09272023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

பிச்சைக்காரர்களும், அயோக்கிய கடவுளர்களும்...

பிச்சைக்காரர் இருப்பதும்,
அவர்கள் பிச்சையெடுப்பதும்,
ஜன சமூகத்துக்கு
ஒரு பெருந்தொல்லையும்
இழிவும் ஆகும் என்பதோடு...,


ஒரு கடவுள் இருந்தால்
அக்கடவுளுக்கு மிகுந்த அவமானமும்,
அயோக்கியத்தனமான காரியமும் ஆகும்."

--- தந்தை பெரியார்.


திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே பிச்சையெடுத்து வாழவேண்டிய மனிதனைக் கடவுள் சிருஷ்டித்திருப்பானேயானால் அக்கடவுள் இல்லையென்றுதான் அர்த்தம். அவன் இருந்தாலும் ஒழியவேண்டியதே அவசியம் என குறளில் சொல்லியிருக்கிறார். திருவள்ளுவருக்கு பிறகு நம் சமூகத்தில் பிச்சைக்காரர்களை குறித்து அதிகம் சிந்தித்து இருப்பவர் தந்தை பெரியார் என்றுதான் சொல்ல வேண்டும். பிச்சை மனோபாவம் எங்கிருந்து எதிலிருந்து வந்துக் கொண்டிருக்கிறது என்பதில் இருந்து அதற்கு என்ன தீர்வு என்பது வரையில் ஒரு சிறு நூலாக எழுதிவிட்டார் தந்தை பெரியார். நூலின் பெயர் "சுயநலம் பிறநலம்."

 

(சுயநலம் பிறநலம் என்னும் சிறுநூலை வாசிக்க விரும்புபவர்கள் இத்துடன் இருக்கும் இணைப்பில் பார்க்கவும்.  http://tamizachiyin-periyar.com/index.php?article=1044) தந்தை பெரியாருக்கு பின் பாலா பிச்சைக்காரர்களின் உணர்வுகளை தன் படைப்பின் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

 

அழுக்கு அழுக்காய் எங்கு பார்த்தாலும் ஒரே அழுக்குக் கூட்டத்தில் ஏதோ ஒரு குகைக்குள் ஜந்துக்கள் போல வாழும் விசித்திர மனிதர்கள். பல ஊனமுற்ற மனிதர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒட்டு மொத்தமாக பலவகை ஊனமுற்ற உடல்களை ஒன்றாக பார்க்கும் போது ஏதோ ஓர் உணர்வு வயிற்றை பிசைந்து விடுகிறது. அந்த இயலாமையையும், ஊனத்தையும் வைத்தே பிழைப்பு நடத்தும் பண்ணாடைகள். இன்னொரு பக்கம் அகோரி கேரக்டர் இன்னும் வெளிப்படையாக அகோரிகளைப்பற்றிய உண்மைகளை மறைத்துவிட்டதோ அல்லது சென்சாரில் வெட்டப்பட்டுவிட்டதோ என்ற சிந்தனை. இப்படியாக பல விமர்சனங்களை வைக்கத் தோன்றினாலும் ஏதோ ஒரு குற்றவுணர்வுடன் பிச்சை மனிதர்களை மட்டும் மையப்படுத்தி யோசிக்க வைத்துவிட்டது நான் கடவுள். இவர்களை இவ்வளவு காலமும் சமூகத்தில் அலட்சியப்படுத்தியே வைத்திருந்துவிட்டோமா? இனியும் என்ன இப்படித்தானே இருக்கப் போகிறார்களா? வெறும் பரிதாபத்தை மட்டும் வெளிப்படுத்துகிறோமே நாம். இவர்களுக்காக என்ன தீர்வு காணப்போகிறது சமூகம்.

"சுயமரியாதையோடு மனிதன் வாழவேண்டுமானால், பிச்சை கொடுப்பதை சட்டவிரோதமான காரியமாய் கருதப்பட வேண்டும்" என்பார் தந்தை பெரியார். ஐரோப்பாவில் பல நாடுகளிலும் இவை அமுலில் இருக்கிறது.


நம் சமூகத்தில் இவை ஊக்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதே தவீர அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நாமும் விமர்சனங்களுடன் நிறுத்திக் கொள்கிறோம். ´வேறு என்னத்தான் செய்ய முடியும்´ நமக்குள் இயலாமை முட்டுக் கட்டை போட்டு வைத்துவிடுகிறது. பெரியார் வேறு கோணத்தில் இப்பிரச்சனையை சிந்தித்திருக்கிறார்.

 

"பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே ஏற்றுக்கொண்டு அதற்குப் பணம் வேண்டுமானால் பணக்காரரிடமிருந்து "பிச்சை வரி" யென்று ஒரு வரியை சர்க்கார் வசூலித்து, அதற்கு ஓர் இலாகா வைத்து வினியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழிறசாலைகள் வைத்து அதன் மூலமாகப் பிச்சைக்காரர்களிடம் வேலை வாங்கிக் கொண்டு விநியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்திற்காக சர்க்கார் எந்தத் தொழிற்சாலை வைக்கிறார்களோ அந்த மாதிரி தொழிற்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்." (ஆதாரம்: "சுயநலம் பிறநலம்" என்னும் நூலில் இருந்து பக்கம் :9)

 

பிச்சைக்காரர்களை உருவாக்கி வைத்திருப்பதில் மதம் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. பிச்சைக்கு தருமம் என்று போதிக்கிறது இந்து, கிறிஸ்து, முஸ்லீம் மதங்கள். தன் சுயநலத்தில் பிறநலனை பார்க்கும் நமக்கு வள்ளல் குணமாவது மிகுந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. துப்புக்கெட்ட கடவுளுக்கு இப்படியெல்லாம் ஊனங்களை படைத்து பிச்சையெடுத்து ஜந்து போல் வாழ்ந்து தொலை என்று சாபமிட்டுவிட்டதா? இப்படியெல்லாம் செய்யும் கடவுளே நீயும் கடவுளா? மானங்கெட்ட வெட்டி வேளைகளில் மனிதனை சிதைத்து பார்த்து இரசிக்கின்றாயே நீயெல்லாம் கடவுளா? சாத்தானா? என்றே நினைக்கத் தோன்றுகிறது.

 

"நான் கடவுள்" திரைப்படத்தில் வருவது போல ஊனமுற்றவர்களை பிச்சையெடுக்க வைத்து சம்பாதிக்கும் கூட்டத்தினரிடம் இருந்து அவர்களைக் காப்பாற்ற கடுமையான சட்டதிட்டங்களாலும் சரியான பராமரிப்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டாலும் இப்படிப்பட்ட கொடுமையான வாழ்க்கையில் இருந்து அவர்களும் சுயமரியாதையுடன் மனிதர்களாக வாழ முடியும் அல்லவா? ஆனால் நாம் ஏன் இவர்களை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறோம்? நம் சுயநலத்திற்காகத்தானே? நமக்கு தர்மம் போட, பிச்சை போட பிச்சைக்காரர்கள் தேவையாக இருக்கிறார்கள். அவர்களை மனித தன்மையில் இருந்து விலக்கி வைத்து ஒரு ஜந்துவைப் போல் அவர்களை நினைத்து நம் நிலையை உயர்த்தி வைக்கிறோம். 

 

படத்தின் இறுதியில் ஏற்கனவே கண்பார்வையை இழந்திருந்த அம்சவல்லியின் கை, கால்களையும் உடைத்து நடக்க முடியாத அளவுக்கு ஆளாக்கும் வில்லன். இனியும் வாழத் தகுதியில்லை என குமுறுபவளை கருணை கொலை செய்யும் அகோரி. இந்த கருணை கொலை சரியானவையா? என்ற சர்ச்சை இருக்கிறது. எனக்கென்னமோ அவளுடன் மற்றவர்களையும் கருணை கொலை செய்திருக்கலாமா என்று தோன்றுகிறது. அந்த காலத்தில் ஐரோப்பாவில் தொற்று நோய்க்கு ஆளானவர்களை கப்பலில் எடுத்துப்போய் நடுகடலில் போட்டு விடுவார்களாம். அது ஏனோ இவர்களை பார்க்கும் போது நினைவுக்கு வந்து தொலைகிறது.

 

தொடர்ந்து பிச்சை மனிதர்களை அலட்சியப்படுத்துவோமானால் நல்லுள்ளம் கொண்ட புரட்சி நாயகர்கள் கருணை கொலைக்கு செல்ல வேண்டியது தவறல்லவே!

 

தமிழச்சி
16.03.2009


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்