Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வீடுவாசல், வயல்தோட்டம் அத்தனை சொத்துக்களையும் கூலிப்படைகளின் ஆக்கிரமிப்புக்கு விட்டுவிட்டு பக்கத்தில் ஒரு மூலையில் பேரினவாதத்தின் கூடாரத்துக்குள் அகதிகளா…அல்லது அரசியல் கைதிகளா…என்று கூடப் புரியாமல் உயிரையாவதுதக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் வாழவேண்டிய சூழ்நிலைக்கு இன்றைய வன்னி மக்களின் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளது.

வந்தாரை வாழவைக்கும் வன்னி மண் இன்று தன்னை வாழவைக்க பேரினவாதத்தின் கூடாரத்துக்குள் மற்றவர்களிடம் கையோந்தி நிற்கின்றது. வந்திருப்பவர்கள் புலிகளா என்ற சந்தேகத்திலே பலர் சித்திரைவதைக்கு உள்ளாக்கப்பட்டு அடையாளம் தெரியாதவாறு அழித்தொழிக்கப்படுகின்றார்கள். அதுமட்டுமின்றி பல இளம் பெண்கள் துன்புறுத்தப்படுவதுடன் சிறிலங்கா கூலிப்படைகளின் காமவெறிக்கு உள்ளாக்கப்பட்டுகின்றார்கள்.


மக்களை இத்தனை கொடுமைக்குள் வைத்துக் கொண்டு மக்களுக்கு பிஸ்கட் கொடுப்பது போன்ற விளம்பரப் படங்களை வெளியிடுவதன் மூலமாக எல்லாத்தையும் மறைத்து விட முயல்கின்றது பேரினவாத அரசு. ஆனால் உள்ளுக்குள்ளே உறவினர்… ஊடகவியலாளர்கள் யாரும் மக்களை சந்திக்க முடியாதவாறு தடைகளை விதித்து வெளி உலகிற்கு உண்மைகளை இருட்டடிப்பு செய்து வருகின்றது. புலிகளின் மனிதவேட்டைக்கு பயந்து தப்பி ஓடிவந்த அப்பாவி மக்கள் இங்கு சிங்கத்தின் கோரப்பசிக்கு இரையாகிவருகின்றார்கள்.


இன்னொரு பக்கம் பசியாலும் பட்டினியாலும், குடிக்க தண்ணீரில்லாமலும் குண்டுத் தாக்குதல்களாலும் பல நூற்றுக் கணக்கான மக்கள் செத்துமடிவதோடு இன்னும் சிலர், பிள்ளைகளை குடும்பங்களை இழந்த வேதனையால் மனநோயாளிகளாக்கப்பட்டு புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடுமையான சூழலிலும், விரும்பியோ விரும்பாமலோ….. போராட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் பெற்றோர்கள்..., கணவன் ஒருபுறம் மனைவி இன்னொருபுறம் என்ற ஒருவரை ஒருவர் விட்டு தங்களை மட்டும் காப்பாற்றிக் கொண்டு வெளியே வரமுடியாமல் பெரும்பாலான மக்கள் இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


ஆனால் புலிசார்ந்த ஊடகங்கள் வன்னிமக்களின் அழிவை புலிநலம் சார்ந்த விளம்பரமாக பயன்படுத்தி இளம் சமூகத்தினரை தற்கொலை அரசியலுக்கு தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.


மறுபுறம் மகிந்தாவின் பிஸ்கட்டு அரசியலைக் மக்களுக்கு காட்டி மகிந்தாவை மகேசன் ஆக்கி புலியெதிர்ப்பு அரசியலுக்கு ஆள்சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். வன்னிமக்கள் மட்டுமில்லாமல்; புலம்பெயர்ந்து வாழும் தழிழ்மக்களும் இந்த இரண்டு புலிகளுக்கும் இடையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றார்கள்.


இன்னொரு இளைய மந்தைக் கூட்டத்தை உருவாக்க இந்த இரண்டு கும்பல்களும் வலிந்துகட்டி முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


30வருட போராட்டத்தில் வேதனைகளும் இழப்புக்களும், இதயவலிகளும் தான் புலிகளால் மக்கள் அடைந்த நன்மை… இதையாராலும் மறைக்கவோ மன்னிக்கவோ முடியாது… இந்த வரலாற்றுத் தவறுகளை யாராலும் நியாயப்படுத்திவிடவும் இயலாது.


புலிகளின் இந்த அரசியல் தான் இன்று அவர்களை குறுகிய வன்னிநிலப்பரப்பிற்குள் முடக்கி விட்டுள்ளது. புலிகள் அழிக்கப்பட வேண்டிய சக்தியா… மாற்றப்பட வேண்டிய சக்தியா…?


புலி ஒழிப்பிலே அழியப் போவது யார்… புலித்தலைமை மட்டும் தானா...?


விரும்பியும் விரும்பாமலும் பலாத்காரமாகவும் போராட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் நிலைமை என்ன… வன்னியில் வாழும் குடும்பங்களின் அங்கத்தவர்கள் கணவன், மனைவி, பிள்ளைகள் என்று அவர்களின் விருப்பத்திற்கு மாறாக போராட்டத்தில் இணைக்கப்பட்டவர்கள் பலருண்டு. அவர்களை விட்டுப் பிரிந்துவர முடியாமல் பெற்றோர்கள், கணவன்மனைவி என்று பல குடும்பங்கள் மரணத்தின் விளிம்பில் நின்ற வண்ணம் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் நிலை சாவுதானா...?


எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்


என்று நினைப்பது தான் மக்கள்நலன் அரசியலா...? எங்களுக்குள் இருக்கும் இந்தக் குட்டிப் புலியை முதலில் நாங்கள் அழிக்கவேண்டும்.


பேரினவாதத்தின் இனஅழிப்பு வன்முறையுத்தம்; புலிகளை ஒரு போதும் அழித்து ஒழித்துவிடப் போவதில்லை. இந்த இன அழிப்புப் யுத்தம்; மகிந்தாவின் சுயஅரசியல் இலாபத்திற்காக முன்னெடுக்கப்படும் யுத்தம். இதில் மகிந்தாவின் தனிப்பட்ட கௌரவமும் அடங்கியுள்ளது. இங்கு புலிகளின் பலத்தை ஒழித்து புலிகளின் பிரதேசங்களைக் கைப்பற்றலாமேயொழிய புலிகளை அழிப்பதோ புலிகளின் போர்க்கருவிகளை ஆயுதங்களை முற்றுமுழுதாக கைப்பற்றுவதோ முடியாத காரியம்.


மக்களின் இழப்புக்களும், அழிவுகளும் வடிவம் மாற்றப்பட்டு தொடரவே செய்யும். இன்னொரு பேரழிவைத் தடுத்;துநிறுத்த வேண்டுமானால் உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட்டு மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.


இதற்காக என்ன செய்ய முடியுமோ அதற்காக நாங்கள் குரல் கொடுத்தே ஆகவேண்டும். புலியெதிர்ப்பை மட்டுமே வெளிக்காட்டும் நடவடிக்கை இன்னொரு பாரியமக்கள் அழிவைத் தான் கொடுக்கும்.


இன்று எங்கள் ஒவ்வொரு செயற்பாட்டிலும் சிந்தனையிலும் எங்கோ ஒரு மூலையில் குட்டிப் புலியொன்று இருக்கத் தான் செய்கிறது. இதை நாங்கள் இனம் கண்டு மாற்றிக் கொள்ளும் வரை மக்களோடு நாங்:கள் இணையவும் முடியாது...,ஆக்க பூர்வமாக எதையுமோ முன்னெடுக்கவும் முடியாது. எங்களுக்குள் இருக்கும் இந்தக் குட்டிப் புலியை அழித்துவிட்டு மக்கள் நலன்சார்ந்து மட்டும் சிந்திக்க முயற்சிப்போம்….!


07.03.2009
தேவன.