யுத்தத்தை வெல்ல முடியாமல் சிங்களப் பேரினவாத அரசு முழி பிதுங்கிய நிலையில் நிற்கின்றது. மகிந்தாவின் வாலைப் பிடித்து பிழைப்பு அரசியல் நடாத்திவரும் பீரிஸ் உலகநாடுகளின் அழுத்தத்தை காரணமாக காட்டி இன்னும்

 மூன்று வாரங்களில் போரை முடிவுக்கு கொண்டுவரப் போவதாக சொல்லி தங்கள் இயலாமையை மறைக்க முற்படுகின்றார். விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று இனவெறியன் மகிந்தா தன் இலட்சியத்தில் நின்று விலகப் போவதில்லை என்று மேடைக்கு மேடை வீரம் பேசி உளறிக் கொண்டு திரிகின்றான். இத்தனை ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களையும், அப்பாவி சிங்கள இளைஞர்களையும் சாகடித்த பழி இவர்களை நிம்மதியாக தூங்க விடப் போவதில்லை. இன்னொரு வெள்ளை வேட்டிக் கூட்டம் சோனியாவின் வால்பிடிகள், எல்லா அழிவுகளையும் பின்னால் நின்று செய்து முடித்துவிட்டு இன்று ஒன்றும் தெரியாத சமாதான விரும்பிகளாக காட்டிக் கொண்டு இலங்கை அரசின் போர் நிறுத்தத்தை தாம் வரவேற்பதாகக் கூறிக் கொண்டு தங்கள் சொந்த அரசியலுக்கு இலாபம் தேட முனைகின்றார்கள்.

 

இன்னொருபுறம் தங்கள் பாசிசத்தாலேயே தங்கள் தோல்வியையும், இழப்புகளையும் அழிவுகளையும் தேடிக் கொண்ட புலித்தலைமைகள் ஆங்காங்கே மக்களைப் பற்றி பேசகின்றார்கள். துப்பாக்கி தேவையில்லை மக்கள்படையும் தடிகளும் போதும் என்ற சிந்தனை மர மண்டையை தட்டத் தொடங்கியுள்ளது. நண்பர் மா.செ. கூறியது போல காலம் கடந்து சுடலை ஞானம் பிறந்துள்ளது. செத்துப் போன புலியை எப்படியாவது மீண்டும் எழுப்பி பாயவைக்கலாம் என்று சில கோட்டுப் போட்ட பைத்தியங்கள் வெளிநாட்டு மேடைகளிலும், தொலைக் காட்சிகளிலும் உளறிக் கொண்டு திரிகிறார்கள். இவ்வளவு மக்கள் அழிவும் போதாது என்று இன்னும் எஞ்சியுள்ள மக்களையும் அழித்துவிட எல்லாப் பாசிசங்களும் பைத்தியமாக அலைகின்றன.

 

இன்னொரு சுடலை ஞானம் ஆனந்தசங்கரி, தனது 30, 40 வருட அரசியலுக்குப் பிறகு ஐக்கிய இலங்கை பற்றி இப்ப பேசுகின்றது. மேடைக்கு மேடை தமிழீழம்... தமிழீழம்... என்று கூச்சல் போட்டுப் போட்டே இத்தனை ஆயிரக்கணக்கான மக்களையும், அப்பாவி தமிழ், சிங்கள இளைஞர்களையும் சாகடிக்க காரணமாக இருந்த கூட்டணிக் கும்பல்களில் ஒன்றான இந்த வெள்ளை வேட்டி இன்று ஐக்கிய இலங்கை பற்றி தனது தம்பி பிரபாகரனுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த எல்லா சந்தர்ப்பவாத பாசிச கும்பல்களிடம் சிக்கித்தவிக்கும் அப்பாவி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிக்கிடக்கின்றது.

 

'கம்ய+னிஸ்டுகள் எப்பொழுதும் உண்மைக்காக வாதாடத் தயாராக இருக்க வேண்டும். காரணம், உண்மை என்பது மக்களின் நலன்களுக்குச் சாதகமானது. கம்ய+னிஸ்டுகள் எப்பொழுதும் தமது தவறுகளைத் திருத்தத் தயாராக இருக்க வேண்டும். காரணம், தவறுகள் மக்களின் நலன்களுக்குப் பாதகமானவை".

- மா சே துங்

 

-தேவன்
03.03.2009