அரசுடன் ஒட்டுண்ணியாக இருந்து பிழைக்கும் பிழைப்புவாத துரோகிகளை விட, புலிகள் மேலானவர்கள்;. தமிழ்மக்களை கூட்டம் கூட்டமாக கொல்லும் பேரினவாத அரசை நக்கும் ஓட்டுண்ணிகளை விட, தமிழ்மக்களைக் கொன்றபடி மரணிக்கும் புலிகள் மேலானவர்கள். ஒப்பீட்டில் மட்டுமல்ல, தமிழ்மக்களுக்கு புதிய துரோகியாக மாறாது, தாம் கட்டியமைத்த ஒரு இலட்சியத்துக்காக மரணிப்பதும் மேலானது.

மனித வரலாறு தொடர்ச்சியான துரோகத்துக்கு பதில், தவறான ஆனால் வீரம்செறிந்த போராட்டத்தை தன் வரலாறாக பதிவு செய்கின்றது. எம் வரலாறு சரணடையாத, துரோகமிழைக்காத ஒரு போராட்ட மரபை கற்றுக்கொள்ளும் வகையில், புலிகள் மரணங்கள் தன் தவறுகள் ஊடாக எமக்கு விட்டுச்செல்ல முனைகின்றது.

 

இந்த வகையில் துரோகிகளின் வழியை, புலிகள் தம் அரசியல் பாதையாக தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக அவர்கள் போராடி மடிகின்றனர். எந்தத் துரோகியை விடவும், எந்த எட்டப்பர் கூட்டத்தை விடவும், புலித்தலைவர்கள் தம் தவறுகள் ஊடாக வானளவுக்கு உயர்ந்துதான் நிற்கின்றார்கள். கிடைக்காத சந்தர்ப்பம், சூழல் என எது எப்படி இருந்த போதும், அவை தவறுகளை அடிப்படையாக கொண்டு, போராடி மடியும் வரலாற்றை இந்த உலகுக்கு விட்டுச் செல்லுகின்றனர். 

 

புலிகள் அரசுடன் கூடி நிற்கும் துரோகிகள் போல் துரோகமிழைத்து, அரசுடன் கூடி நிற்க மறுப்பது, இங்கு மதிப்புக்குரியது. இங்கு அவர்கள் துரோகிகளுக்கு மேலாக, உயர்ந்து நிற்கின்றனர்.

 

அன்று புலிகள் இயக்கங்களை அழித்தபோது, அதன் தலைவர்கள் அரசுடன் சேர்ந்து துரோகிகளானார்கள். புலியைப்போல் தம் இலட்சியத்துக்காக போராடி மடியவில்லை. அவர்கள்  துரோகம் தான், தீர்வு என்றனர். இன்று புலியை அழிக்கும் அரசு, புலியை துரோகிகள் போல் சரணடையக் கோருகின்றனர். ஆனால் இதை மீறி அவர்கள் துரோகிகள் போல் அல்லாது போராடி மடிகின்றனர். இதில் உள்ள வீரம், நேர்மை எங்கே! துரோகிகளின் கோழைத்தனமும் நேர்மையற்றதனமும் எங்கே!!

 

தமிழ்மக்களின் எதிரியை புலிகள் எதிர்த்து நின்று மடிகின்றனர். ஆனால் துரோகிகள் தமிழ் மக்களின் எதிரியின், செல்லப்பிள்ளையாக மாறி எட்டப்பர் வேலை செய்கின்றனர். ஓரு வரலாற்று போக்கில் புலிகள் அரசுடன் சேர்ந்து துரோகமிழைக்காது, தாம் கொண்டிருந்த கொள்கைக்காக போராடி மடிகின்றனர். நாம் எதிரியை முன்னிறுத்தி, இதை சரியாக மதிப்பிட வேண்டிய காலத்தில் உள்ளோம். தமிழினத்தின் துரோகிகளை இனம் காணவேண்டிய, காட்ட வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வரலாறு புலிகளின் மாபெரும் தவறுகளுக்குள், இதை மிகச் சரியாகவே வழிநடத்தியுள்ளது. 

 

புலிகள் தமிழ்மக்களின் போராட்டத்தைச் சிதைத்து, தமிழ்மக்களுக்கு இழைத்த தவறுகள் வரலாற்றில் மன்னிக்க முடியாதவை. பாசிச வழிகளில் தமிழ் மக்களை ஓடுக்கி, தம்மைத்தாம் தனிமைப்படுத்தி, தற்கொலைக்குரிய வகையில் தம் போராட்டத்தை அழித்தனர். பாரிய உயிர்ச்சேதத்தை, பாரிய பொருட்சேதத்தை தமிழ்மக்கள் மேல் சுமத்தியதுடன், தமிழ்மக்களை ஒடுக்கினர். மொத்தத்தில் ஒரு போராட்டதையே அழித்தனர்.

 

இந்தப் பாரிய தவறுகளுக்கு மத்தியில், துரோகத்தை தம் அரசியல் வழியாக அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. சரணடைவுக்கு பதில், போராடி மரணிக்கும் பாதையையே அவர்கள் தேர்ந்தெடுத்தனர். இவை எந்தத் துரோகியையும் விட, மேலானதும் மகத்தான வீரம்செறிந்த செயலமாகும்.

 

போராடி மடியும் வீரத்திலும் தியாகத்திலும், துரோமிழைக்காத நிலைப்பாட்டிலும், ஒரு நேர்மை உண்டு. அரசுசார்பு நிலையெடுத்து நக்கும் புலியெதிர்ப்;பு கும்பலிடம் இருக்காத ஓன்று அது. அதற்கு நாம் தலைவணங்குகின்றோம். 

 

பி.இரயாகரன்

06.04.2009