அரச-புலி வன்னியுத்த்துக்குப் பின்னான அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொருவரும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப்படுத்துகிறார்கள்.இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப்

 பறிகொடுத்துத் தினமும் செத்துமடியும் மக்களது நலன் எதுவென்பதில் நமக்குக் குழப்பமாக இருக்கிறதா? அப்படி இருப்பதில் தவறில்லை.காரணம்:"நமக்குள்தாம் எதிரிகள் இருக்கிறார்கள்-வெளியில் இல்லை"என்பதால் இது முற்றிலும் ஒரு குழப்பகரமான சூழல்தாம்.

 

இங்கே,தொடர்-தொடராகச் செய்திகளை-பேட்டிகளை அள்ளிவரும் ஊடகங்கள் தத்தமது வரும்படியோடு மிகவும் கவனமாகவொரு அரசியலை நமக்காகக் காவி வருகிறார்கள்.அழியும் மக்களது வாழ்விலிருந்து விரிவுறும் பண வரும்படிக்கான-பதவிகளுக்கான அரசியல் தெரிவு,மீளவும் நமது மக்களது விடுதலைக்கு வேட்டு வைப்பதில் புலிகளது பாணி அரசியலே தெரிவாக்குகிறது.இது,சுயநிர்ணயவுரிமையெனக் கத்திக்கொண்டே கடைவிரிக்கும் புரட்சிகரக் குரல்,போலித்தனமாக, மக்களது விடுதலை-நலன் குறித்துக் குத்தகைக்கு எடுத்து வானொலிகளில் கட்டுரை வாசிக்கிறது-இணையத்தில் போட்டியிட்டுப் புரட்சி பேசுகிறது!


இங்கே, எவர் வேண்டுமானாலும் புலிகளை எப்படியும் மதிப்பிடலாம்.

 

தேசியச் சக்தியாகவோ,ஐயக்கிய முன்னணி அமைக்கத்தகு அமைப்பாகவோ அன்றிப் புரட்சிகரச்சக்தியாகவோ மதிப்பிடலாம்.ஆனால்,விடுதலைப் புலிகள் அமைப்பின் வரையறை ஒன்றேயொன்றென்பதை அவர்கள் மிக இலகுவாக உணர்த்தி வருபவர்கள்.தங்களைத் தவிரப்போராட்டப்பாதையில் எவர் பிரவேசிக்கிறாரோ அவரைப் பூண்டோடு துரோகி சொல்லிஒழித்துக்கட்டுவதே அது.

 

மிகத் தெளிவான அவர்களது வரையறை இன்றுவரையும் தொடர்கதையாக நீள்வதும்,மக்களின் எந்த உரிமையையும் "ஈழவிடுதலை"சொல்லி ஆயுத முனையில் பறிப்பதும் நாம் காணும் வரலாறாகவே இருக்கிறது.இவர்களே, வன்னியில் மக்களைத் தமது தேவைக்கேற்றபடி இலங்கை அரசிடம் பலியிட்டுவருபவர்கள் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.


நடசேனின் பேட்டியாக இருந்தாலென்ன இல்லைப் பிரபாகரனின் "மாவீரர்தின"உரையாகவிருந்தாலென்ன அனைத்தும் மிகப் பித்தலாட்டமான அரசியலைப் பேசுகிறது.நிபந்தலையின்றி இலங்கை அரசசோடு பேச விரும்புவதாகத் தோல்வியின் விளிம்பிலுள்ள புலிகள் சார்பாக நடசேன் அறிக்கைவிட்ட கையோடு,அவுஸ்த்திரேலிய வானொலிக்குப் பேட்டியளிக்கிறார்.அதையும் ஐரோப்பியத் தமிழ் வானொலி ஜேர்மனியிலிருந்து மறு ஒலிபரப்புச் செய்கிறது!


புலிகளது நிலை தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயத்துக்கான தமிழீழமே முடிந்த முடிவென்றுஞ் சொல்லும் நடேசன், இலங்கை அரசோடு எந்த மக்கள் நலன் சார்ந்து நிபந்தனையற்ற பேச்சுக்குச் சம்மதிக்கின்றார்?


ஒன்றுக்கொன்று மிக வியாபாரத்தனமாகக் கருத்துக்கூறும் புலிகளுக்குப் புதுப்புது விளக்கங்கள்-சித்தாந்தங்கள் சொல்லப் பலர் முழுநேரத் தொழிலாகப் பரப்புரை செய்துகொள்ளலாம்.எனினும்,மக்களுக்கும்,அவர்களது உயிர்த்திருப்புக்கும் குழிப்பறிப்பதில் புலிகளைக் காத்துச் சுயநிர்ணயத்தேடு முடிச்சுப் போடுவதில் கணிசமான மக்கள் அழிந்துபோவதையும் குறிகத்தவறுவது நியாயமாகிறதா?


தமிழீழத்தின் நீட்சி இப்போது சுயநிர்ணயவேடமாகிறது.இலங்கை அரசுக்குத் தமிழ்பேசும் மக்களது உரிமைக்குரல் எப்படிப் பயங்கரவாதமாகிறதோ அதே வண்ணத்தில்தாம் இதுவும் தமிழ்பேசும் மக்களது காதுகளில் பூச் சுற்றுகிறது?


எமது விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டபோது(மாற்றுப் போராட்டச் சக்திகளை அழித்தொழித்தது)எமது சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள் இந்த நடசேன் வகையறாக்கள்.அதாவது, தேசிய விடுதலைப் போரில் பிரவேசித்த அமைப்புகளைத் தோழமையோடு அங்கீகரித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டிய தருணம் முன்னிருக்கும்போது,ஏதோவொரு அரசின் நலனுக்காக அந்தந்த அமைப்புகளை அழித்ததென்பது சுந்தரத்தின் படுகொலையில் அதி உச்சம் பெற்றுப் புலிகள் ஏகாதிபத்தியங்களின் ஏவல் நாய்தாம் என்று உறுதிப்படுத்தியது அன்றைய வரலாறு அல்லவா?


இன்றோ அதே பாணி அரசியலைப் புலம்பெயர் தளத்தில் புலிகள் பற்பல வடிவத்தில் உருவாக்கி வருகிறார்கள்.இந்த அரசியல் எவரையும் விட்டுவைக்க மறுக்கிறது.பற்பல ரூபங்களில் இஃது அரசியல் முனைப்பைக்கொண்டிருப்பினும் இதன் தளம் பாசிசமே.இது,புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் இன்னொரு சக்தி உருவாவதை மிகக் கவனமாகத்தடுக்கப் புரட்சிகர அரசியலைக் கைலெடுத்து வைத்திருக்கிறது.கூடவே,மிகவும் கறாராக ஜனநாயக வேடந்தரித்து மாற்றுக் கருத்துச் சூழலைப் பூண்டோடு அழிப்பதில் புலிகளாகத் தமது இருப்பை நிறுவுகிறது.


இன்றைக்குப் புலிகளெனும் இயக்கத்தின் இருப்பைக் குறிவைத்து நகர்த்தப்படும் அரசியலானது இலங்கைமீதான இந்தியாவின் அபிலாசைகளில் பிரதிபலிக்கத்தக்கதாகும்.இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமானது இன்றைய ஈழத்து நிலைமைகளைக் உன்னிப்பாக உணரத் தலைப்பட்டதன் அடுத்தகட்டமாகக் காய்களை நகர்த்துகிறது,புலிகளாலும் மற்றும் இயக்கங்களாலும்-ஸ்ரீலங்கா அரசாலும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வை திசை திருப்புவதற்காகவும்,தொடர்ந்தும் இந்தியத் தேசத்தில் சார்ந்தியங்கும் எண்ணவோட்டத்தை முனைப்புற வைக்கவும் பற்பல செயல்களில் இன்றைய புலம்பெயர் மாற்றுக் கருத்துச் சூழல் அமிழ்ந்துள்ளது.இதற்கான முன் தயாரிப்பாக அது வன்னியுத்தத்தைப் பலவாறாகப் பயன்படுத்துகிறது.


1:புலிகளை இராணுவரீதியாகப் பலவீனப்படுத்துவது,


2:அரசியல் பேரம் பேசமுடியாத தரகுக் கட்சியாக்குவது,


3:பிரபாகரனது தலைமைக்கு நிகராக புலிகளுக்குள் இருக்கும் ஒருவரை முன் நிலைப்படுத்துவது,


4:இலங்கை அரசோடு நிபந்தனையற்ற பேச்சுக்குச் சென்று அரைகுறைத் தீர்வோடு சரணாகதியடைய வைப்பது,


5:அத்தகைய நிலைமையில் அரசியல் அதிகாரத்தைப் புதியவகைப் புலிகளோடு பங்கீடு செய்வது எனும் அரசியல்.


வன்னி யுத்தத்துக்குப் பின் இத்தகைய நிலையைப் புலிகள் அடைந்து வருகிறார்கள்.

 

இதை நடசேன் அளித்த வானொலிப் பேட்டியில் நாம் குறித்துணர முடியும்.எனினும்,இதை அவர்கள் அடைவதற்காக இன்றுவரையும் மக்களைப் பலியிடுவதில் பேரம் தலைமையைக் காத்தலோடு சம்பந்தமுடையதாகவும் இருக்கிறது.இது,தமிழீழத்தின் பேரால் நடப்பது சுத்த அரசியல் மோசடி.இதைவிட மோசடி ஜனநாயகத்தினதும்,சுயநிர்ணயத்தினதும் பேரால் மக்கள் ஏமாற்றப்படுவது!

மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.


எமது மக்களை நம்பாத அரசியற் கொள்கைகள்-தலைமைகள் அந்நிய நாடுகளால் நமது மக்களின் "தேசிய"அபிலாசைளை, நாடமைக்கும் விருப்புறுதிகளைப் பெற்றுவிட முடியுமென ஒளிவட்டங்களை குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஜனநாயகத்தின் பெயரால் கட்டிவிடுகிறார்கள் புலிப்பாணித் தமிழ் அரசியல் தரகர்கள்.

 

புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் மக்களது அரசியல் வாழ்வில்-பிரக்ஜையில் சமுதாய
ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் "இனவொதுக்கலுக்கு"எதிரான தமிழ்த் தேசிய அபிலாசையானது


எந்தத் தடயமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது


இன்றைய நெருக்கடிமிக்க வன்னியுத்தக் காட்டுமிராட்டித் தனத்துக்குத் தீர்வாகாது!
இத்தகைய மக்கள் தமக்குள் இருக்கும் அரசியல் கயர்வகளை இனங்கண்டு,அவர்களது அரசியலை மறுக்காதவரையும் எவரும் புரட்சிகரச் சக்தியாகத் தம்மை இனங்காட்டி நம்மை ஏமாற்றித் தமது தரகு வேலையைச் செவ்வனவே செய்வார்கள்.இதுவே,நமது மக்களது விடுதலைக்கு முட்டுக்கட்டையான அரசியலாகவும் மீளவும் கொலைகளைச் செய்யும் இயக்கவாதமாகவும் நகர்கிறதுக்குக் கட்டியம் கூறுகிறது.

 

தமிழ் மக்களின் வரலாற்று வாழ்வாதாரங்களையும் அவர்களின் ஐதீகங்களையும் மெல்ல அழித்துவரும் அரசியலைத் தமிழ் மக்களைக்கொண்டே அந்நியச் சகத்திகளும் இலங்கையும் அரங்கேற்றி வருகின்றன.பேராசை,பதவி வெறி பிடித்த வலதுசாரித் தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தாம் சோரம் போகிறார்கள்.இவர்களிடம் இருக்கும் அரசியல் வெறும் காட்டிக்கொடுக்கும் அரசியல்தாம்.நிரந்தரமாகத் தமிழ் மக்களை ஏமாற்றித் தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதில் அவர்களின் நோக்கம் மையங் கொள்கிறது.ஆனால்,சிங்கள அரசின் அதீத இனவாதப் போக்கானது இலங்கையில் ஓரினக் கோசத்தோடு சிங்கள மயப்படுத்தப்படும் தூரநோக்கோடு காய் நகர்த்தப்படுகிறது.இந்தத் திட்டமானது மிகவும் இனவொடுக்குதலுக்குரிய மறைமுக நோக்கங்களை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்குள் வற்புறுத்தி வெற்றி கொள்கிறது.

 

இத்தகையவொரு சந்தர்பத்தில் இந்தியா,சிங்கப்பூர் என்று ஊர் சுற்றித் திரியும் புலியாதரவு-புலியெதிர்ப்புக் கபோதிகள் தங்கள் அரசியல் இலாபங்களுக்காகத் தமிழ்பேசும் மக்களக்கான "தீர்வுப் பொதிகளை"தயாரித்து தீர்வு நோக்கிச் செல்வதென்பது இந்தியாவின் நலனை முழுமொத்தத் தமிழ்மக்களது ஒத்திசைவோடு இலங்கையில் ஊன்றுவதற்கானதாகவே பார்க்கலாம்.

 

இப்போது, உலகஞ் சுருங்கிவிட்டது.இலங்கையின் இனப் பிரச்சனை வெறும் இரு இனங்களுக்கிடையிலான சிக்கலல்ல.அது, முழு மொத்த தென்னாசியப் பிராந்தியத்தினதும் பிரச்சனையாகும்.இங்கேதாம் தமிழ் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றித் தத்தமது எஜமானர்களைத் திருப்பத்திபடுத்தும் காரியத்தில் இறங்கி, நமது மக்களை அடியோடு கொன்றடிமையாக்கும் வன்னி யுத்த அரசியலை ஜனநாயகத்தின் பெயராலும்,புலிப் பாசிசத்தின் பெயராலும் ஒப்பேற்றி வருகிறார்கள்.இவர்களே தமது பழைய பெரிச்சாளிகளை ஐரோப்பாவெங்கும் சந்தித்து அனைத்து ஒத்துழைப்பையும் மக்களின் பெயரால் செய்து தரும்படி காத்துக்கிடக்கிறார்கள்?

 

இந்த அரசியல் நிரலுக்குள் புலிகளின் போராட்டம் தொடர்கிறது,மக்களைக் கேடயமாக்கியபடி!


இது, ஈழத்தைப் பெற்றுத் தருமெனப் பலர் நம்பிக்கிடக்கிறார்கள்!


இங்கே, மொழிக்காக,இனத்துக்காக,தேசத்துக்காக "உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டு, மனித ஆளுமையைக் காவு கொள்கிறது தமிழீழப் போராட்டம்.இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற "வர்க்க"அரசியலானது மண்ணையும்,மொழியையும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு மனித விழுமியத்தை ஒருநாளும் முதன்மைப் படுத்துவதில்லை.இது, இந்தச் சிந்தனையை உயர்வாகவெண்ணுவதுமில்லை.இதையேதாம் புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் "மாற்றுக் கருத்தாளர்கள்,ஜனநாயகவாதிகள்,புரட்சிகரச் சிந்தனையாளர்கள்"எனும் அட்டவணையுள் புலிகளதும்,இலங்கை-இந்திய அரசுகளதும் ஏவல்படைகள்-குழுக்கள் செய்துவருகிறார்கள்.இவர்கள் மத்தியில் நாம்...


ப.வி.ஸ்ரீரங்கன்
26.03.09