08132022
Last updateபு, 02 மார் 2022 7pm

அரசிடம் தஞ்சம் கோரும் தமிழரசியல்

இலங்கையின் அரசியல் இன்னொரு சுற்றில் வந்திருக்கிறது. ஆயுதத்தைத் தூக்கிய கைகள் கும்பிடு போட்டு பெருந்தேசியக் கட்சியில் காட்சியளிப்பதுதான் அது. இனவாதம் என்பது பெருந்தேசிய இனத்தால் சிறுபான்மை மக்களின்மேல் பிரயோகிக்கப்படுவது மட்டுமல்ல.

 சிறுபான்மை இனத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும்தான் அது முழுமையடைகிறது. வீரியமாகச் செயற்படுகிறது. டக்ளஸ் தொடக்கம் கருணா வரையிலான இயக்கத் தலைமைகள் இன்றைய பெருந்தேசிய இனக் கட்சிகளில் காட்சிதருவதை நாம் இந்தத் தளத்தில் வைத்துப் பார்க்கமுடியும். இதை இன்னொருவகையில் சொல்வதானால் பேரினவாதம் புதிய பரிமாணத்தை எட்டுகிறது என்பதே அது.

 

மிதவாத தமிழ்த் தலைமைகள் செயற்பட்டதை நாம் எதிர்கொண்டதுபோல் இது இருக்காது. சமூகம் மீதான அச்சுறுத்தல்களுடன் கூடிய ஒன்றாக இது மாற்றமடைகிறது. கொலை கடத்தல் என்ற இன்னோரன்ன வன்முறைகளுடன் கூடிய மனோபாவத்தை தமிழ்ச் சமூகத்துக்குள்ளிருந்தே பேரினவாதம் சார்ந்து செயற்படுத்தக்கூடிய தமிழ் அரசியலை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். வன்முறை மனோபாவத்தினை வளர்த்தெடுத்த இயக்கக் கலாச்சாரம் பேரினவாதத்துக்கு ஏற்கனவே சேவகம் செய்யத் தயாராகிவிட்டிருந்தாலும் அது முனைப்புப்பெறும் நிலை இன்னும் அதிகமாகத் தெரிகிறது.

 

தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பதாக டக்ளஸ் 20 வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதில் அவர் எந்தளவு தூரம் நகர்ந்தார் அல்லது நிலைமையை நகர்த்தினார் என்ற கேள்விக்கு என்ன விடை?. மாறி மாறி வரும் அரசுகளோடு அவர் சமரசம் செய்ய முடிந்த கொள்கை கோட்பாடு கோதாரிதான் என்ன?. மக்கள் சார்ந்து ஒன்றுமேயில்லை. தமிழ் மக்களின் சார்பில் பேரினவாதத்தை முழுமையடையச் செய்ய தேசியக் கட்சிகளுக்கு தேவைப்படும் தமிழர்களில் வீர்pயமான ஒருவர் அவர்.  மேலும் உலகுக்கு தமிழர்களுக்கான இடம் அரச அதிகாரத்தில் புறந்தள்ளப்படவில்லை என்று மாட்டப்பட்ட சட்டகத்துள் திணிக்கப்பட்டுள்ள விம்பங்கள்தான் தமிழ் அமைச்சர்கள் என்பது புதிய விசயமுமல்ல. அது காலங்காலமாக அரங்கேற்றப்பட்டுவரும் ஒன்று. புலிகள்தான் தம்மை இந்த நிலைக்குத் தள்ளினார்கள் என்ற  காரணமும் இப்போ புலியின் வீழ்ச்சியில் அடிபட்டுப்போய்க் கொண்டிருக்கிறது.

 

புலிகள் இராணுவத்தின்மீதான தாக்குதலில் பலம்பெற்ற காலகட்டங்களில் தமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கிறதுதான் என்று அமைச்சர்களே வாய்மலர்ந்தவைகளும் இப்போ திரும்ப விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. மாறிமாறி அரசதிகாரத்துள் உலாவிக்கொண்ட டக்ளஸ் தமிழ்மக்களுக்கு பிரச்சினை இருக்கிறதுதான் என்பதை அரசு ஒத்துக்கொள்ள வைப்பதில்கூட குறைந்தபட்சமாகச் செயற்பட முடியாமலே இருந்தார். ஒருமுறை மனோரஞ்சன் சுவிசுக்கு வந்திருந்தபோது சொன்னார், “டக்ளஸ் ஒரு பூனைமாதிரி. அதாவது எப்பிடித் தூக்கி எறிந்தாலும் நாலு காலில் தான் வந்து விழுவார்” என்று. ஆண்டுகள் பலவாகியும் தவிர்க்கமுடியாமல் மீண்டும் மீண்டும் எழும் ஒரு வாசகமாக இருக்கிறது இது.

 

இன்னும் சொல்வதானால் புலிகளின் இருப்பும் பலமும் தேசியக் கட்சிகளில் டக்ளஸ், கருணா போன்றவர்களின் இடத்தை பலப்படுத்தியது என்று சொல்லமுடியும். ஒன்றை வெளிப்படையாகக் கேட்க முடியும். புலிகளின் பாசிசம்தான் டக்ளஸை இந்த நிலைக்கு தவிர்க்கமுடியாமல் தள்ளியது என வாதத்தை முன்வைப்போர், புலிகளின் வீழ்ச்சியின்பின் அவர் தமிழ்மக்கள் சார்ந்து போராடப் போகும் தளம் எது என்ற கேள்விக்கும் விடையளிக்க வேண்டிய தருணத்துக்குள் வந்திருக்கிறார்கள். ஆயுதப் போராட்டத்தினாலன்றி தேசியக் கட்சிகளைச் சார்ந்துதான் எதையும் செய்ய முடியும் என்று கருணா சொல்வதை டக்ளஸ் உம் பின்பற்ற வேண்டியதுதான். இந்த சவடால் மிதவாதத் தமிழ்த் தலைமைகள் பொய்ப்பித்துக் காட்டிய ஒன்று. இதன்காரணமாக ஆயுதம் தூக்கிய வரலாற்றையும் அதே தமிழ்த் தலைமைகளை கொலைவிமர்சனம் செய்து குதறிய வரலாற்றையும் கருணா எந்த வெள்ளைவானில் கடத்தினார்.

 

கிழக்கில் ஜனநாயகத்தை தோற்றுவித்துவிட்டதாக ராஜபக்ச தனது ஜனநாயக வேட்கையை உதாரணித்துக்காட்டிக்கொண்டிருக்க இராணுவ உளவுப்படை கிழக்குமாகாணத்தில் தன்னிச்சையாகச் செயற்படுகிறது. கொலைகளை கடத்தல்களை நிகழ்த்துகிறது. ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கையறு நிலையில் கிழக்கு மாகாண அமைச்சரவை இருக்கிறது. திருகோணமலைக்கு அழைத்துவரப்படும் வன்னி நோயாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் பொறுப்பைக்கூட கிழக்கு மாகாணசபை எடுத்து நடத்தமுடியாமல் இருக்கிறது. 

 

போதாததுக்கு அடுத்த தந்திரத்தில் ராஜபக்ச அடியெடுத்துவைத்துவிட்டார். பிள்ளையான் கருணா இடையில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ள இடைவெளிதான் அது.  இதன்மூலம் இன்னொரு கொலைக்களத்தை நிர்மாணிக்கத் துடிக்கிறது அரசு. கிழக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும் என பிள்ளையான் கோரியபோதும் அதன் நியாயப்பாட்டை மறுதலித்து அரசின் ஊதுகுழலாக கருணா அதெல்லாம் தேவையில்லை என்று சொன்னார். முதலமைச்சர் பதவிக்கு பிள்ளையான் தகுதியில்லை என்று விமர்சனம் செய்தார். (இதே கருத்தை முன்னர் வைத்தவர்களை நோக்கி யாழ்மேலாதிக்க சிந்தனையிலிருந்து உதிர்ப்பவை இவை என்று மாற்றுக்கருத்து பேசியவர்கள் சொன்னது தவிர்க்கமுடியாமல் இங்கு ஞாபகத்துக்கு வருகிறது).

 

முன்னர் ஆயுதங்களை போடமாட்டோம் என்று நின்ற பிள்ளையான் போடப்பட்ட ஆயுதங்களை கதிரையில் இருந்து வைபவிக்கும் காட்சி மறைவதற்கு முன், கருணா தாம் ஆயுதங்களை கீழே வைக்கமாட்டோம் என்று சொன்ன காட்சி அரங்கேறுகிறது. அரச அமைச்சர்கள் அதனால் பாதகமாக எதுவும் இல்லை என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள். ஆக ஆயுதங்களை வைத்திருக்க கருணாவுக்கு நேரடி ஒப்புதல் கிடைக்கிறது. பிள்ளையானுக்கு அது மறைமுகமாக மறுக்கப்படுகிறது. இரண்டுவிதமான அளவுகோல்கள் இங்கு அரசால் பிரயோகிக்கப்படுகிறது, தன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக. இவ்வாறு கிழக்கோ வடக்கோ தமிழ்மக்களின் பகடைக்காய் நிலை அரசால் பாதுகாக்கப்படுகிறது.

 

தனிக் கட்சியாக இருந்துகொண்டு பெருந்தேசியக் கட்சிகளோடு பேரம் பேசுவது என்ற அரசியலை மதிப்பிடும் அளவுகோலை அந்தப் பெரும்தேசியக் கட்சிக்குள் கரைந்துவிடும் தமிழ் அரசியல் சக்திகளின் மீது பிரயோகிக்க முடியாது. பெருந்தேசியக் கட்சிகளில் கரைந்து செல்வதற்கு பேரினவாதம் அற்றுப்போன அல்லது அதை இல்லாமலாக்கப் போராடும் ஒரு தேசியக் கட்சியுடனான இணைவு என்பதற்கு அர்த்தம் இருக்கும். இதற்கான சூழல் இல்லாத நிலையில் அதற்குள் கரைந்துபோவது பழிவாங்கும் நோக்கிலோ அல்லது சரணடைவாகவோ அல்லது தனது போர்க்குற்றங்களை கழுவுவதற்கான குறுக்குவழி என்றோ பார்க்கப்பட முடியும். அது தமிழ் மக்கள் நலன் சார்ந்ததல்ல. 

 

புலிகளின் வீழ்ச்சியோடு தமிழ்த்தரப்பில் பேரம்பேசக்கூடிய அரசியல் சக்தி மேலெழுந்திருக்க வேண்டும். அவை எதையுமே புலிகள் விட்டுவைக்கவில்லை. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு புலிகளின் பினாமியாகவே செயற்படுகிறது. தமிழ் மக்களின் நலன் சார்ந்த பாத்திரத்தை அது வகிக்க மறுக்கிறது அல்லது அதை புலிச்சாளரத்தினூடவே மக்களுக்கும் உலகுக்கும் காட்டுகிறது. அதேபோல் டக்ளஸோ கருணாவோ அந்த இடத்தை நிரப்பவும் இல்லை. பேரினவாத அரசிடம் நமட்டுச் சிரிப்பை உதிர்த்து பெறும் சலுகைகளுக்கு அப்பால் அபிவிருத்தி என்று கட்டடம் கட்டவும் வீதி அமைக்கவும் உழைக்கத்தான் இவர்களால் முடியலாம். உரிமைகளை இப்படி யாசகம் செய்து பெற்ற ஒரு வரலாறைத்தன்னும் யாரும் உதாரணமாகக் காட்ட முடியாது.

 

இராணுவக் கண்ணோட்டத்தோடு செயற்பட்ட புலிகள் இன்றுவரை திருந்தாத அரசியலுடன் குறுக்குவழிகளைத் தேடுகிறார்கள். இவ்வளவு இழப்புகளையும் வளங்களையும் இந்த இராணுவக் கண்ணோட்டம் தின்று தீர்த்திருக்கிறது. தமிழ் மக்களின் இருப்பை பேரினவாதத்திடம் அடிமை நிலைக்கு ஒப்படைத்துவிட்டிருக்கிறது. இருந்தும் அவர்கள் ஒபாமாவின் கடைக்கண்பார்வைக்கு ஏங்கியிருக்கவும், சமயப் பிரார்த்தனைகளில் ஊனுருகவும், தொலைக்காட்சியில் அழுதுவடியவும், இளஞ்சந்ததியை முளைச்சலவை செய்யவும் புகலிடத் தமிழ் மக்களுக்கு அரசியல் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

 

கிழக்கில் அடித்து ஓய்ந்துபோன போர் அவலங்களோ வன்னியில் போர்ப்பொறியுள் அகப்பட்டிருக்கும் மக்களின் அவலங்களோ சொல்லிமாளாதவை. உடனடி உயிர்வாழ்வுப் பிரச்சினைகளை மறுக்கும் இந்தப் போர்மீது வெறுப்புக்கொள்வதும் அதை எதிர்ப்பதும் மனிதராய்ப் பேசுவதற்கு முன்நிபந்தனை. போரில் களைப்படைந்த சமூகமாகிறது தமிழ்ச் சமூகம் என்பதுதான் இன்றைய யதார்த்தம். போரின் இருப்பை இல்லாமலாக்கும் ஆற்றல் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுபவர்களினது தரப்பைவிட ஒடுக்குபவர்களினது தரப்பிலேயே அதிகம் தங்கியிருக்கிறது.  எனவே புலிகளை ஆயுதத்தைப் போட்டுவிட்டு பேச்சுக்குவரக் கோருவதற்குமுன் அரசு இந்தப் போரின் தேவையை இல்லாமலாக்க வேண்டும். இதற்கு பேரினவாதத்தைக் கைவிடுவது முன்நிபந்தனையாகிறது. தமிழ்மக்களின் அரசியல் இருப்பை உரிமைகளை உறுதிசெய்வதன் மூலமாக புலிகளின் இருப்புக்கான அரசியலை இல்லாமல் செய்ய முடியும். புலிகளை மக்களே இல்லாமலாக்கிவிடுவார்கள். “பயங்கரவாதத்திற்கு எதிரான” என்ற பட்டம் சூடிக்கொண்ட போர்கள் எல்லாம்  பரிசளித்தது மக்களின் மீதானதும் இயற்கையின் மீதானதுமான பேரழிவுகளையும் பின்னடைவுகளையும் மட்டுமல்ல ஆதிக்க நலன்களையும்தான்.

 

தமிழ்மக்களின் போராட்ட நியாயத்தை புலிகளின் அரசியலற்ற தன்மை சிதைத்து நாசமாக்கியிருக்கிறது. இதன்மூலம் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அது ஒரு பெரும் இடைவெளியை பிளந்துவிட்டிருக்கிறது.  கேணைத்தனமான அரசியலை தூக்கிப் பிடித்த புலிகளின் வலிமையான ஆயுதப்போராட்டம் தமிழ்மக்களுக்கு வெறுமையைப் பரிசளித்திருக்கிறது.  பேரினவாதத்துக்கு வலுவூட்டியிருக்கிறது.

 

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சிநிரலில் தன்னை அடையாளப்படுத்தி தனது போர்க்குற்றங்களைக்கூட அர்ப்பணிப்பாகக் காட்டிக்கொண்டிருக்கும் அரசு உள்நாட்டில் தமிழ்மக்கள் மீதான சிங்களமக்களின் -இனவாத- வெற்றியாக அதைக் கொண்டாடுகிறது. முழு இலங்கை மக்களின் அரசாக தன்னை அறிவித்துக்கொள்ளும் ஒரு அரசு தனது -தமிழ்- மக்களின் உரிமையை வழங்குதற்கு யாரின் அனுமதியைக் கோரி நிற்கிறது?. புலிகளின் அழிவின்பின்னர்தான் தீர்வுப் பொதியை அவிழ்த்துக் காட்டப்போவதாக ராஜபக்ச சொல்கிறார். புலிகளின் இருப்பே பேரினவாதத்தின் ஒடுக்குமுறையில்தான் கட்டப்பட்டிருக்கிறது. அதனால் இரண்டின் இருப்பும் வெள்வேறு வடிவுகளில் வெள்வேறு அளவுகளில் தொடரப்போகிறது என்றே தோன்றுகிறது.

 

- ரவி (14032009)