மொழி! 

கற்கால மனிதர்கள் சிலர் ஒன்று கூடி சிறு கூட்டங்களாக வாழத் தொடங்கிய காலத்தில் மனிதர்கள் தங்கள் விருப்பம் போல் வைத்துக் கொண்ட ஒலிக்குறியீடுகளின் தொகுதியே அவர்கள் பேசுகின்ற மொழியாகிறது. பிறந்த குழந்தை தாய் தந்தையின் மொழியைக் கற்று பேசுவது தாய் மொழியாகிறது.

 மொழியின் உருவாக்கம் அபாரமானது. மொழி என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கை நடவடிக்கைகள் எப்படி இருந்திருக்கும்? யார் என்ன நினைக்கிறார்கள்? யார் என்ன சொல்கிறார்கள்? யார் என்ன எதிர்பார்க்கிறார்கள்? – என ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்போம், குழம்பிப்போயிருப்போம்.

 

மொழி!

மனிதர்களை இணைக்கும் மாபெரும் பேறாற்றல்! ஆறாவது அறிவின் வெளிப்பாடு! ஐந்தறிவு உள்ள மிருகத்தையும் ஆறறிவு உள்ள மனிதனையும் வேறுபடுத்திக் காட்டுவது மொழி. ஏன்? என்ன? எப்படி? எதற்கு? எவ்வாறு? என்று கேள்விக் கேட்கப் பிறந்தவன் மனிதன். ஐந்தறிவு மிருகங்களுக்கு கேள்வி கேட்கும் ஞானம் இல்லை. அதனால் அவை கேள்வியும் கேட்பதில்லை, பதிலும் எதிர்பார்ப்பது இல்லை.

 

ஆயிரம் ஆயிரம் கேள்விகளைக் கேட்கத் தெரிந்ததால் தான் மிருக நிலையிலிருந்து பகுத்தறியும் தன்மைக்கு உயர்ந்தான் மனிதன். பல்வேறு சிற்றொளிகளைக் கொண்டு மனிதன் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட கருவி தான் குரல்வளை என்றான் ஒர் விஞ்ஞானி. மனிதன் ஒலிகளை எழுப்பக்கற்று மொழியாக்கி, சொற்களை கோர்வைகளாக்கி, புகழ்ந்து, இகழ்ந்து, விமர்சித்து, அறிவுறுத்தி, எழுதக்கற்று, இலக்கியமாக்கி, இலக்கணமாக்கி, காவியம் படைத்து, அக்கருத்துக்கள் மற்ற மனிதர்களுக்கு சென்றடைய அச்சுக்கலையை கண்டது வரை மனித முயற்சியை விளக்கிவிட முடியாதது.

 

மொழி!

உலகில் உருவான மொழிகளில் பழமை வாய்ந்த மொழியான தமிழ்மொழி அனைத்து மொழிகளுக்கும் முன்னோடியானவை என்கிறது வரலாற்று ஆய்வுகள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பல காவியங்கள் காலத்தால் அழிக்கப்பட்டு, இரட்டடிப்பு செய்யப்பட்டு, இயற்கையின் சீற்றத்தால் அழிந்து சிதைந்து மிஞ்சி நிற்கும் திருக்குறள், புறநாநூறு, அகநாநூறு இலக்கியங்கள் மனித வாழ்வின் நெறிகளை விளக்குகின்றன.

 

இன்றும் கூட மொழிகளைப் பற்றியும், இலக்கியங்கள் பற்றியும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. "மனிதனுடைய மனத்தை வசப்படுத்தும் கலைதான் பேச்சுக்கலை" என்பார் பிளாட்டோ.

 

அப்படிப்பட்ட பேச்சுக்கலையில் நாம் சொப்பும் ஆட்களா? சொற்போர் செய்யும் ஆட்களா? என்று யோசித்துப் பார்த்திருக்கிறோமா? சிறப்பாகப் பேசும் கலை மிகவும் சிக்கலானது. மற்ற கலைகளைப்போல் அதிலும் பழகி தான் கற்றுக் கொள்ள முடியும். எந்த ஒரு மரபும் பயிற்சியின்றி எண்ணத்தில் கலப்பதில்லை. "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" - என்பது போல்.

 

"ஒரு வார்த்தை பிரளயத்தையே ஏற்படுத்தக் கூடியது" என்பது பின்லாந்து நாட்டின் பழமொழி.

 

"அஜாக்கிரதையாகச் சொல்லப்பட்ட சொல் சண்டையைத் துவக்கும். அடாவடியாக பேச ஆரம்பிப்பது அவமானத்தில் முடியும்."

 

"குரூரம் நிறைந்த வார்த்தைகள் உயிரையே அழிக்கும்."

 

"தயை நிறைந்த சொல் பாதையை சீராக்கும். சந்தோஷம் நிறைந்த சொல் உற்சாகத்தைத் தரும். இதமான வார்த்தைகள் மனக்கவலையையும், சஞ்சலத்தையும் அகற்றும். அன்பான ஒருசொல் ஆறுதலை தரும். மரியாதைக் குறைவான பேச்சில் ஆணவம் வெளிப்படும்."

 

ஆகவே பேச்சை ஒரு பலம் வாய்ந்த சக்தியாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், உரையாடல் ஒவ்வொரிவரின் எண்ணங்களையும், திறமைகளையும் பிரதிபலிக்கிறது. நாம் அதிகமாகப் பேசுவதைவிட கேட்கப் பழக வேண்டும். ஆனால் கேட்பதை விட பேசுவதற்கே நாம் பழக்கப்பட்டுள்ளோம். கேட்கும் போது கூட சில நிமிடங்களில் நம் கவனம் சிதறிவிடுகிறது.

 

நாம் ஒருவரிடம் பேசும் போது நாம் கூறும் கருத்தில் கேட்பவர் 7மூ தான் கவனம் செலுத்துகிறார். அதே சமயம் நாம் பேசும் பேச்சின் ஒலியின் குரல் எவ்வாறு தொனிக்கிறது என்பதில் 38மூ கவனம் செலுத்துவார். நாம் எந்த முகபாவத்துடன் பேசுகிறோம் என்பதில் 55மூ கவனம் செலுத்துகிறோம். இச்செயல்கள் எல்லாம் நம்மை உணராமலேயே செய்யும் செயல்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதனால் தான் எதிரே இருப்பவர் பேசும் போது நாம் முழு கவனத்துடன் கேட்க முடிவதில்லை.

 

அறிவாளிகள் அதிகம் பேசுவதில்லை. அப்படியே பேசும் போது எதிராளிக்குக் கேட்கும் ஆர்வம் இருக்கிறதா? அவசியமான விஷயம் குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறோமா? என்றெல்லாம் தங்களுக்குள் கேள்விக் கேட்டுக் கொண்டே கவனமாக பேசுகிறார்கள். நாமும் அறிவாளிகள் போல் இந்த மேட்டரில் முயற்சித்தால் அறிவாளி போல் ஆகிவிடலாம் என்று தோன்றுகிறது.

 

ஆனால், நம்முள் பெரும்பான்மையினர் சிந்தனையின் துணைக் கொண்டு அறிவு காட்டும் நெறியில் வாழ்வது கிடையாது. உணர்ச்சிகளால் உந்தப்பட்டே வாழ்கின்றோம். மற்றவர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தடுமாறி கோபப்படும் போது நாமும் பதிலுக்கு கோபத்தையோ, வெறுப்பையோ காட்டிவிடுகிறோம். பிறரைப் பற்றி தரக்குறைவாகவோ அல்லது வீண் கதைகளையோ சொன்னால் பதிலுக்கு நாமும் பேச ஆரம்பித்து விடுகிறோம். தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது இல்லை. இந்தப் போக்கு உள்ளவர்கள் இன்னும் மனமுதிர்ச்சியை அடையவில்லை என்பது தான் அர்த்தம். (இதற்கு முழு உதாரணம் என்னைக் கூட சொல்லலாம்; உங்களில் பலரும் என்னைப் போல் இருக்கலாம்)

 

உணர்ச்சிகளால் உந்தப்பட்டு வாழும் மனிதர்களைப் பற்றி பிரெஞ்சு தத்துவஞானி "மான்டெயின்" சொல்கிறார்:

 

"ஒரு மனிதன் நிகழ்ந்து விட்ட சம்பவத்தால் உணர்ச்சிவசப்பட்டு புண்படுவதை விட, சம்பவத்தைப் பற்றி தான் கொள்ளுகின்ற அபிப்பிராயத்தாலேயே புண்படுகிறான். மடுவை மலையாக்காதீர்கள். மற்றவர்கள் உங்களைப் புண்படுத்துவதற்காகப் பேசினால், உங்களை அவமானப்படுத்தவதற்காகப் பேசினால் அவர் நோக்கம் நிறைவேற எதற்காக நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்கிறார்".

 

என்னை கேவலமாகப் பேசிவிட்டானே! மற்றவர்கள் முன் நம்மை அவமானப்படுத்தி விட்டானே! என்று முடங்கிக் கொண்டிருந்தால் என்னாவது? செய்த தவறுகளை இனிவராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நமக்குள் எச்சரிக்கை உணர்வை உருவாக்கிக் கொண்டால் மனம் கவலையில் இருந்து மீண்டு விடும். பாதிப்புக்களும் குறைந்து விடும். ஆனால், நமக்கு இந்த மாதிரி சிந்தனை செய்வது கடினமாக இருக்கிறது. உணர்ச்சிகளுக்கு ஆளாவது மிக எளிதாக இருக்கிறது. இந்தப் போக்கிலேயே நாம் வாழ்ந்தும் உணர்ச்சிகளை வழிகாட்டிகளாகவும் வைத்துக் கொண்டிருந்தோமானால் எதையும் சாதித்து விட முடியாது.

 

கோபங்கள், விவாதங்கள், விமர்சனங்கள், பொறாமைகள், அற்ப ஆசைகள், அழுகைகள் இவற்றிலேயே நம் வாழ்நாள் முழுவதும் ஒடிவிடும். "அழுகை பேச்சின் பிரதிநீதி" என்று "ஃப்ரீட்ஸ்கான்" என்ற ஜெர்மன் டாக்கர் சொல்லுவார்.

 

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருநிலை மூளைக்கு ஏற்பட்டு விடுகிறது. தனக்கு அக்கிரமம் நடந்து விட்டதாக உணரும் போதும் அல்லது நம் தவறுகளை மறைக்க முற்படும் போதும், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துக்கம் நம்மை ஆட்கொள்ளும் போதும், அத்தகைய சூழ்நிலைகளைச் சமாளித்து மற்றவருக்கு தன் மனநிலையைக் காட்ட மூளை பயன்படுத்தும் செயல் தான் அழுகை என்கிறார். பல சந்தர்ப்பங்களில் சொற்களை விட அழுகைகள் மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. அநேக பெண்கள் இந்த யுக்திகளைத் தான் கையாளுகிறார்கள். இப்படிப்பட்ட பலவீனப் பழக்கங்களை மாற்ற வேண்டுமானால் நாம் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் பழக்கத்தை மாற்றி நம் சிந்தனை சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

இக்கட்டான சூழ்நிலைகளில் நம் உள்ளத்தில் பொங்கி எழுகின்ற உணர்ச்சிகளே நமது அறிவை மழுங்கடித்துச் சிந்தனை சக்தியை அழித்து விடுகிறது. நம்மிடம் உணர்ச்சிகள் ஏற்படும் போது அதன் தாக்கங்கள் குறையும் வரையிலும் பேசாமல் அமைதியாக இருந்து பழக்கப்படுத்திக் கொண்டால் நாளடைவில் நம்மைப் பக்குவப்பட வைத்துவிடுகிறது.

 

"பக்குவம் என்பது அனுபவத்தால் வருகிறது. நடந்த போய் விட்ட சம்பவங்களைக் குறித்து அவை சரியா? தவறா? என்ற ஆராய்ச்சியில் பேசிக் கொண்டிருப்பது வீண் வேலை. அவைகளைப் புரிந்துக் கொள்வதும் அவைகளிலிருந்து அனுபவம் பெறுவதுமே பயன் அளிக்கும்" என்கிறார் காந்தி. (இங்கே காந்தியின் வாக்கியங்களின் முக்கியத்துவத்தை மட்டுமே சுட்டுக்காட்டுகிறேன். ஆனால் இதற்கு நேர்றையான நடத்தை கொண்டவர் மகாத்மா.)

 

வாயைப் பொறுத்த அளவில் உணர்ச்சி வசப்படும் போது தான் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முட்டாளின் இதயம் அவன் வாயில் உள்ளது. ஆனால் "அறிவாளியின் வாய் அவன் இதயத்தில்" உள்ளது. என்று ஓர் பொன் பொழி உண்டு. செய்வதறியாது, பேசுவதறியாது, குழம்பிப் போயிருக்கும் நிலைகளில் எல்லாம் வார்த்தைகள் நமக்கு தாறுமாறாக அடாவடித்தனமாக தான் வரும். இந்த வார்த்தைகள் தான் பின்னர் வருந்தும்படியான சூழ்நிலையை உண்டாக்கும். நம்முடைய வாயில் வார்த்தைகள் இருக்கும் போது அவை அவை நமக்குச் சொந்தம். ஒருமுறை பேசப்பட்ட போது அது மற்றொருவருக்குச் சொந்தம்.

 

"பெஞ்சமின் பிராங்க்ளின்" என்ற அறிஞர் சொல்வார்:

 

"தேவை இல்லாத போது வாயை மூடிக் கொள்ளுங்கள். சரியான சந்தர்ப்பம்  வந்தால் சொல்லுங்கள். சொல்வதை தீவிரமாகச் சொல்லுங்கள்."

 

தமிழச்சி
07.09.1997