Language Selection

புதிய ஜனநாயகம் 2009

கொல்லைப்புற வழியாக சோமாலியாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா நடத்திய போர் படுதோல்வியில் முடிந்துவிட்டது. சோமாலியா என்றவுடனேயே நமது நினைவுக்கு வருவது, அந்நாட்டைப் பிடித்தாட்டும் பஞ்சமும், பட்டினியால் எலும்பும் தோலுமாகிப் போன அந்நாட்டு மக்களும்தான்.  இப்படிபட்ட பஞ்சப் பரதேசியான நாடும் அதன் மக்களும், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போருக்கு ஒரு மரண அடி கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?


ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா நடத்தி வரும் ""தீவிரவாதத்துக்கு எதிரான போர்'' வெளியே தெரிந்த அளவிற்கு, சோமாலியா நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர் பொதுமக்களின் கவனத்துக்கு வரவில்லை.  இதற்குக் காரணம், அமெரிக்கா, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தனது படைகளை இறக்கி, அந்நாடுகளை ஆக்கிரமித்திருப்பதைப் போல் சோமாலியாவில் ஆக்கிரமிப்புப் போரை நேரடியாக நடத்தவில்லை.  மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள தனது பிராந்திய அடியாளான எத்தியோப்பியப் படைகளின் மூலம் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது.  இதன் காரணமாக  பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகளால் சோமாலியாவில் நடந்து வந்த இந்தப் போர், சோமாலியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் நடக்கும் அண்டை நாட்டுச் சண்டையாகப் புறக்கணிக்கப்பட்டது.


அமெரிக்கா, ஏழை நாடான சோமாலியா மீது தொடுத்த  இந்த ஆக்கிரமிப்புப் போரை,  தீவிரவாதத்துக்கு எதிரான போரின் மூன்றாவது போர் முனையாகக் குறிப்பிட்டு வந்தது. சோமாலியா மக்கள் கடுமையான பஞ்சத்துக்கு இடையிலும் போராடி, எத்தியோப்பியப் படைகளைத் தோற்கடித்து, இந்த மூன்றாவது போர் முனையில் அமெரிக்காவின் மூக்கை அறுத்திருக்கிறார்கள்.


•••

 

சோமாலியா, ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்கு முனையில் இந்தியப் பெருங்கடலையொட்டி அமைந்துள்ளது.  மேலும், ‹யஸ் கால்வாயின் தென்பகுதி, ஏடன் வளைகுடாவையொட்டி சோமாலியா அமைந்திருப்பதாலும்; உலகில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் ஏறத்தாழ 30 சதவீதம் இக்கடல் பகுதி வழியாகத்தான் பல்வேறு நாடுகளுக்கு      அனுப்பப்படுவதாலும் "பனிப்போர்' காலந்தொட்டே சோமாலியாவைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர மேல்நிலை வல்லரசுகள் முயன்று வந்தன.


அமெரிக்காவுக்கும் சோவியத் சமூக ஏகாதிபத்திய ரசியாவிற்கும் இடையே பனிப்போர் நடந்து வந்த காலத்தில், அவை, சோமாலியாவையும் அதன் அண்டை நாடான எத்தியோப்பியாவையும் மோதவிட்டுப் பதிலிப் போரை நடத்தின.  "ஓகாடேன் போர்'' என்றழைக்கப்பட்ட இப்பதிலிப் போரில், சோமாலியாவை அமெரிக்காவும், எத்தியோப்பியாவை ரசியாவும் ஆதரித்தன. இப்போரில் சோமாலியா மிகவும் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது.


இப்போரினையடுத்து, சோமாலியாவில் வசித்துவந்த இனக்குழுக்கள், அமெரிக்கா தயவுடன் அந்நாட்டை ஆண்டு வந்த அதிபர் சியாத் பார்ரேக்கு எதிராகக் கலகம் செய்தன. இந்த உள்நாட்டுக் கலகத்தால் அதிபர் சியாத் பார்ரே 1990களின் ஆரம்பத்தில் பதவியை விட்டு ஓடினான். அதிகாரத்தை யார் கைப்பற்றிக் கொள்வது என்ற போட்டி ஏற்பட்டதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அமெரிக்கா, ஐ.நா.வின் மூலம் உதவிநிவாரணம் என்ற பெயரில், ஏறத்தாழ 30,000 துருப்புகளை சோமாலியாவில் கொண்டு வந்து இறக்கியது. எனினும், சோமாலியா மக்களின் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களின் காரணமாக, அமெரிக்கா 1995இல் தனது படைகளை சோமாலியாவில் இருந்து விலக்கிக்கொண்டது.


அதன்பிறகு சோமாலியா, ஏறத்தாழ பத்து ஆண்டுகள், தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் எனும் வகையில், யுத்தப் பிரபுக்களின் கைகளில் சிக்கிக் கொண்டது. யுத்தப் பிரபுக்களுக்கு இடையே அதிகாரத்துக்கு நடைபெற்றுவந்த நாய்ச்சண்டை, மற்றும் பஞ்சம், பட்டினிக்குள் சிக்கிக் கொண்டு, சோமாலியா சிதைந்து சின்னாபின்னமானது.


இந்நிலையில், சோமாலியாவைச் சேர்ந்த மிதவாத முஸ்லீம் அமைப்புகளும், தேசியவாத அமைப்புகளும் இணைந்து, ""இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சில்'' என்ற அமைப்பை ஏற்படுத்தி, பதவிவெறி கொண்ட யுத்தப் பிரபுக்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கின. இவ்வமைப்பு, 2006ஆம் ஆண்டு, யுத்தபிரபுக்களை முற்றிலுமாகத் தோற்கடித்து, சோமாலியா நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
 இவ்வமைப்பின் கீழ் சிதறுண்டு கிடந்த நாடு ஒன்றுபடுத்தப்பட்டு, மைய அரசு ஏற்படுத்தப்பட்டது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற பொருளாதாரக் கண்ணிகளும், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற மக்கள் நலன் சேர்ந்த உறுப்புகளும் தொடர்ந்து இயங்கும் வண்ணம் சோமாலியா புனரமைக்கப்பட்டது; ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே குறைந்த கட்டணத்தில் கைபேசி சேவை அளிக்கும் வண்ணம் சோமாலியாவில் ""பொருளாதார வளர்ச்சியும்'' ஏற்படத் தொடங்கியது. இதனைக் கண்டு அமெரிக்கக் கழுகுக்கும் மூக்கு வியர்க்கத் தொடங்கியது.


சோமாலியா மீது படையெடுக்க வேண்டும் என்றால், உலக நாடுகளின் முன் ஒரு காரணத்தை முன்வைக்க வேண்டும். அதற்காக ஒரு புளுகு மூட்டையைத் தயாரித்தது, அமெரிக்கா. சோமாலியாவை ஆளும் இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சில், அல்காயிதாவுடன் தொடர்புடைய அமைப்பு என்றும்; 1998 ஆம் ஆண்டு நைரோபியிலும், தர்இஸ்லாமிலும் அமெரிக்கத் தூதரகங்களுக்குக் குண்டு வைத்த அல்காயிதா பயங்கரவாதிகளுக்கு, இஸ்லாமிய ஐக்கிய கவுன்சில் சோமாலியாவில் அடைக்கலம் கொடுத்திருப்பதாக ஒரு கோயபல்” பிரச்சாரத்தை நடத்தத் தொடங்கியது, அமெரிக்க அரசு.


"பனிப்போர்' காலத்தில், சோவியத் ரசியாவின் அடியாளாக இருந்த எத்தியோப்பியா, 2000இல், ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியாக மாறியது. சோமாலியாவுக்கும், எத்தியோப்பியாவுக்கும் இடையே பல பத்தாண்டுகளாக இருந்துவரும் பகையைத் தனது ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது, அமெரிக்கா. இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சிலால் தோற்கடிக்கப்பட்ட சோமாலியாவின் யுத்தப் பிரபுக்களின் தலைமையில் ஒரு பொம்மை அரசை நிறுவும் திட்டமும் அமெரிக்காவில் தயாரானது.


இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சில் யுத்தப் பிரபுக்களோடு அதிகாரப் பகிர்வு செய்து கொள்ள முன் வந்து போரைத் தவிர்க்க முயன்றது. ஆனால், அமெரிக்காவோ, எத்தியோப்பியா எல்லையோரம் தலைமறைவாகத் திரிந்த சோமாலியாவின் யுத்தப் பிரபுக்களுக்கு சி.ஐ.ஏ.மூலம் இரகசியமான வழிகளில் ஆயுத உதவி அளித்து, போர் ஏற்பாடுகளை முடுக்கி விட்டது. அமெரிக்காவின் மத்தியப் படையணியின் தளபதி ஜான் அபிஸெசூத் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு நவம்பர் 2006இல் ""விஜயம்'' செய்தார். அதற்கு அடுத்த மாதம் எத்தியோப்பியப் படைகள், சோமாலியாவுக்குள் நுழைந்து, அமெரிக்காவின் ஆசையை நிறைவேற்றி வைத்தன.


"அல்காயிதா பயங்கரவாதிகளை அழித்தொழிப்பது'' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆக்கிரமிப்புப் போரினால், கடந்த இரண்டே ஆண்டுகளுக்குள் 16,000க்கும் மேற்பட்ட சோமாலியா மக்கள் மாண்டு போனார்கள். ஒருகட்டத்தில், இராணுவத் தாக்குதல்களால் அன்றாடம் சாகும் பொதுமக்களின் எண்ணிக்கை, ஈராக்கைவிட சோமாலியாவில் அதிகமானது.


எத்தியோப்பியப் படைகளுக்குத் துணையாக, சோமாலியாவையொட்டிய சர்வதேசக் கடல் பரப்பில் இருந்து அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஆடு மேய்க்கும் அப்பாவிகள் 130 பேர் கொல்லப்பட்டனர். அடேன் ஹஷி ஆசூரோ என்ற "பயங்கரவாதியை''க் கொல்ல அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலிலும் பல சாமானிய மக்கள் கொல்லப்பட்டனர்.


எத்தியோப்பிய இராணுவச் சிப்பாய்கள், சோமாலியாப் பெண்களைக் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துவதும்; அப்பாவி மக்களைத் தொண்டையை அறுத்துக் கொலை செய்வதும் அன்றாட நிகழ்வுகளாகிப் போனது. இப்பயங்கரவாதப் படுகொலைகள் ஒருபுறமிருக்க, தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களால், சோமாலியாத் தலைநகர் மோகாதிஷ் ஆள் அரவமற்ற சுடுகாடாகிப் போனது. தட்டுத்தடுமாறி எழுந்து கொண்டிருந்த சோமாலியாப் பொருளாதாரம், மீண்டும் செயற்கையான பஞ்சத்தை சோமாலியாவின் மீது திணித்தது. இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பஞ்சம், பட்டினியில் இருந்து தப்பிக்க ஏறத்தாழ 25 இலட்சம் சோமாலியார்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக அலையத் தொடங்கினர்.


பஞ்சத்தைக் காட்டி, நிவாரண உதவி என்ற பெயரில் ஐ.நா. மூக்கை நுழைத்தது. ஐ.நா.வின் இந்த "உதவியை'' பட்டினிக்குள் தள்ளப்பட்ட சோமாலியா மக்களுக்குக் கிடைக்காமல், அமெரிக்காவால் கொம்பு சீவிவிடப்பட்ட யுத்தப் பிரபுக்கள் தட்டிப் பறித்துக் கொண்டனர். மேலும், சோமாலியாவில் அமைதியை நிலைநாட்டுவது என்ற பெயரில் ஐ.நா. ஆதரவு பெற்ற அமைதிப் படையும் இறக்கிவிடப்பட்டது.

 

அமைதிப் படையோ, அமெரிக்கா திணித்த பொம்மை அரசைக் காக்கும் பணியைத் திறம்படச் செய்தது. சோமாலியா கடற்பரப்பில் நடக்கும் கடற்கொள்ளையைத் தடுப்பது என்ற பெயரில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்கள் கடற்படையை சோமாலியா கடற்பரப்பில் நிறுத்திக் கொள்ளும் அனுமதியும் ஐ.நா. வால் வழங்கப்பட்டது, இப்படியாக, ஐ.நா.வின் ஆசியோடு, சோமாலியாவை அடிமைப்படுத்தும் அமெரிக்காவின் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது.


எனினும், அமெரிக்காவின் ஆதிக்கக் கனவு முழுமையாகக் கைகூடவில்லை. பட்டினி போட்டும், ஏவுகணைத் தாக்குதல்களால் பயமுறுத்தியும் சோமாலியாவை அடிமைப்படுத்திவிடலாம் என்ற அமெரிக்காவின் திட்டத்தை, சோமாலியா மக்களின் ஆயுதப் போராட்டம் முறியடித்துவிட்டது. ஜார்ஜ் புஷ், அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து இறங்கிய அதே சமயத்தில், எத்தியோப்பியப் படைகள் சோமாலியாவில் இருந்து புறமுதுகிட்டு ஓடிப் போயின.


ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற அமெரிக்காவின் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதிதான் சோமாலியா ஆக்கிரமிப்பு. எத்தியோப்பியப் படைகள் சோமாலியாவை விட்டு விலகிவிட்டாலும், அமெரிக்கா சி.ஐ.ஏ. மூலம் சோமாலியா யுத்தப் பிரபுக்களுக்கு இரகசியமாக ஆயுத உதவி செவதை நிறுத்தவில்லை என முதலாளித்துவப் பத்திரிகைகளே அம்பலப்படுத்துகின்றன.


சோமாலியா, சூடான், எரிட்ரீயா ஆகிய நாடுகளைக் கண்காணிக்க ஆப்பிரிக்காவின் கிழக்கு முனையில் ஏற்கனவே 1,800 அமெரிக்கச் சிப்பாய்களோடு இராணுவத்தளம் அமைத்து இயக்கி வரும் அமெரிக்கா, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதிலும் தனது ஆதிக்கத்தை விரிவாக்க, ""ஆப்ரிகாம்''  என்ற பெயரில் புதிய படை அணியொன்றையே உருவாக்கியிருக்கிறது. ஆப்பிரிக்காவின் எண்ணெய் வளத்தையும்; வைரம், யுரேனியம் போன்ற மூல வளங்களையும் கைப்பற்றிக் கொள்வதுதான், அமெரிக்க மேலாதிக்கத்தின் நோக்கம்.


சோமாலியாவில் இருந்து எத்தியோப்பியப் படைகள் விலகிய பிறகு, அந்நாட்டில் மீண்டும் இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சிலின் ஆட்சி அமைந்துள்ளது. எனினும், அமெரிக்காவின் இராணுவ முற்றுகையை எதிர்த்து ஆயுதந்தாங்கிப் போராடிய இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சிலின் ஆயுதப்படையான அல்ஷாபாபில் முஸ்லீம் தீவிரவாதிகளின் செல்வாக்கு ஓங்கிவிட்டதாகவும், அவ்வமைப்பு சோமாலியாவில் தனக்குச் செல்வாக்கு உள்ள பகுதிகளில் ஷாரியத் சட்டத்தை அமல்படுத்திவருவதாகவும் முதலாளித்துவப் பத்திரிக்கைகள் புலம்புகின்றன. இப்போக்குக் கவலைக்குரிய விசயம்தான் என்றாலும், வினை விதைத்துவிட்டு தினை அறுக்க அமெரிக்க ஆதரவாளர்கள் ஆசைப்படலாமா?


• ரஹீம்