Language Selection

ஏகலைவா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஈ.வெ.ரா (பெரியார்) திராவிடம் பற்றியும் திராவிட நாடு பற்றியும் பேசினார். அது ஒரு தந்திரோபாயம் மட்டுமே. அவருடைய பார்ப்பன எதிர்ப்புக்கு அந்த அடையாளம் உதவியது. பார்ப்பனரை ஆரியர் என்று நிராகரிக்க உதவியது. உண்மையில் அவர் எதிர்க்க எண்ணியது பார்ப்பனியத்தையே எனினும் நடைமுறையில் அது பார்ப்பன
 எதிர்பார்ப்புக்கே கூடிய முக்கியத்துவம் வழங்கியது. பிரித்தானிய ஆட்சியிடமிருந்து பார்ப்பனரிடம் அதிகாரம் கைமாறக் கூடாது என்ற அடிப்படையில் இந்திய சுதந்திரத்திற்கு எதிராகவும் பேசியிருக்கிறார். அந்த நோக்கத்திலேயே அவர் ""திராவிட நாடு' என்ற கருத்தை முன்வைத்தார். எனினும், திராவிட நாடு சாத்திய மற்றது என்பதை அவர் எப்போதோ விளங்கிக் கொண்டார். என்றைக்கு ஆந்திரம் சென்னை மாநிலத்திலிருந்து பிரிந்ததோ, அதன் பின் திராவிட நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பகிரங்கமாகவே கூறிவிட்டார். ஆனால் ""தந்தை' பெரியாரிடமிருந்து பிரிந்த ""தனயர்கள்' மனதில் வேறு எண்ணங்கள் இருந்தன. அவர்களுடைய திட்டங்கள் வேறு. தேர்தல் மூலம் அதிகாரத்தை பிடிப்பதில் அவர்களது கவனம் குவிந்தது. பார்ப்பனியம் பற்றிய அவர்களது பார்வை தேர்தல் வரவுசெலவுக் கணக்குகட்கேற்ப மாறி வந்தது. உண்மையில்,தமிழக காங்கிரஸுக்குள் பார்பனியத்துக்கு எதிராகச் செயற்பட்ட காமராஜ் போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் தி.மு.க.வினர் காமராஜ் ஆட்சியைக் கவிழ்க்கத், தாங்கள் ஒரு காலத்தில் அறவே வெறுத்த ராஜகோபாலாச்சாரி (ராஜாதி) யோடு சேர்ந்து திட்டந் தீட்டினர். அது 1957 அளவில் தொடங்கியது என்று நினைக்கிறேன்.
1962 ஆம் ஆண்டு சீன இந்திய எல்லைப் போரைக் காரணமாக்கி நேரு அறிமுகப்படுத்திய தேசிய ஒருமைப்பாட்டுச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதக் கட்சிகட்குத் தடைவிதிக்கப்படும் என்பதை எதிர்த்துப் போராடுவதைத் தவிர்த்துக் "கழகத்தைக் காப்பாற்ற' அதன் பிரதான இலக்கான "திராவிட நாடு' கோரிக்கையைக் கைவிட்ட ஒரு கட்சி தான் தி.மு.க! என்ன தான் முற்போக்குத்தனமான பகுத்தறிவு பேசினாலும், தி.மு.க.வினர் நடுவில் கடுமையான கம்யூனிச எதிர்ப்பு இருந்தது. இடைநிலைச் சாதியினரைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் மிகவுங் கவனமாக இருந்ததால், சாதியத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களான தமிழர்களில் காற் பங்கினர் பற்றி அவர்கள் அதிகம் பேசவில்லை. தி.மு.க.அரசியல் எப்போதுமே சந்தர்ப்பவாத அரசியலாகவே இருந்து வந்தது. எனினும், கருணாநிதியின் கைக்குத் தலைமை போகும் வரை, அது கள்வர்களின் அரசியலாக மாறவில்லை. தி.மு.க.பொருளாளராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் கருணாநிதியிடம் கணக்குக் கேட்டதிலிருந்து தான் முரண்பாடு முற்றித் தி.மு.க. உடைந்தது. ஆனால் கழகக் காசில் மட்டும் தான் எங்கள் கழகக் கண்மணிகளின் கைகள் தோயவில்லை. அவர்களுடைய ஊழல் தமிழ் அரசின் திறைசேரி வரை பாந்தது. தமிழக மக்களின் வயிற்றில் அடித்தது.
"வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது" என்று திராவிட இன உணர்வு அரசியல் பேசியவர்கள், இன்றைக்கு டில்லியில் உறுதியான ஆட்சியை நிலை நிறுத்த ஒரு தனிக்கட்சிக்கு இயலாமற் போயிற்றோ அன்றே டில்லியில் அதிகாரத்திலிருந் தவர்களுடன் பதவிகட்குப் பேரம் பேசத் தொடங்கினார்கள். அங்கே அகில இந்திய அளவில் அள்ளும் வாப்புக்கள் இருந்தன. அதை கடந்து பதினைந்து ஆண்டுகட்கும் மேலாக அனுபவித்தும் வருகிறார்கள். இந்த லட்சணத்தில் தமிழக அரசியல் தலைவர்கட்கு டில்லியில் என்ன மரியாதையை யாரும் எதிர்பார்க்க முடியும்? அவர்கள் கைகளில் இருந்த ஒரே துருப்புச் சீட்டு அவர்களிடமிருந்த பாராளுமன்ற நாற்காலிகள் மட்டுமே. அதில் கூட, டில்லியில் அதிகாரத்தில் உள்ள கட்சியுடனான கூட்டணிக்கு விலையாகத் தமிழகத் தொகுதிகளில் விட்டுக் கொடுப்புகள் செயப்படுகின்றன. எனவே இவர்களது பேரம் பேசும் வலிமை பெரிதல்ல. அண்மையில் இடதுசாரிகள் தமது ஆதரவை விலக்கிக் கொண்ட சூழ்நிலையில், உடனடியான ஆட்சிக் கவிழ்ப்பைத் தவிர்க்க உதவலாம் என்பதற்கும் மேலாக, அதற்கு ஒரு பெறுமதியும் இல்லை.
எனவே டில்லியில் தமிழக அரசியல்வாதிகட்கு உள்ள செல்வாக்கெல்லாம் ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது பேரம் பேசிச் சில பதவிகளைப் பெறுவதற்கும் அப்பால் எதுவுமே இல்லை எனலாம். இந்தியாவின் இறைமையை அமெரிக்காவிடம் அடைமானம் வைக்கும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றித் தமிழகக் கட்சிகளின் அக்கறை என்ன? வாரிச் சுருட்டுவதற்கு வசதியீனம் தராத எதுவும் அவர்களது கவலைக்குரியதல்ல. தமிழக அரசியலைப் பற்றிச் சொல்வதானால் ""கொள்கையாவது, கோவணமாவது!' என்பது தான் எல்லாக் கட்சிகளதும் கதையாக உள்ளது. பாராளுமன்ற இடதுசாரிகளுக்கு தேர்தல் சந்தர்ப்பவாதத்தையும் மீறிக் கொஞ்ச நஞ்சம் கொள்கை இருந்தாலும், தமிழகச் சட்டமன்ற, டில்லிப் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிக் கணக்கு என்று வருகிற போது அவர்களது நடத்தை மெச்சக்கூடியதல்ல.
அதற்கும் அப்பால் தென்னிந்தியர் பற்றியும் குறிப்பாகத் தமிழகம் பற்றியும், தமிழர் பற்றியும் வடக்கில் பொதுவாக நல்லெண்ணம் இல்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்று நீண்ட காலமாக வடமாநிலங்களில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்தி இந்து உயர் மேலாதிக்கச் சிந்தனை. தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவான சந்தேகங்கள், தமிழகத்தில் பிரிவினைவாதம் வலுவாக உள்ளதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாயை என்பன அரசியல் வட்டாரங்களில் முக்கியமானவை. இதன் காரணமாகவே தமிழகச் சினிமாவாயினும் அரசியலாயினும் இந்திய தேச பக்தியை ஓங்கி ஒலிக்கிற அளவுக்கு வேறெந்த மாநிலத்திலும் நடப்பதில்லை எனலாம். அதைவிட டில்லியில் தென்னகப் பார்ப்பனிய வாதிகளுடைய செல்வாக்கு நிர்வாக அதிகார வட்டாரங்களில் கணிசமானது. இவற்றிலெல்லாம் பலவாறான நிலவுடைமை, முதலாளிய ஆளும் வர்க்க நலன்கள் பொதிந்துள்ளன. எனினும் பிற தென் மாநிலங்களின் அரசியல்வாதிகளின் அளவுக்கு கூட தமிழகத்தின் அரசியல்வாதிகள் மதிக்கப்படுவதாகக் கூறுவது கடினம்.
இவற்றின் விளைவாகவே தமிழகத்துக்கு அண்டை மாநிலங்களுடன் உள்ள தகராறுகளில் நீதி மன்றத் தீர்ப்புகளையும் விசாரணைக் குழு முடிவுகளையும் அண்டை மாநில அரசுகளால் புறக்கணிக்க முடிகிறது. தமிழக ஊழல் மன்னர்களால் எதுவுமே செய இயலுவதில்லை.
அண்டை மாநிலங்களுடனான தகராறு ஈழத்தமிழ் பிரச்சினையையும் பாதிக்கிறது. தேர்தல் அரசியல் வசதிகட்காக அண்டை மாநிலங்களுடனான முரண்பாடுகளை ஊதிப் பெருப்பித்துக் காண்பிப்பதன் விளைவாக மக்கள் மத்தியில் வீண் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாகக் காவிரியை முன் வைத்துச் கன்னட மக்களுடன் பகைமை வளர்ந்துள்ளது. இதன் விளைவாக ஈழத் தமிழர் சார்பாகத் தமிழகத்தையும் புதுவையையும் தவிர்ந்த மாநிலங்களில் பொதுசன அக்கறையே இல்லை. அப்படி அக்கறை காட்டப்படுகிறது என்றால் அதற்குப் பின்னால் கம்யூனிஸ்ற் கட்சிகளில் ஒன்றினது நிலைப்பாடு இருக்கக் காணலாம்.
ஈழத்தமிழர் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகமாக உள்ளனர். அவர்கட்கு உண்மையில் அனுதாபமாகப் பிற ஒடுக்கப்பட்ட மக்களே இருப்பர். ஈழத் தமிழரின் நிலையும் காஷ்மீர் மக்களின் நிலையும் நாகா, மணிப்புரி போன்ற பல மாநில மக்களது நிலையும் ஒத்தவை. அவர்களைத் துன்புறுத்தத் தயங்காத ஒரு இந்திய அரசு, தமிழகத்தின் செல்லாக்காசு அரசியல் தலைமைகட்காக ஈழத் தமிழர்கட்காக ஒரு துரும்பைத் தன்னும் எடுத்துப் போடுமா? ஈழத் தமிழர் இந்திய அரசைப் பொறுத்த வரை பால் பிழிந்த தேங்காப்பூ மாதிரி கூடப் பெறுமதியற்றவர்கள். எறிய முதல் அதைக் கொண்டு தரையையாவது துடைக்கலாம். ஈழத் தமிழரால் இந்திய அரசுக்கு அந்தளவு பயனும் 1989க்குப் பிறகு இல்லாத போவிட்டது. ஈழ மண்ணிலிருந்து இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் விரட்டப்பட்ட இந்திய மேலாதிக்கவாதிகள் என்றென்றும் மன்னிக்கத் தயாரில்லை. இது நாம் மறக்கக்கூடாத உண்மை.
ஈழத் தமிழருக்கு ஐரோப்பாவோ, அமெரிக்காவோ, ஐ.நா. சபையோ, நோர்வேயோ, இந்தியாவோ கைகொடுக்காது என்பது எத்தனையோ தரம் படித்துப்படித்துச் சொல்லப்பட்ட போதும், கிளிப்பிள்ளைகள் போல உலக நாடுகள், தொப்புள் கொடி உறவு என்று திருப்பிச் திருப்பிச் சொன்னார். பிறகு புலம் பெயர்ந்த தமிழரே தஞ்சம் என்றார்கள். இப்போது தமிழகத்தின் இரத்த உறவுகள் கைகொடுக்கும் என்கிறார்கள். புலம்பெயர்ந்தோரதும் தமிழகத் தமிழரதும் உணர்ச்சி அலைகள் எந்த அரசையும் ஊழல் மிக்க ஆட்சியையும் அசைக்காது. அந்த ஆதரவுக்கு ஒரு பெறுமதி உண்டு. ஆனால் அதை அளவு மீறி மதிப்பிடல் ஆபத்தானது.
அங்கேயெல்லாம் உள்ள இரத்த உறவுகளைவிடக் கொழும்பிலும் தெற்கிலும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் ""பாதுகாப்பாக' இருக்கிறதாகச் சொல்லப்படுகிற தமிழர்கள் தங்களது உரிமை மீறல்கள் பற்றியே வா திறக்க இயலாமல் இருக்கிறார்களே. அவர்கள் தங்களுக்காகவும் தவிர்க்கிற தமது உறவுகளுக்காகவும் குரல் கொடுப்பது எப்போது? அவர்கள் பேச இயலாத நிலையில் இருக்கிறார்களென்றால், அதற்கான காரணம் என்ன? தமிழ்த் தேசியாவாதம் எல்லாரையும் எங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது? கொஞ்சம் உரத்துச் சிந்திப்போமா?
ஞாயிறு தினக்குரலில் கோகர்ணன் எழுதிய "மறுபக்கம்" பத்தியிலிருந்து...