08112022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

அரச ஆதரவு 'ஜனநாயகம்" பேசும் எட்டப்பர்களின் ஈமெயிலும், எமது பகிரங்க பதிலும்

எதையும் நாம் இன்று மூடி மறைக்க முடியாது. எல்லா மக்கள் விரோத எதிர்ப்புரட்சி கும்பலையும், நாம் அம்பலப்படுத்த வேண்டும். இந்த வகையில் நாம் அம்பலம் செய்த 'இரகசிய ஆவணம் : சிங்கப்பூரில் புலம்பெயர் 'ஜனநாயகத்" துரோகிகளும்இ பேரினவாத அரசும் நடத்தும் இரகசிய சதிக்கூட்ட ஆவணம்" மீது எனக்கு நன்கு தெரிந்த புலியெதிர்ப்பு அரச சார்பு 'ஜனநாயகவாதி" தன் நெற்றிக் கண்ணையே திறந்துள்ளது. இந்த வகையில் அரசுக்கு ஆதரவாக புலியெதிர்ப்பு 'ஜனநாயக" பேசும் அணியைச் சேர்ந்த பாலசூரியன் எமக்கு அனுப்பிய மின்னஞ்சலும், அதற்கான எமது பகிரங்கப் பதிலும்.  

 

 

'ரயா,
 
நேற்றும் இன்றுமாக மூன்று தடவை, உனது இரகசிய ஆவணக் கண்டுபிடிப்பொன்றை படிக்குமாறு எனக்கு மினனஞ்சல் போட்டுள்ளாய். ஏன் ஒரு தடவை மின்னஞ்சல் போட்டால் போதாதா?
 
இலங்கை அரசாங்கத்துடன் ஜனநாயக சக்திகள் பேசுவதில் என்ன தவறு?
 
இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கடிதமும் நிகழ்ச்சிநிரலும் எப்படி இரகசிய ஆவணம் ஆகலாம்?
 
பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம், வட்டமேசை மகாநாடு, திம்புப்பேச்சு வார்த்தை போன்றவற்றில் உனக்கு உடன்பாடானவர்களா இலங்கை அரசாங்கத்துடன் பேசினார்கள்?
 
இதைவிட இலங்கை அரசாங்கத்துடன் புலிகள் பலதடவைகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போதும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என புலிகள் அறிக்கை விடுகின்றார்கள். இவற்றைப் பற்றியெல்லாம் ஒன்றும் பேசாது, ஜனநாயக சக்திகள் பேசுவதைமட்டும் ஏன் சாடுகின்றாய்?
 
உனது கருத்துக்களுடன் உடன்பட மறுப்பதும், உனக்கு உடன்பாடற்றவர்களை ஆதரிப்பதும் பிறரது ஜனநாயக உரிமை.
 
 
இப்படிக்கு, பாலசூரியன், 23-03-2009"

முதலில் மூன்று தடவை மின்னஞ்சல் போட்டதாக குறிப்பிட்டீர்கள்;. இந்த தவறுக்கு மன்னிக்கவும். மின்னஞ்சல் மூலம் இணையத்தளத்தை எடுத்துச் செல்லுதல், கடந்த ஒரு கிழமையாகத்தான் தொடங்கியுள்ளோம். இதில் உள்ள சில தொழில் நுட்ப பிரச்சனைகள் தான், மூன்று தடவை ஒரே மின்னஞ்சலை அனுப்பிய தவறுக்கான காரணமாகும். பலருக்கு இது நிகழ்ந்திருக்கலாம். இதை அனுப்பும் தோழர், இந்த தவறை மிகை விரைவில் சரி செய்வார். 

 

ஆனால் இதன் மூலம் ஒரு நன்மை கிடைத்தது. இரகசியமான நபராக அரசுக்கு பின் செயல்பட்டவர், தன் சூக்குமத்தைக் கடந்து அம்பலமாகியுள்ளார். இப்படி பொங்கி எழும் பாலசூரி, தான் ஒரு அரசு சார்பு 'ஜனநாயக"வாதியாக இருப்பதை வெளிப்படையாக்கியுள்ளார்.

 

இங்கு அவர் நாம் இதை தெரிந்து கொண்டு, திட்டமிட்ட முறையில் மூன்று முறை ஈமெயில் அனுப்பியதாக கருதி, தானாகவே தன்னை அம்பலப்படுத்தியுள்ளார். இப்படி தானாக  அம்பலமாகும் வரை, இந்த இரகசியக் குழுவில் இவரும் ஒருவராக இருப்பது எமக்குத் தெரியாது. அந்தளவுக்கு 'ஜனநாயகம்" ஒரு இரகசிய சதிக் குழுவாக சூழ்ச்சி குழுவாக உள்ளது. அவர் தன்னை வெளிப்படுத்தியபோது, தன் நெற்றிக் கண் திறந்து பதிலடியாக எமக்கு 10க்கு மேற்பட்ட தரம் இந்த ஈமெயிலை அனுப்பியிருக்கின்றார். எல்லாம் இந்த இரகசிய சதி அம்பலமான கோபம் தான், இப்படி எதிரொலிக்கின்றது.

 

அவர் கேட்கின்றார் எம்மை 'இலங்கை அரசாங்கத்துடன் ஜனநாயக சக்திகள் பேசுவதில் என்ன தவறு?" நியாயமான கேள்வி. இந்த கேள்வி கேட்க முன், முதலில் நீங்கள் யார்? தமிழ் மக்களை சார்ந்து நின்று அரசியல் செய்கின்றீர்களா சரி அந்த அரசியல்தான் என்ன? முதலில் அதை பகிரங்கமாக முன்வையுங்கள். அப்படி தொடர்ச்சியாக மக்களுக்கான அரசியலை வைத்துவிட்டு, அதனடிப்படையில் பேசுவதாக சொல்லுங்கள். அதுதான் குறைந்த பட்சம் நேர்மை.

 

அடுத்து நீங்கள் சொல்லுகின்றீர்கள் உங்களை 'ஜனநாயக சக்திகள்" என்று. சரி உங்கடை 'ஜனநாயக"த்தின் வரையறை என்ன? மக்களுக்காக, உங்கள் 'ஜனநாயகம்" எதை வைத்துள்ளது. முதலில் அதைச் சொல்லுங்கள். 'ஜனநாயக சக்திகள்" என்ற வெறும் சொற்களுக்குள், ஒளித்து நின்று கொண்டு மக்களுக்கு எதிராக சதி செய்யாதீர்கள்.  புலியெதிர்ப்பை முன்வைத்து, அரசை நக்குவதா 'ஜனநாயகம்". ஜனநாயகம் என்பது, மக்களின் உரிமைகளை (சுயநிர்ணயம், கருத்து எழுத்து பேச்சு சுதந்திரம் முதல்…) ஏற்று அதை மக்கள் முன் வைப்பதில் தான் ஜனநாயகம் அடங்கியுள்ளது. சதியையும், சூழ்ச்சியையும் மக்களுக்கு எதிராக செய்வதல்ல ஜனநாயகம். மகிந்தாவின் மடியில் படுத்துகிடந்து, புலித் தாலாட்டு பெறுவதல்ல ஜனநாயகம். இதுவோ மக்களுக்கு எதிரான பச்சையான துரோகம். நீங்கள் 'ஜனநாயக சக்திகள்" அல்ல, மாறாக துரோக சக்திகள். துரோகத்துக்குரிய அரசியல் நடைமுறையையும், ஜனநாயகத்துக்குரிய அரசியல் நடைமுறையையும் எதிர்த்தலே உங்கள் அரசியல். நீங்கள் எந்த அரசியலையும் மக்களுடன் கொண்டிருப்பதில்லை.    

 

அடுத்து கூறுகின்றீர்கள் 'இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக் கடிதமும் நிகழ்ச்சி நிரலும் எப்படி இரகசிய ஆவணம் ஆகலாம்?" என்கின்றீர்கள். நல்லது, உங்கள் ஜனநாயகம் இந்த இரகசியத்தைக் கடந்து, பகிரங்கமாக எங்கே முன்வைத்தது? புலம்பெயர் மாற்று அரசியல் கருத்து தளத்தில், ஏன் இதை பகிரங்கமாக வைக்கவில்லை. அரசு தான் தேர்ந்தெடுத்த, தம் கைக்கூலிகளுக்கு மட்டும் இரகசியமாகவே அழைத்துள்ளது. இந்த சதிக் கடிதத்தை பெற்றவர்கள் யார்? சரி அவர்களுக்கு இதை பெற என்ன அரசியல் தகுதியை, அரசு அடிப்படையாக கொண்டது? இதை பெறாதவர்களை, ஏன் அரசு நிராகரிக்கின்றது? நீங்கள் 'ஜனநாயக சக்திகள்" என்கின்றீர்கள், உங்கள் ஜனநாயகம் ஏன் மற்றவர்களுக்கு கிடைக்காமையை அம்பலப்படுத்தவில்லை. முதலில் இதை நீங்கள் செய்யாமல் இருத்தலே, ஜனநாயக விரோதமானது. இதற்குள் 'ஜனநாயக சக்திகள்" என்று உங்களை அழைத்துக் கொள்கின்றீர்கள். அரசு இதைச் செய்ய அழைக்கும் போதே, தெரிந்தெடுப்பில் 'ஜனநாயக" விரோதமாகவே செயல்படுகின்றது. அதற்கு துணையாக 'ஜனநாயக சக்திகள்" என்று கூறும் நீங்கள்.

 

அரசு இதை பகிரங்கமாக அல்லாது, தெரிவு செய்யப்பட்ட தம் கைக்கூலிகளுக்கு கொடுத்த போதே, இது இரகசியமான சதியாகிவிடுகின்றது. அதுவே இரகசியமான ஆவணமாகி விடுகின்றது. இதன் பின்னால் தமிழ்மக்களுக்கு எதிரான அரசியல் சூழ்ச்சி உள்ளது.  

 

அடுத்து உங்கள் சதியை மூடிமறைக்க வைக்கும் உங்கள் வாதம் 'பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம், வட்டமேசை மகாநாடு, திம்புப்பேச்சு வார்த்தை போன்றவற்றில் உனக்கு உடன்பாடனவர்களா இலங்கை அரசாங்கத்துடன் பேசினார்கள்? இதைவிட இலங்கை அரசாங்கத்துடன் புலிகள் பலதடவைகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போதும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என புலிகள் அறிக்கை விடுகின்றார்கள். இவற்றைப் பற்றியெல்லாம் ஒன்றும் பேசாது, ஜனநாயக சக்திகள் பேசுவதைமட்டும் ஏன் சாடுகின்றாய்?" என்கின்றது. இவர்கள் பேசிய முறை சதியல்ல. அவை தம் கொள்கை, நோக்கத்ததை பகிரங்கமாக மக்கள் முன் வைத்துக் கொண்டு, அதனடிப்படையில் பேசினர். இதில் தவறு கிடையாது. அவர்களின் அரசியல் தான் பிரச்சனை. ஆனால் இங்கோ அது சதியுடன் கூடிய ஒன்றாக உள்ளது. 

 

பெரும்பான்மை மக்கள் சரியோ பிழையோ அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில், அவர்களுக்கு தெரியும் வண்ணம் நடந்தது. அதனடிப்படையில் அவர்கள் பிரச்சாரம் முதல் எல்லாவற்றையும் செய்து வந்தனர். அவாகள் துப்பாக்கி முனையில் மட்டும் தமிழ் மக்களை தம் பின்னால் அணிதிரட்டவில்லை. மாறாக பிரச்சாரம் (பொய்யான..) மூலமும் தான். இதற்கு துரோகம் இழைக்கும் போதுதான், அதை அந்த மக்கள் முன் அம்பலப்படுத்துகின்றோம். அவர்கள் சுயநிர்ணயத்தை மறுத்து நிற்பதை அம்பலம் செய்கின்றோம்.

 

நீங்கள் இதையா செய்கின்றீர்கள். இரகசியமான சிலர், தம் சொந்த இரகசியமான சதி அரசியலுடன் இதற்கு துணை போகின்றனர். இந்த அடிப்படையில் அரசு விரும்பும் சில எட்டப்பர்களுடன் பேசி, தமிழ் மக்களின் முதுகில் குத்த உங்கள் துணையை நாடுகின்றது. இதற்கப்பால் உங்களிடம் வேறு எந்த மக்கள் அரசியலும் கிடையாது.      

 

இன்று தமிழ்மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் அரசுடன் பேசுவது தவறு. கொல்வதை நிறுத்திய பின், பேசுவது மட்டும் தான் சரியானது. தமிழ் மக்களை கொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது. அதை நியாயப்படுத்தவும் முடியாது. புலிகள் மக்களை பணயம் வைத்திருப்பதால், அரசு கொல்லலாம் என்ற உங்கள் நியாயப்படுத்தல் மூலம், அரசு கொல்வதை ஆதரிக்கின்றீர்கள். அந்த அரசுடன் நீங்கள் பேசுவது என்பது, தமிழ் மக்களை அடிமைப்படுத்த உதவுவது பற்றியது தான். இந்த பேரினவாத அரசு  கடந்த 25 வருடத்தில் 70000 தமிழர்களை கொன்று குவித்துள்ளது. இன்று கூட்டம் கூட்டமாக கொல்லுகின்ற நிலையில், அதை கண்டித்து மக்களுடன் நிற்க வக்கற்ற கும்பல்தான் பேசும் உரிமை பற்றி கதைக்கின்றனர். இவர்கள் தமிழ் மக்களுக்காக எதைத்தான் பேசப்போகின்றனர்.   

 

இரண்டாவது புலியை அழிக்கும் உரிமை கூட இந்த அரசுக்கு கிடையாது. 70000 மக்களைக் கொன்ற பாசிச பேரினவாத அரசு இது. எம் மக்களை கொல்வதை நிறுத்தினால், அவர்களின் அரசியல் உரிமையை வழங்கினால், புலிகளை மக்கள் கவனித்துக் கொள்வார்கள். மக்களை புலிக்கு எதிராக போராடவிடாது தடுப்பதே, இந்த அரசின் இனவொடுக்குமுறைதான். கூலிக்கு யாரும் மக்களின் ஜனநாயகத்தை மீட்க முடியாது. 

 

உங்கள் இறுதி கேள்வி 'உனது கருத்துக்களுடன் உடன்பட மறுப்பதும், உனக்கு உடன்பாடற்றவர்களை ஆதரிப்பதும் பிறரது ஜனநாயக உரிமை." என்று கேட்பதன் மூலம், அரசை ஆதரிப்பதும், அவர்களுடன் நிற்பதுமா ஜனநாயக உரிமை!? மக்களுடன் நிற்காத உரிமை 'ஜனநாயக உரிமை." அல்ல. மக்களுடன் நிற்கும் கருத்துக்கள் தான், மனிதனின்  அடிப்படையான ஜனநாயக உரிமை. 'பிறரது ஜனநாயக உரிமை." என்ற ஒன்று, மக்களுக்கு வெளியில் கிடையாது. எனது கருத்து மக்களின் உரிமையைக் கோருவதாக இருக்கின்றது. உங்கள் கருத்து அதுவாகவில்லை. இதுதானே உண்மை.

 

பி.இரயாகரன்
24.03.2009
    

 


பி.இரயாகரன் - சமர்