Language Selection

புதிய ஜனநாயகம் 2009

ஜனவரி 26, 2009 அன்று மட்டும் ஏறத்தாழ 85,000 இந்தியத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் கருக்கப்பட்ட அதேநேரத்தில்தான், இந்திய அரசு தனது 60ஆவது ""குடியரசு'' தினத்தை உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

 

இச் சம்பவம் நடந்து பத்துபதினைந்து நாட்கள் கழித்து நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர்; பிரணாப் முகர்ஜி, ""உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையிலும் இந்தியா ஏழு சதவீதப் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதாக''த் தனது உரையில் பீற்றிக் கொண்டார். இதைக் காணும்பொழுது, ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதைதான் நம் நினைவுக்கு வருகிறது.

 

ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தையில் ஏற்படும் இழப்புகள் பற்றி கவலைப்படும் மைய அரச, கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக வேலையிழப்பு ஒரு சுனாமி போல இந்திய உழைக்கும் மக்களைத் தாக்குவது பற்றி அக்கறை கொள்ள மறுக்கிறது. அமெரிக்கா உருவாக்கிய இப்பொருளாதார நெருக்கடியால் இந்திய தகவல்தொழில்நுட்பத் துறையிலும், வங்கிகாப்பீடு போன்ற நிதி நிறுவனங்களிலும் ஏற்பட்டுவரும் வேலையிழப்புகளைப் பற்றி ஊளையிட்டு வரும் முதலாளித்துவ பத்திரிகைகள், அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை இந்நெருக்கடியால் சின்னாபின்னமாகிப் போவதைப் பெரிதாகக் கண்டுகொள்வது கிடையாது.

 

இப்பொருளாதார நெருக்கடியால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி ஆராய, மைய அரசால் சமீபத்தில் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டதாம். எனினும், தொழிலாளர் நல அமைச்சருக்கு இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு அனுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மன்மோகன் ப.சிதம்பரம் கும்பல் இந்திய உழைக்கும் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறைக்கு இதுவொரு சிறிய எடுத்துக்காட்டு.

 

மைய அரசின் தொழிலாளர் நலத் துறை வேண்டாவெறுப்பாக நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, இப்பொருளாதார நெருக்கடியால் கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்குள் இந்தியாவில் ஐந்து இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்திருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது. ""அசேசம்'' என்ற முதலாளிகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தில் "வேலைவாய்ப்பு, அமைப்பு சேர்ந்த மற்றும் அமைப்பு சேராத தொழில்கள் அனைத்தையும் உள்ளடக்கி ஏறத்தாழ ஒரு கோடி வேலையிழப்புகள் அடுத்த ஓராண்டுக்குள் ஏற்படும் எனக் கூறியிருக்கிறது. "மார்க்சிஸ்டு' கட்சியின் தொழிற்சங்கத் (சி.ஐ.டி.யு.) தலைவர் எம்.கே. பாண்டே, வேலையிழப்பு ஒரு கோடியைவிட அதிகமாகவே இருக்கும் என உடுக்கை அடித்திருக்கிறார். 2010 வரை இந்நெருக்கடி நீடிக்கும் என முதலாளிகளே ஒப்புக் கொள்வதால், இந்த அபாயம் எதில் போய் நிற்கும் என்று இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. இப்பொருளாதார நெருக்கடியால் இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரிய பாதிப்பு எதுவும் கிடையாது எனக் காட்டிக் கொள்வதற்காகவே இவ்வேலையிழப்புகள் பற்றி வாய் திறக்க மறுக்கிறது, மன்மோகன் சிங் கும்பல்.

 

திவாலாகிப் போன நிறுவனங்களைக் கைதூக்கி விடுவதற்காக அமெரிக்க அரசு அளிக்கும் மானியத்தைப் பெறும் நிறுவனங்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது, அமெரிக்க அரசு. இந்தியாவிலோ கடந்த ஆறு மாதங்களுக்குள் எளிதான வங்கிக் கடன், வட்டிக் குறைப்பு என்ற பெயரில் ஏறத்தாழ ஒரு இலட்சம் கோடி ரூபாசூக்கு மேல் தரகு முதலாளிகளுக்காக வாரி வழங்கப்பட்டாலும், அம்மானியத்தைப் பெற்ற முதலாளித்துவ நிறுவனங்களின் மீது எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. குறைந்தபட்சம், உற்பத்தியைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றுகூட அவர்கள் கேட்டுக் கொள்ளப்படவில்லை. இதனால் அவர்கள் ஒருபுறம் அரசின் மானியத்தைப் பெற்றுக் கொள்வதோடு, மறுபுறம் வேலைநீக்கம், சம்பள வெட்டு, பணிச்சுமை போன்ற தாக்குதல்களைத் தொழிலாளிகளின் மீது திணித்துத் தங்களின் இலாபம் சரிந்துபோய் விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

 

வைரம் பட்டை தீட்டும் தொழிலுக்குப் பெயர் பெற்ற குஜராத்தின் சூரத்தில் இந்நெருக்கடிக்கு முன்பாக ஒரு வைரக்கல்லைப் பட்டைத் தீட்டுவதற்குக் கூலியாக ரூ.6.75 தரப்பட்டது. நெருக்கடிக்குப் பிறகு கூலி ஐந்து ரூபாயாகக் குறைக்கப்பட்டது. ""நெருக்கடிக்கு முன்பாக வைரக் கல்லைப் பட்டைத் தீட்டும்பொழுது ஏற்படும் சின்ன சின்னத் தவறுகளைக்கூடக் கண்டுகொள்ளாத முதலாளிகள், இப்பொழுது தொழிலாளிகளை வேலையில் இருந்து துரத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சின்ன தவறுகளைக்கூட ஊதிப் பெருக்குவதாக''க் கூறுகிறார், ராம் என்ற தொழிலாளி.

 

நெருக்கடிக்கு முன்பாக சூரத்தில் மட்டும் ஏறத்தாழ ஐந்து இலட்சம் தொழிலாளர்கள் வைரம் பட்டை தீட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நெருக்கடியால் ‹ரத்தில் மட்டும் இரண்டு இலட்சம் தொழிலாளர்களின் வேலை பறி போய்விட்டதாகக் கூறப்படுகிறது. 35 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போய்விட்டனர். தொழிலாளர்களின் இந்த அவலம் பெரிதாகப் பேசப்படவில்லை. மாறாக, அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் நரேந்திர மோடியின் சோதனைகள்தான் டாம்பீகமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.

 

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் சிறிதும் பெரிதுமாக 12,000 நூற்பாலைகளும், இன்ஜினியரிங் தொழிலகங்களும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகளில் தற்பொழுது உற்பத்தி பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதால், ஏறத்தாழ 25 சதவீதத் தொழிலாளர்கள் வேலையிழந்துவிட்டதாக கோயம்புத்தூர் மாவட்ட சிறுதொழில் சங்கத் தலைவர் இளங்கோ கூறுகிறார். ஆயுத்த ஆடை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவால் திருப்பூரில் மட்டும் 2.5 இலட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் 1.5 இலட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பாதிப்படைந்துள்ளனர். திருப்பூரில் செயல்பட்டு வரும் 3,000 ஆயுத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுள், பல நூற்றுக்கணக்கான சிறிய நிறுவனங்கள் நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் மூடப்படுவது தொடர்வதால், குறைந்தபட்சம் 1.5 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கக் கூடும் என்கிறார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல்.

 

திருப்பூரைப் போலவே, ஆயத்த ஆடை ஏற்றுமதித் தொழிலில் கொடிகட்டிப் பறந்த அரியானா மாநிலத்தின் குர்கான் பகுதி தொழிற்பேட்டை இன்று மயானம் போலக் காட்சியளிப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. கூலி குறைவாகக் கிடைத்தால்கூட பரவாயில்லை; வேலை கிடைத்தால்போதும் என்ற நிலைக்குத் தொழிலாளர்கள் வந்துவிட்டபோதும், வேலை கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருப்பதாகவும்; இந்நெருக்கடியைத் தாக்குப் பிடித்து நிற்கும் பெரிய நிறுவனங்கள், நிரந்தரத் தொழிலாளர்களைத் தினக்கூலிகளாக மாற்றி வருவதோடு, சேமநல நிதி, மருத்துவ ஈட்டுறுதி போன்ற சலுகைகளைத் தொழிலாளர்களுக்கு வழங்க மறுப்பதாகவும் குர்கான் பகுதி தொழிலாளர்கள் வேதனையோடு குறிப்பிடுகின்றனர்.

 

300 தொழிலாளர்கள் வேலை பார்த்துவந்த ""பாத்திமா ஃபேப்'' என்ற நிறுவனத்தில் தற்பொழுது 30 தொழிலாளர்கள்தான் வேலை பார்க்கின்றனர். வேலையிழப்பு எந்தளவிற்குத் தீவிரமாக இருக்கிறது என்பதற்கு மட்டுமல்ல, தொழிலாளர்கள் மீது எந்தளவிற்குப் பணிச்சுமை ஏற்றப்படுகிறது என்பதற்கும் இதுவொரு சிறிய எடுத்துக்காட்டாகும். தமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்ட அடிப்படை ஊதியத்தைக் குறைக்க வேண்டும் என குர்கானைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் அரியானா மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. ""தொழில் அமோகமாக நடந்தபொழுது கிடைத்த இலாபத்தை எங்களுடனா பங்குபோட்டுக் கொண்டார்கள்?'' எனத் தொழிலாளர்கள் இதற்கு முகத்தில் அறைந்தாற்போல பதில் கொடுத்துள்ளனர்.

 

தாராளமயத்தால் விவசாயம் நாசமாக்கப்பட்டதால், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்த விவசாயிகளைக் கட்டுமானத் தொழில்தான் கவர்ந்து கொண்டது. தற்பொழுது இத்தொழிலும் படுத்துவிட்டதால், தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 30 இலட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கட்டுமானத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் சிங்காரவேலு குறிப்பிடுகிறார். இத்தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் வேலை கிடைத்தாலே அதிருஷ்டம்தான் என்கிறார் அவர்.

 

அசோக் லேலண்ட் போன்ற பல்வேறு பெரிய நிறுவனங்களில்கூட தற்பொழுது மூன்று நாட்களுக்குத்தான் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. ""நிலைமை சரியான பிறகு, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில்கூட வேலை செய்து இந்த இழப்பை ஈடு செய்து கொள்ளலாம்'' என அந்நிறுவன முதலாளிகள் தொழிலாளர்களுக்கு நிலைமையைப் புரிய வைக்கிறார்களாம்.

 

கேரள மாநிலத்தின் பொருளாதாரமே மிளகு, ரப்பர் போன்ற வர்த்தகப் பயிர்களின் ஏற்றுமதியையும், அரபு நாடுகளில் வேலை பார்க்கும் கேரளத் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கும் அந்நியச் செலாவணியையும்தான் நம்பியிருக்கிறது. இப்பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள்கூட இறக்குமதிக்குப் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. ஆனால், மன்மோகன் சிங் கும்பலோ விவசாய விளைபொருட்களின் இறக்குமதிக்குத் தற்காலிகத் தடைகூட விதிக்க மறுத்து வருவதால், கேரளாவின் வர்த்தகப் பயிர் விவசாயம் முற்றிலுமாக நிலைகுலைந்து போய்விட்டது.

 

இந்த ஆண்டு இறுதிக்குள் துபாய் போன்ற அரபு நாடுகளில் வேலைபார்க்கும் கேரளத் தொழிலாளர்களுள் 2 இலட்சம் பேர் வேலையிழந்து இந்தியாவிற்குத் திரும்பிவிடுவார்கள் என அம்மாநில அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இப்படித் திரும்பும் தொழிலாளர்களுக்கு உள்ளூரில் வேலை கிடைக்காது என்பது ஒருபுறமிருக்க, வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பொருட்டு வாங்கியிருந்த கடனையும் அடைக்க முடியாமல் அவர்கள் சிக்கிக் கொள்வார்கள். கேரளாவின் முக்கியமான இந்த இரண்டு வருவாய்களும் அடிபட்டுப் போனதால், அம்மாநிலத்தின் வீட்டு மனை வியாபாரம் ""ஃப்யூஸ் போன பல்பு'' போலாகிவிட்டது.

 

தாராளமயத்தின் பின் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியை ""வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி'' என்றுதான் பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ஏற்கெனவே, விவசாயம் சீரழிந்துவிட்ட நிலையில், புதிய வேலைவாசூப்புகள் உருவாக்கப்படாத நிலையில் இந்த நெருக்கடி இந்தியாவைத் தாக்கியிருக்கிறது என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது. இதனால் இந்த நெருக்கடி கிராமப்புற விவசாயிகள் மீதும், கிராமங்களிலிருந்து வேலை தேடி நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள கூலித் தொழிலாளர்கள் மீதும் ஏற்படுத்திவரும் தாக்கம் நினைத்துப் பார்ப்பதற்கே அச்சமூட்டுவதாக இருக்கிறது.

 

ஆளும் காங்கிரசு கூட்டணியிலுள்ள கட்சிகளோ பொருளாதார நெருக்கடி இருப்பதாகவே ஒப்புக் கொள்ள மறுக்கின்றன. போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ சடங்குத்தனமான எதிர்ப்புகளுக்கும், வாய்ச்சவடால்களுக்கும் மேல் எதுவும் செய்யாமல் ஒதுங்கிக் கொள்கின்றன. இது, நெருக்கடியின் சுமைகளை மேலும் மேலும் மக்கள் மீது சுமத்தும் துணிவை அரசுக்கும், முதலாளிகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

 

ஓட்டுக்கட்சிகள், அவற்றின் தொழிற்சங்கங்கள், தேர்தல் என்ற வழமையான வழியில் இந்த நெருக்கடிக்குத் தீர்வு கண்டுவிட முடியுமா? அல்லது தனியார்மயம் தாராளமயத்திற்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் திரண்டு தெருப் போராட்டங்களில் இறங்கப் போகிறோமா? இதுதான் இப்போது இந்திய மக்களின் முன்னுள்ள கேள்வி.

 

செல்வம்