கல்லூரிப் பாலைவனத்தில்
கற்பகத் தருக்களைத்
தேடியலையும்
கலாமின் கனவு வாரிசுகள்
நாங்கள்
எங்களின் புனித வரலாறு
வெளியாகும் போதெல்லாம்
‘கூவம்’ கூட
முகம் சுளிக்கும்
முடிந்தால்
மூக்கைப் பொத்தியவாறே
கேளுங்கள் நீங்களும்!
எங்களின்
அலாரச்சத்தத்தில்
எல்லோரும் எழுந்த பின்பே
எட்டுமணி சுமாருக்கு,
எட்டிப் பார்ப்போம்,
போர்வைக்குள்ளிருந்து!
மிருகங்களைக்
காரணம் காட்டி
மிச்சம் செய்வோம்,
பேஸ்ட்டையும் சோப்பையும்!
முகம் கழுவி,
தலை கலைத்து
அப்பாவிடம் திட்டுவாங்கி
புறப்படுவோம் கல்லூரிக்கு!
ஜீவ நதியில்
ஓடைகள் கலப்பது போல
வரும் வழியில்
தறுதலையில் ஒன்று சேரும்!
தடுமாறி வரும்
மாநகரப் பேருந்துகளில்,
தாண்டவமாடி
தாவணியிழுத்து
தந்திரமாய் பார்வைகள் வீசி
பார்வையாலே
செருப்படி வாங்கி
பத்திரமாய்
மனதில் சேகரிப்போம்!
முதல் நாளிலிருந்தே
பழகிவிட்டதால்
மூன்றாம் மணி நேரம்தான்
நுழைவோம் வகுப்பில்!
வந்த வேகத்தில்
வருகைப் பதிவு
நடத்திவிட்டு,
வெளிநடப்புகளும்
நிகழ்த்துவோம்!
மொட்டை மரத்தடியில்
வெட்டி அரட்டையில் தொடங்கி
வெட்டு குத்துகளில் முடியும்!
வார்த்தைகள் முற்றி
கைகள் அரிக்கும் போது
அங்கங்கே
அரிவாள்கள் முளைக்கும்!
மைதானங்கள்
போரக்களமாகும்
தருணங்களில்
ரணகளாகும்
எம் பெற்றோர் மனங்கள்!
அவ்வப்போது
பெருமையைக் கட்டிக்காக்க
கட்டாய ஸ்டிரைக்குகள்
அவசிய மாகும் போது!
காவலர்கள் நாய்களாவார்கள்
கையில் கல்லிருக்கும் வரை
நாங்கள் குரைப்போம்,
பதிலுக்குக் கடித்தால்
பதறி சிதறுவோம்!
உயிரையும் கொடுப்பதாய்க்
கூறிக்கொண்டே
ஒவ்வொருத்தியையும்
ஒரங்கட்டும்
எங்கள்
காதலின் புனிதத்தை
கடற்கரை மணலும்
கைப்பேசிகளும் அறியும்!
தேர்வுகள் எல்லாம்
தேள்களைப்போலவே தெரியும்!
அவற்றின் நஞ்சைவிடவும்
கொடியவை
‘அரியர்கள்’
மூன்று வருட முடிவில்
எங்களின் கல்லூரி வாழ்வு
முடிவிற்கு வரும்போது
அரியர்கள்
மலைகளாய் மாறி
மலைக்க வைக்கும்!
கவலையில் மயங்கிக்
கண் விழிக்கும் போது
காலில் இடறும்
கவர்மெண்ட் பாட்டில்கள்!
தினந்தோறும்,
எங்களின் புனிதயாத்திரைகள் யாவும்
‘டாஸ்மாக்’
நோக்கியே நிகழும்.
சொர்க்கத்திலிருந்து
தூக்கியெறியப்பட்டவர்களாய்,
கல்லூரியை முடித்தவுடன்
கண்கள் கலங்கும்
பிரிந்து போன
நண்பர்களுக்காக அல்ல
பிடரியை பிடிக்கும்
பிரச்சினைகளுக்காக!
இப்போதுதான்
வந்து தொலைக்கும்
எம் மூத்தோரின்
நினைவுகள்!
எத்தனையோ முறை
எகத்தாளமாய்
எக்காளமிட்டோம்
அவர்களைப் பார்த்து!
வீடு வீடாய்
ஏறியிறங்கி
எச்சிலை நாய்போல
துரத்தியடிக்கப்படும்
மார்க்கெட்டிங் வேலையும்
பாதி வயிற்றை நிரப்பும்
பகுதி நேர வேலையுமாய்
காலச்சக்கரத்தை உருட்ட
அவர்கள் படும் கஷ்டமெல்லாம்
கண்ணெதிரே தோன்றும் போது
கண்ணை மூடிக்கொண்ட
கடவுளும்
கவர்மெண்டும்
எங்களின் விரோதியானார்கள்
எத்தனையோ பேர்
எதிர்த்துப் போராடினர்
பிரச்சினைகளின் ஆணிவேரை
பிடுங்கியெறிய!
எள்ளி நகையாடினோம்
எல்லாம் இழந்தபிறகு
ஏங்குகிறோம்
எவனாவது வரமாட்டானா?
பகல்நேர சூரியனாய்!
பகத்சிங்கின் பேரனாய்!!