05162022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

நாங்களும் ரெவுடியாயிட்டமில்ல...

இந்துவுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால் அவனது கையை இந்த வருண் வெட்டுவான். இந்த வருண் காந்தி ஒரு புயலைப் போல..."

 

"இந்தியாவில் இருக்கும் முஸ்லீம் தலைகளை வெட்ட வேண்டும்...."

 

"இந்துக்களை தவீர இந்தியாவில் யாரும் இருக்கக் கூடாது. குறிப்பாக முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு போய்விடுங்கள்..."

 

இப்படியெல்லாம் ஹீரோ போல் பஞ்ச் டயலாக் விட்டவர் வேறு யாருமில்லை. இந்தியா என்பது தங்களுடைய பரம்பரை சொத்தாக நினைத்துக் கொண்டிருக்கும் நேரு மாமாவின்  லொல்ளுப் பேரனும் இந்திரா காந்தியின் வன்முறை குணங்களை கொண்ட பேரன் வருண்காந்தி தான். பா.ஜ.க. சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடும் வருண்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போதே இவ்வளவு மோசமான வன்முறையைத் தூண்டும் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்.

 

இவருடைய வன்முறை வார்த்தைகளுக்கு சிவசேனா அமைப்பும் ஆதரவு தெரிவித்திருக்கின்றது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் எந்த விமர்சனமும் கன்டணமும் தெரிவிக்காமல் இருக்கிறது. பரபரப்புக்காக வருண் காந்தியின் வார்த்தைகள் உபயோகிக்கப்படவில்லை. திட்டமிட்டு உபயோகிக்கப்பட்டதே. இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தி தன் அரசியல் காய்களை நகர்த்த முற்பட்டிருக்கிறார். இவை கடுமையாக ஆட்சேபிக்கப்பட வேண்டியது. சிவசேனா அமைப்பைச் சேர்ந்த "ரவுடீஸம்" செய்பவர்கள் இந்துத்துவத்தை முன்னிருத்தியே தங்களுடைய வன்முறைகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். சமீபத்தில் காதலர் தினம் அன்று இவர்கள் பொதுமக்களிடம் நடந்துக் கொண்ட அத்துமீறல்களுக்கு கூட இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமலிருக்கிறது. இவர்களின் ஆதரவு வருண் காந்திக்கு; ரவுடிக்கு ரவுடி உதவிக் கொள்வது போல....

 

பிராணிகள் வதைப்புக்கு எதிரான அமைப்பு வைத்து போராட்டங்கள் நடத்தும் மேனகாவின் மகன் ´தலையை வெட்டுவேன், கைகளை வெட்டுவேன்´ என உபயோகப்படுத்தி இருக்கும் பிரச்சார வார்த்தைகள் இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினருக்கு எதிராக விடப்பட்டுள்ள பகிரங்க மிரட்டல்கள். நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜனநாயக பண்புகளை மறந்து சிறுபான்மையினரைக் குறித்து கடுமையான வார்த்தைகளை வெளிப்படையாக அள்ளி வீசியது நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைய இளைய சமூகத்தினருக்கு வருண்காந்தியின் சிந்தனைகள் முன்னோடியாக இருந்துவிடக்கூடாது. மதச்சார்புள்ள கருத்துக்கள் படித்த இளைஞர்களைக் கூட தடுமாற வைத்துவிடும்.

 

தேசீய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வார்த்தைகளை தேர்தலில் உபயோகப்படுத்தினால் தேர்தலில் போட்டியிடும் உரிமையை இழக்க நேரிடும் போன்ற சட்டங்கள் இருக்கும் போது, தேர்தல் களங்களில் வன்முறையை தூண்டும் பிரசாரங்களை செய்பவர்கள் உடனடியாக தேர்தலில் நிற்கும் தகுதியை இழந்தவர்களாக அறிவிக்கப்பட வேண்டும். தற்போதைய இந்தியாவில் இந்துத்துவ அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் அவசரமாக செய்ய வேண்டிய பணிகளுள் இவையும் ஒன்று.

 

மதச்சார்பற்ற நாடாக தன்னை முன்னிருத்தும் இந்தியா  இந்துத்துவத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சிறுபான்மை இனத்தவர்களிடம் பாகுபாடு காட்டுவது எப்போதும் நடந்துக் கொண்டிருக்கும் சங்கதிதான்.


ஜனநாயகம், மதசார்பின்னை போன்ற போலிக்குரல்கள் இந்தியாவில் உண்மைநிலையை மூடிமறைக்க முற்பட்டாலும், அவப்போது வருண்காந்தி போன்றவர்கள் தங்கள் மதவெறியை அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். 


தமிழச்சி
19.03.2009


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்