மாத்தறையில் தற்கொலைக் குண்டு வெடிக்கிறது,வன்னியில் போர் மக்களைக் கொல்கிறது,நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொன்று, அவர்களது உடலைக் கைப்பற்றுகிறது இனவாதச் சிங்கள அரசு.அவைகளைப் பயங்கரவாதிகளது உடலாக இணையத்தில் காட்டுகிறது.

மக்கள் சாவதைச் சொல்லும் தமிழ் ஊடகங்கள் நூற்றுக்கணக்காகப் பலியாகும் தேசபக்த இளைஞர்களை அம்போவென மறைக்கிறது.புலியினது தலைமையின்பின்னே திரண்டதால் அவர்களுக்கு இந்த அவமரியாதை.இது,தொடர்கதையாகிறது.

 

நமது அரசியலின் சூழ்ச்சிகள் யாவும் வர்க்கஞ்சார்ந்த நலன்களோடு நம்மோடு உறவாடுகிறது.இது,குறித்து எமது நிலையென்ன?ஆளும் சிங்கள அரசைத்தாங்குபவர்கள் ஒருபுறும்,புலிகளைத் தாங்குபவர்கள் மறு புறமுமாக நம்மைச் சூழ்ந்து அரசியல் நடாத்தும்போது,இந்த மூன்றாவது அணி தனக்குள் அடிபட்டுச் சாவதில் ஆயுதங்களுக்காகக் கருத்தைப் பயன் படுத்துகிறது?

 

இலங்கையில்-தமிழ்ப்பிரதேசங்களில்,கடந்தகால அரசியற்றெரிவில் உருவாகிய இயக்க அரசியலானது பாரிய பிளவுகளைத் தந்து இளைஞர்களை வேட்டையாடியது.இலங்கை அரசினதும்,அதன் எஜமானர்களதும் தமிழ்பேசும் மக்களுக்கெதிரான இனவழிப்பு அரசியலில் அணிதிரண்ட தமிழ்பேசும் இளைஞர்களைத் தடுத்தாட்கொண்ட இந்தியா,இலங்கையிலொரு புரட்சிகரச் சூழல் உருவாகாதிருப்பதற்காகப் பற்பல இயக்கங்களைக் கட்டிப் பராமரித்து, நம்மை இன்றைய நிலைமைக்குள் தள்ளியுள்ளது.

 

இதிலிருந்து மீளும் புரட்சிகர அரசியல் என்ன?

இன்றிருக்கும் மாற்றுக் கருத்துச் சூழலின் தெரிவு என்ன?

நாலு பேர்கள் சேர்ந்து இயங்க முடியாது உதிரிகளாகச் செயற்படுவதுன் அரசியல்தாம் என்ன?

 

இதன் தத்துவார்த்தப் போக்கு மீளவும் குழுவாதத்தை உற்பத்தி செய்து எதிரிகளைப் பலப்படுத்தி நம்மை-நாம் அழிப்பதில் முடியப்போகிறது.இங்கே,தனிநபர் முனைப்புத் தலைவிரிகோலமாக மேலோங்குகிறது.பரிபூரணத் தூய்மைவாதம் கடந்தகாலத்துப் போராட்டத்தை அழிவுயுத்தமாக மாற்றிய புலிகளுக்கு உடந்தையான பணியில் போய் முடிந்த வரலாறு நமக்குத் தெரியும்.இது, இறுதிக்காலக்கட்டத்தில் “புலிகளை மதிப்பிடுகிறோமெனும் பாணியில்” அரசியல் செய்ததை நாம் மறப்பதற்கில்லை.இன்றைய சூழலும் இதைக்கடந்து மேலெழுந்ததாகவில்லை.

 

மீளவும்,குழுவாதம்,குட்டிமுதலாளியப்பண்புடைய பூரணத் தூய்மைவாதம்,சேறடிப்பு,நிலைமைகளைச் சீர் தூக்கி அலசி ஆராயும் தோழர்களை மேலும் சிக்கலாக்கி அவர்களுக்குத் தாம் விரும்பிய முத்திரையிடல்,இவையெல்லாம் எந்த அரசியலை நமக்குத் தரப்போகிறது.ஒவ்வொருவரும் மாறி,மாறித் துரோகிகள் என்று கத்துவதன் கடந்தகால அரசியல் இலட்சம் மக்களைக் கொன்றபின்பும் இந்தத் துரோகமென்பதன் அர்த்தம்தாம் என்ன?

 

இனஞ்சார்ந்த உரிமை:

 

இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் இந்தியாவும்,ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.இன்றுவரை நடந்தேறும் படுகொலை அரசியலுக்கு இலங்கையை ஆளும் கட்சிகளுக்குப் பின்னாலும்,தமிழ் மக்களின் விடுதலைப்படைகளென்ற குட்டி முதலாளிய இயக்கங்களுக்குப் பின்னாலும் நிற்கும் இந்திய-ஏகாதிபத்தியங்களே முழுமுதற்காரணமாகும்.கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது.அவை முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள்.இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் தலையில் மாலைகளைக் குவிக்க விரும்பும் இலங்கை அதிபர் ராஜபக்ஷ தொடர்ந்து இலங்கையிலுள்ள சிறுபான்மை இனங்களது இருப்பை அசைத்தபடியே உலக நாடுகளது தயவில் ஆட்சியைத் தக்கவைக்கின்றார்.கூடவே புலிகளின் தளபதி கருணாவை,பிள்ளையானை தனது இருப்புக்கு அவசியமான சக்திகளாக இனம் காணுவது தமிழ்பேசும் மக்களது தன்னெழிச்சியான போராட்டங்களை முடக்குவதற்கே.

 

இன்றையபொழுதில்-அதாவது, புலிகளது முழுமையான அழிவு நெருங்கும் தறுவாயில்(இது,இன்னுஞ் சில வாரத்தில் நடந்தேறிவிடும்),நமது மக்களின் சுயகௌரவத்துக்கான சுயநிர்ணயவுரிமை குறித்த கேள்விகளுக்கு இலங்கை ஆளும் வர்க்கம் இதுவரை தலை சாய்க்கவில்லை.இதைப் பயன்படுத்தி மேலும் தமிழ்பேசும் மக்களுக்குள் எழிச்சிகள் வலுவடையுமென்பதை உணர்கின்ற தென்னிலங்கை அரசியற்கட்சிகள் புலிகளது ஒரு பிரிவைப் பூண்டோடு அழிப்பதும் மறுபகுதியைத் தமது ஏவல் நாய்களாக்கியதும் இன்றைய அரசியல் யதார்த்தமாகியுள்ளது.இது,புதுடெல்லியின் அரசியல் தந்திரோபாயத்தோடு களத்துக்குவந்த அரசியல் தெரிவே.இப்போது,புலிகளின் தளபதி கருணா மற்றும் பிள்ளையான்கள் தேசிய நீரோட்டத்தில் மந்திரிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள்.இவர்களே கிழக்கின் விடிவெள்ளிகளாகவும், இவ் வெள்ளிகளை உருவாக்கிய தேவன் மகிந்தாவாகவும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.இனங்களது குடிசார்வுரிமைகளையும்,அரிசியல் அபிலாசைகளையும் ஒன்றுடனொன்றுபோட்டுக் குழப்பி சுயநிர்ணயவுரிமை எனும் இனஞ்சார்ந்த அரசியல் கௌரவத்தை இல்லாதாக்குவதில் இலங்கை மிகத் தெளிவாக வெற்றியீட்டிவருகிறது.இனமுரண்பாட்டை வெறும் மதம்,மொழி,பண்பாட்டுப் பிரச்சனையாகக் குறுக்குவதில் மகிந்தா அரசு மிக நேர்த்தியாகக் காரியமாற்றுகிறது.அது,மதஞ்சார்ந்த கொண்டாட்டங்களை மற்றும் மொழிசார்ந்த விழாக்களை முன்னிலைப்படுத்தி அவைகளைச் சிங்களத்துக்குச் சமமாக நடாத்துவதாகக் காட்டுகிறது.இதற்காக ஜனாதிபதி ஆதரவு வழங்கி வாழ்த்துவதில் இனங்களது சுயநிர்ணயவுரிமையை “என்ன சாமான் அது?” எனும்படி ஆக்கியுள்ளார்.

 

இப்போது தேசியமீலாத் விழா,அந்தவிழா,இந்தவிழாவென மதஞ்சார்ந்த அரசியல் மிக நேர்த்தியாகி இனங்களுக்கிடையில் சுயநிர்ணயமென்றால் என்னவெனவெண்ணும் சூழலை உருவாக்கிறது இலங்கை ஆளும் வர்க்கம்.இனவாதத்தை மறைக்கமுனையும் இலங்கைச் சிங்கள மேலாதிக்கம்,மெல்ல அதன் விஸ்தரிப்புக்கும் ,இருப்புக்கும் இத்தகைய அரசியலை முன்வைத்து இனங்களுக்கிடையிலான அரசியல் உரிமைகளை இல்லாத்தாக்கியும், அனைத்தும் இலங்கையர்களது அரசு எனச் சிங்கள மேலாத்திக்க அரசை முன்னிறுத்துகிறது.இதற்கு இனங்களுக்கிடையில் அரசியல் செய்து பிழைக்கமுனையும் கயவர்கள் புலிவடிவிலும்,இன்னும் எத்தனையோ வடிவிலும் இருக்கிறார்கள்.இவர்கள் குறித்துப் புதுவிளக்கம் அவசியமில்லை!

 

புலம்பெயர் குழுக்களின் அரசியல்,குண்டுவெடிப்பு,புலி அரசியல்:

 

மாத்தறையில் குண்டுகள் வெடித்தாலென்ன வன்னியில் குண்டுகள் போடபட்டு மக்கள் இறந்தாலென்ன,அனைத்தும் புலிகளது அரசியலுக்கு அண்மையிலேயே இருப்பதாக உலகத்தில் பேசப்படுகிறது-கருத்துப் பரப்பப்படுகிறது.புலிகளது அரசியல் வரலாற்றுப் பாத்திரத்தில் இது மிக இலகுவாக அவர்களது கணக்கில் வரவுவைக்கப்படக்கூடியதாகவே இருக்கிறதென்றவுண்மையில்,வன்னியில் அவதியுறும் மக்களது தலைகளில்வீழும் குண்டுகளையும் நியாயப்படுத்திப் புலயழிப்புக்கான அடுத்த முகாந்திரம் உருவாக்கப்படவேண்டிய தேவையில் இலங்கை அரசுக்கு முண்டுகொடுப்பவர் இயங்க முடியும்.எதுவெப்படியமைவதெனினும்,இன்றைய சூழலைப்பயன்படுத்திப் புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களில் அரசியல் முனைப்புடையவர்கள் தமது விருப்பு வெறுப்புகளுக்கமைய ஒவ்வொருவரும் சிண்டைப்பிடித்து அடிபடுவதில் உலகத்தை தத்தமது மேலாண்மைக்குக்கொணரத்துடிக்கும் உலக அரசுகளுக்கேற்ற அரசியலை நாம் முன்தள்ளுவதில் காலத்தைச் செலுத்துகிறோம்.

 

மேற்குலக நவ லிபரல்களது கூற்றோ:”நாம் முன்வைக்கும் பொருளாதாரப் பொறிமுறை ஒரு வாழ் நிலைவடிவம்.அனைத்து மக்களும் பெருங்கம்பனிகளுக்கு நுகர்வோராகவும் உரிமையாளர்களாகவும் உருவாகவேண்டும்,கூடவே போட்டியாளர்களாகவும்”என்று கூறுவதை இன்றைய பங்குச் சந்தைப் பாதாளப் போக்கிலிருந்து மீளத் துடிக்கும் உலக வங்கி உருவாக்கிக்காட்டத்துடிக்கிறது.அது,இனிவரும் பொருளாதாரச் சூறாவளி அபிவிருத்தியடைந்தவரும் நாடுகளையும்,ஏழை நாடுகளையும் கடாசிவிடப்போவதாகச் சொல்கிறது.இலங்கையில் யுத்தத்துக்குள் மூழ்கியிருக்கும் கட்சிகளது இருப்பு இனி மிகவும் உலகக் கம்பனிகளைச்சார்ந்தே இருக்கப்போகிறது.


உலகவங்கியின் உத்தரவின்பேரில் இலங்கை போன்றவொருதேசம் காலங்கடத்தும் அரசியல்வாழ்வில் இலங்கையின் எந்தச் சமுதாயம் சுயநிர்ணயவுரிமையோடும் சுய கௌரவத்தோடும் வாழமுடியமென்ற கேள்வி மிகவும் அகோரமாக நம் முன் நிற்கிறது.

 

இந்தப் பாதாளவுலகப் பொருளாதாரவுறுவுகள் இலங்கையினது மண்ணில் வாழும் சிறுபான்மை இனங்களை மட்டுமல்ல பெரும்பான்மைச் சமுதாயமான சிங்கள மக்களையுந்தாம் பாதிக்கிறது.இது,மேலும் இலங்கையில் யுத்தத்தை விருத்தியாக்கி இலங்கையை கொந்தளிப்புத் தேசமாகவும் சமூக இயக்கங்களை மெல்ல நசித்து,அந்நிய மூலதனத்துக்கெதிரான இயக்கப்பாட்டை தடுப்பதிலேயே தமிழர்களது தலையில் இப்பேது குண்டுகளைக் கொட்டுகிறதென்பதற்குப் புலிகள் பகடைக்காய்களாக இருக்கவில்லை!புலிகளேதாம் இன்றைய நமது போராட்டச் சீரழிவுக்கான முதற்தரமான எதிரிகளாகவிருந்து காரியமாற்றியுள்ளனர்.புலிகளைத் திட்டமிட்டே வளர்த்த அந்நியச் சக்திகள் அவர்களது தயாவால் இலங்கைச் சிறுபான்மை இனங்களது சுயநிர்ணயவுரிமைகளைப் பூண்டோடு நசித்துவிட்டது.இப்போது, புலிகளது அரசியலை இத்துடன் கடந்து,இலங்கையில் இனிவரப்போகும் அரசியல்-பொருளாதாரச் சூறாவழியில் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை இனங்களின் அரசியல்-பொருளாதாரவாழ்வும் அதுசார்ந்த குடிசார்வுரிமைகளும் எத்தகைய பண்பைக்கொண்டிருக்கும்?இக் கேள்வி குறித்து மிகவும் சிந்தித்தாகவேண்டும்.

 

இலங்கையை மிகவும் பின்தங்கிய ஜனநாயக மறுப்புத் தேசமாக்கிய இந்த அந்நிய தேசங்களும் அவர்களது உள்ளுர் அடியாட்களும் தத்தமது இனத்துக்குள் மீளவும் அமைதி,சமாதானம்-ஜனநாயகமெனும் பெயரில் ஒளிந்துகொண்டு, தமது எஜமானர்களுக்கேற்ற அரசியலை முன்னெடுக்கத் துடிக்கின்றார்கள்.இதுள், மிகவும் சாதுரியமாகக் காய் நகர்த்த முனையும் கட்சிகள் இன்று இலங்கையில் மிகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களுக்குப் பூச் சுத்தி அவர்களது வாழ்வாதாரத்தேவைகளை அழித்த அரசிடமிருந்து-அந்நியச் சக்திகளிடமிருந்துபெறப்படும் அதிமானுடத்தேவைகளைத் தமது தயவால் வருவதாகப் பிரச்சாரமிட்டத் தத்தமது இருப்பையும் பலப்படுத்தி மீளவும் மக்களைக் கருவறுக்கத் துடிக்கிறார்கள்.

 

இங்கே, ஏ-9 பாதையூடாக அனுப்பப்படும் உணவு யாழ்ப்பாண மாவட்டத்தை எட்டுவதற்குமுன்,அஃது, தனது தலைமையிலேயேதாம் சாத்தியமாச்சு என்று ஐயா டக்ளஸ் ஊரையாற்றுகிறார்.சிங்கள அரசால் சிதைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை புனரமைப்பதிலும் டக்ளஸ் தனது அரசியலின் பரபோவுபகாரமாகவே தமிழ்பேசும் மக்களக்குச் சொல்கிறார்.இது,கடைந்தெடுத்த அந்நியக் கம்பனிகள்,அரசுகளின் ஆர்வத்தைப் பூர்த்திசெய்ய முனையும் புதிய கூட்டுக்களின் அரசியல் நகர்வாகவே பார்க்கப்படவேண்டும்.

 

இலங்கையில் மேலும் அரசியல்-மற்றும் குடிசார்வுரிமைகள் யாவும் மிகவும் கவனமாக மட்டுப்படுத்தப்பட்டு, மக்களை வெறும் திறந்தவெளிச் சாறச்சாலைகளுக்குள் தள்ளி அவர்களைக் கையாலாகதவர்களாக்கும் இந்தவகை அரசியல் -பொருளாதாரப் போக்குக்கெதிராகக் காரியமாற்றமுடியாதவர்கள் தத்தமக்குள் அடிபட்டு தமது தகமைகளை அவற்றுக்குள் சிதறடிப்பதுகூட ஒருவகையில் இனிவரப்போகும் இலங்கை அரசியலுக்கு அவசியமே.

 

இன்றைய மாற்றுக் கருத்துவட்டம் ஒருவரையொருவர் பழிசொல்லிப் பாய்வதில் இலங்கையில் வாழும் மக்களுக்கும்,அழிவுயுத்தத்துள் மாட்டுபட்ட மக்களுக்கும் என்னத்தைப் பெரிதாகச் செய்துவிடப்போகிறார்கள்.இன்றைக்கு இலங்கை அரசைப் பலப்படுத்துவதென்பது இங்கிருக்கும் ஒருசில கருத்து நிலையாளர்களோ அல்லது மாற்று அமைப்புகளெனும் பெயர்ப்பலகை அமைப்புகளோ அல்ல.மாறாக இலங்கையைத் தாங்கும் அந்நியச் சக்திகளான பெரும் தொழிற்கழகங்கள் அவர்களது தேச நலன்கள்தாம் இலங்கையர்களது வாழ்வைச் சூறையாடுகிறது.நாமோ நாலு நண்பர்களை அடியோடு மொட்டையடிக்கும் கருத்துக்களோடு ஒருவரையொருவர் சிண்டைப்பிடித்து உலுக்குகிறோம்.இலங்கையினது அரசியல் வரலாற்றில் இவ்வளவு குழப்பமும் எங்கே-எப்படி மக்கள் அழிவு அரசியலாக மாற்றப்படுகிறதென்பதைக் கணித்து அதை உடைப்பதற்கான வழிமுறைகளைக்காணாது ஒருவரையொருவர் வசைபாடுவதில் நமக்கு நாமே எதிரிகளாகிறோம்.

 

பாதாளவுலக அரசியல்:

 

இலங்கையினது இன்றைய யுத்தச் சூழலுக்குப் பின்பான காலம் பெரும் குழறுபடியான காலமாக உருவாகிவருகிறது.அங்கே, பாதாளவுலக் கோஷ்டிகள் புலிகள் மற்றும் இயக்கங்கள் பார்த்த வேலைகளைச் செய்யப்போகின்றன.இது,இலங்கையின் அனைத்துக் குடிசார் உரிமைகளுடனும் நேரடியாகவும்,அரச சட்டம் மறைமுகமாகவும் மோதப்போகிறது.இதைத் தடுத்து இலங்கையில் அமைதியான வாழ்வைத் துய்க்கவிரும்பும் மக்களில் பெரும்பாலனவர்களுக்கு ஒரு நேரக்கஞ்சிக்கே பெரும் பாடான வாழ்நிலை உருவாகி, அவர்களை இத்தகைய மாயாக்களுக்கு அடிமைப்படுத்தப்போகிறது.இதன் முதல் தலைமைய மாபியாவான டக்ளஸ் உருவாக்கிச் செயற்படுத்துவதை எவராவது மறுக்கமுடியுமா?

 

நாம் செய்யவேண்டிய பணி நிறையவே இருக்கிறது.உலக அரசியல்மற்றும் புவிகோள நலன்களின் அடிப்படையில் இலங்கையை வேட்டையாடும் அந்நியச் சக்திகளோடு கைகோர்த்துள்ள கட்சி மற்றம் இயக்க அரசியல் மற்றும் ஆதிகத்தைக் குறித்து நாம் என்ன நிலைப்பாடுகளோடு இருக்கிறோம்.இன்றைய இலங்கைக்குள் நிலவும் கட்சிகள் யாவும் அதனதன் தலைவர்களைத் தொண்டர்களை முதலீட்டாளர்களாகவே இலக்குகளைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றன.ஒவ்வொரு கட்சிக்குப் பின்னும் பலகோடி பெறுமதியான மூலதனம் திரண்டு,அதுவே ஒரு கட்டத்தில் கள்ளச் சந்தையைத் தக்கவைப்பதில் மாபியாக்களை உருவாக்கி ஒரு நிழல் அரசை நடாத்துகின்றன.இவைக்குள் நிலவும் முரண்பாடுகளே இன்று கொலைகளாகவும்,குண்டுத்தாக்குதலாகவும் இலங்கையில் மக்களைவேட்டையாடுகிறது.தற்கொலைக் குண்டுகளைப் புலிகளால் காயடிக்கப்பட்ட மனிதர்கள்மட்டுமல்ல பாதாளவுலகத்தால் இயக்கப்படும் கட்சிகளது தொண்டர்களும் செய்வார்கள்.தமிழகத்தில் தீக் குளித்துக் கட்சியைக் காக்கமுனையும் தொண்டர்கள் இங்கே,குண்டுகள் கட்டிவெடிப்பதற்குப் புலிகள் உதாரண புருஷர்கள்தாம்.அது,தென் இலங்கையில் புலிவடிவில் வெடிக்கிறதென்கிறார்கள்.

 

இலங்கையில் “புரட்சி,விடுதலை,ஐயக்கிய இலங்கைப் புரட்சி,புதிய ஜனநாயகப் புரட்சி”எனும் அரசியலைப் பேசுபவர்கள் இது குறித்து என்ன ஆய்வுகளை,எழுத்துக்களை-விவாதங்களை நம் முன் நகர்த்தியுள்ளார்கள்?.

 

வெறுமனவே வரும் வெற்றிடங்களில் தாமே புலியினதும் மற்றும் இயக்க-கட்சிகளது கொப்பியாக அமர்வதற்கான அரசியலைச் செய்ய முனைவதில் அக்கறைகொள்ளும் நரவேட்டை அரசியலைக் கடந்து நாம் உலகத்தின் புதிய பொருளாதார இலக்குகளை-வியூகளைப் புரிந்து,இலங்கையில் இவர்களை வெற்றிகொண்டு குறைந்தபட்சமாவது இலங்கையில் ஒரு ஜனநாயக்ச் சூழலைத் தக்கவைத்தாகவேண்டும்.இதைக்கடந்து திடீர் புரட்சியெதுவும் இலங்கையில் சாத்தியம் இப்போது இல்லை.

 

இலங்கையில் குறைந்தபட்சமாவது குடிசார்வுரிமைகளைக்காக்கும் ஜனநாயகச் சூழலின்றி எவரும் புரட்சிகரமான நகர்வைக் கொண்டியங்கமுடியாது.இது,மிகமிக அவசியமான பணி.இலங்கைத் தீவு முழுவதும் ஒரு சோஷலிசச் சமுதாயம் கட்டியெழுப்பப்படவேண்டும்.அது, உலகு தழுவிய சோஷலிசக் கட்டுமானத்தின் பகுதி வேலைத்திட்டமாகும்.இது,புதிய ஜனநாயகப் புரட்சியின் தெரிவு.இந்த இலட்சியம் நீண்டகால வேலைத்திட்டத்துடன் பரம்பரைபரம்பரையாக முன்னெடுக்கப்படவேண்டிய பணி.இதையெட்டுவதற்கு நமக்கு தடையற்ற அரசியல்-பொருளாதாரச் சூழலோடு(மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் அரசியலைச் சொல்கிறேன்,யுத்தத்தால் அகதிகளாகப்பட்ட மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு, அவர்கள் அழிந்தவாழ்வை மீளக்கட்டித் தாம் உயிர்த்திருப்பைத் தமது பூர்வீக மண்ணுடன் பிணைப்பது இது)உடனடியான அமைதி,சமாதானம்,சகவாழ்வு,அடிப்படை ஜனநாயகம்,இனங்களுக்கிடையில் ஒற்றுமை,புனர்வாழ்வு,புனரமைப்பு, முற்போக்குச் சக்திகளுக்குள் குறைந்தபட்சமாவது புரிந்துணர்வை வளர்ப்பது,புரட்சிகரச் சிந்தனையை மேலும் பரப்புவதற்கான பணி,புரட்சிகரமானவொரு கட்சியைப் பரந்துபட்ட மக்களோடு இணைப்பதென்ற பாரிய வேலைத்திட்டத்துக்கு அவசியமானவொரு சூழலை இலங்கையில் உருவாக்குவது அவசியம்.இது,கடந்தகாலத்தில் பகிடிக்குச் சோசலிசம்பேசிய ஈ.பீ.ஆர்.எல்.எப். இன் அரசியல் துரோகத்தனம் போன்றுருவாக முடியாது!இதைக் கவனத்திலெடுத்துச் செயற்படுவதுற்கு இன்றைக்கு நாம்,நமக்குள் ஒற்றுமையை வலியுறுத்தவேண்டும்.இதற்கு அவசியமற்ற எந்தத் தனிநபர் வாதங்களும் எமது மக்களுக்கு எதிராக இயங்கி,மக்களைப் பாதாளவுலக மாப்பியாக்களிடம் மண்டியிட வைக்கும்!

 

ஏகத் தலைமையின் முகிழ்ப்புக்கு இரையாகும் மாற்றுக் கருத்துச் சூழல்:


இந்த நிலையில்,இனிப் புலிகள் குறித்த விவாதமோ இல்லை இலங்கை அரசினது பாசிப்போக்குக் குறித்த விவாதமோ இலங்கையை விழுங்கிவரும் பாசிசத்தைத் தடுத்து நிறுத்தமுடியாது.எனவே,உலகத்தில்-இலங்கையை ஆளும் மகிந்த அரசை மட்டுமல்ல சகல இயக்க-கட்சி ஆதிகத்தையும் அவர்களது ஜனநாயக மறுப்பு அரசியல் சித்தாந்தப் போக்களையும் அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டவூர்வலங்கள் செய்வதும், அத்தகைய ஊர்வலங்களோடு இணையும் உலக முற்போக்குச் சக்திகளோடு கைகோர்த்து நாம் எமது தேசத்தின் அராஜக அரசியல் சூழலை வென்று, மக்களது உரிமைகளைக் கவனிக்கும் அரசியலை முன்னெடுக்க வேண்டும்.இதுவே,இன்றைய அவசியமான அதீத பணி.

 

இதைத் தடுத்தபடி,ஒவ்வொருவரும் கடந்தகால இயக்கவாத மாயைக்குள் தம்மையறியாது பலிகொடுப்பது, எதிர்கால அரசியலையும் மீளக் குருதிதோய்ந்த வரலாறாக்கிவிடும்.இன்றைய இந்தத் துர்ப்பாக்கிய நிலைக்கு மாற்றுக்குழுக்களிடம் தாம் சார்ந்த குழு நலன்களே காரணமாக இருக்கிறது.இவர்களிடம் பரந்துபட்ட மக்களின் நலனும்,அதுசார்ந்த வேலைத் திட்டமும் இருந்திருந்தால் நிச்சியம் தமக்குள் ஒரு அணிச் சேர்க்கைக்கு வந்திருக்கமுடியும்.பொதுவான தளத்தில் தம்மை முன்னிறுத்தாது,மக்களது நலனின் அடிப்படையில் ஒரு பொது வேலைத் திட்டத்துக்கான பணியைக் கூட்டாக முன் தள்ளியிருக்க முடியும்.இவற்றையெல்லாம் பொதுவாகக் கணக்கெடுக்காது,தம்மைத்தாமே புரட்சிக்காரர்களாக்கி முன்தள்ளும் கருத்துக்கள் பழைய இயக்கவாதத் தெரிவிலிருந்து தனிநபர் தூய்மைவாதமாக குறுகிக்கொண்டு,எவர்மீதும் முத்திரை குத்திப் பிளவு அரசியல் நடாத் முனைகிறது.இதுதாம் இன்றைய இலங்கையினதும் அதன் பின்னாலிருந்து இயக்கப்படும் பிராந்திய நலன்சார்ந்த தேசங்களுக்கும் தமிழ்பேசும் மக்களை மேய்க்கும் அரசியலுக்குப் பக்கப் பலமாக இருக்கிறது.இதைக் கடந்து சிந்திப்பவர்களே உண்மையில் மக்களது நலனோடு தமது அரசியல் வாழ்வை உரைத்துப்பார்த்துப் புரட்சிகரமான பணிக்குப் பங்காற்றமுடியும்.

 

குறைந்தபட்சமாவது பொதுத்தளத்தில் ஒன்றித்துக் காரியமாற்றமுடியாது,ஒருவரையொருவர் தாக்குவதில் வெற்றிபெறும் கருத்தியல் மீளவுமொரு புதியவகை தனிகாட்டுத்தார்ப்பார் அரசியலையே முன் தள்ளமுடியும்.இது,பன்முகத்தன்மைகளை அடியோடு மறுத்துத் தனித்த இயக்க-கட்சிவாதமாக மாற்றமுற்றுப் புலிப்பாணி ஏகக்கட்சி-தலைமையை உருவாக்கும் குறுகிய-புரட்சிக்கு எதிரான அரசியலையே முன்வைக்க முடியும்.மாற்றுச் சக்திகளின் மக்கள் நலன்சார்ந்த செயற்பாடுகளை-அது உண்மையாக மக்களைக் குறித்து இயங்கும்போது- எதன் பெயராலும்-தூய்மையினது பெயராலும் எவரும் துடைத்தெறிய முனைவதாயின் அது,உண்மையிலேயே மீளவும் நம்மையும்,நமது மக்களையும் அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக்கும் கொடுக்கும் செயலே.

 

இதை,எதன் பெயராலும் எவரும் நியாயப்படுத்தத் தம்மைப் பரிபூரணத் தகுதியுடையவர்களாகவும்,தாம் மட்டுமே மக்களது அரசியலையும்,புரட்சிக்குரிய பணியையும் முன்னெடுப்பதாகக் கூறுவார்களாயின் அவர்களே மக்களுக்குச் சமாதிகட்டும் புலிப்பாணி அரசியலை மீள முன்னெடுப்பதாக நான் இனம் காண்கிறேன்.இன்றைய சூழலில் பொதுவேலை என்பது,மக்களது வாழ்வாதாரத்தைப் புனரமைக்கும் நியாயமான அரசியல் கோரிக்கைகளோடு,யுத்தத்தை நிறுத்தி ஜனநாயகபூர்வமான அரசியல் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கும் அதுசார்ந்து மக்களைத் தத்தம் பூர்வீக நிலப்பரப்பில் மீளக்குடியமர்த்திச் சிவில் சமூகக் கட்டுமானங்களை முன்னெடுக்கத்தக்கபடி இராணுவத்தை குறிப்பட்ட முகாங்களுக்குள் முடக்கும்படியும்,இராணுவப் பரம்பலைத்தடுத்து,இராணுவம் குடிசார்வுரிமைகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதை இதனூடாகத் தடுப்பதுமே முதல் வேலையாகும்.இதைச் செய்வதற்கு ஓரணியில் திரண்டெழ முடியாத-முனையாத இந்த மூன்றாவது அணி-மாற்றுச் சக்திகள் உண்மையிலேயே மக்களது வாழ்வோடு மீளவும் சாவு விளையாட்டைத் தொடங்குபவர்களாகவே நான் கருதுகிறேன்.

 

இவர்களது மூக்கணாங் கயிறு எவரிடம் உண்டு? எனுங் கேள்வியே இப்போது வலுக்கத் தொடங்குகிறது.மக்களைக் கேடயமாக யுத்தில் பயன்படுத்தும் புலிகளுக்கும்,மக்களையே-மக்களது உயிராதார உரிமைகளையே தமது அரசியல் பிழைப்புக்காகப் பயன்படுத்தும் இந்தச் சக்திகளுக்கும் என்னவேறுபாடுண்டு?

 

ப.வி.ஸ்ரீரங்கன்
11.03.09