புலிகளின் துணையுடன் தான், இன்றும் ஏன் நாளையும் கூட வன்னியில் மக்கள் இறப்பார்கள். இன்று தமிழ் மக்களின் எமன் புலி. புலியிருக்கும் வரை தமிழ் மக்களின் இறப்பு மட்டும்தான், புலி தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அரசியலாக புலியிடம் எஞ்சியுள்ளது.

 இப்படி எமனாக நின்றே தமிழ்மக்களைக் கொல்ல பேரினவாதத்திடம், தமிழ்மக்களை பலி கொடுக்கின்றது புலி. இதில் இருந்து தப்பிச் செல்லமுனையும் மக்களையே, புலிகள் சுட்டுக் கொhல்லுகின்றனர். கொடுமையிலும் கொடுமை, கொடூரத்திலும் கொடூரம். இன்று தமிழ் மக்களை பாதுகாக்கவும், குரல்கொடுக்கவும் யாரும் கிடையாது.

 

தாம் பணயக்கைதியாக வைத்துள்ள மக்கள் தம்மிடமிருந்து தப்பியோட முனையும் போது, புலிகள்  சுட்டுக் கொல்லுகின்றனர். இதற்கு முன்னம் தப்பியோட திட்டமிட்டவர்களுக்கு பகிரங்கமான மரணதண்டனை விதித்தும், மொத்த சமூகத்தையும் அச்சமூட்டும் வண்ணம் கூட்டாக தீயிட்டும் கொழுத்தினர். அவர்களையும் பேரினவாதம் கொன்ற பட்டியலுக்குள் சேர்த்துக் கொண்டனர். பழமொழி ஒன்று கூறுவார்கள், யானை இருந்தாலும் 1000 பொன், செத்தாலும் 1000 பொன் என்பார்கள். இப்படி மரணமடையும் மக்கள், புலியின் அரசியலாகும் வியாபாரக்கணக்குள் அடங்குகின்றனர். இன்று தம் உயிரை பாதுகாக்க அவர்கள் தப்புவது, துரோகமாக கருதப்பட்டு கொல்லப்படுகின்றனர், தூற்றப்படுகின்றனர்.

 

இதையெல்லாம் சரி என்று நியாயப்படுத்தும் புலம்பெயர் புலிப் பினாமிகள். புலியை பாதுகாக்க, மக்கள் மரணிப்பது தவறல்ல என்கின்றனர். பேரினவாதம் கொல்லக்கொல்ல, மக்கள் போராட்டத்தில் இணைவார்களாம். போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தருவார்களாம். இந்த வகையில் புலம்பெயர் நாடு முதல் தமிழ்நாடு வரை, தமிழனின் மரணங்கள் பிழைப்புக்கான அரசியலாகின்றது.

 

இதனால் மக்கள் வாழ்வதற்காக போராடுவதும், உயிரை பாதுகாக்க முனைவதும், இன்று புலித்தேசியத்துக்கு எதிரான குற்றம்;. பேரினவாதம் தமிழ் மக்களை கொத்து கொத்தாக கொல்வதற்கு, பணயக் கைதிகளாக உள்ள தமிழ் மக்கள் நிபந்தனையின்றி உடன்படவேண்டும். ஏக பிரதிநிதிகளின் அரசியல் இது. இது தான் அங்கு புலிகளின் சட்டம். புலம்பெயர் மண்ணில் இதைத்தான் பிரச்சாரம் செய்கின்றனர்.

 

கொல்வதைக் காட்சிப்படுத்தவும், கொன்றவர்களிள் பட்டியலை தயாரிக்கவும், அதை உடன் பிரச்சாரம் செய்யவும், வன்னியில் இதற்கு தயாராகவே ஒரு கூட்டத்தை புலிகள் நிறுத்தி வைத்துள்ளனர். அதை புலம்பெயர் நாடுகளில் மலிவாக பிரச்சாரம் செய்து, புலியை பாதுகாக்க புலிப் பினாமிக் கூட்டம் ஓநாய்களாக நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு அலைகின்றது.

 

அன்றாடம் எவ்வளவு மக்கள் கொல்லப்படுகின்றனரோ, அந்தளவுக்கு புலியை பாதுகாக்க முனையும் கும்பலுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பிரச்சாரத்தின் மகிமையே இதில் தான் அடங்கியுள்ளது. வேள்வியை நடத்தியவர்கள் பக்தி பிரசவத்துடன், ஐஜயோ பார் இந்த தமிழன் படுகொலையை, இந்த அநியாயத்தை பார் தமிழா, என்று வில்லிசைக்கின்றனர். இதை ஏகாதிபத்தியத்துக்கும், அதன் தொண்டர் நிறுவனங்களுக்கும், தம் பிரசாரத்தின் ஒரு பகுதியாக அனுப்பிவைக்கின்றனர். ஐஜயா புலியைக் காப்பாற்றுங்கள் என்று இரங்கி வேண்டுகின்றனர். இப்படி இதற்கு வெளியில் புலி தன்னை பாதுகாக்க, வேறு எந்த அரசியலும் புலியிடம் கிடையாது.

 

முன்பு இவர்கள் எத்தனை இராணுவம் செத்தது, எத்தனை ஆயுதங்கள் கைப்பற்றினர் என்றதை வைத்தே, மோட்டு தமிழனுக்கு அவர்களை முட்டாளாக்கும் பிரச்சாரம் செய்தனர். இன்று எத்தனை தமிழன் செத்தான், எத்தனை பேர் காயம் என்று சொல்லிப் பிரச்சாரம். இப்படி இதற்குள்ளாகவே புலியை பாதுகாக்கும் புலி அரசியல். இந்த அரசியலில் தமிழனின் மரண எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மக்களை தம்பக்கம் வைத்திருக்க கிடைக்கும் இந்தப் பிரச்சாரத்தால் மகிழ்ச்சி பூரித்துப் போக, தமிழன் தம் பின்னால் அணிதிரளுகின்றான் என்ற பெருமிதம் பொங்க அதிகார வீரநடை போடுகின்றனர்.  

 

இன்று தமிழனின் மரணமின்றி, எந்த மாற்று அரசியலையும் செய்ய புலியிடம் எதுவும் கிடையாது. இன்றும், நாளையும், நாளை மறுநாளும், ஏன் புலி இருக்கும் வரை, மக்கள் கூட்டம் கூட்டமாக புலிகளின் இருப்புக்காக செத்தேயாக வேண்டும். இதுதான் புலியின் போராட்டத்தின் தர்க்கம். இன்று புலி தன்னைப் பாதுகாக்க, தன் மீட்சிக்காக, இதைத்தான் இந்த வழியைத்தான் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

இப்படி மக்களைக் கொன்று வாழ நினைக்கும் புலியின் அரசியல் இருப்பு, எம் மக்களுக்கு அவசியமற்றது. இதை சொந்தமாக அனுபவிக்கும் எந்த மக்களும், புலியின் இருப்பை அங்கீகரிப்பதில்லை. இதற்கு 'விடுதலை" இயக்கம் என்று பெயர். மாபியா நடைமுறைக்கு வெளியில், அதனிடம் எந்த விடுதலை அரசியலும் கிடையாது. இதை வைத்துத்தான் இன்று சிங்களப் பேரினவாதம், வெற்றி கொள்ளுகின்றது.

 

மக்களை பணயம் வைத்து தம்மை பாதுகாக்க முனையும் மாபியா புலியிசத்தின் மேல், ஒரு இனஅழிப்பாக, இனக் களையெடுப்பாக, இன சுத்திகரிப்பாக, தமிழனையும் சேர்த்து படுகொலை செய்தே, புலியை பேரினவாதம் அழிக்கின்றது.

 

இதில் இருந்து தம்மை பாதுகாக்க, மக்களை புலி பலியிடுகின்றது. தமிழ் மக்களை பாதுகாக்க, புலிகள் தயாராகவில்லை. அந்த மக்கள் தம்மைப் பாதுகாக்க தாமே முனைந்து, யுத்தமற்ற பிரதேசத்துக்கு செல்ல புலிகள் அனுமதிக்கவில்லை. இதை மீறும் போது, மக்களையே அவர்கள் சுட்;டுக்கொல்லுகின்றனர்.

 

இன்றும், நாளையும்..  நிச்சயமாக பல நூறு மரணங்கள் உண்டு என்பதும், இதை படமெடுத்து பிரச்சாரம் செய்யத்தான் புலிகள் தயாராக உள்ளனர். இந்த மரணத்தை தடுப்பதற்காக, அவர்கள் தயாராகவில்லை. அவர்கள் இதை தடுக்க நினைத்தால் மட்டும் முடியும். ஆனால் அதுவா புலியின் அரசியல். இல்லை. மாறாக புலி தன்னைப் பாதுகாக்க, யுத்தமுனையில் மக்களை பணயமாக வைத்துள்ளது. இந்த மக்களை புலிகள் பணயமாக நிறுத்தவில்லை என்றால், புலிகள் இன்று இல்லை. இது தான் எதாhத்தம். மக்களைக் கொன்றால், அதை  வைத்து பிரச்சாரம் செய்து, புலியை பாதுகாக்க முனைகின்றனர். இதனால் அன்றாடம் புலிகள் வேள்வியை நடத்துகின்றனர். இன்றும் நடக்கும். நாளையும் நடக்கும். நல்ல பிரச்சார விருந்தும் நடக்கும்;. இதற்கு வெளியில் தமிழ் மக்கள் மேல் எந்த அக்கறையும் இவர்களிடம் கிடையாது. தமிழ் மக்கள் என்று இவர்கள் உச்சரிப்பது, மக்கள் தமக்காக சாகவேண்டும் என்ற அக்கறையின்பால் தான். இப்படி இன்று கொல்லப்பட தமிழ்மக்கள், இதை வைத்து பிரச்சாரம் செய்ய தமிழ் மக்கள். இதைத் தாண்டி தமிழ் மக்கள் என்று சொல்லி, அவர்களுக்காக எதையும் சொல்ல செய்ய புலியிசத்திடம் எதுவும் கிடையாது. தமிழ் மக்களை பாதுகாக்கும் அரசியல் மற்றும் நடைமுறை கிடையாது. ஆனால் புலியை பாதுகாக்க, மக்களை பலியிடுவது என்பதுதான் இன்றைய அரசியல் வியாபாரக்கணக்காகியுள்ளது.  

 

பி.இரயாகரன்
28.03.2009