லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லத் தொடங்கினார். தொழிலாளர் கூட்டங்களில் பேசினார். மக்களின் அவல வாழ்க்கைக்கான காரணத்தை விளக்கினார். அதை ஒரு புரட்சியின் மூலம் மாற்றும் சக்தி தொழிலாளர்களுக்கு மட்டுமே உண்டு என்றார். இக்கூட்டங்கள் அனைத்தும் இரகசியமாகவே நடந்தன. ஏனெனில் வெளிப்படையாக கூட்டம் நடத்தினால் ஜாரின் போலீசு அனைவரையும் சிறையில் தள்ளிவிடும்.

லெனினுடைய பிரச்சாரத்திற்கு நல்ல பலன் இருந்தது. அவருடைய கருத்துக்கள் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்கள் அனைவரையும் சென்று அடைந்தன. தொழிலாளர்கள் மெதுவாக விழிப்புணர்வு பெற்றனர். தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் 16 மணிநேரம் முதலாளிகளுக்கு உழைத்துக் கொட்ட வேண்டியிருந்தது. கூலியோ மிகமிகக் குறைவு. இதற்கெதிராகப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.

இந்த போராட்டங்களை வழிநடத்தும் தலைவர் யார் என்று தெரிந்து கொள்ள இயலாமல் ஜார் அரசு மண்டையைச் குடைந்து கொண்டிருந்தது. லெனின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை கையும் களவுமாகப் பிடிக்க ஏராளமான உளவாளிகள் அவரைப் பின்தொடரத் தொடங்கினர்.

லெனின் அவர்களை ஏமாற்றிவிட்டு ரகசிய கூட்டங்கள் நடக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார். வலிமையான உடற்கட்டும் புத்திக் கூர்மையும் இதற்கு உதவின. ரயிலில் செல்லும்போது அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிடும். ரயில் நிற்கும். ஆனால் அவர் இறங்கமாட்டார். கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு ஆழ்ந்து படிப்பது போல் இருப்பார். ரயில் கிளம்பி வேகமெடுக்கும். அப்போது அவர் மிக விரைவாக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிப்பார். ஒரு கணநேரத்தில் மாயாஜால வித்தை போல தங்கள் கண்ணெதிரே லெனின் தப்பி ஓடுவதைக் கண்டு உளவாளிகள் மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள். இதுபோல் பலமுறை உளவாளிகள் ஏமாந்து போனதுண்டு.