“ஈழம் என்னடா
மயிரு ஈழம்…
அங்கு என்ன-உங்க
அக்காளையா…”
செவிடாக்கி-எழுந்த
உயிர்வலி
இன்னும்-ஓயவில்லை!
வழக்குரைஞர்களின்
குருதி குடித்த
ஈரம் காயுமுன்னே
அடுத்த குறி
கல்லூரி மாணவர்களை!
“ஈழத்திற்கு ஆதரவா?
கோர்ட்டுக்குள்ளே
புகுந்து விளையாடிய
எமக்கு
கல்லூரியெல்லாம்
கால் தூசு..”
கேட்டுப்பார்
நீதித் தேவதையை
சிறீ கிருஷ்ணாவை!
கொக்கரிக்கிறது
கருணாநிதியின்
காலாட்படை!
பிடறியைப் பிடித்து
குரல்வளை நெறித்து
உள்ளாடையோடு நிறுத்தி
நிராயுதபாணிகளை
லத்திக்களும்-பூட்ஸ்
கால்களும் பதம் பார்க்க…
வருவோர் போவோரும்
இதில் சேர… அட
வழமையான
சித்திரவதைகள்
பழகிப்போன-ஒன்றுதான்
எமது தோழர்களுக்கு!
“ஈழம் என்னடா
மயிரு ஈழம்…
அங்கு என்ன-உங்க
அக்காளையா…”
அப்பப்பா
எப்படித்தான்
எதிர் கொண்டனரோ
இக்கொடிய
தாக்குதலை!
அநியாயப் போரை
எதிர்க்கும்-சிங்கள
ஜனநாயகவாதிகளை
கொல்லும் இராஜபக்சே!
ஈழத் தமிழனின்
சுய-நிர்ணய உரிமைக்கு
குரல் கொடுக்கும்
சகத் தமிழனையே
குதறும் கருணாநிதி!
சொந்த மண்ணில்
அநாதைப்
பிணங்களாய்
ஈழத்தமிழன்
விரவிக்கிடக்க…
அம்பானி, டாடாவின்
‘வாழ்வுரிமை’க்காய்
வரிந்து பேசச்சென்ற
பிரணாப்!
இது
இனவெறிப் போர்
மட்டும் தான்- என்று
யார் சொன்னது?
அவிழ்த்து விடப்பட்ட
வெறிநாய்க் கூட்டங்களென
கையில்
கிடைத்ததைக் கொண்டு
கண்ணில்
எதிர்பட்டதையெல்லாம்
பாய்ந்து குதறி்யபோது
இதன் பிறப்பே
இப்படித்தான்
என்றிருந்தேன்!
“ஈழம் என்னடா
மயிரு ஈழம்…
அங்கு என்ன-உங்க
அக்காளையா…”
இதை
சிங்களனல்லாத
இங்குள்ளவனே
கேட்டதனால்
குடைந்தெடுக்கிறது…
சந்தேகம்
வலுக்கிறது…
“சிங்களனுக்கு
பொறந்ததுவோ-இந்த
போலீசு கூட்டங்களென்று!”
எது
எப்படியோ?
நாளை
சிறையிலிருந்து
மீண்டுவரும்
தோழர்களை
நான்
எப்படி எதிர்கொள்வேன்!
“ஈழம் என்னடா
மயிரு ஈழம்…
அங்கு என்ன-உங்க
அக்காளையா…”
என்னை
செவிடாக்கி-எழுந்த
உயிர்வலி
என்னை
உறங்கவிடவில்லை!
-இளங்கதிர்