என்ன செய்தாவது –
எப்படி வேண்டுமானாலும்
ஏமாற்றியாவது பதவி பெற
வேண்டியதே இன்று
காங்கிரசின் ஜீவாதாரமான
கொள்கையாக இருக்கிறது.


காங்கிரஸ்காரர்கள் பதவி மோகத்தில்
தங்களுடைய கொள்கை, நாணயம்
எல்லாவற்றையும் காற்றில்
பறக்க விட்டு விட்டுப்
"பிசாசு"கள் போல் பதவி ஆசை
பிடித்து அலைகிறார்கள்.

 

உத்தியோகத்துக்கும், பதவிக்கும்,
சம்பளத்துக்கும் ஆசைப்பட
யாருக்கும் உரிமை உண்டு என்பதை
 நான் மறுக்கவில்லை. ஆனால்,
நாணயத்துடன் ஆசைப்பட வேண்டாமா
என்று தான் கேட்கின்றேன்.
மத விகிதாச்சாரம்,
வகுப்பு விகிதாச்சாரம் பிரித்து
அனுபவிப்பது என்று காங்கிரசுக்காரர்கள்
ஒரு வார்த்தையில் ஒப்புக் கொள்ளுவதானால்,
காங்கிரசே இந்த நாட்டு
அரசியல் கிளர்ச்சிக்குத் தலைமை
வகித்து நடத்துவதில் எனக்கு
ஆட்சேபணை கிடையாது.

 

அல்லது மதப் பிரிவும்,
வகுப்புப் பிரிவும், இந்தியாவில்
இல்லாமல் போகும்படிச்
சட்டம் செய்வோம் என்று
காங்கிரஸ் ஒப்புக் கொள்வதாயிருந்தாலும்,
காங்கிரசே இந்திய மக்களுக்குப்
பிரதிநிதித்துவ சபையாய் இருப்பதில்
எனக்கு ஆட்சேபனை இல்லை.

 

அந்தப்படி இரண்டும் இல்லாமல்
பல மதங்களையும், பல வகுப்புகளையும்
காப்பாற்றுவதாய் வாக்கு அளித்து விட்டு
அவற்றில் மதம் காரணமாகவும்,
வகுப்பு காரணமாகவும் இருந்து வரும்
உயர்வு – தாழ்வுகளைப் போக்கச்
சட்டம் செய்வதில்லை என்றும்
உறுதிமொழி கூறிவிட்டு,
மத உரிமை கூடாது,
வகுப்பு உரிமை கூடாது என்றால்
அது எப்படி யோக்கியமான காரியம் ஆகும்?
என்று கேட்கிறேன்.

 

"இது தேசத்துக்கு விரோதம்",
"அது சுயராஜ்யத்துக்கு விரோதம்"
என்று சொல்லுவதாலேயே
ஒவ்வொரு மதக்காரனும்,
வகுப்புக்காரனும், அரசியல் ஆதிக்கத்தையும்
அதனால் வரும் பயனையும்
அய்க்கிய மதக்காரனுக்கும் விட்டுக்
கொடுத்து விட்டு ஏமாளியாய் இருப்பானா?
என்று கேட்கின்றேன்.

 

ஒரு நாட்டின் தேசியத்துக்குப்
பல மதங்களும், பல வகுப்புகளும்,
பிரிவுகளும் இருப்பது
விரோதமில்லை என்றால்,
பல மதங்களுக்கும், பல வகுப்புகளுக்கும்
உரிமை இருப்பது மாத்திரம்
எப்படிக் கெடுதியாய் விடும்?
என்று கேட்கின்றேன்.

 

தேசியம் என்றால்
உத்தியோகமும், பதவியும் தானா
என்று சிலர் கேட்கிறார்கள்.
இவர்கள் தெரிந்து கேட்கிறார்களோ,
தெரியாமல் கேட்கிறார்களோ
என்பது ஒரு பக்கம் இருந்தாலும்,
இதுவரை கடந்து வந்த
தேசியக் கிளர்ச்சியில் உத்தியோகம்,
பதவி, சம்பளம் என்பவை அல்லாமல்
வேறு என்ன இருந்தது? அல்லது
வேறு என்ன கிடைத்தது?
அல்லது வேறு எதற்கு ஆக
தேசியக் கிளர்ச்சி பாடுபட்டது?
பாடுபடப்பட்டது?
என்று கேட்கின்றேன்.

 

காங்கிரசுக்கு வயது
50- ஆனாலும்
எனக்குக் காங்கிரசின் யோக்கியதை
30, 40- வருஷங்களாகவே
தெரியும்.

 

காங்கிரசின் கோரிக்கையே
உத்தியோகப் பிச்சையாகவும்,
சம்பளத்துக்குக் கெஞ்சுவதாகவும்
தான் இருந்து வந்தது.
அதற்காக ராஜபக்தியும்,
ராஜவிஸ்வாசமும் இருப்பதாகவும்
காட்டுவதாகவும் தீர்மானம் செய்வது
தான் காங்கிரசின் முக்கிய
வேலையாய் இருந்து வந்தது.
இன்றும் ஒவ்வொரு உத்தியோகத்திலும்
ஒவ்வொரு பிரதிநிதித்துவத்திலும்
ராஜவிசுவாசப் பிரமாணம்
செய்தே தீர வேண்டி இருக்கிறது.
இதே யோக்கியதையில் இருந்து வந்த
காங்கிரசுக்காரர்கள் இன்று
மகா தியாகிகள் போல் நடிப்பதைக்
கண்டு யார் ஏமாறக் கூடும்?
இது தகப்பன் வீட்டுப் பெருமையைத்
தம் தமயனிடம் சொல்லும்
முட்டாள் தனம் போன்றதேயாகும்.

தந்தை பெரியார்

 

{30.08.1936 அன்று கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவில் இருந்து சில.....}