அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால் மூடப்பட்டிருந்தன.
சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது. சோவியத் ரசியாவின் தலைவருக்காக உலகமே ஏன் அழ வேண்டும்? அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?
நன்றி - புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி