1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது செய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு நான்கு ஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. சைபீரியாவிற்கு அனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் சைபீரியா என்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் மூடியிருக்கும். எந்நேரமும் பனி பெய்யும். புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும். ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீரியாவிற்கு அனுப்பி விடும். அங்கே அவர்கள் குளிரில் விறைத்து இறந்து போவார்கள். 

ஆனால் சைபீரியக் குளிரை லெனின் தோற்கடித்தார். அவருடைய உறுதியான உடற்கட்டையை உருக்குலைக்க சைபீரியப் பனிப் பிரதேசத்தால் இயலவில்லை. அதுமட்டுமல்ல லெனின் தான் காதலித்த கிரூப்ஸ்காயா என்ற பெண்ணைத் திருமணமும் செய்து கொண்டார். லெனினுடன் சேர்த்து அவரையும் சைபீரியாவிற்கு நாடு கடத்தியிருந்தது ஜார் அரசு.

சைபீரியாவில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவர் ஏராளமான புத்தகங்கள் எழுதினார். அவை ரசியாவில் புரட்சியை எப்படி நடத்துவது என விளக்கும் புத்தகங்கள். மக்களைத் திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை. தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பத்திரிக்கை அவசியம் என்ற முடிவுக்கு வந்தார். அதனை ரசியாவிற்குள் இருந்து கொண்டு நடத்த முடியாது. அரசு அதை அனுமதிக்காது. ஆகவே வெளிநாட்டில் இருந்து ஒரு பத்திரிக்கையை வெளியிட முடிவு செய்தார். பத்திரிக்கையின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கத் தீர்மானித்தார். ஏனெனில் கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் புரட்சியை வழி நடத்தமுடியாது.

1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரே தீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். இஸ்கரா என்ற முதல் கம்யூனிச பத்திரிகை வெளிவந்தது.