கள் ஒன்றுகூடிப் போராட ஆரம்பித்தனர். கடந்த நவம்பரில் துபாயின் மிகப்பெரிய கட்டிட நிறுவனமான ""அராப் டெக்''கின் 40,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இந்தியர், பாகிஸ்தானியர் என்ற தேச முரண்பாடுகளைக் கடந்து, இந்து, முஸ்லீம் என்ற மதப்பிரிவினைகளைக் கடந்து, தொழிலாளி என்ற உணர்வில் ஒன்று சேர்ந்து அவர்கள் நடத்திய போராட்டம் உலகின் கவனத்தையும் ஈர்த்தது. விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் போது 3 தொழிலாளர்கள் இறந்ததையடுத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடங்கியது. இதேபோல குவைத்திலும் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன. கடுமையான பாலைவன வெய்யிலில் தொழிலாளர்களை 12 மணி நேரம் வேலை வாங்குவது, பாதுகாப்புக் கருவிகள் எதுவும் தராமல் ஆபத்தான வேலைகளைச் செய்யச் சொல்வது, குறைவான கூலி ஆகியவற்றை எதிர்த்துத் தொழிலாளர்கள் போராடினர்.

 

போராடிய தொழிலாளர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். கசையடி பெற்றனர். முன்னணியாளர்கள் தாக்கப்பட்டனர். போலீசும் இராணுவமும் வரவழைக்கப்பட்டு போராட்டங்கள் கடுமையாக நசுக்கப்பட்டன. தொழிலாளர்கள் பாதிக்கப்படும்போது வாய்மூடி மவுனமாக இருந்த இந்தியத் தூதரகம், தொழிலாளர் போராட்டம் வெடித்தவுடன் அதனைத் திசைதிருப்பும் விதமாக, குறைந்தபட்ச கூலி என்ற கருத்தை மட்டும் முன்வைத்தது.

 

இந்த போராட்டத்தினால் உருவான நெருக்கடியினை சமாளிக்க துபாய் அரசாங்கம் தொழிலாளர் நலச்சட்டம் என்ற பெயரில், தொழிலாளர் நலனுக்கே எதிரான ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டம் வேலை நிறுத்தத்தை தடை செய்வதோடு, அதில் ஈடுபடுபவர்களையும் கடுமையாக தண்டிக்க வழிவகை செய்கிறது. உழைக்கும் பெண்களுக்கு எதிரான விதிகளை இச்சட்டம் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு கூட்டாட்சியில் மட்டும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த அறுபதாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கான அடிப்படை உரிமையைக் கூட இந்தச் சட்டம் வழங்க மறுக்கிறது.

 

உலகமயமாக்கலின் பெயரில் தேசம் கடந்து பன்னாட்டு நிதி மூலதனங்கள் துபாயில் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளன. அவற்றைக்கொண்டு பாலைவனத்துக்கு நடுவே மிகப்பெரிய நகரங்களை உருவாக்குவது, உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடங்களைக் கட்டுவது, கடலுக்கு நடுவில் ஈச்சமர வடிவிலான ஓட்டல்களைக் கட்டுவது என ஒரு மாய உலகைக் கட்டியமைக்கும் பணியில் ஏகாதிபத்தியங்கள் ஈடுபட்டுள்ளன. அதற்கு தெற்காசிய கூலித்தொழிலாளிகளின் அடிமை உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கின்றனர். ஐரோப்பிய நகரங்களுக்கு இணையான தரத்தில், அதே சமயம் மிகவும் மலிவான கூலியில் நகரங்களை உருவாக்க முடிகிறது என்பதால், உலக முதலாளிகள் துபாயில் முதலீடு செய்ய போட்டி போடுகின்றனர். இப்படி மூலதனம் பல்கிப் பெருக, தங்கு தடையற்ற சுதந்திரம் வழங்கியுள்ள ஏகாதிபத்தியங்கள், தொழிலாளர்களது சுதந்திரத்தை மட்டும் கிள்ளுக்கீரையாக்கியுள்ளன.

 

அண்மைக்கால ஏகாதிபத்திய பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு அரபு நாடுகளில் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கின்ற நிலையில், பெறுகின்ற சம்பளத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை உணவுக்கே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி துபாய் சென்று வேலைக்கு சேர்ந்தவர்கள், அந்தக் கடனை எப்படி அடைப்பது எனத் தெரியாமல் பரிதவிக்கின்றனர். விட்டால் போதும் என்று சொந்த நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பேர் வரை இந்தியாவுக்கு திரும்ப விமானச் சீட்டுக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

மலிவான கூலி கொடுத்து தொழிலாளர்களை சுரண்டி வரும் அரபு நிறுவனங்களோ தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதாக இல்லை. ""இரும்பு, கற்கள், சிமெண்ட்டு என அனைத்துக் கட்டுமானப் பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது. ஆனால், தொழிலாளர்களின் விலை மட்டும் அப்படியே மலிவாக இருப்பதுதான் எங்களுக்கு சவுகரியமாக இருக்கிறது'' என்று அங்கிருக்கும் ஒரு நிறுவனத்தின் அதிகாரி கூறுகிறார்.

 

இந்திய தொழிலாளர்களை கரும்புத் தோட்டங்களில் கசக்கி பிழிந்து, தன்னை வளப்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போன்று, தெற்காசிய நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது துபாய். துபாயின் உயர்ந்து நிற்கும் மாளிகைகளுக்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் துயரம் தோய்ந்த வாழ்க்கை அடங்கியிருக்கிறது. இத்துயரங்களும் குமுறல்களும் எரிமலையாக வெடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

 

மதி