புலிகளின் இறுதி யாத்திரை தொடங்கியுள்ளது. புலியெதிர்ப்பு கும்பலோ தன் துரோகத்துக்கு கிடைத்த வெற்றியாக இதை பறைசாற்றி, கொட்டு மேளமடித்தபடி கூத்தாடிக் கொக்கரிக்கின்றது. 

தமிழினத்தின் மேலான வரலாறு, இனி துரோகிகளின் ஆதிக்க வரலாறாகின்றது. புலியின் முடிவு, இப்படித் தான் வரலாறாகி எழுதப்படுகின்றது. தமிழ்மக்கள் மீண்டும், சுதந்திர மூச்சு விடமுடியாது. இதுவரை காலமும் புலிக்கு அடிமைகளாக இருந்தவர்கள், இனி துரோகிகளுக்கும் அரசுக்கும் அடிமையாக இருக்கவேண்டும். இதைத்தான், இனி எம் மக்கள் பெறப்போகின்றார்கள். 

 

அரசின் தயவில் அரசியல் பிழைப்பு நடத்துகின்ற எட்டப்பர் கும்பல், புலியின் அழிவில் அதிகாரத்தில் அமரவே துடியாகத் துடிக்கின்றது. அரசுடன் தொங்கி நிற்கும் தமிழ் துரோகக் கும்பலின் வரலாறு, தமிழினத்தை இனி ஓடுக்கும் வரலாறாக மாறுகின்றது. 

 

கிடைக்கும் அதிகாரத்தை எப்படி சுவைப்பது என்ற பேரங்கள், குத்துவெட்டுகள், ஆய்வுகள், ஆட்களையே போட்டுத் தள்ளுதல் என்று, இவை தமிழ் மக்களின் பெயரில் தொடருகின்றது. புலியெதிர்ப்;பு இணையங்கள், வானொலிகள், முகம்தெரியாத புலியெதிர்ப்பு பினாமிகள் எல்லாம், மனித அவலத்தில் கூத்தாடுகின்றனர். கிழக்கிசம், தலித்தியம்…ஜனநாயகம் என்று ஆளுக்கொரு கொப்பில் தொங்கிக்கொண்டு, அரசு போடும் எலும்புக்காக அலையும் நாய்கள் எல்லாம், இன்று கூழையடித்து கும்மியடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

 

மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு அல்லாதவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சந்தர்ப்பவாதக் கும்பல், இந்த எட்டப்பர் கும்பலுடன் கூடிக் கூத்தாடுகின்றனர். இப்படி அனைவரும் தமிழ் மக்கள் மேல் சவாரி செய்யத் தொடங்குகின்றனர். மக்களுக்காக ஒரு மக்கள் அரசியலை முன்வைக்க வக்கற்ற போக்கில், அனைவரும் ஓரேவிதமாகவே இந்த துரோக வரலாற்றில் பங்காற்றுகின்றனர்.  

 

கடந்த புலிகளின் வரலாற்றுக்கு நிகராகவே, எட்டப்பர்கள் வரலாறும் மக்களுக்கு எதிராகவே நீடிக்கும். மக்களைப் பிளந்து போடுவதும், பிரித்தாள்வதும், பேரங்களை எலும்பாக்கி நக்கவைப்பதும் தான், இவர்கள் மக்களுக்கு வழிகாட்டும் ஓரேயொரு அரசியல் வழியாகவுள்ளது. அதாவது எட்டப்பர்களின் சொந்த அரசியலாக உள்ளது.

 

இப்படி இன்று புலியல்லாத அரசியல் களம், எட்டப்பர்களின் அரசியல் களமாக மாறியுள்ளது. இதற்கு எதிரான எந்த போராட்டமுமற்ற சூனியத்தில்தான், மற்றவர்கள் தம் சொந்த அரசியலை நடத்த முனைகின்றனர். தம் சந்தர்ப்பவாதத்துக்கு ஏற்ப, எட்டப்பர்களுடன் கூடிக் குலாவி அரசியலை நடத்துகின்றனர். இன்றைய எதார்த்தத்தில் இதற்கு வெளியில் யாரும் மக்கள் அரசியலை தெளிவாக முன்வைக்கவில்லை. 

 

தொடர்ந்தும் மக்கள் சுரண்டப்படுவதும், சமூக ஓடுக்குமுறைக்கு உள்ளாவதும் தான், தமிழ்மக்களுக்கு கிடைக்கும் தீர்வு. இதைத்தான் இந்த எட்டப்பர்கள் பாதுகாக்க முனைவதுடன், அதுவே அவர்களின் முதன்மையான மைய அரசியலுமாகும்;. இதை மூடிமறைக்கவே, பேரம்; பேசுவதையும், எலும்பைப் பெறுவதைபற்றிய கனவுகளை விதைப்பதும், இதுவே சமூக ஓடுக்குமுறைகளுக்கு உரிய தீர்வாகவும் காட்ட முனைகின்றனர்.

 

இன்று இலங்கை அரசுடன் கூடிக் குலவும் கூலிக் குழுக்கள் முதல் புலம்பெயர் புலியெதிர்ப்புக் கும்பல் வரை, தமிழினத்தை கூறாக்கி விற்க முனைகின்ற எட்டப்பர்களாக மாறி களத்தில் நிற்கின்றனர். மக்களைக் கொன்று தமிழ் மக்களை மீட்கும் அரசுடன் கூடி, புலிக்கு பாடை கட்டுகின்றனர். நடக்கும் புலிகளின் இறுதி ஊர்வலத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்து, இன்று சங்கூதவும் தொடங்கிவிட்டனர்.   

 

இந்த நிலையில் தம்மை மூடிமறைத்த படி சந்தர்ப்பவாத நிலையெடுத்து உள்ளவர்கள் தான், மிக ஆபத்தான பேர்வழிகள். தமிழ் மக்களுக்கு குழிபறிக்கும் எட்டப்பர்களை எதிர்த்துப் போராடாத, அரசியலற்ற அரசியல் வேஷதாரிகள் இவர்கள். இன்று இதை முதலில் இனம் காண்பதன் மூலம் தான், குறைந்தபட்சமாக மக்களுக்காக குரல்கொடுக்க முடியும்.  


 
பி.இரயாகரன்
06.04.2009