ஹெகல் (G.W.F.Hegal1770-1831) ஜெர்மனிய தத்துவவாதி கார்ல் மார்க்ஸின் முன்னோடி. தன் வாழ்நாளில் கடைசி காலத்தில் மரணப்படுக்கையில் இருக்கிறார். ஹெகல் இன்னும் சில நாட்கள்கூட இருக்கப்போவதில்லை என்பதை உணரத் தொடங்கிய அவருடைய சிஷ்யர்கள் அடிக்கடி ஹெகலை வந்து பார்த்தபடி இருந்தனர். ஹெகலால் சுத்தமாக பேசக்கூட முடியவில்லை.

 மூச்சு இழுபறி நிலையில் இருக்கிறது. இருப்பினும் ஹெகலிடம் ஏதோ ஒருவித தவிப்பு. எதையோ பேச நினைக்கிறார் போலும். சிஷ்யர்கள் கவலையுடன் ஹெகலிடம், "என்ன சொல்ல விரும்புகிறீர்கள்; முடிந்தால் நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம்..."  என்கிறார்கள்.

 

ஹெகல் பெருமூச்சு விட்டுக் கொண்டே மெல்ல சொல்கிறார்...

 

"என்னுடைய சிஷ்யர்கள் யாரும் என்னை அறிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ இல்லை. மிஷெலே (Michelet) என்பவன் மட்டுமே என்னை அறிந்து கொண்டிருக்கிறான். ஆனால் அவனும் என்னைத் தவறாகவே அறிந்து கொண்டிருக்கிறான்."

 

ஹெகல் சாதாரண ஆளில்லை. சிறந்த தத்துவவாதி. ஆனால் எது அவருக்குள் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இவருக்கு மட்டும் மரணத்தின் போது சிந்தனை இப்படி இருக்கவில்லை. புத்தன் கூட கணித்திருந்தார். புத்தநெறிகள் எப்படி வீணடிக்கப்பட போகிறது என்ற கவலை மரணத்தின் போது அவரிடம் இருந்திருக்கிறது. இயேசுவும், முகமதுநபியும் அப்படியே. பெரியாரிடம் இறக்கும் தருவாயில், "உங்களை எல்லாம் சூத்திரனாக விட்டு போகிறேனே என்கிற கவலை தான் எனக்கு அதிகமாக இருக்கிறது" என்கிறார். இவர்களுக்கென்ன மரணத்தின் மீது பயமா? இல்லை.

 

தன் தத்துவங்கள் தனக்கு பின் மக்களுக்கு எப்படி கொண்டு செல்லப்படுமோ என்பதைக் குறித்து அவர்களுக்குள் ஏதோ அறிகுறி தெரிந்திருக்கிறது. தங்களுடைய கொள்கைவாதிகள் தங்களுக்கு பின் பிற்காலத்தில் கருத்துவேறுபாடுகளில் தத்துவங்களை, உண்மைகளை திரித்து விடப்போகிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதன் எதிரொளியாகவே சிந்தனை அலறுகிறது பதறுகிறது.

மகான்களுக்குள் அறிவும், இதயமும் ஒன்றாக இருப்பதனால் தான்  இறக்கும் போது வெளிப்படும் மனக்குமுறல்கள் ஒன்றுபோலவே எல்லோருக்கும் இருக்கிறது. மகான் தன்மை என்பது பெரும்பான்மையான மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையில் இருந்து மாறுபட்டது. தங்களின் சிந்தனைகள், தாங்கள் கண்ட உண்மைகளை பெரும்பான்மையான மக்கள் கருத்துக்கு எதிராக வெளியிடும் போது தங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை எதிர்க்கும் மனத்தைரியத்தையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். எதையும் அலட்சியப்படுத்தி மானுல நலன்களை நோக்கி சிந்திக்கும் போது எதிர்கொள்ளும் மக்களின் அதிருப்திகள் அதே மக்கள் மீது துவேஷமாக மாறுகிறது என்பார்கள். நிறைய அறிஞர்கள், சிந்தனையாளர்களின் போக்குகளும் இப்படியே இருந்திருக்கிறது.

 

´லீப்னெக்ட்´ (Wilhelm Liebknecht) என்பவர் கார்ல் மார்க்ஸ் இறந்தபோது அவருடைய சவக்குழியின் அருகே நின்று சொல்கிறார் :

 

"யாருடைய மரணத்திற்காக நாம் இப்போது துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ அவன் அன்பு செலுத்துவதிலும், துவேஷம் பாராட்டுவதிலும் முதன்மையானவனாக இருந்தான். அவனின் துவேஷம் அவன் மானிடத்தில் செலுத்திய அன்பினில் இருந்து உருவானது. அவனுக்கு எப்படி கூர்மையான அறிவு இருந்ததோ, அப்படியே விசாலமான இருதயமும் இருந்தது."

 

அழகாகச் சொல்லி இருக்கிறார் லீப்னெக்ட்.

 

மகான் தன்மை என்பதற்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் இருக்கிறது. ஒன்று அன்பு மற்றது துவேஷம். ஆம்! மகான்கள் மக்களை நேசிக்கிறார்கள் அதே போல் மக்களை துவேஷிக்கிறார்கள் மகான்கள். இதில் எந்த முரண்பாடுகளும் இல்லை. மகான்களுக்கு அறிவும், இதயமும் ஒன்றல்லவா?


தமிழச்சி
17.03.2009