புவனேஸ்வர்: கடந்த ஆண்டு ஒரிஸ்ஸாவில் நடந்த மதக் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் ஜாமீனில் வெளி வந்தபோது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரிஸ்ஸாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த லட்சுமணானந்தா படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துக்கு நக்சைலட் இயக்கம் ஒன்று பொறுப்பேற்று கொண்டது.
இதையடுத்து கிருஸ்துவர்கள் மீது இந்துத்துவா அமைப்புகள் கொலை வெறித் தாக்குதல் நடத்தின. பல சர்ச்சுகள் எரிக்கப்பட்டன. கன்னியஸ்திரி ஒருவரும் கற்பழிக்கப்பட்டார்.
இந்தக் கலவரங்கள் தொடர்பாக பிரபத் பனிகிரகி என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந நிலையில் அவர் கடந்த 14ம் தேதி பாலிகுடா சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் அவர் புல்பானி நகரிலிருந்து 145 கிமீ தூரத்தில் உள்ள ருடிகுமா என்ற கிராமத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் அங்கு வந்த ஆயுதம் ஏந்திய 15 பேர் கொண்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அவரை சுட்டு கொன்றனர். பின்னர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கோடாகடா மற்றும் ருடிகுமா செல்லும் சாலையில் மரங்களை வெட்டி போட்டு போக்குவரத்தை தடை செய்துவிட்டனர். இந்த தடைகளை அகற்றிவிட்டு போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்துக்கு செல்வதற்கு வெகு நேரமாகிவிட்டது.
ஜாமீனில் வந்த பனிகிரகி கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதை அடுத்து, அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்புக்காக போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.