"யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும் வாய்மையின் நல்ல பிற."-குறள்:300.


"துரோகமிழைக்காது போராடி மரணிக்கும் புலிகள்..."- இரயாகரன்.


அப்போ, எது துரோகம் எனும் கேள்வி அசியமாகிறது.

 


"எது துரோகம்" எனும் இக்கேள்வி குறித்து நீண்ட ஆய்வு அவசியமாகிறதா?


அதையும் நாம் செய்யத் தயாராகவே இருக்கின்றோம்.


புலிகளைத் தூக்கி நிறுத்தப் புரட்சிப் பரப்புரை எனக்கு அவசியமில்லை!


எனவே,புலிகளது பாத்திரம் என்னவென்பதைத் தொடர்ந்து கால் நூற்றாண்டாக நாம் குறித்துரைத்துள்ளோம்.


ஈழப்போராட்டம் என்பது அழிவு அரசியலின் விபரீத விளையாட்டாகும்.அது,இதுவரைத் தேசியவிடுதலைப் போராட்டமென்றும்,தடுப்பு யுத்தமென்றும் பற்பல மொழிகளுடாகப் பரப்புரைக்குள்ளாகியது.எனினும்,இவ் யுத்தம் மொத்தத்தில் சமூகவிரோதமானதென்று வரலாறு இன்றுரைக்கும்போது,இராயாகரன் அதற்குத் தார்மீக நியாயங் கற்பிக்கின்றாரா?


புலிகள் தமிழ் மக்களது குழந்தைகளைப் களப்பலிகொடுத்துத் தலைவரைக் காப்பது தியாகமென உரைக்க, இரயா எமக்குத் தேவையில்லை!


அதைப் புலிகளே சொல்லப் போதும்.

அவர்களது ஊடகங்களே சொல்லப்போதும்.


எனினும்,இலங்கை தழுவிய புதியஜனநாயகப் புரட்சிபேசும் தோழரிடம் இப்படியான ஊசலாட்டம் எங்ஙனம் தோன்றுகிறது."இங்கேயும்,அங்கேயும்" ஊசலாடுவதாக என்னைச் சொன்னவர்கள் சொன்னவர்கள்,இப்போது தமது தரப்பு நியாயத்தைப் புலிகளது அழிவு யுத்தத்தினூடாக வரையறுப்பதுதாம் கொடுமை!

 

புலிகள் செய்த யுத்தமானது சாரம்சத்தில் தேசியவிடுதலைப்போராட்டமோ அன்றித் தடுப்பு யுத்தமோ இல்லை.மாறாக,யாழ்ப்பாண மேட்டுக் குடிகளின் அழிவு அரசியல் நடாத்தையின் நேரடி விளைவாகத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட யுத்தமாகும் இஃது!


இது,மக்கள் போராட்டத்துக்கு எதிரான தமிழ் ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான நடாத்தை.இதைத் தகவமைத்துக்கொடுத்த தமிழ் ஆளும்வர்க்கத்தினது அந்நிய எஜமானர்கள் இலங்கையின் புரட்சிக்கு எதிரான அழிப்பு-அழிவு யுத்தத்தைத் தமிழர்களது இன பிரச்சனையூடாகக்கட்டியமைத்துக் கொலைகளை நடாத்தி முடித்தார்கள்.இங்கே,இதே தொடர்கதையோடு தொடர்ந்து மக்களைப் பலிகொடுக்கும் நாசகார யுத்தம்,அதைச் செய்து வந்த புலிகளையே வேட்டையாடும்போது, புலிகள் தமது தலைமையைக்காப்பதற்காக அப்பாவி மக்களது குழந்தைகளைக் கட்டாயமாகப் பிடித்துச் சென்று இதுவரை பலியாக்குவது தியாகமாக இருக்க முடியுமா?

 

இது கேள்வி,நாம் மனசாட்சியோடு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள்.

ஏனெனில், நாம் இலட்சம் உயிர்களோடு விளையாடியவர்கள்;


அவர்களது அளப்பரிய வாழும் ஆசையைக் குழிதோண்டிப் புதைத்தவர்கள்.


இதை மறக்காது-எந்த வகைத் தத்துவங்களுக்குள்ளும் திணித்துப் புரட்டாது,நியாயமாக நெஞ்சைத்தொட்டுப் பதிலளிக்க வேண்டும்.இப்பதில் புலிகளைத் தியாகிகளாவும் மாற்றுக் குழுக்களைத் துரோகிகளாக்கவும் எமக்கு இரயா அவசியமே இல்லை.இது,துணிந்த முடிவு!


புலித் தலைமை சமூகக் குற்றவாளிகள்.


அவர்கள், தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல முழு இலங்கை உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரானவர்கள்.


புரட்சியைக் காட்டிக்கொடுத்த அந்நிய கைக்கூலிகள்.


இவாகள், போதாதற்கு எமது மக்களின் பாலகர்களை போலிக் கோசத்தின் வாயிலாகக் காயடித்தும், கடத்தியும் அழிவு யுத்தத்துக்கு அனுப்பிக் கொன்று குவித்தவர்கள்.இவர்களது இறுதிவரையான இந்த அழிவுப் போராட்டம் தியாகமெனும் போர்வையில் துரோகத்தை மறைக்கும் அழிவு அரசியல்.இது,கைக்கூலி அரசியல்-காட்டிக்கொடுக்கும் அரசியல்.கயவர்களின் கூட்டோடு நடாத்தப்படும் துரோக யுத்தம்.இது,சொந்த இனத்தையே கருவறுத்த அந்நியச் சகத்திகளுக்கு உடைந்தையான தமிழின விரோதிகளது அழிவு அரசியலின் விளைவு.
 

புலிகள் தமது தவறான வரலாற்றுப்பாத்திரத்துக்கு இப்போது தியாகங் கற்பிக்கத் தோழர் இரயாவைப் பயன்படுத்துகிறார்களாவென நாம் ஐயுற வைக்கும் கட்டுரையை அவர் புலிகளைத் தலைவணங்கிச் செய்கிறார்-எழுதுகிறார்.இதில், எங்கே தோழர் மக்கள் நலம் இருக்கு?


எஞ்சியுள்ள போராளிகளைத் தப்பவைக்காது, அவர்களை இறுவதிவரைக் கொலைக்கு அனுப்பும் புலித்தலைமைக்கு என்ன கொள்கை-இலட்சியும் உண்டு?


இந்த இலட்சியம் குறித்து நாம் அவர்கள் வாயால் கேட்பதை இனித் தோழர் இரயா வாயிலாகக் கேட்க முடியுமா?


புரட்சிகரச் சக்திகள் நமக்குள் வரலாற்று மோசடிகளைச் செய்வது இன்னும் நம்பகத் தன்மையைக் கடாசி, அந்நியச் சக்திகளின் நோக்குக்குச் சார்பாகவே இருக்கிறது.


பாவம் இலங்கைத் தமிழ் மக்கள்!


அவர்கள் தமது கரங்களை நம்பிக்கொள்ள முடியாதளவுக்கு அதிகாரத்தின் தொங்குசதைகள் மக்களை இன்னும் மொட்டையடிக்கும் பாத்திரத்தை எடுக்கின்றார்கள். இஃது,ஏனிங்ஙனம் நடந்தேறுகிறது?

 

"தமிழீழம்"எனும் பொய்க்கோசத்தை தமிழ் மக்களுக்குள் கட்டாயமாகத் திணித்தும்,அவ் மக்களது சமூகவுளவியலாக்கி அதையே அரசியல் முன்னெடுப்பாகச் செய்த புலிகள், இதுவரை ஒரு இலட்சம் மக்களைப் பலிகொடுத்துள்ளார்கள்.பல இலட்சம் கோடிச் சொத்துக்களையும்,பாரம்பரியமாக வாழ்ந்த பூமியையும்விட்டுத் தமிழ்பேசும் மக்கள் நாடோடிகளாகியிருப்பதற்கும் இவ்வீழப்போராட்டமே காரணமானது.ஈழமென்பது சாத்தியமற்றதென்று தெரிந்தும் அதைத் தமது இருப்புக்காக உசுப்பேத்தி இதுவரை ஏழைமக்களின் குழந்தைகளைப் பலியாக்கிய புலிகள் துரோகிகளா இல்லைத் தியாகிகளா?


தமிழ்ச் சமுதாயத்தில் வாழ்ந்த அனைத்துப் புத்திஜீவிகளையும் அந்நியச் சக்திகளுக்காகத் துரோகிகளெனக் கொன்று குவித்த புலிகள் துரோகிகளா அல்லது தியாகிகளா?


மாற்றியக்கங்களைத் தமது எஜமானர்களது வேண்டுகோளுக்கிணங்கவும் தம்மைத் தாமே நிலைநிறுத்தவும்,புரட்சியைக் காட்டிக்கொடுக்கவும் அவ்வமைப்புகளைக் கொன்றழித்துத் தமிழ்பேசும் மக்களைப் பலவீனப்படுத்திய புலிகள் துரோகிகளா அல்லது தியாகிகளா?

 

ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக:இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிக்கத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்கள் தமிழ்த் தேசியத்தின் வாயிலாகப் புரட்சிபேசக் கற்றுக்கொண்டவர்கள்.ஈழஞ்சாத்தியமெனப் புரிந்துகொண்டவர்கள்.முழு இலங்கைக்குமான புரட்சியை நிராகரித்தவர்கள்.சோசஷலித் தமிழீழம் சார்ந்த கருத்தியல் தளம் உருவாக்கிவிடும் "மனத்தளத்திலிருந்து" நோக்கின் இது மிக நேர்த்தியவுணரத்தக்க ஆரம்பப் படிமங்களை உள்ளடக்கியதாக, அந்த மனிதத் "தனித்தன்மையை" நாம் அறிவது சுலபம்.


எங்கிருந்தோ ஆட்டுவிக்கும் சூத்திரதாரியைப் பற்றியும்,அந்தச் சூத்திரதாரியை உலகத்தின் முதல் தர எதிரியாகக் கண்டு,அதை எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடத்தும் அமைப்புகளே,அந்தச் சூத்திரதாரியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், போலித் தேசியம் பேசி மக்களைப் பலியிடும் ஆளும் வர்கத்தின் கயமைக்கும்-உள் நோக்குக்கும் உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன?நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.மாறாக, அவர்களையின்னும் அந்நியப்படுத்தி,புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது


மனித சமூகத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனூடாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே, நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.இஃதே புலிகளுக்குத் தியாகிப்பட்டம் கொடுக்க அழிவு யுத்தத்துக்கு இலட்சியம் கற்பிக்கிறது!


சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்தே!சமீப காலமாகச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலைகீழாக்கிவிட்டு வாழ்வது-புலிகளை ஆதரித்துக்கொண்டு புரட்சி பேசுவது,கயிறு திரிப்பது நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.


இது, பல புரட்சிகர அமைப்புகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.இவர்களை நாம் ஓடுகாலியென்று கூவிக்கொண்டோமேயொழிய அதன் தர்க்கமான இயக்கப்பாட்டைக் கணிப்பதில் தவறிழைத்து வந்திருக்கிறோம்.தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்பு, மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக மனிதர்களின் அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது, ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.அல்லது இலட்சியம்-தியாகமெனத் தனக்குத் தானே தீர்ப்புக் கூறுகிறது!


யுத்த பூமியான இலங்கையைவிட்டுப் புலம்பெயர்ந்து வாழும் மண்ணில் உதிரிகளாக வாழ்ந்துவரும் சூழலில்,பௌதிக மற்றும் மனோபாவ அடிப்படைக் கட்டுமானம் சிதிலமடைந்தவொரு வெளியில் உருவாகும் மனிதர் எத்தனை கருத்துக்களை, உண்மையைச் சொன்னாலும் அதை உள்வாங்கி ஒப்பீடு செய்து, ஆய்ந்தறியும் மனத்தைக் கொண்டிருப்பதில்லை.இதை நாம் தெளிவாகப் புலம்பெயர் தமிழ்ச் சமுதாயத்திடம் உணரமுடியும்.

 

இந்தச் சமூகத்தின் அண்ணளவான தனித் தன்மையானது தொங்குநிலையானது.அதாவது ஒரு அதீத மனிதருக்கு விசுவாசமாக அல்லது அவரைக் கடவுளாக ஏற்கும் மனநிலைக்குள் கட்டுண்டுகிடப்பதாகும்.தனிநபர்கள், இயக்கவாத மாயையில் கட்டுண்டு இத்தகைய தன்னார்வச் செயற்பாட்டைத் "தியாகம்-இலட்சியம்"என்றும் மறுமுனையைத் "துரோகம்"என்ற அடைமொழியில் நிறுவிக்கொள்கிறார்கள்.இங்கே, புலிகள் கூறும் அல்லது செய்யும் அரசியல், தமிழ் மக்களுக்குள் அவற்றியாவதற்கான நிலைமைகள் இங்ஙனமே கட்டப்படுகின்றன.இதுவே, யுத்தத்தைச் சொல்லியே முழுமொத்த மக்களையும் ஒட்ட மொட்டையடிக்கும் சூழலுக்கும் ஒரு வகையான உள ஒப்புதலை அவர்களுக்கு மறைமுகமாக அங்கீகரித்திருக்கிறது.கூடவே,இறுதிவரை போராடி இலட்சியத்தோடு சாகச் சொல்கிறது.இது,மக்களது குழந்தைகளை யுத்த ஜந்திரத்துக்கு ஒரு உப பொருளாக மனித இருத்தலைக் கீழ்மைப்படுத்துகிறது!இதற்கு முலாம் பூச போராட்டமே வாழ்வெனப் புரட்சி பேசவும் தலைப்படுகிறது.


புலிகளின் அதீத அரசியற் குழு வாதமானது ஒற்றைத் துருவ இயக்கமாக அதை வளர்த்தெடுத்தபோது,இதை நிலைப்படுத்திய அதன் அரசியல் தலைமையானது தமிழ் மக்கள் நலனைத் துவசம் செய்வதில் முனைப்புறும் இன்னொரு பகுதியைத் தோற்றுவிக்கும் இயக்கப்பாட்டை அந்நியச் சக்திகள் உருவாக்குவதை மிக நேர்த்தியாக இனம் கண்டு, அவர்களைத் "துரோகிகள்"எனச்சொல்லித் தம்மைத் தியாகிகளாக்கித் தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடிப்பதில் "தமிழீழப் போராடம்"செய்துகொண்டார்கள்.


துரத்தியடிக்கப்பட்ட ஈழப்போராட்டக் குழுக்களைத் துரோகியாக்கிய அரசியற் பரப்புரைகளைப் புலிகள் உருவாக்கிக்கொண்ட சூழலை மிகவும் கவனமாக அவர்கள் மறுத்தொதுக்குவதும், அதன் நீட்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாசிசக் கொலைகளும் இதனூடாக வலுப்பெற்ற புலியெதிர்ப்பு முகாமும் தமிழரின் சுயநிர்ணயவுரிமையைக் களைந்தெறிவதற்கானவொரு சதிவலையை கருத்தியல் தளத்தில் மெல்லவுருவாக்கிக்கொண்டுள்ளது.இதன் உச்சபட்ச நீட்சியே மாற்றுக்குழுக்களை ஒட்டுக் குழுக்களெனும் சதியுடைய மொழிவாகும்.இன்றிவர்கள் மக்களுக்குத் தம்மைத் தவிர வேறெவரும் காப்பர்களாகமுடியதென்ற கதையாகப் பரப்புரையிட்டுக்கொள்கிறார்கள்-தாம் செய்யும் யுத்தம் இலட்சியத்துக்கானதென்றும் அதுவே,தியாமென்றும் எதிரியிடம் சரணடைவது துரோகமென்றும் கருத்துக்கட்டி, முழுமொத்தப் போராளிகளையும் சாவின் விளிம்பில் நிறுத்தியுள்ளார்கள்.


அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் புரட்சி-விடுதலை, ஜனநாயகம் பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.இவைகளே இலட்சம் மக்களை அந்நியச் சக்திகளுக்காகப் படுகொலை செய்த அழிவு அரசியலை முன்னெடுப்பவர்கள்.


மக்களின் உயிரோடு-வாழ்வோடு விளையாடிய இந்தப் போர்கள் ஏதோவொரு கட்டத்தில் அந்த மக்களின் நலன்களைக் காப்பதற்கான போராக உருமாற்றம் கொள்ளும்போது,சிங்கள-தமிழ் தேசிய வாதத்தின் மிகக் குறுகலான உணர்வு சிங்கள-தமிழ் யுத்தக் களமுனையின் உச்சத்தைத் தத்தமது வெற்றியின் அடையாளமாகவும்,உரிமையின் வெற்றியாகவும் பார்க்கத் தக்க மனநிலையை உருவாக்கும் காரியத்தை இந்த "ஈழப்போராட்டம்"செய்து முடித்தது.அதைக் குத்தகைக்கு எடுத்த புலிகள் இதுவரை பலியாக்கும் போராளிகள், தியாகிகளாகவும்,இலட்சியவாதிகளாகவும் உருவாக்கங் கொள்ளும் அரசியல் இங்ஙனமே நடந்தேறுகிறது.இது,மறுதளத்தைத் துரோகமென வர்ணிக்கும் செயலே இன்றைய புலிவழித் தேசியத்தின் மறுவுருவாக்கமாக மாறும் அபாயம் நமக்குள் அரும்புகிறது!


ப.வி.ஸ்ரீரங்கன்
07.04.2009

 

துரோகமிழைக்காது போராடி மரணிக்கும் புலிகளின் நிலை மதிப்புக்குரியது

 

அரசுடன் ஒட்டுண்ணியாக இருந்து பிழைக்கும் பிழைப்புவாத துரோகிகளை விட, புலிகள் மேலானவர்கள்;. தமிழ்மக்களை கூட்டம் கூட்டமாக கொல்லும் பேரினவாத அரசை நக்கும் ஓட்டுண்ணிகளை விட, தமிழ்மக்களைக் கொன்றபடி மரணிக்கும் புலிகள் மேலானவர்கள். ஒப்பீட்டில் மட்டுமல்ல, தமிழ்மக்களுக்கு புதிய துரோகியாக மாறாது, தாம் கட்டியமைத்த ஒரு இலட்சியத்துக்காக மரணிப்பதும் மேலானது.

 

மனித வரலாறு தொடர்ச்சியான துரோகத்துக்கு பதில், தவறான ஆனால் வீரம்செறிந்த போராட்டத்தை தன் வரலாறாக பதிவு செய்கின்றது. எம் வரலாறு சரணடையாத, துரோகமிழைக்காத ஒரு போராட்ட மரபை கற்றுக்கொள்ளும் வகையில், புலிகள் மரணங்கள் தன் தவறுகள் ஊடாக எமக்கு விட்டுச்செல்ல முனைகின்றது.


இந்த வகையில் துரோகிகளின் வழியை, புலிகள் தம் அரசியல் பாதையாக தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக அவர்கள் போராடி மடிகின்றனர். எந்தத் துரோகியை விடவும், எந்த எட்டப்பர் கூட்டத்தை விடவும், புலித்தலைவர்கள் தம் தவறுகள் ஊடாக வானளவுக்கு உயர்ந்துதான் நிற்கின்றார்கள். கிடைக்காத சந்தர்ப்பம், சூழல் என எது எப்படி இருந்த போதும், அவை தவறுகளை அடிப்படையாக கொண்டு, போராடி மடியும் வரலாற்றை இந்த உலகுக்கு விட்டுச் செல்லுகின்றனர்.


புலிகள் அரசுடன் கூடி நிற்கும் துரோகிகள் போல் துரோகமிழைத்து, அரசுடன் கூடி நிற்க மறுப்பது, இங்கு மதிப்புக்குரியது. இங்கு அவர்கள் துரோகிகளுக்கு மேலாக, உயர்ந்து நிற்கின்றனர்.

 

அன்று புலிகள் இயக்கங்களை அழித்தபோது, அதன் தலைவர்கள் அரசுடன் சேர்ந்து துரோகிகளானார்கள். புலியைப்போல் தம் இலட்சியத்துக்காக போராடி மடியவில்லை. அவர்கள் துரோகம் தான், தீர்வு என்றனர். இன்று புலியை அழிக்கும் அரசு, புலியை துரோகிகள் போல் சரணடையக் கோருகின்றனர். ஆனால் இதை மீறி அவர்கள் துரோகிகள் போல் அல்லாது போராடி மடிகின்றனர். இதில் உள்ள வீரம், நேர்மை எங்கே! துரோகிகளின் கோழைத்தனமும் நேர்மையற்றதனமும் எங்கே!!

 

தமிழ்மக்களின் எதிரியை புலிகள் எதிர்த்து நின்று மடிகின்றனர். ஆனால் துரோகிகள் தமிழ் மக்களின் எதிரியின், செல்லப்பிள்ளையாக மாறி எட்டப்பர் வேலை செய்கின்றனர். ஓரு வரலாற்று போக்கில் புலிகள் அரசுடன் சேர்ந்து துரோகமிழைக்காது, தாம் கொண்டிருந்த கொள்கைக்காக போராடி மடிகின்றனர். நாம் எதிரியை முன்னிறுத்தி, இதை சரியாக மதிப்பிட வேண்டிய காலத்தில் உள்ளோம். தமிழினத்தின் துரோகிகளை இனம் காணவேண்டிய, காட்ட வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வரலாறு புலிகளின் மாபெரும் தவறுகளுக்குள், இதை மிகச் சரியாகவே வழிநடத்தியுள்ளது.


புலிகள் தமிழ்மக்களின் போராட்டத்தைச் சிதைத்து, தமிழ்மக்களுக்கு இழைத்த தவறுகள் வரலாற்றில் மன்னிக்க முடியாதவை. பாசிச வழிகளில் தமிழ் மக்களை ஓடுக்கி, தம்மைத்தாம் தனிமைப்படுத்தி, தற்கொலைக்குரிய வகையில் தம் போராட்டத்தை அழித்தனர். பாரிய உயிர்ச்சேதத்தை, பாரிய பொருட்சேதத்தை தமிழ்மக்கள் மேல் சுமத்தியதுடன், தமிழ்மக்களை ஒடுக்கினர். மொத்தத்தில் ஒரு போராட்டதையே அழித்தனர்.

 

இந்தப் பாரிய தவறுகளுக்கு மத்தியில், துரோகத்தை தம் அரசியல் வழியாக அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. சரணடைவுக்கு பதில், போராடி மரணிக்கும் பாதையையே அவர்கள் தேர்ந்தெடுத்தனர். இவை எந்தத் துரோகியையும் விட, மேலானதும் மகத்தான வீரம்செறிந்த செயலமாகும்.
போராடி மடியும் வீரத்திலும் தியாகத்திலும், துரோமிழைக்காத நிலைப்பாட்டிலும், ஒரு நேர்மை உண்டு. அரசுசார்பு நிலையெடுத்து நக்கும் புலியெதிர்ப்;பு கும்பலிடம் இருக்காத ஓன்று அது. அதற்கு நாம் தலைவணங்குகின்றோம்.

 

பி.இரயாகரன்
06.04.2009