மாணவர்களின் போராட்டத்தை வன்முறையால் ஒடுக்கினான் ஜார். மாணவர்கள் குற்றவாளிகளைப் போல கண்காணிக்கப்பட்டனர். கசான் பல்கலைக்கழகம் சிறைச்சாலை போல மாற்றப்பட்டது. மாணவர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. தன்மானமுள்ள மாணவர்கள் இதை எதிர்க்கத் தீர்மானித்தனர். ஒட்டு மொத்தமாக பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறினர். லெனினும் வெளியேறினார்.
பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய லெனின், ஜார் ஆட்சியின் கொடுமைகளை அனுபவத்தின் மூலம் புரிந்துகொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடத் தீர்மானித்தார். வழக்கறிஞர் தொழிலின் மூலம் அதை செய்யத் திட்டமிட்டார். எனினும் சட்டக்கல்லூரியில் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தனர். லெனின் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். வீட்டில் இருந்தே படித்தார். நான்கு வருட சட்டக்கல்வியை ஒன்றரை ஆண்டில் படித்து முடித்துப் பட்டம் பெற்றார். அதிலும் மாநிலத்தில் முதலாவதாக.
அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் மேலும் ஒரு துக்க செய்தி அவரது தங்கை ஓல்கா நோயினால் மரணமடைந்தார். லெனினுடைய தாயார் மனமுடைந்து போனார். லெனின் பெத்ரோகிராடு நகரில் வழக்கறிஞர் தொழில் மேற்கொள்ள சென்றார். அவருடைய குடும்பம் மாஸ்கோ நகரில் குடியேறியது.