06242022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

உண்மை உண்மை ஒன்றே உண்மை லத்திக் கம்பு ஒன்றே உண்மை!

போலீசின் காட்டாட்சிக்கு எதிரான வழக்குறைஞர் போராட்டத்தை ஆதரிப்போம் ! கருத்துப்படங்கள், முழக்கங்கள் !

-பிப்ரவரி 19, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து இன்று சென்னையில் வழக்கறிஞர்கள் பேரணி நடைபெறுகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கில்

 வக்கீல்கள் வருகிறார்கள் என்பதால் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு பஞ்சுமிட்டாய் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. பேருக்கு இரண்டு போலீசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருக்கும் நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்களைத் தாக்கிய போலீசு மீது புகார் கொடுத்தும் இன்று வரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவாகவில்லை என்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத்திற்காக  போர்க்குணத்துடன் போராடிய வழக்கறிஞர்களை ஒடுக்கவேண்டும் என்பதற்காகவே அந்த தடியடி அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இதற்கு நேரடியாக நடவடிக்கை எடுக்காமல் நீதிபதிகள் போலிசுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார்கள். இந்தப் பிண்ணனியை விளக்கும் இந்தப் பிரசுரம் மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு முதலான புரட்சிகர அமைப்புக்கள் வெளியிட்டிருக்கின்றன. தேவை கருதி இங்கே பதிவு செய்கிறோம்.

ஒரு மாதத்துக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது வழக்குரைஞர்களின் போராட்டம். வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.  மக்கள் தவிக்கிறார்கள். சிறைகளோ நிரம்பி வழிகின்றன. பிணை கிடைக்காமல் பல கைதிகள் சிறைக்குள்ளேயே அல்லல் படுகிறார்கள். இப்படி மக்கள் படும் துன்பத்துக்கெல்லாம் காரணம் வக்கீல்கள்தான் என்றும், அவர்கள் அடாவடித்தனமாக நீதிமன்றப் புறக்கணிப்பு செய்து வருவதால்தான் மக்கள் அவதிப்பட நேர்ந்துள்ளது என்றும் அரசாங்கமும், பத்திரிகைகளும் பிரச்சாரம் செய்கின்றன. இந்தப் பொய்ய்பிரச்சாரத்தை உண்மையென்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சற்றே சிந்தித்துப் பாருங்கள். வக்கீல்களின் கோரிக்கை என்ன? பிப்ரவரி 19 ஆம் தேதியன்று உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டித் தனமாகத் தாக்குதல் நடத்திய போலீசின் மீதும் அந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்ட போலீசு அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும். அவர்களைத் தற்காலிகப்பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் வக்கீல்களின் கோரிக்கை.

இப்படி ஒரு தாக்குதல் நடந்தது உண்மையா இல்லையா? வக்கீல்களுக்கு மட்டுமின்றி தடுக்கப்போன நீதிபதிகளுக்கும் அடி விழுந்ததா இல்லையா? கார்களையும் டு வீலர்களையும் ரவுடிகளைப் போல போலீசு அடித்து நொறுக்கியதும், நீதிமன்ற அறைகளில் புகுந்து சூறையாடியதும் உண்மையா< இல்லையா? இல்லை என்று அரசோ போலீசோ மறுக்கவே முடியாது. உலகமே இந்தக் கொலைவெறியாட்டத்தை தொலைக்காட்சிகளில் பார்த்தது. இப்படி ஒரு தாக்குதல் நடத்தக் காரணம் என்ன?

சுப்பிரமணியசாமி மீது முட்டை எறிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வக்கீல்கள் சிலரைக் கைது செய்ய முயன்றதாகவும், அதை எதிர்த்து வக்கீல்கள் கல்லெறிந்ததால்தான் தடியடி நடத்த வேண்டியிருந்தது என்றும் கூறுகிறது போலீசு. அதற்கு ஒத்துப் பாடுகிறது கருணாநிதி அரசு. குற்றம் சாட்டப்பட்ட வக்கீல்களை நீதிமன்றத்துக்குள் வைத்து எதற்காகக் கைது செய்ய வேண்டும்? அவர்கள் முகவரி இல்லாத நாடோடிகளா, கிரிமினல்களா? ஒரு கொலைகாரன் கூட சரணடைவதற்காக நீதி மன்ற வளாகத்திற்குள் நுழைந்து விட்டால், அவனைக் கைது செய்ய போலீசார் நீதிமன்றத்துக்குள் நுழைவதில்லை. ரவுடிகள், சத்யம் ராஜூ போன்ற பணக்காரக்  கிரிமினல்கள் ஆகியோர் விசயத்தில் இந்த சட்டத்தையும் ஒழுங்கையும்  பின்பற்றும் போலீசு, மேற்கூறிய வக்கீல்களை மட்டும் நீதிமன்றத்துக்குள் புகுந்து கைது செய்யவேண்டிய அவசியமென்ன? அவ்வாறே கைது செய்வதென்றாலும், இன்னின்னாரைக் கைது செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்று கைது செய்திருக்கலாமே! ஏன் இந்த முறைகளைப் பின்பற்றவில்லை? இவைதான் வழக்குரைஞர்கள் எழுப்பும் கேள்விகள்.  இந்தக் கேள்விகளுக்கு இதுவரை கருணாநிதி அரசு பதில் சொல்லவில்லை.

பதில் சொல்லாது. ஏனென்றால், முட்டை வீச்சு என்ற சம்பவத்ததை ஒரு முகாந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டு வழக்குரைஞர்கள் மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்த அரசும் போலீசும் ஏற்கெனவே திட்டமிட்டுவிட்டன. ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி வழக்குரைஞர்கள் விடாப்பிடியாகப் போராடியதும், நீதிமன்றப் புறக்கணிப்பு செய்ததும், சோனியா படத்தையும் மன்மோகன் படத்தையும் எரித்ததும் காங்கிரசு துரோகிகளை ஆங்காங்கே விரட்டி அடித்ததும்தான் திமுக அரசின் கோபத்துக்குக் காரணம். மற்றெல்லோரையும் மிரட்டிப் பணிய வைப்பதைப் போல வக்கீல்களை மிரட்டிப் பணிய வைக்க முடியவில்லையே என்பது போலீசின் கொலைவெறிக்குக் காரணம். இர்களுடைய கூட்டு சதித்திட்டம்தான் பிப்ரவரி 19 வெறியாட்டம்.

krishna-commission-copy

சுப்பிரமணியசாமி என்ற அரசியல் மாமாப்பயலின் முகத்தில் முட்டை வழிந்தவுடனே ‘நீதிமன்றத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக’ இந்து, தினமணி, துக்ளக் முதலான பார்ப்பனப் பத்திரிகைகள் புலம்பின. ஆனால் வக்கீல்களின் முகத்தில் ரத்தம் வழிவதைக் கண்ட பிறகும், இந்தப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் உச்சநீதிமன்றமும் ஸ்ரீகிருஷ்ணா கமிசனும் நீதிமன்றத்தின் புனிதம் கெட்டு விட்டதாகப் புலம்பவில்லை.  போலீசின் ரவுடித்தனத்தை நியாயப்படுத்துகின்றன. வக்கீல்கள் தான் வன்முறைக்குக் காரணம் என்று பொய்ப்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றன.

இந்தப் பொய்ப்பிரச்சாரத்துக்கு எதிராக வழக்குரைஞர்கள் எழுப்பும் கேள்வி நியாயமானது. முட்டை வீச்சுக்கு வழக்கு போட்டாகிவிட்டது; ‘கல் வீசினார்கள்’ என்று நூற்றுக்கணக்கான வக்கீல்கள் மீது வழக்கு போட்டிருக்கிறது போலீசு; காவல் நிலையத்தை போலீசே தீ வைத்துக் கொளுத்தி விட்டு அதற்கும் வக்கீல்கள் மீது வழக்கு போட்டிருக்கிறது. “எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயார். நீ நடத்திய ரவுடித்தனத்துக்கு மட்டும் வழக்கு கிடையாதா? ” என்று கேட்கிறார்கள் வக்கீல்கள்.

வக்கீல்களையும் நீதிபதிகளையும் ரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கிய போலீசார் மீது பெயருக்காவது ஒரு வழக்கு பதிவு செய்தார்களா? இல்லை. பொறுக்கிகளைப் போல கார்களையும், நீதிமன்ற அறைகளையும், நூலகத்தையும், குழந்தைகள் காப்பகத்தையும் நொறுக்கிய போலீசார் மீதும் வழக்கில்லை. போலீசார் மீது அரசு வழக்கு போடவில்லை என்பது மட்டுமல்ல, அடிபட்டவர்கள் புகார் கொடுத்த பிறகும் கூட வழக்கு பதிவு செய்ய மறுக்கிறது போலீசு. இப்படி மறுப்பது சட்டவிரோதமானது. “என்னை அடித்து விட்டான், என் வீட்டில் திருடிவிட்டான்” என்று காவல்நிலையத்தில் நாம் புகார் கொடுத்தால் போலீசு அதனைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு குற்றவாளியிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு ‘நாம் கொடுத்த புகாரில் உண்மையில்லை’ என்று தள்ளுபடி செய்யும் அதிகாரம் போலீசுக்கு இருக்கிறது. ஆனால் புகாரையே பதிவு செய்ய மாட்டேன் என்று கூறும் உரிமை போலீசுக்கு கிடையாது. அப்படிக் கூறினால் புகாரைப் பதிவு செய்யும்படி நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிடும். இன்று நீதிமன்றத்துக்கு உள்ளேயே புகுந்து தாக்கிவிட்டு, அடிபட்ட வக்கீல்களின் புகாரையும் பதிவு செய்ய மறுக்கிறது போலீசு? இனி வக்கீல்கள் எங்கே போய் முறையிடுவது?

lathi-police1

இது மட்டுமா? “உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் போலீசு நுழைவதற்கு நாங்கள் அனுமதி தரவில்லை” என்று தலைமை நீதிபதி பகிரங்கமாகவே அறிவித்து விட்டார். அத்துமீறி உள்ளே நுழைந்து தடியடி நடத்த உத்தரவிட்ட காவல்துறை ஆணையர், டிஜிபி ஆகியோர் மீது அரசு உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எடுக்கவில்லை.

இதற்கெல்லாம் என்ன பொருள்? எந்த சட்டத்திற்கும் போலீசு கட்டுப்பட்டதல்ல என்பதுதான் பொருள். போலீசு என்ன சொல்கிறதோ அதுதான் சட்டம். அவன் லஞ்சம் கேட்டால் கொடுக்கவேண்டும். பொருளை இலவசமாகக் கேட்டால் வியாபாரி கொடுக்க வேண்டும். அடித்தால் வாங்கிக் கொள்ளவேண்டும். பேசாதே என்றால் பேசக்கூடாது. நிற்காதே என்றால் அங்கே நிற்கக் கூடாது. குடிதண்ணீர் கேட்டு மக்கள் போராடினால் தண்ணி லாரி வராது, போலீசின் வெள்ளை லாரிதான் வரும்.  சாலை, ரேசன் அரிசி, தொழிலாளர்களின் கூலி உயர்வு என்று எந்தப் பிரச்சினைக்காக மக்கள் போராடினாலும் அரசாங்கம் போலீசைத்தான் அனுப்பி வைக்கிறது. வந்து இறங்கியவுடனே ‘கலைந்து போ’ என்று போலீசு மிரட்டும். கலையாவிட்டால் தடியடி. சிறை.

tamilnadu-policeபோலீஸ்காரன் செய்யாத கிரிமினல் குற்றமில்லை. டூட்டியில் லஞ்சம் வாங்குவது முதல் லீவு போட்டுவிட்டு ஏரியா விட்டு ஏரியா போய் வழிப்பறி செய்வது வரை கற்பனைக்கு எட்டாத குற்றங்களையெல்லாம் அன்றாடம் செய்துவரும் இவர்கள்தான் சட்டத்தின் காவலர்களாம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் சட்டமாம். போலீசிடம் சட்டம் பேசி அடிவாங்காமல் மீண்டவன் யாராவது உண்டா? அந்த அடிதான் வக்கீல்கள் மீது விழுந்த அடி. அன்றாட வாழ்க்கையில் போலீசு நடத்தும் இந்தக் கொடுங்கோல் ஆட்சியை மக்கள் பலர் வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்கிறார்கள். அடங்கிப் போகிறார்கள். வக்கீல்களையும் அப்படி அடங்கச் சொல்கிறது போலீசு.

நம்முடைய நாடு ஜனநாயக நாடு என்றும், நீதிமன்றம், சட்டமன்றம், நிர்வாகம், பத்திரிகைகள் என்ற தூண்கள் நமது நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்பதாகவும், ஒன்றில் தவறு நடந்தால் இன்னொரு இடத்தில் மக்கள் நிவாரணம் பெறலாம் என்பதுதான் குடியாட்சியின் சிறப்பு என்றும் ஆளும் வர்க்கங்கள் கூறுகிறார்களே, இன்று நடந்து கொண்டிருப்பது என்ன? போலீசின் தடியாட்சியை சட்டமன்றம், நீதிமன்றம், பத்திரிகைகள் அனைத்தும் ஓரணியில் நின்று நியாயப்படுத்துகின்றன. போலீஸ் ஸ்டேசனில் புரோக்கர் வேலை செய்தும், போலீசை அடியாளாக வைத்துக் கொண்டு ஊர் சொத்தைக் கொள்ளையடித்தும் வாழும் ஓட்டுப் பொறுக்கிகள் யாரும் போலீசின் மீது நடவடிக்கை எடு என்று பேசக்கூட மறுக்கிறார்கள்.

அரசியல் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் எல்லாச் சட்டங்களையும் தன்னுடைய பீ துடைக்கும் காகிதமாக்கி விட்டது போலீசு. “இனிமேல் இந்த நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தின் வாசலிலேயே நின்று கதறுகிறார்கள். இது ஒரு போலி ஜனநாயகம் என்பது நிரூபணமாகிவிட்டது. இது ஒரு போலீசு ராச்சியம் என்பது அம்பலமாகிவிட்டது.

நீதிமன்றத்தை நம்பிப் பயனில்லை என்பதை தம் சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்ட வழக்குரைஞர்கள், வீதியில் இறங்கி மக்கள் மன்றத்துக்கு வந்திருக்கிறார்கள். போலீசு இராச்சியம் என்பது அவர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை. வழக்குரைஞர்கள் இதில் தோற்றுவிட்டால் போலீசு இரத்தம் சுவைத்த மிருகமாகிவிடும்.வக்கீலையும் நீதிபதியையுமே அடித்தவனுக்கு ஆட்டோ ஓட்டுனரும், தள்ளு வண்டி வியாபாரியும், மாணவனும், தொழிலாளியும், விவசாயியும் எம்மாத்திரம்?

அந்த நிலை ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது. வழக்குரைஞர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்! வழக்குரைஞர் போராட்டத்தை போலீசு இராச்சியத்துக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாற்றுவோம்!

முழக்கங்கள்

கைது செய் கைது செய்!
காக்கி உடையில் ஒளிந்திருக்கும்
குற்ற வாளிகளைக் கைது செய்!

பணி நீக்கம்செய்  நீக்கம் செய்
நீதிமன்றத் தாக்குதல் தொடுத்த
அதிகாரிகளை  நீக்கம் செய்!

இது போலீசு வக்கீல் பிரச்சினையல்ல
போ..ராடும்  மக்கள் பிரச்சினை!
வக்கீல் மீதே தடியடி என்றால்
உழைக்கின்ற வர்க்கமே
உன் கதி என்ன எண்ணிப்பார்!

எதிர்த்து நிற்போம் எதிர்த்து நிற்போம்!
காக்கிச் சட்டை தர்பாரை,
லத்திக் கம்பின் ஆட்சியை,
போலீசு இராச்சியத்தை,
எதிர்த்து நிற்போம் எதிர்த்து நிற்போம்!

ஈழத்தமிழ் மக்களுக்காக
வக்கீல்களின் போராட்டம்!
அந்தப் போராட்டத்தை ஒடுக்கத்தான்
உயர் நீதிமன்ற வெறியாட்டம்!

போர்நிறுத்தம் கேட்டது குற்றம்
ஈழத்தமிழ் மக்களுக்காக
போராடியதே வக்கீல் குற்றம்!

சிங்கள அரசின் போருக்கு
இங்கிருந்தே துணை நிற்கும்
இந்திய அரசை, காங்கிரசு அரசை,
கூண்டில்  ஏற்றிக் கேட்டதுதான்
வழக்குரைஞர் செய்த குற்றம்!

கொலைகாரச் சிங்கள அரசுடன்
கூடிக்குலவும் காங்கிரசை,
கூட்டணி சேர்ந்த திமுகவை,
ரோட்டுக்கிழுத்த குற்றம்தான்
வழக்குரைஞர் செய்த குற்றம்!

குண்டு வீசுது சிங்கள அரசு
தடியால் அடித்தால் தமிழர் அரசு!
அங்கே ராணுவப் பேயாட்டம்
இங்கே போலீஸ் வெறியாட்டம்!
அங்கும் இங்கும் பேசுவதெல்லாம்
ஜன நாயகப் பித்தலாட்டம்!

உயர்நீதி மன்றத்துள்ளே
போலீசின் வெறியாட்டம்!
காக்கி உடையில் கவசமணிந்த
காவல்துறையின் சதிராட்டம்!

எலும்பை முறித்தான் வக்கீலை
மண்டை உடைந்தார் மைலார்டு!
லார்டும் போச்சு ஆனரும் போச்சு
லத்திக் கம்புதான் நீதிபதி!

நீதிமன்றம் உள்ளே புகுந்து
நீதிபதியை அடித்த காட்சி
நீதி கேட்க அங்கே போன
மக்களெல்லாம் அதற்கு சாட்சி!

காரை உடைத்து வண்டியை உடைத்து
காக்கிகள் நடத்திய அரசாட்சி
அந்த ரவுடித்தனத்தை லைவ் ஆக
ஒளிபரப்பியதே தொலைக்காட்சி!

திறந்த வீட்டில் நாய் போலே
கோர்ட்டில் நுழைந்தான் - கேசில்லை!
கோர்ட்டில் நுழைந்து நாயைப் போலே
குதறியதற்கும் - கேசில்லை!

முட்டை எறிந்த குற்றத்துக்கு
20 வக்கீல் மேலே கேசு!
சுனா சாமி மூஞ்சியில் வழிந்த
முட்டைக்காக விசாரணை
முழு பெஞ்சு விசாரணை!

மண்டை உடைந்த வக்கீல்கள்
ரத்தத்தாலே மனு எழுதி
புகார் கொடுத்தும் கேசில்லை!
போலீசு மேலே கேசில்லை!
காரை உடைத்தான் கேசில்லை
கல்லால் அடித்தான் கேசில்லை

காக்கிச்சட்டைக் காலிகள் கையால்
உதை வாங்கிய நீதிபதிக்கு
உண்மையைச் சொல்ல தில் இல்லை!
லார்டுகளுக்கு மானம் இல்லை
லார்டுக்கு லார்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு
லேசாக் கூட ரோசம் வரல்லே!

கொலைவெறியாடிய போலீசை
கொஞ்சுகின்றது அரசாங்கம்
இதுவா இதுவா நல்லாட்சி
இதுவா இதுவா குடியாட்சி
இதுதான் இதுதான் தடியாட்சி

சட்டம் நீதி எல்லாம் மாயை
சட்டமன்றம் அதுவும் மாயை
நீதிமன்றப் புனிதம் மாயை
நீ நம்பும் ஜன நாயகம் மாயை!

உண்மை உண்மை ஒன்றே உண்மை
லத்திக் கம்பு ஒன்றே உண்மை!

சட்டம் ஆள்வது உண்மையா
போலீசு கொட்டம் ஆள்வது உண்மையா?
ஒவ்வொரு நாளும் சட்டத்தை
காலில் போட்டு மிதிப்பது யாரு?
நீயா நானா வக்கீலா?
தெரியலயின்னா பேப்பரைப் பாரு!

போ..லீசு லாக்கப்பிலே
பொழுது விடிஞ்சா மர்டரு!
காவல் நிலையம் எல்லாமே
கற்பழிப்பு சென்டரு!
போக்கிரிகள் எல்லோருக்கும்
போலீசே காட் பாதரு!
கேசு கொடுக்க டேசன் போனா
உன் காசுக்குத்தான் டேஞ்சரு!
போலீஸ் பேரைக் கேட்டாலே
பொதுமக் களுக்கு  டார்ச்சரு!

காவல்துறையின் கொடுமைகளை
கொஞ்சமாவது தட்டிக்கேட்க
கோர்ட்டு வக்கீல் கூடாதாம்!
தட்டிக்கேட்கும் வக்கீலையும்
தடியால் அடிக்கிறான் போலீசு!
கேள்வி கேட்கும் வக்கீலும்
குண்டாந்தடிக்குப் பணிந்து விட்டால்
நம் கதி என்ன, எண்ணிப்பார்!
போராடும் வக்கீல்களுடன்
அணி அணியாக ஒன்று சேர்!

நீதிபதிகள் பயந்தாலென்ன
நீதிமன்றம் தோற்றாலென்ன?
மக்கள் மன்றம் வென்று காட்டும்!

வழக்குரைஞர் போராட்டத்தின்
வெற்றியென்பது நம் வெற்றி


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்