05182022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

இன்றைய சமூக கட்டமைப்பிலும் மனிதன் அடிமையே!

எப்போதும் சமூதாய அமைப்புகள் ஒரே மாற்றத்தில் இயங்கிக் கொண்டிருப்பதில்லை. இன்றைய நாகரிகங்களாக கருதப்படுகின்றவை நாளைக்கு அநாகரிகமாக தெரிகிறது. இந்த அநாகரிக மாற்றம் சமூகத்தில் எப்படி ஏற்படுத்தப்படுகிறது?

 

 

ஒரு சமூதாயத்தின் பொருளாதார நிலைமையை முன்னிருத்தி அச்சமூதாயத்தின் சட்ட திட்டங்கள் ஒழுக்கங்கள் கலாச்சாரங்கள் பண்பாடுகள் இருக்கின்றன. அப்படியானால் இச்சமூதாயத்தின் அமைப்புகள் என்பவை எவை? ஒவ்வொரு சமூகத்திலும் இருப்பவர் சுரண்டுபவர்களாகவும், இல்லாதவர்கள் சுரண்டப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். இல்லாதவரை சுரண்டுவதற்காக என்னென்ன முறைகள் கையாளப்படுகின்றன? அப்படி கையாளப்படுவதற்கான வழிமுறைகள் எப்படி உருவாக்கப்படுகிறது? உருவாக்கப்பட்ட வழிமுறைகளை எப்படி செயல்படுத்துகின்றது?

 

அந்த காலத்தில் ஆண்டான்- அடிமைத்தனத்திற்கென ஒரு நீதி சொல்லப்பட்டது. மனிதர்களை வலை வீசி பிடித்தார்கள். சந்தையில் மனிதர்களை அடிமைகளாக விற்றார்கள். அடிமை என்பவன் மிருகத்தை விட கீழாக சமூகத்தில் நடத்தப்பட்டான். மிருகங்கள் இருக்கும் கொட்டகையே அவனுக்கும் இருப்பிடமானது. ஒரு மனிதன் எவ்வளவு அடிமைகளை வைத்திருக்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு அவனுக்கு சமூகத்தில் மதிப்பு இருந்தது. அந்த அடிமை முறை ஒழிக்கப்பட்ட போது அத்துடன் அடிமை முறை மானிட சமூகத்தில்  ஒழிந்ததா?

 

எப்போதுமே சமூகத்தில் இரு பிரிவுகள் இருந்துக் கொண்டே இருக்கின்றன. ஒருவர் சுரண்டுபவர் இன்னொருவர் சுரண்டப்படுபவர். இப்படிப்பட்ட மனிதர்களுக்குள்ளும் பொருள்களுக்குள்ளும் இடையே அவ்வப்போது நடைப்பெறும் மதிப்பீடு மாற்றங்கள் தான் சமூதாய அமைப்புகளை நிர்ணயிக்கின்றன. ஆண்டான் - அடிமைகள் முறைக்கு எப்போதும் ஓர் ´மகத்துவம்´ சொல்வதுண்டு. அடிமைகளை வேலை வாங்குவதும், அடிமைகள் என்பவர்கள் முதலாளி என்பவனுக்கு அடிப்பணிந்து போவதும் இருபிரிவினருக்கும் இடையே சமூகமாக இருக்கும் இருக்கும் என்பதும், அப்படி இருக்கும் போது தான் சமூதாயத்தின் நலன் பாதுகாக்கப்படும் என்றே சொல்லப்பட்டு வருகிறது. இந்த கருத்தை அடிப்படையாக வைத்தே சட்டங்கள் செயல்படுகின்றன. சட்டங்கள் கட்டமைப்புகளை உருவாக்கும் அதிகாரம் சுரண்டப்படுவர்களிடமே இருக்கும் போது சுரண்டப்படுபவர்களுக்கான உரிமையை எங்கே சென்று கேட்பது?

 

இன்னொரு பக்கம் பொருள் உற்பத்தி முறையில் மாற்றங்கள் ஏற்படும் போது புதிய புதிய ஆராய்ச்சிகள் மக்களுடைய அறிவு விருத்திகள் பொருளுற்பத்தி சாதனங்களின் பெருக்கங்கள் அல்லது மாற்றங்கள் நிகழும் போது சமூகத்தில் தானாகவே மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதேபோல் ஒரு சமூகத்தில் உள்ள மக்களால் தங்களுடைய தேவைகளுக்கானப் பொருட்களைப் பண்படுத்தி பயன்படுத்தி கொள்ளும்போது அந்தப் பண்படுத்திக் கொள்ளும் முறையிலும் பயன்படுத்திக் கொள்ளும் முறையிலும் எந்த அளவுக்கு மாற்றங்கள் செய்துக் கொள்கிறார்களோ அந்தளவுக்கு அந்த சமூதாயத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே ஒரு சமூதாய அமைப்பினிலே ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கிய காரணம் சமூதாய பொருளாதார நிலைதான்.

 

பொருளாதார நிலைமையையொட்டி சமூதாய சட்டத்திட்டங்கள், அறநீதிகள், ஒழுக்க முறைகள், இலக்கிய வளர்ச்சி, மத உணர்ச்சி போன்றவைகள் இருக்கின்றன. இந்த கோட்பாட்டையே மார்க்ஸீயம் முன்னிலைப்படுத்துகிறது. மார்க்ஸீயத்தின் உயிர்நாடி இவை என்று கூட சொல்லலாம். மானிடத்தின் படிப்படியான வளர்ச்சி என்பது பல காலகட்டத்திலும் பொருளாதார மாற்றங்களின் வளர்ச்சியினால் மாற்றம் அடைந்து வந்திருக்கிறது என்பது மார்க்ஸீயத்தின் சித்தாந்தம்.

 

மார்க்ஸியத்தின் இச்சித்தாந்தம் பல்வேறு விதங்களில் திரிபுவாதம் செய்யப்பட்ருக்கிறது. மார்க்ஸீம் ஏங்கெல்ஸிம் ஒரு குறிப்பிட்ட சமூதாய அமைப்பை பொருளாதாரத்தின் அடிப்படையை மட்டுமே வைத்து நிர்ணயிக்க முற்பட்டதில்லை. ஏங்கெல்ஸ் ஜே.ப்ளாக் டாட்டேட் என்னும் தன் நண்பருக்கு சமூதாய அமைப்புகள் பொருளாதார மாற்றங்களின் மூலமே சமூக மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதைக் குறித்து கடித்தம் மூலமாக விவாதித்துக் கொள்கிறார்கள். அதில் ஏங்கெல்ஸ் எழுதிய சில கருத்துத்துக்கள் :

 

"உலகக் கண்கொண்டு மானிட ஜாதியின் சரித்திரத்தைப் பார்ப்பது என்ற கோட்பாட்டின்படி சரித்திரப்போக்கை நிர்ணயித்து பார்க்க வேண்டும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்கிற முறையைப் பொறுத்தே இருக்கிறது. இதற்கு அதிகமாக மார்க்ஸோ, நானோ ஒன்றும் சொல்லவில்லை. இதைத் திரித்துப் பொருளாதாரம் ஒன்றுதான் சரித்திரப் போக்கை தீர்மானிக்கிறது என்று நாங்கள் சொல்வதாக யாரேனும் சொல்வார்களானால்.....

 

அவர்கள் நாங்கள் சொல்லி இருக்கும் கருத்தை அர்த்தமில்லாமல் செய்துவிட்டவர்களாவார்கள். சமூதாயம் என்னும் கட்டடத்திற்கு பொருளாதாரம் என்பது அஸ்திவாரம் போன்றது. கட்டிடத்தின் மேல் பாகம் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக எழுந்த அரசியல் அமைப்பு போன்றவை. இந்த அரசியல் அமைப்பில் சட்டமுறைகள் தத்துவங்கள், மதக்கோட்பாடுகள் முதலியவைகள் சேர்ந்தே சரித்திரப்போக்கை நிர்ணயிக்கின்றது. (Marx - Engels Correspondence : Letter to J. Block dated 21-9-1890)

ஏங்கெல்ஸ் வார்த்தைகளை அடிக்கடி அடிக்கோளிட்டு பேச வேண்டிய சமூக சூழல் இன்றும் நம்மிடம் இருந்து கொண்டிருக்கிறது. மற்றப்படி இன்றைய சரித்திரப் போக்கை நம்மால் உறுதியாக பேசமுடியாவிடினும் நம்முடைய சமூக கட்டமைப்பில் மனிதனிடம் இருந்து அடிமைத்தனம் இன்னும் விலகிவிடவில்லை. ஆளப்படுபவர்களால், சுரண்டப்படுவோர்களால் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தான் இருக்கிறோம்.

தமிழச்சி
24.03.2009


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்