இன்று தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக பல கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. பாராளுமன்றத்தின் ஊடாகவே தமிழ் மக்களுக்கு தீர்வு சாத்தியம் என்று ஒரு பகுதியினர் வாதிட்டு வருகின்றனர். இதற்கு இவர்கள் புலிகள் பலவீனப்பட்டு விட்டதையும் இதனால் அரசியல் தீர்வைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்றும் - இவர்கள் வாதிட்டு வருகின்றனர்.

 

ஒர் ஆயுத ரீதியான போராட்டம் ஒர் இராணுவத் தீர்வுக்கானது என்றும் இதற்கு எந்த அரசியலும் கிடையாது என்றும் ஒரு துப்பாக்கியில் இருந்து வெடிக்கும் குண்டு ஒர் அரசியலின் அதிகார மொழி என்பதையும் மறுத்துரைக்கும் ஒரு தலைமறைவான பிரச்சாரம் என்பதை இவர்கள் வசதியாக மறைத்து விடப் பார்க்கிறார்கள்.

 

இன்று இனப்பிரச்சனை இலங்கை அரசியலில் புரையோடிய பிரச்சனையாக உள்ளதாவும் அரசியல் வாதிகளின் கடந்தகால தவறுகளாகவே இவைகள் உருவாகி விட்டதாகவும் இவர்கள் கருதுகின்றனர். அதாவது பாராளுமன்றத்தில் இவர்கள் சரிவர நடந்து கொள்ளாததே இதன் மூலகாரணம் என்பதே இவர்களின் முடிந்த முடிவாகும். அதாவது இவர்களின் கருத்துப்படி இப்பிரச்சனைக்கான தீர்வு ஒன்றில் நல்ல அரசியல் வாதிகள் இப்பிரச்சினையை பாராளுமன்றத்துக்குள் முன்னெடுப்பது இது சரிவராது போவதால் இனப்பிரச்சினை பாராளுமன்றத்திற்குள் இருந்துதான் உருவாகி வருவதாகவும் மறைமுகத் தோற்றத்தையும் உருவாக்கி விடுகின்றனர். (இவ்வாறு ஏகாதிபத்தியத்துக்கு கூழைக் கும்பிடு போடுகின்றனர்.) அவ்வாறானால் இதுவரை காலமும் இப்பிரச்சனை தீரமுடியாததற்கு இப் பாராளுமன்ற முறை காரணமில்லையா? அவ்வாறானால் இப்பாராளுமன்றத்தை என்ன செய்வது?

 

உண்மையில் இவர்கள் பிரச்சனைகளின் காரணத்துக்கான தலையை விட்டு விட்டு வாலைப் பிடித்து உலுப்புகின்றனர். பிரச்சினையின் தோற்றுவாயை அறிய மறுக்கின்றனர். பிரச்சனை எங்கே எவ்வாறு எதிலிருந்து தேர்ன்றுகின்றதோ அதிலிருந்தே தீர்வுகளைக் கண்டறிவதற்குப் பதில், தாம் விரும்பும் இடத்தில் இப்பிரச்சனையை வைத்திருக்கவும், தாம் விரும்பிய போக்கில் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் பிடிவாதம் பிடிக்கின்றனர். அதாவது இன்று இருக்கும் சமூக அமைப்பிலிருந்து உருவாகும் அனைத்து முரண்பாடுகளுக்குமான தீர்வுகாணும் இடமாக - பாராளுமன்றத்தை - இவர்கள் தெரிவு செய்வதே இதன் காரணமாகும். 

 

இவர்கள் சுற்றிச் சுழன்று எங்கே வருகின்றார்கள்? இன்று ஒரு நல்ல தலைவனால் - மகிந்தா - சனநாயகத்தையும் சமாதானத்தையும் கொண்டுவர இருப்பதால் இங்கே பிரச்சினை தீர்ந்து விடுமென்று, சுப்பற்றை கொல்லையை மீண்டும் காட்டுகின்றனர். 77ல் இருந்து, ஜே. ஆர் முதல் இன்றைய மகிந்தா வரை பாராளுமன்றத்துக்கு வந்தபோது இவர்கள் போன்றவர்கள் இந்தப் பல்லவியைத் தானே பாடினார்கள். ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் மீட்டெடுப்பதற்காக அசுரவேகத்தில் மகிந்தா இயங்கி வருவதாக இவர்கள் கூறிவருகின்றனர். பாராளுமன்ற சட்டவாதத்துக்குள் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம் என்றும் பழைய பஞ்சாங்கத்தில்  - சகுனப் பிழையாகக் - சிலவற்றைச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

 

சூழ்நிலை மாற்றங்கள், ஏகாதிபத்திய மூலதன சீரழிவுகளால் ஏற்பட்டு வரும் திருப்பங்கள் போன்றவைகள் இவ் அரசின் செயற் தந்திர வடிவங்களை மாற்றி வருகிறது. இருப்பினும்  அடிப்படையில் - அதிகாரப் பங்காகவே - சிறுபான்மை மக்களின் பிரச்சனையை இது மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

 

பாராளுமன்றத்துக்குள், ஒரு சனநாயக அடிப்படையில் தீர்க்க முடியுமென்ற இவர்களின் பங்கீட்டுப் பிரச்சினை, இனங்களின் விகிதாசார கணக்கின் அடிப்படையில் ஜனநாயகத்தை நிறுத்துப் பார்க்கின்ற வியாபாரமாக  வேண்டுமென்றால் இவர்களில் யாருக்காவது இது சரியாக இருந்து விட்டுப் போகட்டும்.

 

இங்கு சிறுபான்மை - பெரும்பான்மை என்பது, குடித்தொகை சம்மந்தமானதே ஒழிய, அது ஜனநாயகத்தோடு சம்மந்தப்பட்ட ஒரு விடயமல்ல. ஜனநாயகம் என்பது அனைத்து மக்களின் ஜீவாதார நலன்களை காத்து நிற்கிற ஒர் அரசுமுறை பற்றியதேயாகும். நெருக்கடி நிலைமைகளுக்குச் சாதக - பாதகமாக மாற்றப்படுகிற அரசின் எந்த நிலைமைகளின் கீழும், சிறுபான்மை - பெரும்பான்மைகளின் தலைகளை எண்ணிக் காட்டிவிடுகிற அதி புத்திசாலித்தனமான  எண்கணித முறையுமல்ல  ஜனநாயகம்.

 

சிங்களத் தரகு முதலாளித்துவ வர்க்கமும், தமிழ் தரகுமுதலாளித்துவ சக்திகளான - ஆளும் கும்பல்கள் - மனம் விட்டுப் பேசவும், ஆங்காங்கே கலந்துரையாடவும் ஏதுவாக உருவாக்கப்படுகிற நிலைமைகள் நாட்டில் சமாதானத்தை மீட்டெடுப்பதாக இவர்களால் காட்டப்படுகிறது. இந்த நாட்டிலே சாதாரண மக்களுக்கிடையே பகைகள் இருந்ததில்லை. சில்லறைத் தகராறுகளைத் தீர்ப்பதற்கு இவர்களின் சட்டங்கள் தான் இருக்கிறதே! அவ்வாறானால் புதிதாக சமாதானத்தை மீட்டெடுப்பது என்பது யாருக்கிடையில்?

 

எந்த ஆளும் வர்க்கங்கள் தமக்கிடையிலான - பாகப் பிரிவினைக்காக - இவைகளை இனங்களின் குரோதமாகக் காட்டி, தங்களின் வர்க்க இலாபங்களுக்காக மோதவிட்டார்களோ, அந்தக் கோபமும், பகையும் அரசின் மீதும் - ஆளும் வர்க்கங்களின் மீதுமானதே அன்றி, சாதாரண மக்களுக்கு இடையிலானதுமல்ல. இவர்கள் மீட்டெடுக்க நினைக்கும் சமாதானமும் இந்த வர்க்கத்தினருக்கு இடையிலானதே அன்றி அது மக்களுக்கானதுமல்ல. (எப்பொழுது தமிழ் தரகு முதலாளித்துவ வரக்;கம் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த போது, இக் கோரிக்கையைத் தடைசெய்ய 6வது திருத்தச் சட்டத்தை அரசு இயற்றியதோ. அன்றிலிருந்து இது தமிழ் தரகுமுதலாளித்துவ வர்க்கத்துக்கு ஒரு மனக் கசப்பான  நிலையை உருவாக்கியது.)

 


விருந்தும் மருந்தும்

 

இலங்கை அரசானது, இலங்கையின் ஒரு பகுதியில் இரத்தம் சிந்தும் அரசியலையும், ஏனைய பகுதிகளில் இரத்தம் சிந்தா யுத்தத்தையும் நடத்தி வருகிறது. இரத்தம் சிந்தும் யுத்தப் பிரதேசத்தில் மக்களை ஈவு இரக்கமற்ற முறையில் கொன்று தொலைக்கிறது. மறு பகுதியில் கொடிய அடக்குமுறைக்குள் திணித்து வைத்திருக்கிறது. எங்கும் மக்கள் குரல்காட்ட முடியாதபடி இராணுவ அடக்குமுறையின் கீழ் நவீன அடிமைகளாக ஆக்கியுள்ளது. யுத்தமும், யுத்தமற்ற அரசியலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பறா நிலையில், அரசின் சகல துறைகளும் இராணுவ அடக்குமுறையின் கீழும், அதன் பலத்த கண்காணிப்பின் கீழும் இவ்வரசு கொண்டுவந்துள்ளது.

 

யுத்தப் பிரதேசத்திலிருந்து தப்பிவரும் மக்களுக்கு, இராணுவ வேலிகள் கொண்ட - நலன்புரி நிலையங்கள்- போன்ற இடங்களுக்குள் அவர்களின் உடனடித் தேவைக்காக மருந்தும் விருந்தும் வழங்கி வருகிறது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இதை ஜனநாயக வடிவமாகக் காட்டுகின்ற இவ்வரசு, இதற்காக நாடுமுழுவதும் தான் கொண்டுவரும் மக்கள் விரோதமான இராணுவ மயமாக்கலை இதன் முன் நிபந்தனையாகவும் சனநாயகமாகவும் கூறி மூடிமறைக்கிறது.

 

ஏகாதிபத்தியத்தின் சட்டபூர்வமான தரகனாகவும், தரகு முதலாளித்துவ சட்டபூர்வமான ஒடுக்கு முறையாளனாகவும், சட்டபூர்வ கொலைகாரன்  - சுரண்டல் காரனாகவும், இந்தப் பாராளுமன்றத்தின் இந்த பிரதிநிதிகள்  தங்கள் ஓநாய் கண்ணீருக்காக அப்பாவி மக்களை இரத்த வேள்வியில் நனைய விடுவதுவும் பின்னர் அதனைக் காப்பதாக சனநாயகம் பேசுவதும் அதன் -பழக்கதோசம் - பிறவிக் குணம்.

 

புலிகள் கூட இதற்கு சளைத்தவர்களல்ல. இன்று நிலவுகின்ற பிற்போக்கு உற்பத்தி முறைகளின் குப்பைகளைத் தோண்டி எடுத்து, பழைய இனச் சமூகப் புண்களின் ஊனத்தை கீறி, தமிழ் மக்களின் கண்களில் பூசி வருகின்றனர். ஆண்ட பரம்பரை தொடங்கி, வணங்கா மண் வரை, இந்த நிலவுடமைச் சமூகத்தின் சாக்கடை நாற்றத்தை உடைத்து விடுகின்றனர். இந்தக் குறும் இனவாத துர்நாற்றத்தின் மூலம், தமிழ்தேசிய (இன) ப்பிரச்சினையின் உள்ளடக்கத்தை காணவிடாது மக்களைத் தடுக்கின்றனர். பொய்யும் பித்தலாட்டமுமாக இம் மக்களுக்கு இவர்கள் ஊட்டிவரும் இப்போலி இனப் பெருமைகள், சிங்களப் பெரும் தேசிய இனத்தோடும், இன, மத, சிறுபான்மை இனத்தோடும் விரோதமான மன உணர்வை வளர்ப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டனர். செயற்படுகின்றனர். இதனூடு தமது இனப்படு கொலைகளை, இனத்திமிர்களை தமிழ் மக்களிடமும் புலம் பெயர் தமிழரிடமும் நியாயப்படுத்த முற்பட்டனர். முற்படுகின்றனர். இவ் இனப்பெருமையின் உச்சக்கட்டம், இன்று தமிழ் மக்களையே - இப் பெருமையைக் காக்க - வன்னியில் யுத்தக்களத்தில் நிறுத்தி வைத்து புனித வேள்வி நடத்துகிறது. நடத்தியும் வருகிறது.

 

தமிழ் தேசிய விடுதலை, அல்லது பராளுமன்றத்துக்குள் - தேசிய (இன)ப்பிரச்சனைக்கான தீர்வு என்பது, ஏகாதிபத்திய எதிர்ப்பின் உயிரைக் கொண்டிருக்காத எல்லா வகையான கருத்தாடல்களும், நிலவுகின்ற சமூதாயத்தைப் பாதுகாக்கும் ஏகாதிபத்திய, நிலவுடமைச் சமூகத்தின் எச்சசொச்சங்களின் கழிவுகளே. இவர்களால் தேசிய (இன)ப்பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது வெறும் ஏமாற்றுப் பித்தலாட்டமே. ஏனெனில் இப்பிரச்சினையின் ஊற்று மூலமே, இச்சமூக அமைப்பும், அதை ஆளும் மூலதனமும் அதைப் பாதுகாக்கும் அரசியல் அதிகார அமைப்புமே ஆகும்.

 

புலிகளின் தொடர்ச்சியான இன விரோத - இனப்படுகொலை -  அரசியல், மற்றும் இவ் காலனித்துவ ஒடுக்கு முறை அமைப்புக்குள் இரட்டை வரிக்குள் தம் சொந்த மக்களை அடக்கி ஆண்ட பாசிசக் கொடுமை, புலிகளின் மீது இலங்கை மக்கள் அனைவரையும் பயமும், பகையும் கொள்ள வைத்தது. மறுபுறத்தே சிங்களத் தரகு முதலாளித்துவ அரசின் சிறுபான்மை மக்கள் மீதான மிலேசத்தனமான இன ஒடுக்குமுறையால் இம்மக்கள் அரசின் மீது தீராத பகையும், பயமும் கொண்டிருந்தனர். அரசின் மீதான சிங்கள மக்களின் பகையானது, இனவாதத்தால் திரையிடப்பட்டிருந்தது. இந்த இரு முரண்பாட்டுக்குள் தமிழ் மக்கள் இருந்ததாலும், சிங்கள மற்றும் பிற இன, மத இனத்தவர்களின் வெளிப்பாடான பகை புலிகளின் மீது இருந்ததாலும் அரசு தமிழ் மக்களுக்கு மருந்தாகவும், ஏனைய இன, மத மக்களுக்கு விருந்தாகவும் புலிகளை அகற்றி தமது அரசியல் சேவகத்தை, ஏகாதிபத்திய ஊழியமாகச் செய்ய முற்படுகிறது.

 

புலிகளின் பிடியில் இருந்த வட கிழக்கின் பொருந்தொகையான நிலமும், அதன் அரச சிவில் நிர்வாகமும், கலனித்துவ மூலதனத்தின் சீரழிவு நெருக்கடிகளால் அரசு கையகப் படுத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. இதனால் புலிகளுடன் அரசு யுதத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி, ஏகாதிபத்தியத்துக்கு இசைவாக இருவரும் இணைந்து சேவை செய்ய முற்பட்டது. இதற்காக புலிகளுக்கு சர்வதேசங்கள் தண்ணீராகப் பணத்தை இறைத்ததுடன், அது கேட்ட போக்குக்கெல்லாம் ஆடியது. இறுதியில் புலிகள் தனது இனப்பெருமையை தூக்கிப் பிடித்ததோடு, கருணாவின் பிரிவுடன் இழந்து போன ஏக பிரதிநிதித்துவத்தைக் கோருவதில் அழுங்குப் பிடியாக நின்றதாலும், புலியை அகற்றுவது அரங்கில் அவசியமான ஒன்றாகி விட்டது.

 

இன்று புலிகளிடம் மீட்கப்பட்ட பிரதேசங்களில், புதிய வடிவிலான வணிக நகரங்களையும், இராணுவ வளையங்களைக் கொண்ட மீள் குடியிருப்புக்களையும் வடக்குக் கிழக்கில் உருவாக்குவதன் ஊடாக தமிழ் மக்களை இனரீதியாக மறைமுகமாக அடக்கி ஒடுக்குவது, அவர்களின் தேசிய அபிலாசைகளை அழித்தொழிப்பது அரசின் சேவகத் திட்டமாகும். இதனூடு ஒரு தேசிய விடுதலை மூண்டு விடாதபடியும், ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவ அரசை நீண்டகாலத்துக்குக் கெட்டிப்படுத்துவதும் ஏகாதிபத்தியத்தினதும், அதன் காவல் நாய்களான தமிழ்-சிங்கள தரகுமுதலாளிகளின் கனவுகளும் இதுவாகும்.

 

புலிகளின் இயக்கப் படுகொலைகளில் இருந்து உருவான - புலி எதிர்ப்புவாதம் - அதன் தொடர்ச்சியான பாசிசத்தால் எதிர்நிலைக்குத் தள்ளப்பட்ட உள்ளுர் விதேசிகளை அரசு உள்வாங்கியதுடன், புலிகளின் விதேசப் போக்கையும், புலி எதிர்ப்பு விதேசப் போக்கையும் இணைத்து முன்னெடுக்க இருந்த வேலைத்திட்டத்தில் அரசு தோல்வி கண்டுவிட்டது. இதனால், புலி எதிர்ப்பு விதேசப் போக்கைக் காப்பாற்ற வேண்டுமானால் புலி விதேசிகளின் பெரும் பகுதியை பலவீனப்படுத்தும் முகாமாக புலியை அழிக்கும் யுத்தமாக இதைப் போக்குக்காட்ட வேண்டும். இங்கு இவர்களுக்கு புலிகள் மீதான யுத்தத்தை விருந்தாகவும், இவர்கள் ஊடாக தமிழ் மக்களுக்கான தீர்வை - ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவ அரசை காக்கும் - மருந்தாகவும் வைக்கிறது.

 

முன்னர் பிரிவினை கோரிய கூட்டணி தரகு முதலாளித்துவ சக்திகளையும், புலிகளை ஆதரித்த முன்னாள் இயக்க இரண்டாம் தலைமை விதேசிகளையும் ஓரங்கட்டுவதன் ஊடாக, முன்னாள் இயக்க - மற்றும் புலி எதிர்ப்பு விதேச சக்திகளின் புதிய கூட்டில் சிங்கள மக்களை திருப்திப்படுத்தவும், தமிழ் மக்களிடம் இழந்து விட்ட பாராளுமன்ற சனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் சுலபமாக மீட்டெடுக்க நினைக்கிறது. இதனூடு மக்களை இனி ஒரு ஆயுதப்போராட்டத்தின் மீதான நம்பிக்கை ஏற்படாத படி கட்டிப் போடுகிறது. வடக்குக் கிழக்கிலுள்ள சராசரி ஒவ்வொரு குடும்பமும் அகதியாகக் குடி எழுப்பப்பட்டு சொத்துக்களையும் சுகங்களையும் உறவுகளையும் இழந்து கிடக்கின்றனர். மறுபுறம் புலியின் பாசிசக் கொடுமைக்குள் அழுந்தி வாழ்ந்து, உயிர்தப்பி வருகின்றனர். இவ்விரு தரப்பினரும் படுமோசமான ஆயுத நிர்வாக ஒடுக்குமுறைக்குள் வாழ்ந்து பழகியதால் அரசின் புதிய ஏகாதிபத்திய ஒடுக்குமுறை இராணுவ வளையங்களுக்குள் ஒடுக்கி ஆள்வது கடினமாகாது.

 

இருப்பினும் ஒவ்வொரு பழைய சமூதாய அமைப்பும், ஒரு புதிய சமூதாயத்தை தனக்குள் கருத்தரிக்கும். இன்றைய உற்பத்தி முறை, புதிய உற்பத்தி சக்திகளை உருவாக்கும். கருத்தரிக்கும் இப்புதிய சமுதாயத்துக்கும், பழைய சமுதாயத்துக்குமான  - வன்முறையே - மருத்துவிச்சியாகவும் அமையும். இதுவே ஒரு பொருளாதார சக்தியுமாகும். இதுவே ஒரு தேசத்தை உருவாக்கும் பொது விதியும் வழக்குமாகும். இதை தடுத்து நிறுத்த எந்த இராணுவ வேலிகளுக்கும், ஒடுக்குமுறைக்கும் சக்தி இருக்காது.

 

இறுதியாக: புலி சாரார் தரகுமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ  வர்க்கத்துடன் கொள்கை ரீதியானதும், அதற்கேற்ற நடைமுறைகளைகளில் இருந்தும் முறித்துக் கொள்ளுதலை ஏற்படுத்தாத, இந்தப் போராட்டத்தின்  தொடரும் நிலையையும்: மறுசாரார், - புலி எதிர்ப்பு - ஏகாதிபத்திய தரகு முதலாளிகளிடம் காணும் குறைபாடுகளை நீக்கி - பாராளுமன்றத்துக்குள் - நேர்மையுடனும், ஊக்கமுடனும் தேசிய (இன)ப்பிரச்சினையை தீர்த்து விடலாம் எனக் கோரியும் வருகின்றனர். இவ் இருசாராரும். இன்றைய நாறிப்போன இச்சமூக சாக்கடையின் நாற்றத்தை வியாபாரப்படுத்த, தமது இருப்பைக் காப்பாற்ற விதம் விதமான பெயர்களில் இவர்கள் சுட்டுவிற்க நினைக்கும் பழைய தோசைகளுக்கான கடைவிரிப்பே இவைகளாகும். இதற்காக புளித்துக் கிடக்கின்ற இவ்விரு வர்க்கத் தரப்பினரதும் பக்கசார்பான உழுத்தந் தலை பேர்வழிகளையும், இவ் வர்க்கப் போக்குக்களையும் வேரறுக்காமல் இலங்கையை சீராகக் கட்டி வளர்ப்பதோ அல்லது சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிரந்தரமாக வென்றெடுப்பதோ, மக்கள் சனநாயகத்தையோ அல்லது நிரந்தர சமாதானத்தையோ இலங்கையில் வென்றெடுப்பது என்பது பகற்கனவாகும்.


சுதேகு

02.04.09