10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

அதிகாரத்தின் மீறலும் ஊடக சுதந்திரத்தின் இருப்பும்

'யாழ்ப்பாணத்திலை உங்கடை சனத்துக்கு நான் ஒரு பாடம் படிப்பிக்கிறன். நான் வித்தியாசமானவன். நான் சந்திரிகா போலை இல்லை..." இது வீதிச்சண்டியன் ஒருவனின் வாக்குமூலமல்ல. சபிக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனாதிபதியின் குரல். 'நான்தான் உன்ரை செக்குரிற்றியை வாபஸ் பெற்றனான். உன்ரை இடத்துக்கு

 உனக்குப் பாதுகாப்புத்தர ஒருத்தரும் வரமாட்டாங்கள். போய் பிரபாகரனிட்டை கேள் உனது பாதுகாப்பை. காட்டுச் சட்டங்களைப் புகழ்ந்துகொண்டிருக்கிறவையள் உங்கடை ஆக்கள்..." நாட்டுச் சட்டங்களை கையில்வைத்திருக்கும் ஒரு ஜனாதிபதியின் உரையாடல் இது. 2007ம் ஆண்டு  ஆகஸ்ட் 16. ஒரு காலைநேர சந்திப்பு. 25 பத்திரிகையாசிரியர்கள். வித்தியாதரன் இதை எதிர்கொள்ள நேரிட்டது.. தனது பாதுகாப்பு திடீரென திரும்பப் பெற்றுக்கொண்டது பற்றி அவர் எழுப்பிய கேள்வி கிளறிய குப்பைக்குள்ளிருந்து அரசின் சகல மக்களுக்குமான பிரதிநிதித்துவம் கோவணத்துடன் எழுந்தது.

 

சுடரொளி (கொழும்பு), உதயன் (யாழ்ப்பாணம்) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் வித்தியாதரன். 27 பெப்பரவரி 2009 அன்று வெள்ளைவான் கைதுசெய்து சென்று சட்டத்திடம் ஒப்படைக்கிறது. கிரிமினல்தனமும் சட்டமும் சந்திக்கும் புள்ளிகள் அப்படி இருக்கிறது  நமது இலங்கை நாட்டில்.

 

இலங்கை எதை நோக்கிப் போகிறது? லசந்த விக்கிரமதுங்கவின் பேனா முறித்து வீசப்பட்டபோது இன்னொருமுறை எழுந்த கேள்வி இது. தான் கொலைசெய்யப்படுவது உறுதி என்று தெரிந்தபின் ஒரு மரண வாக்குமூலமாக தனது ஆசிரியர் தலையங்கத்தை எழுதி முற்றுப்புள்ளி வைத்த விரல்களின் வலியை உணராதவர் மனிதர்களாகவே இருக்கமுடியாது. மரணத்தை இப்படியாய்... ஓர் ஊடக சுதந்திரத்துக்காய் எதிர்கொண்ட ஒரு பத்திரிகையாளனைப் பெற நாடு கொடுத்துவைத்திருக்க வேண்டும். இலங்கைக்கு அது பொருந்திவரவில்லை. அது சகித்துக்கொள்ளப்பட வில்லை. சட்டத்தின் அரவணைப்பில் கிரிமினல்தனம் அவனை கொலைசெய்தது. ஜனவரி 8 2009 அன்று அவனுக்கும் ஒரு பாடம் படிப்பித்தாயிற்று. இரண்டு நாட்களின் முன் மகாராஜா ஒளிபரப்பு நிலையத்திற்குள் புகுந்தது சுமார் 15 பேருடன் கிரிமினல்தனம். அங்கு நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல் கொலைஞர்களின் அடையாளங்களை விட்டுச்சென்றது. இப்படியே பிரபல ஊடகவியலாளர் திசநாயகம் வெளியீட்டாளர் யசீதரன் அவர் மனைவி... எல்லோருமே தடுப்புக் கதவலில்; இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் சாட்சிகளாக தொடர்கிறார்கள்.

 

1970 க்கு முன் இலங்கைப் பத்திரிகைகள் ஆசியாவிலேயே மிகச் சிறந்த பத்திரிகை ஸ்தாபனங்களாக விளங்கின. இன்று...?. 1988 தொடக்கம் 1990 இடையிலான ஜேவிபியன் மீள் எழுச்சியை பிரேமதாசா சிங்கள இளைஞர் யுவதிகளின் பிணங்களாய்ச் சிதைத்த கொடுமையோடு ஊடக சுதந்திரத்திலும் அந்த இரத்தம் கசியத் தொடங்கியது. இந்த இருவருட காலமும் ஜேவிபியின் கட்டுப்பாட்டில் தென்பகுதி இருந்தது என்பது மிகையான ஒன்றல்ல. பாடசாலைகள் 6 மாதம் மூடப்பட்டுக் கிடந்தது. பல்கலைக் கழகங்கள் இரண்டரை வருடம் மூடப்பட்டுக் கிடந்தன. வாகனப் போக்குவரது;துகள் தடைப்பட்டன... ஜேவிபியின் கொலைகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் கொலைப்பயமுறுத்தலுக்கு ஆளாகினர்.

 

ஜேவிபியை எதிர்கொண்ட பிரேமதாசவின் கொலைப்படை அம்பாந்தோட்டையில் மட்டும் 40 கிலோ மீற்றர் இடைவெளியில் 242 மனித உயிர்களை பரப்பியது. களனி ஆற்றில் பிணங்கள் மிதந்தன. இளைஞர்கள் யுவதிகளற்ற - அதாவது வயோதிபரையும் குழந்தைகளையும் கொண்ட- கிராமங்கள் இந்த அநியாயங்களின் கதைசொல்லின. இவ்வாறான பயங்கர சூழலில் மனித உரிமைகள் செயலிழந்தன. இந்த கொடிய ஆட்சியினை விமர்சித்து ~அத்த| பத்திரிகையில் கார்ட்டுன் வரைந்த  ஓவியர் ஊனுஸ் தனது முறைப்பாட்டை பொலிசாரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தபோது அவரது கை வெட்டப்பட்டது பிரேமதாசவின் கொலைப் படையால்.

 

1988ம் ஆண்டிலிருந்து 1990 இன் நடுப்பகுதிவரை 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 10 பேர் நாட்டைவிட்டு ஓடினர். அரசுக்கு எதிரான அத்துலத் முதலியின் கையெழுத்து வேட்டையின்போது கோட்டைப் புகையிரத நிலையத்தில் வைத்து வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களின் கமராக்கள்கூட பறிக்கப்பட்டது. அவர்களும் தாக்கப்பட்டனர். 1992 இன் முதல் ஆறு மாத காலப் பகுதியிலும் 40 பத்திரிகையாளர்கள் அரச குண்டர்களால் தாக்கப்பட்டனர். அன்று எல்லோரையும் அதிர வைத்த சம்பவம் பத்திரிகையாளனும் கலைஞனுமான றிச்சர்ட் டி சொய்சா கொலைசெய்யப்பட்ட சம்பவமாகும். பிரேமதாசவை கடுமையாக விமர்சித்த சொய்சா 1990 இல் கடத்தப்பட்டு இரு நாட்கள் கழித்து துப்பாக்கிச் சூட்டுடன் பிணமாக வீசப்பட்டுக் கிடந்த சம்பவமாகும். பத்திரிகையாளர்கள் பிரேமதாசவை சினமூட்டாத வகையில் சுயதணிக்கை செய்து எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டனர் அல்லது நாட்டைவிட்டு ஓடினர்.

 

இது  தெற்கின் நிலைமையென்றால் வடகிழக்கில்...? 1985-1987 இடையில் உள்நாட்டுப் பத்திரிகைகளை புலிகள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்தனர். இரு பத்திரிகையாளர்களைக் கொன்றனர். 1988-1990 இடையில் இந்திய இராணுவமும் ஈபிஆர்எல்எப் உம் பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தின. புலி ஆதரவாளர் என சொல்லப்பட்ட திருச்செல்வத்துக்கு கொலைமிரட்டல் விடப்பட்டது. கனடாவுக்கு தப்பியோடினார் அவர். மகனை ஈபிஆர்எல்எப் சுட்டுக் கொன்றது. அதிகாரத்துவத்தின் மேலான விமர்சனங்களையும் ஆய்வுகளையும் மேற்கொண்ட ராஜினி திரணகமவை வீடுதேடிச் சென்று ஈபிஆர்எல்எப் எச்சரிக்கை செய்துவிட்டு வந்தனர். புலிகள் சுட்டுத் தள்ளினர்.

 

மக்களுக்காகப் போராடப் புறப்படுவதாய் பூமியை உதைத்து புழுதிகிளப்பி எழுந்த  புலிகள், ஈபிஆர்எல்எப், ஜேவிபி என எல்லோருமே அதிகாரத்தின் மேல்நிலைக்கு வந்த போதெல்லாம் பத்திரிகைச் சுதந்திரத்தைப் போட்டு மிதிப்பதில் அரச பயங்கரவாதிகளுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்களாக இருக்கவில்லை என்பதே இற்றைவரையான வரலாறு. தமிழ்ப் பத்திரிகையாளர்கள் இயக்கங்கள் அரசு என இருபக்க அச்சுறுத்தல்களுக்குள் அகப்பட்டனர். பத்திரிகைளைத் தடைசெய்வது, விநியோகத்தைத் தடுக்க ஒன்றாய்ப்போட்டுக் கொளுத்துவது, விநியோகிப்பவரை கொலைசெய்வது,  என்றெல்லாம் இயக்கங்களின் குறுக்குமூளைகள் கோரமாய்ச் செயற்பட்டன.

 

புலியை எதிர்த்தாலும் புலியிலிருந்தாலும் புலியிலிருந்து பிரிந்தாலும் இந்தக் குறுக்குமூளை எவரையும் விட்டுவைக்கவில்லை. கருணாவின் பிரிவின்பின்னரும்கூட மட்டக்களப்பிலும் அவை எரிந்தன. வீரசேகரியைக்கூட அவை விட்டுவைக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் இருந்தபோது புலிகளின் பத்திரிகைக்கு அப்பால் செய்தியறியா மக்களாக அவர்கள் விடப்பட்டார்கள். வீரகேசரிப் பத்திரிகை தொடக்கம் சரிநிகர் பத்திரிகைவரை தடைசெய்யப்பட வேண்டியது என்றதான அரசியலே எமது விடுதலை அரசியல்.

 

புலம்பெயர் நாட்டில் (85 களின் பின்னர்) தோன்றிய பத்திரிகைகளின் மீதும் புலிகளின் அணுகுமுறை எல்லைகடந்துவிடாமல் இருக்க இந்த நாடுகளின் ஜனநாயக நடைமுறைகள் ஒருவிதத்தில் உதவிபுரிந்தது உண்மை. என்றபோதும் சில பத்திரிகைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின. கனடாவில் தாயகம் நூல்நிலையம் எரியூட்டப்பட்டது. நோர்வேயில் சுவடுகள் ஆசிரியர் குழுவினர் தாக்கப்பட்டனர். சுவிசில் மனிதம் பத்திரிகை விநியோகம்; இடையூறுசெய்யப்பட்டுக்கொண்டே இருந்தது. இந்த நிகழ்வுகளுக்கு சிகரம் வைத்தாற்போல் பாரிசில் சபாலிங்கம் கொலைசெய்யப்பட்டார். படிப்படியாக இந்தச் சிறுபத்திரிகைகளின் அழிவுகள் மௌனங்களின் பின்னால், அவை ஏற்படுத்திக்கொடுத்த தளத்தில் நின்று  இணையத்தளம், வானொலி போன்ற ஊடகங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஆனாலும் அவை பெரும்பாலும் புலியெதிர்ப்பு நிலையை அல்லது மறைமுக, நேரடி அரச ஆதரவு நிலையை முன்வைத்ததிற்கு அப்பால் மற்றையவரின் கருத்துச் சுதந்திரத்தை முகம்கொடுப்பதில் பொறுமையற்றுத் தவித்தன.

 

எதிர்க் கருத்துகளின் மீதான பொறுமையின்மையை இவை வளர்த்துவிட, இதன் மறுதலையாய் முதுகுசொறியும் நிலை - மாற்றுக் கருத்தாளர்கள் என்று சொல்பவர்களிடமும் கூட காணப்படுகிறது. இவர்களிடம் ஆயுதம் இருந்தால்... என்ற ஒரு தர்க்கத்தை பட்டுப்பழுத்தவர்கள் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க இந்த நாடுகளுக்கு தாம் எப்போது வந்தோமோ அல்லது தாம் எப்போது குரலிடத் தொடங்கினோமோ அன்றிலிருந்துதான் புலம்பெயர்வில் மாற்றுக் கருத்து தோன்றியதாக செய்யும் ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வழிநெடுகிலும் பார்ர்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. அதாவது சக மனிதரது கருத்துகளை எந்தளவு கேட்கிறோம் பரிசீலிக்கிறோம் ஏற்றுக்கொள்கிறோம் என்ற நிலைகளில் ஊடக சுதந்திரம் மீதான அகநிலைக் காரணிகள் முக்கியமானவை எனப் படுகிறது. தாம் சார்ந்த அரசியலுக்கு வெளியில் நிற்கும் ஒருவரின் கொலை எந்த அதிர்ச்சியையம் ஏற்படுத்தாத அல்லது அதை சகித்துக்கொள்ளும் நிலையிலிருந்து அதை நியாயப்படுத்தும் மனநிலைகூட வளர்த்துவிடப்பட்டிருக்கிறது. இந்தக் கொலைகள் பல ஒப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் செய்தியாக கடந்துவிடப்படுவதும் உண்டு. அதேபோல் ஊடகவியலாளர் கொலைசெய்யப் படும்போது அவர் புலியாதரவாளரா அரசு சார்பானவரா தமிழரா சிங்களவரா முஸ்லிமா என்றெல்லாம் பிரித்தளக்கும் மனநிலை இதை ஊடகசுதந்திரத்தின் மீதான தாக்குதல் எனப் பார்க்க விடுவதில்லை.

 

லசந்தவின்; கொலையை புலிகள் உச்சரிப்பது அரசை அம்பலப்படுத்துவதற்கே என்பதை ஊடக சுதந்திரத்தின் மீதான அவர்களின் கடந்தகால நடைமுறைகள் காட்டும். புலிகளால் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான எதிர்வினைகள் குரல்கள் எல்லாம் புலியெதிர்ப்பாளர்களிடம் களைகட்டியிருக்கும். அரசே செய்ததால் அவர்கள் மௌனம் கொள்ளவேண்டியிருக்கிறது. அரசுசார்ந்தே உரிமைகளைப் பெற்றெடுக்கும் அவர்களின் நம்பிக்கைகளை அல்லது சந்தர்ப்பவாத விளாசல்களை இவ்வாறான சம்பவங்கள்கூட சிதைத்துவிடவில்லை. அதுகுறித்து அவர்கள் மௌனமாகவே இருந்தனர். இருக்கின்றனர்.

 

தமிழ் ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் மீது தாராளமாகவே செயற்பட்ட வன்முறை பிரேமதாச ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததுபோல இப்போ சிங்கள ஆங்கில ஊடகங்களின் மீதும் பாயத் தொடங்கியிருக்கிறது. அதுவும் ஊடகத்துறையை நாட்டின் சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதி இந்த வருடம் முதல் பொறுப்பேற்றுக்கொண்டதுமே ஒரு பெரும் பத்திரிகையாளனின் மரணம் நிகழ்ந்துவிடுகிறது. அதிகாரத்துவங்களின் கைகளில் மாறிமாறி சிக்கித் தவிக்கும் இலங்கையின் ஊடகத்துறை அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் ஜனாதிபதியின் கைகளில் அகப்பட்டிருப்பது ஊடகத்துறையை நடுங்கவைத்திருக்கிறது.  மூன்று மொழிகளிலும் வெளிவரும் லங்கா டிசென்ற் என்ற இணையத்தளம் தனது இயலாமையைச் சொல்லியபடி விடுபட்டுப் போனது லங்காஈநியூஸ் ஆசிரியர் இரு தடவைகள் நான்காம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டிருக்கிறார். பல பத்திரிகையாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டுள்ளனர்.

 

27 டிசம்பர் 2007 அன்று அரச ஒளிபரப்புக்கூட்டுத்தபனமான இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்திற்குள்கூட அமைச்சர் மேர்வின் சில்வா தனது ரவுடிக் கும்பலுடன் உட்புகுந்து அட்டகாசம் பண்ணினார். அதன் முகாமையாளரைத் தாக்கினார். எதிர்ப்பு நடவடிக்கையாக அதன் ஊழியர்கள் அமைச்சரை சிலமணிநேரம் அறையுள் தடுத்துவைத்து பின் விடுவித்தனர். இந்த வேக்காட்டில் அதன்பின்னரான நாட்களில் வெட்டுக்கொத்து என வீதிகளில் வைத்தே பழிவாங்கப்பட்டனர் அதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள். வேடிக்கை என்னவென்றால் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தான் பேசிய காட்டமான வார்த்தைகளை நீக்கிவிட்டு தனது பேச்சை ஒளிபரப்புச் செய்தது ரூபவாகினி என்ற குற்றச்சாட்டுத்தான். கேடுகெட்ட வார்த்தைகளுக்கான பேச்சுச் சுதந்திரத்தைக் கோரும் ஒரு அமைச்சர் அங்கம் வகிக்கும் அரசானது ஊடகசுதந்திரத்தை தனது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகக்கூட மதித்து நடக்கவில்லை.

 

கடந்த 300 நாட்களுக்கு மேலாக எந்தக் குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்படாமல்  பத்திரிகையாளர் திசநாயகம் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலைக்காக பத்திரிகையாளர்கள் வீதிகளில் இறங்கியபோதும் எதுவும் அரக்கவில்லை. பலம்பொருந்திய ஊடகமாக இருந்த மகாராஜவின் ஒலி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனங்கள்மீது சுமார் 20 பேர்கொண்ட அடியாட்படை நடத்திமுடித்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து எழுதிய லசந்தவின் குரல் 48 மணிநேரத்தின்பின் துப்பாக்கியால் அழிக்கப்பட்டது.

 

சென்றவருடம்; வரை 20 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். லசந்தவின் கொலைக்குப் பின்னர் மாத்திரம் 35 பத்திரிகையாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இலங்கை சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பைச் சேர்ந்த சுனந்த தேசப்பிரிய சொல்கிறார், ~~சென்ற வருடம் 2 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்னர். இன்னொருவர் சுடப்பட்டுள்ளார். பயமுறுத்தல்கள் எச்சரிக்கைகள் சம்பந்தமாக 50க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளன. 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 16 பேர் தாக்கப்பட்டுள்ளனர். ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார். 27 பேர் கொலைப் பட்டியலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் சிலர் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் எனவும் பட்டியலிடப்பட்டனர்.|| என்கிறார்

 

வன்னிப் பிரதேசத்துள் உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வன்னியிலிருந்து திருகோணமலைக்குக் உதிரிகளாய்க் கொண்டுசெல்லப்படும் நோயாளர்களையோ, வவுனியா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் மக்களையோ, அவர்களிடமிருந்து பிரித்தெடுத்துக் கொண்டுசெல்லப்படும் இளவயதிரையோ பற்றிய தகவல்கள் ஏன் அரசால் தடுக்கப்பட வேண்டும். மனிதஉரிமை மீறல்கள் வெளித்தெரியா வண்ணம் ஊடகவியலாளர்களை அரசு கட்டிப்போடுகிறது என அர்த்தம் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்.

 

வன்னி மக்களின் அவலமோ போர்ச்செய்திகளோ அதன் இருதரப்புமான இழப்புகளோ இராணுவம் அல்லது புலிகளின் செய்தியிடலுக்கூடாகத்தான் கிடைக்கிற நிலை. இதையும் மீறி ஐசிஆர்சி வெளியிடும் செய்திகளை அரசு பொய் என்கிறது. உச்சகட்டமாக ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை சம்பந்தமான அறிக்கையை அரசு மறுத்ததோடு மட்டுமல்லாமல் புலியின் அறிக்கைகளோடு சமப்படுத்திக் காட்டியது. சர்வதேச அமைப்புகளில் புலி ஊடுருவியுள்ளது என நவனீதம்பிள்ளையை புலியுடன் மறைமுகமாக சம்பந்தப்படுத்துமளவுக்கு பேரினவாதக் காய்ச்சல் அமைச்சர்களின் பேச்சுகளில் வெளிப்பட்டது.

 

இந்த நவீன யுகத்தில்கூட வன்னிப் போர் பற்றிய செய்திகளை அறியமுடியாதபடி மக்களும் உலகமும் இந்த ஊடகத் தடையால் தணிக்கைகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். புலிகள் சார்பானவர்கள் புலிசார்புச் செய்திகளை அச்சொட்டாக நம்புவதுபோல், அரசுச் செய்திகளை புலியெதிர்ப்பாளர்களும் அச்சொட்டாக நம்புகிறார்கள். ஆதாரமாகக் கொள்கிறார்கள். வன்னிக்குள் அகப்பட்டுப்போயுள்ள தனது சகோதரமோ சொந்தமோ நட்புகளோ உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்றுகூட மாதக்கணக்கில், வருடக்கணக்கில் அறியமுடியாத ஒரு சூழல் தற்போதையது. அந்தளவுக்கு செய்திகள் தொடர்பாடல்கள் மறிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இந் நிலையில்... இலங்கை இராணுவம் ஒப்பீட்டு ரீதியில் குறைந்தளவு அநியாயம் புரியும் அல்லது பாலியல் வன்முறை புரியும் இராணுவம் என முடிவுக்கு வரும்; நிலைவரை மாற்றுக் கருத்துச் சிந்தனைகூட முடங்கிப்போய்விடுகிறது. அந்தளவுக்கு மகிந்தவின் 'உத்தி" செயற்பட்டிருக்கிறது.

 

ஊடகங்களின் மீதான ஒடுக்குமுறையால் தரவுகளை முறையாகப் பெறமுடியாத சூழல் தாம் சார்ந்த அரசியலுக்கு ஏற்ப அல்லது தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தகவல்களை உற்பத்தி செய்யவும், அபத்தமான ஆய்வுமுறைகளுக்கு இட்டுச் செல்லவும்கூடிய வாய்ப்பு உள்ளதையே மேலுள்ள கதையளப்புகள் காட்டுகின்றன. இன்றைய போரில் பாவிக்கப்படும் வெண்பொசுபரசு போன்ற எரிவு ஊட்டக்கூடிய வீசுபொருட்கள் உட்பட பாவிக்கப்படும் குண்டுகளின் தன்மைகள் பற்றிய எந்த தகவலுமற்ற நிலையே காணப்படுகிறது. இதனால் அரைகுறையில் எரியூட்டப்பட்டு கோரமாகக் காட்சிதரும் மனித உடல்களின் மேல் கமரா தொழில்நுட்பத்தைத் தேடும் அறிவுசீவித்தனத்தைக்கூட நாம் எதிர்கொள்ளவேண்டி ஏற்படுகிறது.

 

மனித உரிமைகள் அமைப்புகள் பல தரவுகளோடு முன்வைத்த வன்னிக் களமுனைச் செய்திகளையெல்லாம் இலங்கை அரசு மறுத்துக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமன்றி சுற்றுலாப்பயணி என்ற போர்வையுள் வன்னிக்குள் சென்று தகவல்களைப் பெற்றதாக அவர்கள்மீது குற்றஞ்சுமத்தியது. அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்று வேறு கூறியது. இலங்கை நாட்டின் இறைமை என்ற வரையறையை ஊடக சுதந்திரத்தின் மீதான தடைவரை நீடித்து விளக்கமளிக்க ஒரு அமைச்சர் பட்டாளமே இருக்கிறது இலங்கை அரச அதிகாரத்துள். அதற்கு வெளியில் இடதுசாரியச் சிந்தனைகளையே கேவலப்படுத்திக் கொண்டிருக்கும் விமல் வீரவன்ச போன்ற பேரினவாதிகள் இதே இறையாண்மையின் அடிப்படையில் ஒரே குரலில் பேசுகிறார்கள். இந்தப் போக்கு சம்பந்தமாக அமெரிக்கத் தூதுவர் அவ்வப்போது முரண்பட்டுக்கொள்ளும்போதுகூட, இந்தியத் தூதுவருக்கோ இந்தியாவுக்கோ இதுபற்றி அபிப்பிராயம்கூட எழுவதில்லை, தாடி சொறியும் விரல்விவகாரம் போல. இந்தப் போரையே திரையின்பின்னால் நின்று நடாத்திக்கொண்டிருபவர்களல்லவா அவர்கள்.

 

தனக்கு எதிரான எதையுமே சகித்துக்கொள்ள முடியாத ஒரு பாசிச மனப்பான்மை புலிகள் புலி எதிர்ப்பாளர்கள் புலி ஆதரவாளர்கள் என்போரிடம் பற்றிப் படர்ந்திருப்பது போல அல்லது அதற்கும் மேலாக அரசிடம் காணப்படுகிறது. போரின் இழுபாடுகள் எதிர்பார்த்ததையும்விட ஈய்ஞ்சுகொண்டிருப்பது அரசின் பரப்புரைகளிலுள்ள நம்பகத்தன்மையை சர்வதேச அளவில் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. தென்னாபிரிக்கா, மெக்சிக்கொ, கொஸ்ராறிக்கா போன்ற மூன்றாமுலக நாடுகளிலிருந்து அமெரிக்காவரை அது வெளித்தெரியத் தொடங்கியுள்ளது. (இதன் அர்த்தம் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளெல்லாம் தமிழ்மக்கள் சார்பாக நிலையெடுக்கலாம் என -புலியிச ஆய்வாளர் பாணியில்- இதை மொழிபெயர்த்துவிடுவதல்ல.)

 

சர்வதேச மனிதஉரிமைகள் அமைப்புகள் தரும் செய்திகளின் நம்பகத்தன்மை அடிபட்டுப்போவதை மேற்குலகம் ஒருபோதும் விரும்பாது. இந்த விடயத்தில் கோத்தபாய, றம்புக்கல, யாப்பா போன்ற ஆட்டநாயகர்களின் வாய்வீச்சுகள் மேற்குலகத்தை விசனம்கொள்ள வைத்துவிடக்கூடியது. இதன் மெல்லத்தெரியும் எதிரொலிகளாக போர்க்குற்றவியல் நீதிமன்றத்திற்கு அரசின் நாயகர்களை இழுப்பதுவரையான ஆலோசனைகள் தெரிவிக்கப்படுகின்றன. இது எந்தளவு தூரம் சாத்தியமானது என்பது கேள்விக்குறியே. ஒருவகையில் இலங்கை அரசை அடக்கிவாசிக்கப் பண்ணும் ஒரு உத்தியாகவே இந்த வெருட்டலை பார்க்க இடமுண்டு. தமக்கு அடிவருடிகளாக செயற்பட மறுக்கும் மூன்றாமுலக நாடுகளின் தலைவர்கள்மீதும், அவர்களின் வரைவிலக்கணப்படியிலான பயங்கரவாதத் தலைவர்கள்மீதும் மட்டும் போர்க்குற்றங்களை விசாரிக்கும் ''நியாயத்தன்மையைக்" கொண்டிருக்கும் நீதி மன்றத்துக்கு வெளியே இன்றைய உலகின் மிகப்பெரிய போர்க்குற்றவாளியான புஷ் போன்றவர்கள் உலவித்திரிகின்றனர். இனப்படுகொலை உட்பட போர்க்குற்றங்கள் புரிந்த மூன்றாமுலக அடிவருடிகளும் உலவித்திரிகின்றனர். வல்லரசாகத் துடித்துக்கொண்டிருக்கும் இந்தியா சீனாவின் பொடிப்பயல்களாக குழப்படி செய்யும் ராஜபக்ச அன்ட் கோ உலவித்திரிய அவை உதவும்.

 

இந்திய, சீன அரவணைப்பு தரும்; துணிச்சலில் இலங்கை அரசு சர்வதேச ஊடகங்கள் மீதான அல்லது இலங்கைத் தூதுவர்கள் தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் ஒருபோதும் பின்நிற்பதில்லை. லசந்தவின் இறுதிநிகழ்வின்போது உரையாற்றிய ஜேர்மன் தூதுவரின் உரையை இலங்கை அரசு தாறுமாறாக எதிர்கொண்டது. ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றின் தூதுவர்கள் புலிகளுக்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக கோத்தபாய குற்றஞ்சுமத்தினார். அத்தோடு நின்றுவிடவில்லை அவர். சில சர்வதேச ஊடக நிறுவனங்கள் பொறுப்பற்ற விதத்தில் செய்திகளை ஒளி, ஒலிபரப்புச் செய்து வருகிறது என்றார். சீ.என்.என், அல் ஜசீரா மற்றும் பி.பி.சீ போன்ற செய்தி சேவைகள் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், 1990ம் ஆண்களிலிருந்து பி.பி.சீயின் ஊடகவியலாளர்; கிறிஸ் மொரிஸ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும்கூட குற்றப் பத்திரிகை வாசித்தார் கோத்தபாய. பொறுப்புணர்ச்சியுடன் செயற்படாவிட்டால் கிறிஸ் மொரிஸை நாடு கடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

 

தமக்கு எதிரான என்பதைவிடவும் தமக்கு சார்பற்ற கருத்துகளை ஜீரணிக்கமுடியாமல் அந்தரப்படுகிறது அரசு என்பதை இந்த சர்வதேச ஊடகங்களின் செய்திகள் தூதுவர்கள் ஆற்றிய உரைகளைப் படித்தவர்கள் இலகுவில் உணர முடியும். இந்த நிலையில்  இலங்கை ஊடகங்களின் ஊடகசுதந்திரம் எப்படி இருக்கும்! ஊடகவியலாளர்கள் ~தேவையில்லாத வேலையில்| ஈடுபடாத சுதந்திரத்தையே அது அனுமதிக்கும்.

 

சன்டே லீடரின் முன்னாள் உதவி ஆசிரியர், ஆழவெயபந என்ற மாத சஞ்சிகையின் ஆசிரியர், INSI (International News Safety Institute) இன் தெற்காசிய இணைப்பாளர் ஆகிய பொறுப்புகளை வகிப்பவர் Frederica Tansz மேமாதத்தின் முற்பகுதியில் ஒருநாள் அவரது அலுவலகத்தின் முன்னாக தலை துண்டிக்கப்பட்ட ஒரு கோழி போடப்படுகிறது. 2008 யூன் மாதம் காலை 11.30. தொலைபேசி ஒலிக்கிறது. சிங்களத்தில் பேசுகிறார் ஒருவர்...

'நீங்கள் பிரெடெரிக்கா யான்ஸ்?"


'ஆம்."


"நீ தேவையில்லாத பல வேலைகளில் ஈடுபடுகிறாய். அதையெல்லாம் உடனை நிற்பாட்டவேணும். இல்லையென்றால் கொஞ்சக் காலத்துக்கை என்ன நடக்கும் என்று பார்."

 

"அப்படியென்ன தேவையில்லாத வேலையில் நான் ஈடுபடுறன்?"

 

"அது உனக்குத் தெரியும்."

 

மீண்டும் எச்சரிக்கை.

 

தொலைபேசி துண்டித்துக் கொள்கிறது...

 

ரவி

 

உலாவல்:
http://transcurrents.com/tc/2008/06/caller_from_94_11_2424617_thre.html
http://www.tamilsydney.com/content/view/1727/37/
http://www.hrw.org/en/news/2009/03/01/sri-lanka-editor-arrested-and-beaten
http://www.pinoypress.net/2008/03/27/sri-lanka-minister-verbally-abuses-journalists/