Language Selection

சுதேகு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வன்னியில் உத்தரித்துக் கொண்டிருக்கும் மக்களின் அவஸ்தைகள் எல்லைமீறி வருகின்றது. இந்த நிலையில் இந்தியா முதற்கொண்டு, வெளிநாடுகள் அனைத்தும் இன்று யுத்தநிறுத்தத்தை முன்தள்ளி வருகின்றன. அண்மித்து வரும் இந்தியத் தேர்தல்கள், சர்வதேச பூர்வீக மக்களின் அன்றாட வாழ்க்கைகளில் குறுக்கிடும் 

 புலிசார்பு பேராட்டங்கள், இதற்கான சர்வதேசங்களின் பாதுகாப்புச் செலவீனங்கள், மற்றும் புலம் பெயர் தமிழர்களின் வாக்குவங்கி மீதான கவனங்கள் போன்ற இன்னோரன்ன காரணங்களால், ஒரு யுத்த நிறுத்தத்துக்கான சூழ்நிலைகள் மேலெழுந்து வருகிறது.

 

பயங்கரவாத அமைப்பாக சர்வதேச ரீதியில் கணிசமான நாடுகளால் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்துக்குச் சார்பான போராட்டங்கள் உலகெங்கும் பரவலாக நடந்தன. ஆனாலும் இப்போராட்டங்கள் மீது கடுமையான கெடுபிடிகளை இந்த நாடுகள் தவிர்த்திருந்தன. இதற்கான காரணங்களைத் தமிழர் தரப்பு புலி ஆதரவாளர்கள் அலசி ஆராயத் திராணியற்று கிடந்தார்கள். கிடக்கிறார்கள். உண்மையில் வன்னியில் சீவன் போகிற நிலையில் வாழ்ந்து வருகிற அப்பாவி மக்களுக்காக, தமது சொந்த உறவுகளுக்காக, உளவியல் ரீதியாக உந்தப்பட்டு அதை வெளிப்படுத்துகிற புலம்பெயர் மக்களின் மனஉளைச்சலின் வெளிப்பாடாக இப்போராட்டத்தை இவர்கள் பார்க்கின்றனர். இதை அடக்குவதால், இவர்கள் மனநோயாளிகளாக மாறக்கூடிய யதார்த்தத்தை புரிந்து கொண்டும், இதற்கான சமூக உதவிகளைக் கணக்கிற் கொண்டும், இவ் மனஉளைச்சலின் வடிகாலாக இப்போராட்டங்களை அனுமதித்தனர். அனுமதிக்கின்றனர்.

 

இருப்பினும், இவர்களின் இப் போராட்டத்தை தமது சொந்த நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்லும் தேவையற்ற செயலை, வெளிநாட்டு ஊடகங்கள் தமது மக்களிடம் எடுத்துச் செல்லாது,.  - இப்போராட்டத்தின்- தமது சமூகக் கடமையை இப் புலி ஆதரவாளர்களுக்கு மறைமுகமாக உணர்த்தவும் தவறவில்லை. இதை விளங்கும் வல்லமையில்லாத புலிகளின் எடுபிடிகள் தொடர்ந்து தமது பாணியிலான போராட்டத்தை நடாத்தி வருகின்றனர். இப் புலம்பெயர் மக்களின், புலிகளின் நிலைபற்றிய இன்றைய மனக் கண்டல்காயங்களுக்கு, மிருதுவாக ஒத்தடங் கொடுக்கின்ற  போக்கில் வன்னிப் பிரச்சினையைத் தீர்த்து விடுவதில் இந்தியா முதற் கொண்டு வெளிநாடுகள் மிகக் கவனமாகவே செயற்படுகின்றன.

 

வன்னிமக்களை உத்தரிக்கும் இஸ்தலத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றுவதில் உள்ள சிக்கல்களை வெளிநாடுகள் வெகுவாகவே உணர்ந்துள்ளன. வன்னிக்குள் இருக்கும் புலிகளும், வெளிநாட்டில் புலம் பெயர்ந்திருக்கும் புலி ஆதரவு பெருந்தொகை சக்திகளும், வன்னிமக்களை புலியின் நலனுக்குக்காக விலையாகக் கொடுக்கின்ற விபரீத விளையாட்டுக்கு துணிந்து நிற்பது, வெளிநாட்டு சாதாரண மக்களையே மலைக்க வைக்கிறது. இதன் எதிரொலி, இந்தப் புலம் பெயர் தமிழ் மக்களை தத்தமது நாடுகளில் இவர்கள், அச்சத்தோடு பார்க்கின்றனர். இவர்களை சாதாரணமான மக்களாகப் பார்ப்பதில் அவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது.  இதனால் வெளிநாடுகளின் கிராமப்புற அரசியலில் இன, நிறவாத சக்திகளின் வளர்ச்சியை இவர்கள் துரிதப்படுத்துகின்றனர். இவைகள் மறுபுறத்தில் வன்னி மக்கள் விடயத்தில் கவனமாக காலடிகளை எடுத்து வைக்க செய்கின்றன. ஒரு நாட்டின் யதார்த்த நிலைமை அந்த நாட்டின் கிராமத்தில் தான் கண்டறிய முடிகிறது  என்பதை புலம் பெயர் தமிழர்கள் உணர்வார்களா?

 

மூன்றாம் உலக மக்களின் எதிர்காலத்தில் அதிக அக்கறை கொண்டிருக்கும் வெளிநாட்டு கிராமப்புற மக்களின் கள்ளங்கபடமற்ற மனிதாபிமானத்தில்  விசத்தை விதைக்கின்ற, புலிகளின் பொய்யும், பித்தலாட்டமும் நிறைந்த போராட்டம், இன்று கந்தலாகிப் போய்விட்டது. இவர்கள் அழுது குளறி ஒப்பாரி வைத்தாலும், இவர்களைத் திரும்பிப் பார்க்க யாரும் தயாராக இல்லை. வெளிநாட்டு அரசுகள், தமிழ்மக்களுக்கு கவுரவமான அரசியல் அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் அளவுக்கு வெளிநாடுகளில் தமிழ் மக்களுக்கான தார்மீகக் குரல் பலமாக இல்லை. புலிகளிடம் தான் எல்லாம் செய்யப்பட வேண்டுமென்பது வெளிநாடுகளுக்கு எரிச்சலை ஊட்டி வருகிறது.

 

வன்னி மக்களை யுத்தத்தின் ஊடாக மெதுவாகப் பிதுக்கி எடுப்பதிலுள்ள பாரதூரமான எதிர் விளைவுகளை எல்லோரும் உணரத் தலைப்பட்டுள்ளனர். புலிகள் வன்னி மக்களின் உயிரைக் குடித்து, தமிழ் மக்களுக்கு தமது அரசியலை நிறவெறியாக்க எடுத்துவரும் முயற்சியை யுத்தத்தால் மழுங்கடிப்பது சாத்தியமாகாது. துடிதுடிக்க வன்னிமக்களை காப்பாற்றுவதை விட, புலிகளின் இருப்பை வன்னிமக்களுக்கு உள்ளேயே நீர்த்துப்போக வைப்பதில், இந்தியா முதற்கொண்டு சர்வதேச நாடுகள் பெரும் முயற்ச்சி எடுத்து வருகின்றன. இந்தியாவில் அண்மித்துவரும் தேர்தலில் வன்னிமக்களின் பிரச்சினை பதட்டமாகி வருவதாலும், மேற்குநாடுகளில் புலம் பெயர் தமிழ் மக்களின் சுடுதண்ணிப் போக்கை ஆற வைப்பதற்கும் இரத்தம் சிந்தா அரசியல் மேல் கிளம்பி வருகிறது.

 

இரத்தம் சிந்தும் இலங்கை அரசின் அரசியல் யுத்தப்போக்கு, இதுவரை பெற்ற வெற்றிகள் ஊடு, ஒரு யுத்த நிறுத்தத்துக்கு வருவதால் அதன் ஜனநாயக முகமூடி மேலும் அழகுபடுத்தப்படும். இன்றைய புலித் தலைமைகளுடன் இனி எப்போதுமே பேச்சுக்கு இடமில்லை என்ற உலகம் முழுவதுமான திடமான பொதுக்கருத்தோடு, வன்னிமக்கள் தாமாக வெளியேறும் சந்தர்ப்பமாக ஒரு யுத்தநிறுத்தம் சாதகமாகி வருகிறது. இவ்வாறு ஒரு யுத்தநிறுத்தத்தில் புலிகள் ஆயுதத்தை கீழே போட முடியாமலும், வலிந்த யுத்தத்தை தொடரமுடியாமலும், வன்னி மக்களை தொடர்ந்து வைத்திருக்க முடியாமலும் கரைந்துபோகும் நிலை உருவாகும். புலிகள் வலிந்த யுத்தத்தைத் தொடர்ந்தால் பெரும் துவையலாக புலிகளை அழிப்பதில், அரசுக்கும் சர்வதேசங்களுக்கும், ஏன் எந்தமக்களுக்கும் ஒரு மனச்சங்கடத்தை ஏற்படுத்தாத யுத்தமாக இது தொடரும். புலிகள் தங்கள் தலைவிதியை தாமே எழுதுகிறார்கள்.

 

ஜனநாயகமா? அல்லது ப(பி)ணநாயகமா?

 

சுயநிர்ணய உரிமை என்பது, ஒரு தேசிய இனத்தின் ஜனநாயக உரிமையாகும். சொந்த தேசத்துக்குள் இருக்கும் தொழிலாளி வர்க்கத்தை சுரண்டிக் கொழுக்கும் அடிப்படையைக் கொண்ட ஜனநாயகம். இருப்பிலிருக்கும் பிற்போக்கு உற்பத்தி உறவுத்தளைகளை அறுத்தெறியும், சொந்த மூலதனம் ஆரவாரமாகப் புகுந்து திரளும் நன்மைகளைக் கணக்கில் கொண்டே, தொழிலாளி வர்க்கம் இந்த ஜனநாயகக் கோரிக்கையை முன் நிபந்தனையாக ஆதரிக்கிறது. அதாவது தொழலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான முரணற்ற ஜனநாயகம் தான், சுயநிர்ணயம்.

 

அதாவது, சுயநிர்ணயக் கோரிக்கை எப்போதும் ஒரு தேசிய இனத்தின் உள்ளும் புறமும் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையே. தேடகம் கோரும் சண்டித்தனத்துக்கான சுயநிர்ணயக் கோரிக்கை அது ஒரு உப்புச்சப்பில்லாத கோரிக்கை. பொக்கு வாயை சும்மா போட்டு மெல்லுகின்ற ஒரு செயல். உலகத்தில் நடக்கின்ற ஒரே ஒரு யுத்தத்தை மட்டுமே மக்கள் ஆதரிக்கின்றனர். அது மக்கள் தம்மைத் தாமே விடுவித்துக் கொள்ளும், தம் கைகளில் தாமே அதிகாரத்தை பெற்றுக் கொள்ளும் புனிதமான மக்கள் யுத்தம். இந்த ஒரேயொரு யுத்தத்தை மட்டும் தான் மக்கள் ஆதரிக்கின்றனர். மக்கள் நலனில் அக்கறை கொண்டோரும் இதை மட்டுமே ஆதரிக்கின்றனர்.

 

வடக்குக் கிழக்கு வாழ்நிலைப் பிரதேசத்தை தமது சொந்தமாகக் கொண்ட, தமிழ் முஸ்லீம் சிறுபான்மை தேசிய இனத்தை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்ட முரண்பட்ட ஜனநாயகம், கிழக்கு மக்களை அரசியல் வெறுப்பூட்டிய முரண்பட்ட ஜனநாயகம், எந்தவிதமான பிற்போக்கு உற்பத்தி உறவுகளையும் அதன் சாதனங்களையும் தளைகளில் இருந்து அறுத்தெறியாத தொழிலாளர்களுடன் முரண்பட்டுவிட்ட ஜனநாயகம் ஒரு தேசத்தின் ஜனநாயக உரிமையையே குற்றுயிராக கொன்று போட்ட போராட்டம், மக்கள் உணர்வுபூர்வமாக நடத்தும் ஒரு மாபெரும் நீண்ட பயணத்திலிருந்து அவர்களைத் தலைதெறிக்க ஒடவைத்த திமிர்த்தனமான போராட்டத்தை, அச்சத்தால் உறைய வைக்கின்ற பொழுதுகளை மட்டுமே சுவாசமாக விட்டுவைத்த இந்தப் போராட்டம், எந்த ஜனநாயகக் கோரிக்கையையும் உயர்த்திப்பிடிக்க முடியாத கூனல் முதுகுகளே.

 

காலங் காலமாக தமிழ் மக்களின் தலைகளிலே குவிந்துவரும் அரச ஒடுக்குமுறையானது, அவ் அடக்குமுறை அரசைத் தூக்கி எறியும் ஜனநாயகக் கோரிக்கையையே மிச்சமாக வைத்துள்ளது. தமிழ் மக்களின் சுயநிர்ணயம் என்கின்ற ஜனநாயகக் கோரிக்கை, சிங்கள மக்கள் முன்பும், ஏனைய சிறுபான்மை இனங்களுடனும், சொந்த தொழிலாளிகளிடமும் முன்வைக்கும் ஒரு முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையாகும். விதிவிலக்காக பிரிந்து போவது கூட, முரணற்ற ஜனநாயகம் தான்! எந்தவொரு தனித்தலைமையை காப்பாற்றிக் கொள்ளுகின்ற மாயவித்தைகள் செய்வதற்கான மந்திரக்கோலுமல்ல: யுத்தத்தில் தலைமையைக் காப்பாற்றும் தந்திரக்கோலுமல்ல. தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதற்கு அரசியல் சுயநிர்ணயம் அரசின் சுயேச்சைத் தன்மை, ஒரு தேசிய அரசை அமைத்தல் என்கின்ற ஒரேயொரு பொருள் மட்டும் தான் உண்டு. இதற்கு வேறு எந்தப் பொருளும் இருக்கவே முடியாது.

 

கூலிக்காக மாரடிக்கின்ற தேடகத்தின் ஜனநாயகக் கோரிக்கை, அது ஒரு ஜனநாயகக் கோரிக்கையே அல்ல: மாறாக புலிகளுக்காகக் கோரப்படும் பணநாயகக் கோரிக்கையே!

 

சுதேகு
150309