Language Selection

எம்மினத்தை கொன்று குவித்து வரும் சிங்கள இராணுவம். கடந்த 30 வருடத்தில் பல பத்தாயிரம் உயிர்களின் இரத்தத்தைக் குடித்த இராணுவம்.  இது உனக்கு தெரிந்தும், இந்த இராணுவத்திடம் திட்டமிட்ட வகையில் மக்களையே கூட்டம் கூட்டமாக பலியிட்டு கொல்கின்றாயே, ஏன்? இந்த கொலைவெறிக்கு உடந்தையாக நிற்கும் மாபியா அரசியலை ஆதரிக்கிறாயே, ஏன்? நீ எல்லாம் ஆறறிவுள்ள மனிதனா!? இதை வைத்து பிரச்சாரம் செய்யும் அரசியல், நாசமாகப் போகட்டும்.

 

இதையே அனுபவமாக வாழ்வாக உணரும்; மக்கள், தம் மொழியில் அனுதினம் சொல்லுகின்றனர். அவர்கள் மண்ணை வாரித் தூற்றி நாசமாகப் போவாங்கள் என்றே திட்டுகின்றனர். இதை இல்லையென்று சொல்ல எவனாலும் முடியாது.  

  

ஒரு உதாரணத்துடன் இந்த எதார்த்தைப் புரிந்து கொள்வோம்;. பேரினவாதத்தின் கொடூரத்தை உலகுக்கு காட்ட, புலி தன் பிரச்சாரத்துக்காக வெளியிட்ட ஒரு வீடியோ காட்சியை எடுப்போம். இது கடுமையான உளவியல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. பார்க்க விரும்புபவர்கள் மிக மிக அவதானம். (இதை இங்கே அழுத்திப் பார்க்கவும்). இந்த நாசமாகப் போனவங்களின் அரசியல் கூத்து இது. எதையும் அறியாத குழந்தையின் அவலம். தன் இரண்டு கால்களையும் இராணுவத்தின் வெடிகுண்டினால் இழந்து போன நிலையில், சதைகள் தொங்க துடிக்கும் குழந்தையின் பரிதாபகரமான காட்சி. ஒரு கணம் எனக்கு இந்த நிலை என்று யோசித்தால் அல்லது என் குழந்தைக்கு இந்த நிலை என்று யோசித்தால், மனிதமே குலுங்கும். இந்த உணர்வுகள் ஏதுமற்று, பாசிசமயமாகிவிட்ட சமூகம். இந்த நிலையை உருவாக்கும் அரசியல். அதை பிரச்சாரம் செய்யும் அரசியல். இதற்கு வெளியில் இவை இயக்கப்படவில்லை.

 

மீண்டும் நாம் அந்த குழந்தையிடம் செல்வோம். தன் வேதனை தெரியாது இருக்க மயக்க மருந்து கிடையாது. வலி தெரியாது இருக்க, அதற்கு அங்கு எந்த மருந்துமே கிடையாது. ஏன் மருத்துவமே அங்கு கிடையாது. இதைவிட அந்த குழந்தை படும் வேதனையைவிட, எதிர்காலத்தில் தமிழன் தரவுள்ள நரகல் வாழ்வை அனுபவிப்பதை விட, அந்த இடத்திலே அக் குழந்தை மரணித்திருக்கலாம். இதை எந்த மனித எதார்த்தம் எண்ணிப் பார்க்கின்றது.

 

ஆனால் புலிக்கு தன் பிரச்சாரத்துக்கு உதவும் இந்தக் அவலக் காட்சிகளை, சிங்கள இராணுவத்தைக் கொண்டு தயாரிக்கின்றது. இதை ஆதரித்து நடிக்கும் நடிகர்கள் நாங்கள். எந்த சூடும் சுரணையுமற்ற, புலிக் குறிபோட்ட தடி மாடுகள் நாங்கள். இதற்கு வெளியில், எந்த மாற்றும் எம்மிடம் ஆறறிவுடன் கிடையாது. கொல்வதும் கொல்லப்படுவதும், எமது அரசியல் தேர்வு. சதை தொங்க, பிய்ந்து போன குழந்தைகளின் காட்சிகளை தயாரிப்பதும், அதை பி;ரச்சாரம் செய்வதும் எம் அரசியல் தேர்வு. ஆம், இதுவே புலியை பாதுகாக்கும் அரசியல் தேர்வு. நாசமாகப் போவாங்கள்.  

 

ஆம், புலிகள் விரும்பும் இந்த பிரச்சாரக் காட்சிக்காக, எம்மின குழந்தைகளை புலிகள்  கொலைக்களத்தில் நிறுத்தியுள்ளனர். இல்லை என்று சொல்ல எந்த நாயாவது முனையுமா!? பிரச்சாரத்துக்கான காட்சிகளை, பேரினவாத இராணுவம் மூலமே புலி உற்பத்தி செய்கின்றது. புலிகளின் இன்றைய இருப்பு, இந்த பலியிடல் பிரச்சாரம் மூலம் தான் என்றாகிவிட்டது. இதற்கு அப்பால், இந்தக் காட்சிப்படுத்தலில் வேறு எந்த சமூக நோக்கமும் அக்கறையும் கிடையாது.

 

எமது கவலை இந்த குழந்தை பாசிச நிகழ்காலத்தைக் கடந்து, எதிர்காலத்தில் எப்படி வாழும் என்பதுதான். வாழ்க்கை பூராவும், தமிழனிடம் பிச்சை எடுத்துதான் வாழவேண்டும். காலை புடுங்கிய நாம், இதைத்தான் நாம் அவர்களுக்கு வழிகாட்டுவோம். யாருக்கும் இதைத்தாண்டி சந்தேகம் அவசியமற்றது. பிச்சைக்கார நாயே என்று வாயார தூற்றத் தயங்காத, புளித்துப்போய் பாசிசமாக உள்ள தமிழ் சமூகம். இன்று இதை உற்பத்தி செய்வதை, மனதார ஆதரிப்பவர்களும் நாங்கள் தான்.

 

இன்று இதை உருவாக்கி, இதை வைத்து புலியைப் பாதுகாக்க பிரச்சாரம் செய்யும் எந்த நாய்களும், தாம் உற்பத்தி செய்த இந்த அங்கவீனமடைந்த மக்களுக்காக ஒருநாளும் குலைக்க மாட்டார்கள். நாளையும், மறுநாளும் இது தான் எம்நிலை. சுனாமி முதல் வணங்காமண் கப்பல் பெயரால் திரட்டிய பணம் எவையும், என்றும் எம் மக்களைச் சென்று அடைந்ததில்லை, அடையப் போவதில்லை. மக்களின் பெயரில் அரங்கேறுகின்ற மாபியா மோசடிகள்.

 

இது இன்று தன் பிரச்சாரத்துக்காக உற்பத்தி செய்யும் மனித அவலத்தை, ஒருநாளும் கண்டு கொள்ளாது. அதைத்தான் நாம் கடந்த காலத்தில் பார்த்தோம்;, நிகழ்காலத்தில் பார்க்கின்றோம். இன்று தம் பிரச்சாரத்துக்காகவும், தம்மை பாதுகாக்கவும் மக்களை கொன்று குவிக்க உதவும் இவர்களா!, நாளை எம் மக்களுக்காக நிற்பார்கள்!? மனச்சாட்சியுடன் சொல்லுங்கள்!!! 

 

மீண்டும் நாம் அந்தக் குழந்தையிடம் போவோம்;. நாங்கள் உங்கள் மனச்சாட்சியைக் கேட்கின்றோம்;. உங்கள் குழந்தைக்கு இந்தக் கதி என்றால், அதன் எதிர்காலத்தை ஒரு கணம் நீங்கள் எண்ணினால், புரியும் இதன் பாதிப்பை. காலம்காலமாக தமிழனை கொல்லும் சிங்கள இராணுவம் இதைச் செய்ய, புலிகள் இதற்கு துணையாக நிற்பதை எப்படித்தான் நாம் ஜீரணிக்கமுடியும். இதை எப்படித் நியாயப்படுத்த முடியும்;. வெறும் சிங்கள இராணுவ நடவடிக்கையாக மட்டும், இதை எப்படி எம் வக்கிரத்துடன் சித்தரித்து கூறமுடியும்;. யுத்த முனையில் மக்களை நிறுத்தி, பின் அந்த அவலத்தை காட்சிபடுத்துவதா, தமிழனின் அரசியல்! மனிதாபிமானம்;!! இந்தக் கொலைவெறி பிடித்த யுத்த முனையில் இருந்து மக்களை அகற்ற, என்னதான் செய்தார்கள். சரி நீங்கள் என்ன செய்தீர்கள். யுத்தத்தை நிறுத்து என்பதால், இது சரியாகிவிடுமா!? சொல்லுங்கள். அங்கு நியாயமான யுத்தமா நடக்கின்றது. மக்களை யுத்தமுனையில் புலிகள் நிறுத்தியுள்ளனர். இதுதான் உண்மை. இதை எப்படி நீங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியும். உங்கள் கண் குருடா! காது செவிடா!! புலிக்கு பயமா!!! மனச்சாட்சியற்ற கொலைவெறிக்கு, உடந்தையாளர்கள் நீங்கள்.

 

இதனால் மக்கள் அன்றாடம் சாகின்றனர். சாவதுதான் இருப்புக்கான புலி அரசியல். ஆகவே சாவுதான், புலிப் பிரச்சாரமாகின்றது. இவை அனைத்தும் உன் துணையுடன்தான் நடக்கின்றது. நீ தமிழன் என்று சொல்வதன் ஊடாக, உன் பெயரில் நடக்கின்றது. உன் அமைதியின் பெயரில் நடக்கின்றது. உன் இனத்தைக் கொல்ல, உன்னை துணைக்கு வைத்துக்கொண்டு நடக்கின்றது. சிங்களப் பேரினவாதம் தமிழனைக்கொல்ல, நீயும் துணைபோவது உனக்குத் தெரியாதா!? 

 

இந்த மனித அவலத்தைப் பார்த்த, நீ பேரினவாதத்தை புரிந்துகொள்ள வேண்டும்!? பல பத்தாயிரம் மக்களை, தமிழன் என்ற ஒரு காரணத்தினால் கொன்ற இராணுவம் இது. பல பத்தாயிரம் சிங்கள இனத்தவரை, சுரண்டும் வர்க்கத்துக்காக (1971, 1989-1990 இல்) கொன்ற இராணுவம் இது. இந்த இராணுவத்தைக் கொண்டு, எம் மக்களை கொல்லும் அரசியல், அதை வைத்துப் பிரச்சாரம் செய்யும் உன் அரசியல், இவை எல்லாம் தமிழ் இனத்தையே அழிக்கும் புலிகளின் காட்டுமிராண்டித்தனமான அரசியல். 

 

புலி தன்னை பாதுகாக்க பேரினவாத கொலைவெறித்தனத்துக்கு முன்னால், மக்களை அரணாக நிறுத்தியுள்ளது. யுத்தத்தில் தோற்றுப்;போகும் புலிகள், தம்மை பாதுகாக்க மக்களை மனித அரணாக்கியுள்ளனர். தம்மை அழிப்பதானால், மக்களைக் கொல்லவேண்டும். இதைத்தான் புலிகள் சொல்லுகின்றனர், செய்து முடிக்கின்றனர். இதற்கு அமைய, அதை பேரினவாதம் செய்கின்றது. இதை வைத்து, தம்மை பாதுகாக்க உலகம் தளுவிய, மலிவான தமிழனின் இரத்தமும் சதையும் தொங்கும் பிரச்சாரம்.

 

இப்படி புலிகள் விரும்பியது போல், அங்கம் சிதறிய குழந்தைகளின் காட்சிகள். இதை சிங்கள இராணுவம் மட்டும் தனித்து செய்ததாக நம்பும் மோட்டுத் தமிழன். அங்கம் சிதறிய குழந்தையின் அவலங்களையே, மனிதஅவலமாக இராணுவத்தைக் கொண்டு உற்பத்தி செய்கின்றனர் புலிகள். இதை தடுக்க அவர்கள் முனையவில்லை. தமிழ் மக்களை பாதுகாப்பது என்பது, அவர்கள் போராட்டமல்ல. தம்மை பாதுகாப்பது என்பதே அவர்கள் போராட்டம். இதற்கு மக்கள் பலியிடப்படுகின்றனர். இந்தக் குழந்தையின் எதிர்காலம் என்ன? எந்த தமிழன் இதற்காக, இந்த மனித எதார்த்தத்துக்காகவும் உண்மையாக நிற்பான்.

 

கற்பனைகளில் வாழும் நாம், ஆதரிக்கும் புலியிசம் மனிதவிரோதத்தை மூலமாக கொண்டது.  உனது குழந்தைக்கு இந்தக் கதி என்றால், நீ ஒருகணம் அதுவாக சிந்தித்துப் பார். இந்த தமிழ் அரசியல் உனக்கு உதவுமா என்பதை!? இந்தக் குற்றத்தை அரசு செய்கின்றது என்றால், அதை செய்விப்பதே நீ ஆதரிக்கும் புலி தான். இது இன்று உனது மட்டுமல்ல, புலியின் அரசியலாகிவிட்டது. குற்றவாளிகள் அரசு மட்டுமல்ல, இதற்கு உடந்தையாக நிற்கும் நீங்களும் தான். எந்த மனச்சாட்சியுமற்ற, ஈவிரக்கமற்ற உங்கள் பாசிசமும் தான், காட்சியாகும் மனித அவலத்தினையும் உற்பத்தி செய்கின்றது.

 

பி.இரயாகரன்
29.03.2009